புதன், 11 செப்டம்பர், 2013

பாரதி சிந்து




(மகாகவி சுப்ரமண்ய பாரதியாரின் நினைவுதினத்தையொட்டி அவரது புகழ்பாடும் சிந்துப் பாடலை பாரதி அன்பர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.) 

பாட்டாலே வையத்தைப் பாலிக்க வந்ததோர்
     தலைவன் – தங்கத் தலைவன் – தம்
ஏட்டாலே தீயவர் கூட்டத்தை ஓட்டிய
     புலவன் சிங்கப் புலவன் – அவன்
பதந்தொட்டு பண்பான நெறிபட்டு என்றுமே
     வாழ்வோம் – மண்ணில் வாழ்வோம் – மிக்க
இடர்பட்டு நொந்தாலும் இன்னலால் வெந்தாலும்
     வீழோம் – நாங்கள் வீழோம் – அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
     புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
     பேரு – அவன் பேரு.
நாட்டின்மேல் பாசத்தை நன்றாக வைத்திடச்
     செய்தான் – நம்மைச் செய்தான் – நம்ம
வீட்டிலும் வெளியிலும் பெண்களைப் போற்றிடச்
     செய்தான் – நன்மை செய்தான் – அவன்
பேச்சாலும் மூச்சாலும் தமிழ்மொழி ஓங்கிடச்
     செய்தான் – தவம் செய்தான் – அவன்
எழுத்தாலும் கருத்தாலும் தீமைகள் நீங்கிடச்
     செய்தான் – விதி செய்தான் – அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
     புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
     பேரு – அவன் பேரு.
தூக்கத்தில் மூழ்கிய பாரதம் எழுப்பிய
     தீரன் – கவிதை வீரன் – நல்ல
ஆக்கத்தில் நம்மவர் சிந்தை செலுத்திய
     ஆர்யன் – சுத்த வீர்யன் – கெட்ட
வேற்றுமை பேசியே கெடுதிகள் செய்வோர்க்கு
     காலன் – காக்கும் வேலன் – மக்கள்
ஒற்றுமை ஓங்கவே தம்வாழ்வைத் தந்திட்ட
     நேசன் – சக்தி தாசன் – அந்தத்
தலைவன்தான் தங்கத் தலைவன்தான் சிங்கப்
     புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி பாரதி பாரதி
     பேரு – அவன் பேரு.


- பத்மன்