வியாழன், 8 ஆகஸ்ட், 2013

“பிழை”ப்போர் பிழைப்பு




உயிருள்ள சடலமோ?
உணர்வற்ற பிண்டமோ?
கொடுமைகள் நிகழ்ந்திடினும்
கொதித்திடா மானிடரே!

வயிறுதான் வளர்ப்பதற்கே  
வாய்மையை அடகுவைத்தீர்
மயிருதான் உதிர்வதுபோல்
மானத்தை உதிரவிட்டீர்!

நேர்மையைக் கழுவியோரை
நெடுஞ்சாணாய் வணங்குகின்றீர்
நன்மையைக் கருதுவோரை
நகைத்தே விரட்டுகின்றீர்!

திறமையிலாத் தலைமைக்குப் 
பெருமைகளைப் பூசுகின்றீர்
திறமைமிகக் கொண்டோரை
திகைத்தேதான் ஏசுகின்றீர்!
 

பொருளில்லா நண்பர்களைப்
பொருள்படுத்த மறுக்கின்றீர்
பொருளுடையோன் கயவனேனும்
பொசுக்கென்று சேருகின்றீர்!

உரிமைகளை நிலைநாட்டும்
ஒற்றுமையைக் குலைக்கின்றீர்
சலுகைகளைப் பெற்றிடவே
சார்பெடுத்துக் குழைகின்றீர்!

நண்பர்களை மதிக்காமல்
நாணமின்றிச் சாடுகின்றீர்
மேலிடத்தான் மிதித்தாலும்
கால்பிடிக்க ஓடுகின்றீர்!

உழைப்பும் உண்மையுமே
உரியநேரம் உயர்வுதரும்
பிழைப்பதற்குப் பிழைசெய்தால்
பிழைத்தாலும் இழிவுதரும்.

-          பத்மன்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காற்று


ஓசையில் கிளைத்த விரிவெனும் விசை
ஆசைகள் முளைத்த அதிர்வெனும் அணு
தோற்றம் மறைத்த தோற்றத் தொடக்கம்
தோன்றிய அனைத்தின் தோன்றா ஒடுக்கம்
  
விரிசுடர் நெருப்பை விளைவித்த தந்தை 
விரிசடைக் கடவுளின் வீறுடை வடிவு
நாசியுள் நுழையும் உயிரெனும் மூச்சு
வாசியில் வசிக்கும் வாழ்வெனும் அமுது

நெறிபட வாழ்வோர் வாழ்வைப் போல
இதம்பட வீசும் இனிய தென்றல்
தறிகெட்டுப் போனோர் தவறினைப் போல
முறைகெட்டுப் பாயும் முரட்டுப் புயல்

பொசுக்கும் தீயின் பொல்லா நண்பன்              
பொழியும் மழைக்கோ பருவத் தோழன்
அலைகளை எழுப்பும் கடலின் பகைவன்
அலைகளால் இணைக்கும் அறிவியல் துணைவன்.

- பத்மன்