வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கவிதைக் கனல்




யாருடைக் கவிதை கேட்டதும் நெஞ்சில்
     வீறுடன் எழுச்சி விருட்டென வருமோ
யாருடைக் கவிதை படித்ததும் உலகில்
     வேருடன் புரட்சி வெடித்து எழுமோ
யாருடைக் கவிதை காலங்கள் கடந்தும்
     சீருடன் பெருமை சிறப்பாய் தருமோ
நூறாயிரம் தீமைகள் நொடியில் பொசுக்கிடும்
     ஆயுதம் அதுவே கவிதைக் கனல்.


லஞ்சமும் ஊழலும் வஞ்சகக் கீழ்மையும்
     கொஞ்சமோ பூமியில் நெஞ்சமும் நடுங்குதே!
பஞ்சமும் நோயுமே நஞ்சிலும் கொடுமையாய்
     விஞ்சவே ஏழைகள் அஞ்சியே சாகிறார்
நெட்டை மரங்களாய் நின்றால் தீருமோ?
     பெட்டைப் புலம்பல் பேசினால் மாறுமோ?
சாட்டை எடுத்து சவுக்கடி கொடுக்க
     பாட்டிலே பறக்கட்டும் கவிதைக் கனல்.



சாதியின் பெயரால் சண்டைகள் தொடருது
     மதத்தின் பெயரால் மண்டைகள் உடையுது
பக்தியும் கெட்டுப் பகல்வேஷம் போடுது
     பகுத்தறிவு திரிந்து பாசாங்கு காட்டுது
மாற்றம் கண்டிட நினைக்கா மாந்தர்
     ஏற்றம் இன்றியே கிடந்துழல் கின்றார்
ஆற்றிட முடியா அவலம் அழித்திட
     ஆயுதம் எடுப்போம் கவிதைக் கனல்.

-    பத்மன்

4 கருத்துகள்:

  1. வீரமிகு வரிகள் ஐயா...
    படிக்கும் போதே மனம் உற்சாகம் கொள்கிறது...
    நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியபடி மாற்றி அமைக்கிறேன். மிக அருமையாக வலைப்பதிவு நடத்துவதுடன் மற்ற வலைப்பதிவர்களையும் உடனுக்குடன் ஊக்குவிக்கும் தங்கள் பணி மென்மேலும் தொடர்க.

    பதிலளிநீக்கு
  3. #ஆற்றிட முடியா அவலம் அழித்திட
    ஆயுதம் எடுப்போம் கவிதைக் கனல்.# அருமை

    பதிலளிநீக்கு