திங்கள், 10 செப்டம்பர், 2012

பாட்டுக்கொரு புலவன்



(நாளை – 11.09.2012 – எனது ஞானகுரு  மகாகவி சுப்ரமண்ய பாரதியின் நினைவுநாள். காலம் கடந்தும், என்போன்ற பலருக்கு தமது கவிதைகளால், கட்டுரைகளால், இன்னபிற கருத்துகளால் ஜீவித்து, தமிழுணர்வு, தமிழறிவு, தேசப்பற்று, தெய்வீக நாட்டம், ஹிந்து மத மறுமலர்ச்சி, சமய சமரசம், சாதி உடைப்பு, உண்மையான பகுத்தறிவு, பொதுவுடைமை, மனிதநேயம், உலகநேயம், ஒற்றுமை, துணிவு, புரட்சி மனப்பான்மை, அன்பு நெறி என வாழ்வின் அத்தனை விதங்களிலும், தளங்களிலும் வழிகாட்டுகின்ற ஆசான் பாரதியின் நினைவாக இந்தக் கவிதை...)



பாட்டுக்கொரு புலவனன்றோ பாரதிநம் தலைவனன்றோ
நாட்டுக்கொரு கவிஞனன்றோ நாடிவந்த தெய்வமன்றோ
ஏட்டருமை சொல்லிடவோ எடுத்தியம்பல் எளிதாமோ
காப்பரிய செல்வமன்றோ கவிப்புதையல் அதுவன்றோ


தீப்பிழம்பு வரிகளன்றோ தேன்கரும்புச் சுவையன்றோ
பூப்போன்ற சொல்லன்றோ பூகம்பக் கருத்தன்றோ
வில்லில்லாக் கணையன்றோ விடுதலையின் விடையன்றோ
நல்லோர்க்குத் துணையன்றோ தவறுகளின் தடையன்றோ



பொல்லாங்கைக் கண்டவுடன் பொசுக்கிவிடும் கனலன்றோ
வில்லங்கம் செய்வோரை வீழ்த்திவிடும் புயலன்றோ
புண்ணியரைப் போற்றிடவே பொங்கிவரும் கடலன்றோ
அன்னையராம் பெண்குலத்தை வாழவைக்கும் வயலன்றோ


பாரதத்தின் பெருமைகளைப் பறைசாற்றும் முரசன்றோ
நானிலத்தில் மேன்மைபெற நாதமிடும் குழலன்றோ
வேதாந்தக் கருத்துகளை விளங்கவைக்கும் வேணுவன்றோ
மானுடத்தை உயர்த்திடவே மகிமையூட்டும் உடுக்கையன்றோ


பாரதியை நம்பிடுவோம் பாரினிலே புதுமைசெய்வோம்
தீக்குள்ளே விரலைவைத்தும் தெய்வத்தையே தீண்டிடுவோம்
இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம்
எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.

-    பத்மன்


5 கருத்துகள்:

  1. என் இனிய பத்மனே
    உன் பாரதி உந்தன் கவிதயில் உயிர்த்தெழுந்தான்
    பாரதி இறக்கவில்லை
    உன்னுள் இருக்கின்றான்
    தொடருட்டும் உன் கவிதை கணைகள்
    பரவட்டும் உன் புகழ்
    என்றும் அன்புடன்
    பார்த்தா

    பதிலளிநீக்கு
  2. நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்ட சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அன்பு பார்த்தாவுக்கும், அன்பு திரு தனபாலனக்கும் எனது நன்றி

    பதிலளிநீக்கு
  4. மகாகவியை நினைத்தாலே புல்லரிக்கிறது , அவருடைய நினைவு தினத்தில் நல்ல நினைவுகளை தந்தமைக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு
  5. ஓம்
    அன்புடன் பத்மநாபன்
    நல்லதோர் கட்டுரை நன்றி.
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    பதிலளிநீக்கு