ஞாயிறு, 7 ஜூன், 2015

அப்பப்பா சின்னப்பா


(தமிழ்த் திரையுலகின் முதல் இரண்டு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமரர் பி.யூ. சின்னப்பாவின் நூற்றாண்டு கடந்த 5-ஆம் தேதி (05.06.2015) தொடங்கியதை முன்னிட்டு, அவரது சிறப்பைக் கூறும், இந்தக் கட்டுரையை கலை, திரைப்பட ரசிகர்களுக்கும் பழைமையை நேசிப்பவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய புதுக்கோட்டை புகழ்வாணர் திரு. ப. வெங்கட்ராமன் (திருவாளர் பிவி) அவர்களுக்கு நன்றி.)
பெயர்தான் சின்னப்பா, அவரது திறமையும், திரையுலக சாதனைகளும் வியந்து நம்மைச் சொல்ல வைக்கும் அப்பப்பா. செயற்கரிய செயல் புரிந்த மூத்தவர்களை பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். பிதாமகர் என்றால் அப்பாவின் அப்பா என்று பொருள். மிகத் திறமையுடயவர்களை அப்பன் என்றும், மிக மிகத் திறமைசாலிகளை அப்பனுக்கெல்லாம் அப்பன் என்றும் புகழ்வது இதன் உட்பொருள். பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முப்பாட்டன் என்பதோடு மாபெரும் பராக்கிரமசாலி என்பதால், பிதாமகர் என்ற அவருக்கான விளிச்சொல், மற்ற மூத்த திறமைசாலிகளுக்கும் விரிவுபட்டுவிட்டது.  அந்த வகையில் தமிழ்த் திரையுலகின் அப்பப்பா (பிதாமகர்) பி.யூ. சின்னப்பா.
அவர் நடித்த படங்கள் இரண்டு டஜன்களுக்கு இரண்டு அதிகம் (26). அவர் வாழ்ந்த ஆயுளோ மூன்று டஜன்களுக்கு ஒன்று குறைவு (35). இத்தனைக் குறுகிய காலமே வாழ்ந்து, குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்துள்ளபோதிலும், நிறைவான திறமைகளைக் காட்டி அமரத்துவம் பெற்றுவிட்ட அற்புத நடிகர் பி.யூ. சின்னப்பா.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பாடிய திரைப்படப் பாடல்கள் அடங்கிய கிராமபோன் ரெக்கார்டுகள், விற்பனையில் ரெக்கார்டு (சாதனை) புரிந்தன. அவர் மறைந்து 65 ஆண்டுகள் கழிந்த இன்றைய நவீன காலத்திலும் அவரது பாடல்களும், படங்களும் அடங்கிய டி.வி.டி-களுக்கு மிகுந்த டிமாண்டு உள்ளது. அவர் மறைந்தாலும், அவரது புகழ் மறையவில்லை.
எனது தாத்தா காலத்து நடிகரான பி.யூ. சின்னப்பாவை வியந்து, எனது பிள்ளைகளுக்கும், அவர்களது வயதை ஒத்த மற்ற இளைய தலைமுறையினருக்கும் நான் உரைக்கிறேன் என்றால், அங்குதான் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் பி.யூ. சின்னப்பாவின் திறமை பளிச்சிடுகிறது.
புதுக்கோட்டை உலகநாதன் பிள்ளை சின்னசாமி என்ற இயற்பெயர் கொண்ட பி.யூ. சின்னப்பா, 1916-இல் புதுக்கோட்டையில் பிறந்தார். தனது  தந்தை உலகநாதன் பிள்ளையை அடியொற்றி, சிறு வயதிலேயே நாடக நடிகரானார். நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நாடக உலகில் நுழைந்த சின்னப்பா, சதாரம் நாடகத்தில் பால பக்காத் திருடனாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்தார்.
 8 வயதில் தத்துவ மீனலோசனி வித்வ பால சபையில் சேர்ந்த அவர், பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு மாறினார். அங்கு தொடக்கத்தில் 15 ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்கும் கதாநாயக நடிகனாக சில மாதங்களிலேயே உயர்ந்தார். அப்போது அவருக்கு ஜோடியாக பெண் வேடம் போட்டவர் யார் தெரியுமா? சாட்சாத் புரட்சித் திலகம் எம்ஜியார்.
பி.யூ. சின்னப்பாவுக்கு இணையாக (ஜோடியாக) நடித்த எம்.ஜி. ராமச்சந்திரன், அவருக்கு இணையாக தானும் உயர வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஏனெனில் நாடகத்திலும் சரி, திரையுலகிலும் சரி எம்ஜியாரின் ஆதர்ச நாயகன், பி.யூ. சின்னப்பாதான்.
நடிப்பு, நல்ல குரல் வளம் ஆகியவற்றோடு நடனம், சண்டை ஆகிய பல கலைகளிலும் வல்லவர் பி.யூ. சின்னப்பா. குஸ்தி, மல்யுத்தம், சிலம்பாட்டம், வாள்வீச்சு, பட்டா சுருள் வீச்சு ஆகியவற்றில் கைதேர்ந்த வித்தகர். சகலகலா சக்ரவர்த்தியான பி.யூ.சின்னப்பாவைப்போல் வர வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜியார் சண்டைக் காட்சிகளில் விசேஷ கவனம் செலுத்தினார். தனது லட்சிய கதாநாயகனான பி.யூ. சின்னப்பா நடித்த ரத்னகுமார் (1949) திரைப்படத்தில் துணை நடிகராக எம்ஜியார் நடித்துள்ளார்.
எம்ஜியாருக்கு மட்டுமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் நடிகர் மன்னர் பி.யூ. சின்னப்பா. பிற்காலத்தில் இரட்டை வேடங்களிலும் மூன்று வேடங்களிலும் வித்தியாசமான தோற்றங்களிலும் சிவாஜி கணேசன் கலக்கினார் என்றால், அதற்கு முன்னோடி பி.யூ.சி-யே. தமிழ்த் திரையுலகில் பி.யூ. சின்னப்பாதான் முதன்முறையாக இரட்டை வேடம் போட்டவர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா இரட்டை வேடம் பூண்ட உத்தம புத்திரன் 1940-ல் வெளியாகி, அவருக்குப் புகழ் மகுடம் சூட்டியது. இதே பெயரில், இதே கதையில் சிவாஜி நடித்த உத்தம புத்திரன் 1958-இல் வெளியானது.
இதேபோல், 1941-ல் பி.யூ. சின்னப்பா நடித்த ஆர்யமாலா திரைப்படம்தான், பின்னர் 1958-ல் சிவாஜி நடிப்பில் காத்தவராயனாக மலர்ந்தது. மேலும் 1944-ல் பி.யூ.சி. நடிப்பில் உருவான ஹரிச்சந்திராதான், 1968-ல் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான ஹரிச்சந்திராவுக்கு முன்னோடி. தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக மூன்று வேடமிட்டவரும் பி.யூ.சி.தான். 1949-ல் வெளியான மங்கையர்க்கரசி திரைப்படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் காமரூபன் காமரூபி கதைதான் மங்கையர்க்கரசி திரைப்படக் கதைக்கு மூலம். இந்தத் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
இதேபோல், மதனகாமராஜன் கதைகளில் மந்திரிகுமாரனாகிய மதனகாமராஜன் சொல்லும் 12 கதைகளில் ஒன்றான ஜகதலபிரதாபன் அதே பெயரில் பி.யூ. சின்னப்பா நடிப்பில், 1949-இல் திரைப்படமாக வெளியானது. இந்தப் படத்தில்  தாயைப் பணிவேன் என்ற பாடல் காட்சியில், பாடகர், கஞ்சிரா வாசிப்பவர், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், கொன்னக்கோல் சொல்பவர் (ஜதி சொல்பவர்) என 5 வித தோற்றங்களில் (கெட்டப்-களில்) அசத்தியிருப்பார் பி.யூ.சின்னப்பா. (மிகவும் கஷ்டமான ஜதி சொல்வதை தானே செய்தார் பி.யூ.சி.) இதை முன்மாதிரியாகக் கொண்டே, திருவிளையாடல் திரைப்படத்தில் பாட்டும் நானே பாடல் காட்சியில் 5 விதத் தோற்றங்களில் அற்புதம் படைத்தார் நடிகர் திலகம்.
மேலும் திருவிளையாடல் திரைப்படத்தில் மீனவ வேடம் பூண்ட சிவபெருமானாக வரும் சிவாஜி கணேசனின் ஒயிலான நடை ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றதைப்போல், அதற்கு முன்னோடியாக, ஜகதலபிரதாபன் திரைப்படத்தில் தாய்-தந்தையைக் காணவரும்போது கதாநாயகனான பி.யூ. சின்னப்பா நடந்துவரும் துள்ளல் நடை ரசிகர்களை வசீகரித்தது.. மனோன்மணி திரைப்படத்தில் பி.யூ. சின்னப்பாவின் வாள்வீச்சு பிற்காலத்தில் எம்ஜியாரிடம் வெளிப்பட்டதென்றால், அதே திரைப்படத்தில் அவரது கம்பீரமான நடையும், கனஜோரான பேச்சும் பிற்காலத்தில் சிவாஜியிடம் பிரதிபலித்தன.
எனது தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர் என்பதோடு, நடிக பேதமின்றி தமிழ், ஹிந்தி திரைப்படங்களை நன்கு ரசித்தவர். அவர் சிலாகித்துக் கூறியதால், ரஞ்சன், எம்.கே. ராதா, பி.யூ.சி., எம்.கே.டி., எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, ராஜ் கபூர், குரு தத், பிரான் ஆகிய அக்கால நடிகர்களை நானும் ரசிக்கத் தொடங்கினேன். எனது கல்லூரிப் பருவத்தில் மதுரை சிட்டி திரையரங்கில் மங்கையர்க்கரசி, ஜகதலபிரதாபன் (எத்தனையாவது ரீ ரிலீஸோ) திரைப்படங்களை பல முறை ரசித்துப் பார்த்திருக்கிறேன். பின்னர் தொலைக்காட்சியிலும் இணைய தளத்திலும் கிருஷ்ணபக்தி, மனோன்மணி உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்துள்ளேன்.
கிருஷ்ணபக்தி திரைப்படத்தில் 6 நிமிடங்கள் வரும் பாடிக்கொண்டே கதைசொல்லும் கதாகாலட்சேப காட்சி ஒன்றை ஒரே டேக்கில் நடித்திருக்கிறாராம் பி.யூ. சின்னப்பா. அந்தத் திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா பாடிய சாரசம் வசீகரம், எல்லோரும் நல்லவரே ஆகிய பாடல்களும், ரத்னகுமாரில் வரும் ஆஹா அதிசயம் இதாமே ஆகிய பாடல்களும் சாகா வரம் பெற்றவை. இதேபோல், மங்கையர்க்கரசியில் அவர் பாடிய காதல் கனிரசமே, பார்த்தால் பசிதீரும் ஆகிய பாடல்களும் அமரத்துவம் பெற்றவை. குபேர குசேலா படத்தில் பி.யூ. சின்னப்பா பாடிய, கரகரப்ரியா ராகத்தில் அமைந்த நடையலங்காரம் கண்டேன் பாடல், இன்றளவிலும் தமிழ்த் திரையுலகின் முதலிடம் பெற்ற பாடலாகவும், காலம்காலமாக ரசிகர்களுக்குப் பிரியமான பாடலாகவும் அமைந்துள்ளது.
1936-இல், தனது 20-ஆவது வயதில் சந்திரகாந்தா திரைப்படத்தில் பி.யூ. சின்னசாமி என்று அறிமுகமான பி.யூ. சின்னப்பா, 1942-இல் பிருத்விராஜன் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஏ. சகுந்தலாவை 1944-இல் இல்வாழ்விலும் கரம்பிடித்தார். உத்தமபுத்திரன், தயாளன், தர்மவீரன், ஆர்யமாலா, மனோன்மணி, மங்கையர்க்கரசி, ஜகதலபிரதாபன், கிருஷ்ணபக்தி, கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த பி.யூ. சின்னப்பா நடித்த கடைசிப் படம் சுதர்சன் 1951-ல் அவரது மறைவுக்குப் பின்னர் வெளியானது. தனது 35-ஆவது வயதில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இன்றளவிலும் விடை காணமுடியாத மர்மமான முறையில் அகால மரணமடைந்ததால் பி.யூ. சின்னப்பாவின் திரையுலகப் பயணம் மட்டுமின்றி வாழ்க்கைப் பயணமும் திடீரென முடிவுற்றது. இருப்பினும், ரசிகர்களின் மனங்களில் அவரது வெற்றிப் பயணம் முடிவின்றி தொடர்கின்றது.
-    பத்மன்