வியாழன், 13 டிசம்பர், 2012

சில்லறை விஷயம் அல்ல




“கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று கேட்டார் மகாகவி பாரதியார். இனி சிரிக்க வழியின்றி அழுகைக்கு மட்டுமே உத்தரவாதமாய் இந்தக் கொடுமை அண்மையில் இந்தியத் திருநாட்டில் அரங்கேறியிருக்கிறது, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில். நாட்டின் இறையாண்மை, பொருளாதார சுயபலம் இரண்டையும் காவு கொடுத்துவிட்டு அன்னிய நாட்டு ராட்சத “வால்”மார்ட்டுகளை வரவழைத்திருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.


நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்”கெடுப்பில்” மத்திய அரசு நடந்துகொண்ட விதமே, இந்திய ஜனங்கள் இவர்களது பார்வையில்  விற்பனைப் பொருள்கள் என்பதற்கு கட்டியம் கூறிவிட்டது. ஜெயிக்க மாட்டோம் என்ற அச்சத்தில் இருந்தபோது ஒரு பதுங்கல், ஆட்களைச் சரிகட்டி ஜெயம் நிச்சயம் ஆனவுடனேயே ஒரு பாய்ச்சல் என அரசியலில் தான் ஒரு புலி என்பதை காங்கிரஸ் நிரூபித்துவிட்டது. மத்தியக் கூட்டணி அரசுக்கு முதலில் எதிர்ப்பு காட்டிவிட்டு, பிறகு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டிக்கொண்ட, தி.மு.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய அவியல் கட்சிகள், நரிகளா, விலாங்கு மீன்களா, பச்சோந்திகளா, என்ன வகை ஜீவராசிகள் என்பதுதான் தெரியவில்லை.

அது கிடக்கட்டும். இந்திய மக்களின் தலையில் மத்திய அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள மற்றொரு காலனி ஆதிக்கமான அன்னிய நேரடி முதலீட்டின் விளைவுகளை சற்று நினைத்துப் பார்ப்போம். உழைத்து உழைத்து ஓடாய்ப் போகும் விவசாயிகளுக்கு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லையே என்ற காரணத்துக்காகத்தான், அன்னிய ராட்சத நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அரசாங்கம் அனுமதிக்கிறதாம். “கேப்பையில் நெய் ஒழுகுகிறது” என்பார்களே அது, இதுதான்.


இதனோடு உபரியாக, மலிவு விலையில் மக்களுக்கு, தரமான பொருள் கிடைக்குமாம். ஆரோக்கியமான தொழில் போட்டி ஏற்படுமாம். புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இந்தியாவுக்குள் புகுந்துகொள்ளுமாம். வேலைவாய்ப்பு வெகு பிரகாசமாய் உருவெடுக்குமாம். பூவை அல்ல பூந்தோட்டத்தையே காதில் சுற்றுகிறார்கள்.

முதல் விஷயம், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும், இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை எடுத்துக்கொள்வோம். சில்லறை வணிகத்தில் இறங்கும் அயல்நாட்டு ராட்சத நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து அறுபது சதவீத விளைபொருட்களை வாங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதை இதற்கு வாகாக சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், இந்த விளைபொருட்களை காப்பாற்றி, சேமித்து வைக்க பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட கிடங்குகளை இந்த நிறுவனங்கள் அமைக்கும் என்றும் கூறுகிறார்கள்.


சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். இடைத்தரகர்களை ஒழித்துவிட்டாலும்கூட, விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்குத்தான் விளைபொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மலிவு விலையில் வாங்கி, அதிக அளவுக்கு விற்பதன் மூலம் மிகுந்த லாபம் ஈட்டுவதே இதுபோன்ற ராட்சத நிறுவனங்களின் வியாபார தாரக மந்திரம். நாடு முழுவதும் கிளைபரப்பி ஏகபோகம் செய்யும் இதுபோன்ற மகா மெகா நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளுக்கு மிகுந்த கூலி அல்லது கூடுதல் விலை கிடைக்க என்ன வழி?

விவசாயிக்கு கட்டுப்படியாகாத விலையை இந்நிறுவனங்கள் கொடுக்க முன்வந்தால் அரசு தலையிடுமா? உரிய விலை கிடைக்க என்ன உத்தரவாதம்? அரசு தலையிடுமென்றால் வியாபார சுதந்திரம் பறிபோனதென்று கூக்குரல் எழுமே? அமெரிக்காவிலிருந்து ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று கட்டளைக்குரல் வருமே? இதுபோன்று தலையிடலாமென்றால் இப்போதுள்ள நடைமுறையிலேயே இதனைச் செய்யலாமே?


அதுசரி, நவரத்தினங்கள், மகாரத்தினங்கள் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் உபரிப் பணம் வைத்திருக்கும் மத்திய அரசுக்கு சர்வதேசத் தரத்தில் குளிர்பதனக் கிடந்குகளைக் கட்டி, நிர்வகிக்கத் தெரியாதா? அதற்கெனவே நாடு தழுவிய பெரிய அரசு நிறுவனத்தை அமைக்க இயலாதா? ஹூம், ஏற்கெனவே இருக்கும் கிடங்குகளிலேயே எலிகள் ஏறி விளையாடுகின்றன, தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளில் கேட்பாரின்றி முளைவிட்டுச் செடிகள் முளைத்து தானியங்கள் மக்கி வீணாகின்றன. இந்த லட்சணத்தில் அரசே குளிர்பதனக் கிடங்கு நடத்துவதா? என்று வினவலாம். ஆயிரம் குறை இருந்தாலும் அதனைக் களைவதை விட்டுவிட்டு, அன்னியர் புகுவதற்கு அனுமதிப்பது என்ன நீதி?

இடைத்தரகர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டுமென்றால், சந்தைப்படுத்தும் முகமையை (மார்க்கெட்டிங் ஏஜென்சி) அரசே அமைக்கலாமே? விவசாய விளைபொருட்களை நல்ல விலைக்கு வாங்கி பாதுகாத்து விற்கின்ற நிறுவனத்தை அரசே பெரிய அளவில் நடத்தும்போது, இதற்கென ஓரளவு கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டாலும்கூட, சாமானிய மக்களுக்கு தரமான பொருட்கள், கொள்ளை லாபம் அடிக்கும் தரகுக் கூட்டம் இல்லாததால், மலிவு விலைக்குக் கிடைக்குமே? மறுபுறம், விவசாயியும் உரிய பலன் பெறுவாரே? புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகுமே?

மேலும், அரசியல் தலையீட்டாலும், கட்டாயக் கடன் தள்ளுபடி மேளாக்களாலும், ஊழல்களாலும் தள்ளாடிக் கிடக்கும் கூட்டுறவு அமைப்புகளை சீர்படுத்தி இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்தினால் எல்லாத் தரப்பினருக்கும் எவ்வளவு நன்மை? வெற்றிகரமான “அமுல்” வரலாறு ஏன் மற்ற துறைகளிலும் அமலாகவில்லை? குரியன்கள் ஏன் குறுகிப்போனார்கள்?


மத்திய அரசாங்கமும், அன்னிய (முதலீட்டு) ஆதரவாளர்களும் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், சில்லறை வணிகத்திற்குப் பதில், wholesale எனப்படும் மொத்தக் கொள்முதல் வியாபாரத்தில் அவர்களை இறக்கி விட்டிருந்தாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது, இந்தியப் பொருளாதாரத்திற்கு நேர் அடிதான் என்பதில் சந்தேகமில்லை.

பல்லாயிரக்கணக்கான உண்மையான சில்லறை வியாபாரக் கடைகள், இந்த அன்னிய பகாசுர சில்லறை நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்பட்டு கல்லறைக்குப் போய்விடும். இதற்கென ஒரு மேல்தட்டுக் கூட்டம்தான் போகும், நடுத்தர, சாமான்ய மக்கள் சிறிய கடைகளுக்குத்தான் செல்வார்கள் என்று சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. காரில் வந்து இறங்கும் வெறும் மேல்தட்டுக்கு மட்டுமே கடை விரிக்க, அன்னிய நிறுவனங்கள் என்ன மேல்மாடி காலியான நிறுவனங்களா? அய்யா, இந்தியா உலகின் மிகப் பெரிய வியாபார சந்தை அய்யா, அந்தக் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி. திரும்பத் திரும்ப வெளிநாட்டு வியாபாரிகளிடம் தானே ஏமாந்துபோகிறோம்? சரித்திரத்தைச் சரியாகப் படிக்காத தரித்திரங்கள் நாம்!


மலிவு விலை விற்பனைக்காக, இந்திய விவசாயியும் குறைவான விலை மட்டுமே கிடைத்து நலிவடைவான். மேலும், இருக்கவே இருக்கிறார் சின்ன அண்ணன் சீனா. என் கடன் ஏனென்று கேட்க நாதியில்லாமல் வேலை செய்துகொண்டே இருப்பதே என்று வாழும் வாயில்லா ஜீவன்களான அப்பாவி மனிதர்கள் நிரம்பி வழியும் சீனா, மலிவு விலைப் பொருட்களை, பெரிய அண்ணன் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் நிரப்பிவிடும். பின்னர் ஒவ்வொன்றாக இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கும் மூடுவிழா காணவேண்டியதுதான். அப்புறம் ஏதோ சொன்னார்களே, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, அது வெறும் பகல்கனவுதான். வெளிநாட்டு விற்பனை நிறுவனக் கடைகளின் சிப்பந்திகள் எண்ணிக்கை வேண்டுமானால் ஏதோ சற்று கூடலாம். ஆனால், அயல்நாட்டுப் பொருட்களின் தாராள வருகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல வேலைவாய்ப்புகள் பறிபோகும். அத்துடன், சுயதொழிலும் சுருங்கிப் போகும். சொந்தக் கடைக்கு  முதலாளிகளாக இருந்தவர்கள், இனி வந்த கடைக்கு ஊழியர்களாகப் போகவேண்டியதுதான்.

அடுத்தடுத்த அன்னியப் படையெடுப்புகளால் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக இருண்டுபோய்க் கிடந்த இந்தியா, இப்போதுதான் யாருடைய தயவும் இன்றி, பொருளாதார வளம் என்ற வெளிச்சத்தைப் பெற்றுவருகிறது. எதிர்கால பொருளாதார, அறிவுசார் வல்லரசு இந்தியாதான் என்பது இந்தியர்களுக்குத் தெரியுமோ இல்லையோ? தற்போது பொருளாதார மந்தநிலையால் தள்ளாடிவரும் மேல்நாட்டு வளர்ந்த நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் காலை ஊன்றுவதற்கு நமது குரல்வளையிலா இடம் கொடுப்பது?



சுவாமி விவேகானந்தர் வார்த்தையில் சொன்னால், ஆடு என்று நினைத்து கலங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவே, நீ சிங்கம் என்பதை உணர்ந்து சிலிர்த்து எழு. பொருளாதார வளத்திலும் சரி, சர்வதேச அரசியல் பலத்திலும் சரி, உனது கர்ஜனையை இனி உலகம் கேட்கட்டும்.

-      -   பத்மன்


3 கருத்துகள்:

  1. சில்லறை விஷயமில்லை - நன்றி பத்மன்

    ஆபத்தான விஷயத்தை அழகாக அலசிய ஆ.Padmanabhan

    சிறந்த அலசல். என் மனதில் எழும் கேள்வி - Why Now?? -
    ஏன் இந்த தருணத்தில்?? -

    பதிலளிநீக்கு
  2. நன்று. நாம் சிந்திக்கும் அளவு கூடவா பிரதமர் மன்மோகன்சிங் சிந்திக்க மாட்டார். யார் எக்கேடு போனால் என்ன?

    பதிலளிநீக்கு