வெள்ளி, 26 அக்டோபர், 2012

அற்புத ஆன்மீகக் கலைப் பொக்கிஷம்



சிப்பியில் இருந்து முத்து பிறக்கிறது. முட்செடியில் ரோஜா பூக்கிறது. சேற்றில்தான் செந்தாமரை மலர்கிறது. ஆகையினால் நமக்கு ஏற்படும் மோசமான சூழ்நிலைகள்கூட நம்மை வளமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இறை நம்பிக்கை இருந்தால் எந்தச் சூழ்நிலையும் ஏற்றம் தருவதாகவே அமையும். அந்தவகையில் தற்போது நாம் காணவிருக்கும் இறைவன் கொலுவிருக்கும் ஆலயம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் திருக்கோவில்.


கலைப் பொக்கிஷங்களாகத் திகழும் கனவுலகம் போன்ற பிரும்மாண்டமான பேராலயங்கள் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்தன. அவர்களில் அற்புதமான கோவில்களை போட்டி போட்டுக்கொண்டு நிறுவி, தந்தை, மகன், பேரன் ஆகிய மூவர் அழியாப் புகழ் பெற்றனர். தந்தை ராஜராஜ சோழன் தஞ்சையிலே பிரஹதீஸ்வரர் ஆலயத்தையும், மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்திலே மற்றொரு பிரஹதீஸ்வரர் ஆலயத்தையும் நிறுவ, பேரன் இரண்டாம் ராஜராஜ சோழன் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைத்த கோவில்தான் இந்த ஐராவதீஸ்வரர் ஆலயம்.



இரண்டாம் ராஜராஜனின் பெயரால் ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு, அந்தப் பெயர் மருவி தற்போது தாராசுரம் என்று ஆகியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த க்ஷேத்திரத்தில் ஒருமுறை தேவேந்திரனின் பட்டத்து யானையான வெண்மை நிற ஐராவதம், சிவலிங்கத்தை வழிபட்டிருக்கிறது. துர்வாச முனிவரின் சாபத்தால் உடலின் வெண்மை நிறம் மாறி கருப்பாகி வந்த ஐராவதம், இந்த ஆலயத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி இங்கே சிவபெருமானை வழிபட்ட பிறகே சாபம் நீங்கி பழைய உருவம் பெற்றதாம். அதனால் இங்குள்ள இறைவனுக்கு ஐராவதீஸ்வரர் என்று பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.



ஐராவதம் இங்கே வழிபட்டதற்கு முன்பே படைப்புக் கடவுளான பிரும்மா, பரம்பொருளான சிவபெருமானை இங்கே வணங்கி வழிபாடு செய்துள்ளார். அவர் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இங்குள்ள குளத்திற்கு பிரும்ம தீர்த்தம் என்று பெயர். மேலும் கால தேவனாகிய எமனும், காலாதீதனாகிய சிவபெருமானை இங்கே வழிபட்டுள்ளார். ஒரு முனிவரின் சாபத்தால், உடல் எல்லாம் வெந்து, எரிச்சலில் அவதியுற்ற எமன், இங்குள்ள பிரும்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு பூஜை செய்ததால், வெம்மை நோயில் இருந்து விடுபட்டார். அதனால் இங்குள்ள தீர்த்தம் எம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷம், பாதிரி மரம்.


கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழ மன்னன் எழுப்பிய இந்த ஆலயம், அமைப்பில், முதலாம் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் கட்டிய பிரஹதீஸ்வரர் ஆலயங்களை ஒத்திருக்கிறது. ஆனால் அளவில் அவற்றைவிட சற்று சிறியது. எனினும் கலை அம்சங்களில் முந்தைய இரண்டு ஆலயங்களைவிட இது மிகச் சிறந்தது.



சிற்பக் கலை, ஓவியக்கலை, பரத நாட்டியக் கலை ஆகிய அனைத்தும் இங்கே நுணுக்கமாகவும், விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயம் வழிபாட்டுக்காக மட்டுமின்றி, மிகச் சிறந்த பொழுதுபோக்கையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நித்ய விநோதம், இந்த ஆலயக் கட்டுமானத்தின் மைய நோக்கமாக உள்ளது. ஆண்டுகள் பல நூறு கடந்தும் அந்த நோக்கத்தை இப்போதும் சிறப்பாக நிறைவேற்றி வரும் இந்த ஆலயம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுத்து வருகிறது.



தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம், ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இங்குள்ள கலை வடிவ ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.



கோவில் கோபுர விமானம் பல்வேறு கலைப் படைப்புகளுடன் 85 அடி உயரத்தில் நெடிதுயர்ந்து நிற்கிறது. கோவில் முகப்பு மண்டபம் மிகப் பெரிய தேரைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரைகள் இதனை இழுத்துச் செல்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பிலேயே சங்கநிதி, பதும நிதியுடன் குபேரர் நம்மை வரவேற்கிறார். படிகளில் ஏறி, மேலே சென்றதும் யானைகள் ரதத்தை இழுத்துச் செல்வதுபோல மைய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அமைப்புக்கேற்ப ராஜ கம்பீரம் என்று இந்த மண்டபத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.



மைய மண்டபத்தின் மேலே விதானத்தில், மலர்ந்த தாமரை மலர் மேல் சிவனும் பார்வதியும் வீற்றிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள சிற்பக் கடைசலைக் காணக் கண்கோடி வேண்டும். அது மட்டுமா? அந்த மண்டபம் முழுதுமே தூணுக்குத் தூண் சிற்பச் செதுக்கல்கள்தான். இறைவன், இறைவி வடிவங்கள் சிறிய அளவில் மிக நுட்பமாகவும், அர்த்தபுஷ்டியுடனும் செதுக்கியவர்கள் நிச்சயம் தெய்வீக அருள் பெற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும்.



தாராசுரம் கோவிலில் ஒவ்வொரு தூணின் ஒவ்வொரு பட்டையிலும் பண்வேறு நுணுக்கமான வேறுபாடுகளுடன் கூடிய கலை அம்சங்கள் காட்சி தருகின்றன. உளியால் வரைந்த சித்திரங்களோ என்று மலைப்பை ஏற்படுத்துகின்றன. சோடச உபசாரங்கள் எனப்படும் பரத நாட்டியத்தின் பதினாறு வகை அபிநயங்களுடன் நாட்டியக் கலைஞர்கள், இக்கோவில் தூண்களில் உயிர் பெற்று எழுந்ததைப் போல் காட்சி தருகின்றனர். சிவனின் திருவிளையாடல்களும், கிருஷ்ண லீலைகளும் கூட படக் கதையைப்போல தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.



கோவில் மண்டபத்திலே கைலாச மலையை ராவணன் தூக்க முயலும் சிற்பக் காட்சியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. நாட்டியம் ஆடும் கணபதியின் தொப்புள் சுழிகூட நம்மை வியக்க வைக்கிறது. புத்தர், வீணை இல்லாத சரஸ்வதி, அர்த்தநாரீஸ்வரர், பிரும்மா, சூர்யன் என பல்வேறு விக்கிரகங்களும் நம்முடன் பேசுவதைப் போல அத்தனை தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.



தாராசுரம் கோவிலில் சரபேஸ்வரருக்காகவே தனியொரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரக்கன் இரணியனைக் கொன்ற பிறகும் ஆத்திரம் தீராத சிங்கமுகத்துடன் கூடிய மகாவிஷ்ணுவின் அவதாரம் நமக்கு அச்சமூட்டுகிறது என்றால், நரசிம்மத்தை தம் மடியில் கிடத்தியிருக்கும் சிங்க முகமும், பெரும் பறவையின் உடலும் கொண்ட சரபேஸ்வரரின் ரௌத்திரம், அச்சத்தின் உச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று அதனை அகல வைக்கிறது. சரபேஸ்வர வழிபாடு இந்த ஆலயத்தில் இருந்துதான் தோன்றியதாக கூறுவாருண்டு.



கோவில் கருவறைக்குள் மிகப் பெரிய லிங்கமாக ஐராவதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் எமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்த மாதாக்கள் ஆகியோருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. கோவில் வெளிப் பிரகாரத்தின் சுற்றுச் சுவர்களிலும் பல சிற்ப வேலைப்பாடுகள் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன.



தலைப்புறம் யானையும், மாடும் இணைந்த சிற்பம் தாராசுரம் கோவிலில் காணப்படும் அதிசய சிற்பங்களுக்கோர் உதாரணம். ஒருபுறம் பார்த்தால் தந்தத்தை தூக்கியபடி யானை தெரிய, மறுபுறத்தில் இருந்து பார்த்தால் அந்த யானையின் தலை, கொம்புகளை உயர்த்திய மாடுபோல் மாறுவது சிற்பத்தில் ஓர் அற்புதம்.



தற்காலத்து ஜிம்னாடிக்ஸைப் போல அந்தக் காலத்து கழைக்கூத்து குறித்த சிற்பமும் பேரதிசயம்தான். சாகசம் புரியும் பெண் ஒருவரின் தலை நடுவிலே இருக்க, நாலாபுறமும் பல்வேறு சாகசங்களை செய்து காண்பிக்கும் உடல்கள் வேறாய், சிலை வடிப்பதில் புதிய சாகசம் அரங்கேறியிருப்பதை இங்கே காணலாம்.



தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்கு வடக்குப் புறத்தில் அதாவது இடப்புறத்தில் அம்மனுக்கென தனிக் கோவில் உள்ளது. அம்மனின் திருநாமம் பெரியநாயகி. தெய்வநாயகி என மற்றொரு திருப்பெயரும் உண்டு. இந்தக் கோவிலிலும் சிற்ப அற்புதங்கள் தொடர்கின்றன. கோவில் தூண்கள், சுவரில் உள்ள சாளரங்கள் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான சிற்ப வேலைப்பாடுகள்.



ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்கு வெளியே பலி பீடம், படிக்கட்டுகளுடன் வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இந்த பலி பீடம் அருகே விநாயகருக்கு தனிச் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியை அடுத்து மிகப் பெரிய நந்தி, சிவபெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளது. நந்தியை ஒட்டி சிலப் படிக்கட்டுகள் உள்ளன. இதற்கு நாதப் படிக்கட்டுகள் என்று பெயர். இந்த படிக்கட்டுகளை கல்லால் தட்டினால் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெவ்வேறு நாதம் பிறக்கும். மக்களின் அறியாமையால் இந்த நாதப் படிக்கட்டுகளுக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டதை அடுத்து தற்போது இந்தப் படிக்கட்டுகளை யாரும் தொடாத வகையில் கதவு போட்டு பூட்டப்பட்டிருக்கிறது.



தாராசுரம் ஆலயத்தில் பழங்கால சித்திரங்களும் காணப்படுகின்றன. முதலில் சோழர் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களை பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் புதுப்பித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் பல வரலாற்றுக் கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன. கோவிலின் வடபுற சுவரில் நாயன்மார்கள் உள்ளிட்ட சைவ சமய ஆச்சார்யர்களின் திருவுருவங்களும், அவர்களது வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களும் நூற்றியெட்டு கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன.



இரண்டாம் ராஜராஜன் இந்த ஆலயத்தை எழுப்பி, பல கிராமங்களை இந்த ஆலயத் திருப்பணிகளுக்காக நிவேதனமாக வழங்கியிருப்பதை ஒரு கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இந்தக் கோவிலில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டது குறித்த கல்வெட்டுகளும், முதலாம் ராஜாதிராஜ சோழன், சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனை வென்று அவனது தலைநகர் கல்யாணிரத்தைக் கைப்பற்றியது குறித்த கல்வெட்டும் வரலாற்று ஆதரங்களாகத் திகழ்கின்றன. பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீவல்லபதேவன் தாராசுரம் ஆலயத்தைப் புதுப்பித்து, பல திருவிழாக்கள் நடத்தியிருப்பதை மற்றொரு கல்வெட்டு எடுத்துரைக்கிறது.



இப்படி ஆன்மீகத்தோடு கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் தற்போது இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. அதேநேரத்தில், நித்தியப்படி பூஜைகள் ஆகம விதிப்படி முறையாகவே நடந்து வருகின்றன. 



கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் தாராசுரம் அமைந்துள்ளது. இங்கு சென்று ஐராவதீஸ்வரரை வணங்கினால், ஐராவதம்போல் நமக்கும் புதுப் பொலிவு ஏற்படும் என்பதோடு, ஓங்கி நிற்கும் நமது சரித்திரப் பாரம்பரியப் புகழும் நமக்குப் புலப்படும்.

-         -  பத்மன்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நன்றி இறைவா!




கடினமாய் உழைத்துத்தான்
குடும்பத்தைக் காப்பாற்றும்
கஷ்டமான சூழலில்
கடவுளே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
களைப்பு என்னிடம் கழன்றுவிட்டது.


பதவிகளைப் பிடித்து
பணம்அதிகம் பண்ணத்தெரியாத
பத்தாம்பசலி மனிதனாய்
பகவானே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
குணம் என்னிடம் குடிகொண்டுள்ளது.



திறமைகள் மிகுந்திருந்தும்
திருப்பங்களைக் காணாமல்
திக்கற்று நின்றிடவே
தெய்வமே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
முயற்சி என்னிடம் முளைத்துவருகிறது.



பாமாலைபாடி பூமாலைசூட்டி
பலவிதமாய் துதித்தும்
பலனேதும் கிடைக்காதவனாய்
பரம்பொருளே என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி இறைவா – அதனால்தான்
பக்தி என்னிடம் பற்றிக்கொண்டுள்ளது.



-    பத்மன்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அழிவு



எங்களது உணவுப் பண்டங்களைக் குளிரூட்ட
ஓசோன் படலம் ஓட்டையாக்கி வருகிறது
நாங்கள் வாகனங்களில் விரைவதற்காக
பனிப்பாறைகள் உருகுகின்றன.


எங்கள் எரிபொருள் தேவைக்காக
மரங்கள் கரியாகி வருகின்றன.
நாங்கள் குடியிருப்புகளைக் கட்டுவதற்காக
வனங்கள் மொட்டையடிக்கப் படுகின்றன.


எங்களது உணவுத் தேவைக்காகவும்
இன்னபிற வசதிகளுக்காவும்
தினமும் மிருகங்கள் செத்துமடிகின்றன.


எங்களில் சிலரது சுயநலத்திற்காக
நாங்களும் கூடத்தான் மடிந்து மண்ணாகிறோம்.


அழிவு ஒன்றுதான் நிலைப் பேறுடையது
ஆனால் தவணை முறையில் வருகிறது.
வாழ்வு என்பது வேறோன்றுமில்லை
அழிவைச் சற்று ஒத்திப்போடுவது.



ஆயினும் எங்கள் அவசர யுகத்தில்
ஆசைகளின் பூர்த்திக்காக
வாழ்க்கை வசதிகள் என்ற பெயரில்
அழிவை நாங்கள் அருகழைத்துக் கொள்கிறோம்.

-    பத்மன்