வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கவிதைக் கனல்




யாருடைக் கவிதை கேட்டதும் நெஞ்சில்
     வீறுடன் எழுச்சி விருட்டென வருமோ
யாருடைக் கவிதை படித்ததும் உலகில்
     வேருடன் புரட்சி வெடித்து எழுமோ
யாருடைக் கவிதை காலங்கள் கடந்தும்
     சீருடன் பெருமை சிறப்பாய் தருமோ
நூறாயிரம் தீமைகள் நொடியில் பொசுக்கிடும்
     ஆயுதம் அதுவே கவிதைக் கனல்.


லஞ்சமும் ஊழலும் வஞ்சகக் கீழ்மையும்
     கொஞ்சமோ பூமியில் நெஞ்சமும் நடுங்குதே!
பஞ்சமும் நோயுமே நஞ்சிலும் கொடுமையாய்
     விஞ்சவே ஏழைகள் அஞ்சியே சாகிறார்
நெட்டை மரங்களாய் நின்றால் தீருமோ?
     பெட்டைப் புலம்பல் பேசினால் மாறுமோ?
சாட்டை எடுத்து சவுக்கடி கொடுக்க
     பாட்டிலே பறக்கட்டும் கவிதைக் கனல்.



சாதியின் பெயரால் சண்டைகள் தொடருது
     மதத்தின் பெயரால் மண்டைகள் உடையுது
பக்தியும் கெட்டுப் பகல்வேஷம் போடுது
     பகுத்தறிவு திரிந்து பாசாங்கு காட்டுது
மாற்றம் கண்டிட நினைக்கா மாந்தர்
     ஏற்றம் இன்றியே கிடந்துழல் கின்றார்
ஆற்றிட முடியா அவலம் அழித்திட
     ஆயுதம் எடுப்போம் கவிதைக் கனல்.

-    பத்மன்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஓடும் பேருந்தில் ஒருநாள்




பஸ்ஸுக்குக் காத்திருக்கையில்
பரிதாபமாக ஒருகுரல்
“ஏதாச்சும் போடுங்கய்யா”.
கிழிந்த உடையில்
கூனல் கிழவன்
கெஞ்சி நின்றான்.


சிறிதுநேர யோசனைக்குப்பின்
“சில்லறை இல்லை”
சொல்ல, சென்றான்.



போஸ்டரில் திரிஷா
புன்னகை பார்க்கையில்
“பிள்ளை அழுவுதய்யா,
பெரியமனசு பண்ணுங்க”
அழும் குழந்தையுடன்
அழுக்காய் ஒருபெண்
அலுமினியத் தட்டேந்தி.


‘பிள்ளை பெற்றதா,
பிடித்து வந்ததா?’
சந்தேகித்துச் சொன்னேன்
“சில்லறை இல்லை”.



விருட்டென் பஸ்வர
விரைந்து ஏறினேன்.
காலை மிதித்து
தோளில் இடித்து
இடத்தைப் பிடித்து
அப்பாடா என்கையில்,
மடியில் நோட்டீஸ்.



சினிமாக்கதை போலொரு
சோகக்கதை அச்சில்.
வெறுமனே நோட்டீசைத்
திருப்பிக் கொடுக்கையில்
‘தர்மம்’என்றான் சிறுவன்,
சலிப்பாய் சொன்னேன்
“சில்லறை இல்லை”.


பேருந்து புறப்பட்டதும்
பத்துரூபா கொடுத்ததில்
கண்டக்டர் தந்தது
ஒன்பது ரூபாய்க்கு
டிக்கெட் மட்டும்.


மீதியை வாங்க
ஏகமாய் வழிந்து
‘சேஞ்ச்’என இழுத்ததும்
கடுப்பாய்ச்சொன்னர் கண்டக்டர்
“சில்லறை இல்லை”.

-    பத்மன்






வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சோராமல் தமிழுக்கு உழைத்த சேரத் தமிழர்




நெருங்கிப் பழகியவரின் மரணத்தைவிட நேரிலேயே பார்க்காத ஒருவரின் மரணம் நம்மை நிலைகுலையச் செய்தால், அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும்? அப்படியொரு வியத்தகு, போற்றுதலுக்குரிய மனிதர்தான், கொச்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், சேரத் தமிழ் காலாண்டு இதழின் ஆசிரியருமான  மேலைச்சிவபுரி திரு. அ.சொ. சிவப்பிரகாசம் அவர்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு புலம் பெயர்ந்த திரு அ.சொ., அங்கே தமிழ் பலம் பெற ஐம்பது ஆண்டுகாலம் அயராது உழைத்தவர். 140 ஆண்டுப்  பழமை வாய்ந்த எர்ணாகுளம் பொது நூலகத்தில், தமிழுக்கென ஒரு தனி நூலகப் பிரிவு நிறுவப்படக் காரணமானவர். மேலும் அந்த நூலகத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களை அன்பளிப்பாக வழங்கியவர். 


எர்ணாகுளத்தில் (கொச்சியில்) 22 தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து அனைத்துக் கேரளத் தமிழ்ப் பேரவையை உருவாக்கியவர்.
கேரள மண்ணுக்குப் பல தமிழறிஞர்களையும் தமிழன்பர்களையும் வரவழைத்து விருந்தோம்பல் செய்தவர். தமிழ்ச் சேவைக்காக காரைக்குடி கண்ணதாசன் ஆய்வு மையத்தின் நற்பணி நாயகர் விருது, தமிழறிஞர் சோமலெ நினைவு விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தமிழ்ப் பணிச் செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.


அத்தகு பெருமை வாய்ந்த திரு. அ.சொ. அவர்கள் காலமானார்கள் என்ற தகவலை, அவருடன் கொச்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து தமிழ் வளர்ச்சிப் பணியாற்றியவரும், கொச்சி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத்தலைவரும், கொச்சி முத்தமிழ் மலர் முன்னாள் ஆசிரியருமான திரு. பி. வெங்கட்ராமன் (பி.வி.) அவர்கள் மிகுந்த துயரத்துடன் கூறியபோது, என்னை அறியாமேலேயே என் கண்கள் பனித்தன. ஏனெனில், கார்கில் போரின்போது தினமணியில் நான் எழுதிய கவிதையை, என்னை யாரென்று அறியாமலேயே, நன்றி தினமணி என்று குறிப்பிட்டு சேரத் தமிழில் அப்படியே மறு பிரசுரம் செய்து பாராட்டிய பெருந்தகை திரு. அ.சொ.



என்னைப்போலவே பல தமிழன்பர்களையும் இதுபோல் தனக்கு அறிமுகம் இல்லாதபோதிலும்  கேரளத்தில் (எழுத்து வடிவில்) அறிமுகம் செய்துவைத்த பேரன்பாளர் திரு. அ.சொ. அவர் காலமானார் என்ற செய்தி தந்த துக்கத்தைவிட, அவர் காலமான விதம், அனைவரது மனத்திலும் அவர் மீது ஏற்படுத்திய மரியாதையே அதிகம். ஈசன் திருவடி உறைந்திருக்கும் கைலாயத்தைக் காணச் சென்றவர், கடந்த ஜுன் 13-ம் தேதி, நேரே ஈசன் திருவடிகளிலேயே இணைந்துவிட்டார். பூத உடலோடு கைலாயம் செல்கின்ற பேறு யாருக்குக் கிடைக்கும்?


தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவரின் உயிர்மூச்சு நின்றுவிட்ட போதிலும் அவர் ஏற்படுத்திய உணர்வு மூச்சு அடங்காது அல்லவா? அதனை வெளிப்படுத்தும் விதமாக, சென்னை நங்கைநல்லூரில் திரு. அ.சொ. சிவப்பிரகாசனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை, அவரது குடும்பத்தாரோடு இணைந்து, கடந்த ஜூலை 7-ம் தேதி செவ்வனே நடத்தினார் திரு. பி.வி. நிகழ்ச்சியின் அமைப்பாளராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் அயராமல் செயல்பட்டார் திரு. பி.வி. 



அந்த விழாவிலே இறைவணக்கம் பாடவும் திரு. அ.சொ. சிவப்பிரகாசம் அவர்களின் தமிழ்ப் பணி குறித்துப் பேசவும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு, எனது பாக்கியம்.



முதலில் கவிதாஞ்சலி செலுத்திய கவிமாமணி திரு. எதிரொலி விஸ்வநாதன் அவர்கள், திரு. அ.சொ. அவர்களை, கேரளத்தில் மற்றொரு இளங்கோவாய் மறுபிறவி எடுத்தவர் என்றும் திரிதிரியாய் பிரிந்திருந்த சேரத் தமிழ் அமைப்புகளை திருவண்ணாமலை தீபமாய் இணைத்த ஜோதி என்றும் மிகப் பொருத்தமாய் புகழ்ந்துரைத்தார்.



இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கல்கண்டு ஆசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் பங்கேற்று கல்கண்டுத் தமிழில் சிறப்புரை ஆற்றினார். “எல்லோருக்கும் நல்லவராக இருப்பது யாருக்கும் சாத்தியமல்ல என்ற கருத்தைப் பொய்யாக்கும் வகையில் வாழ்ந்து காட்டியவர் திரு. அ.சொ. அவர்கள். நான் பிரபலமாகாத புதிதில், கொச்சி தமிழ்ச் சங்க விழாவில் தமிழறிஞர் திரு. சோமலெ-வுடன் சேர்த்து என்னையும் சிறப்புரையாற்ற அழைத்து, நன்கு உபசரித்த பண்பாளர். அண்ணல் காந்தியடிகள், தமது வாழ்வே தாம் சொல்லும் செய்தி என்று கூறியதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் திரு. அ.சொ”  என்று புகழாரம் சூட்டினார்.



இதேபோல் சிறப்புரை ஆற்றிய சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. சரஸ்வதி இராமநாதன் அவர்கள், திரு. அ.சொ-வின் பண்பு நலன்களைப் பட்டியலிட்டார். திரு. அ.சொ-வின் மறைவால் தம் நெஞ்சம் கனத்தபோதிலும் அவரது அரும்பணிகளை தமிழர்களின் நெஞ்சங்களின் பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறினார்.



கேரளத்தில் பிரிந்து கிடந்த 22 தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தவர் – கொச்சியில் காகித வியாபாரம் செய்து வந்த திரு. அ.சொ. அதனைத் தாண்டி, நல்ல தமிழ் கருத்துகளைக் காகிதங்களில் பதிவு செய்தவர்- புகழ்ச்சியிலே துள்ளாமலும் இகழ்ச்சியிலே துவளாமலும் நடுநிலையோடு, நிறைவோடு வாழ்ந்தவர் என்றெல்லாம் எடுத்துரைத்தார்.


நேரில் பழகாத போதிலும் கடிதங்கள் மூலமும், நண்பர்களின் கருத்துகள் மூலமும் தங்களுக்குச் சிறந்த நண்பராக விளங்கிய திரு. அ.சொ-வின் நினைவுகளை, பாரதி கலைக் கழகத்தின் நிறுவனர் திரு. பாரதி சுராஜ், திருவள்ளுவர் இலக்கிய மன்ற நிறுவனர் திரு. கோ. பார்த்தசாரதி ஆகியோர் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். 


திண்ணை ராமாயணம் புகழ் திரு. கீரனூர் ராமமூர்த்தி, கவிமாமணி திரு.புதுவயல் செல்லப்பன், அரிமா திரு. முரளிதரன், விமர்சகர் இளசை திரு. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும், தங்களுடன் நேரில் பழகாமலேயே தங்கள் மனத்தைக் கவர்ந்த திரு. அ.சொ-வின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.


நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கவிஞர் திரு. மன்னை பாசந்தி,தகவல் முத்து ஆசிரியர் கவிஞர் திரு. நீரை அத்திப்பூ, மேலைச்சிவபுரி நகரத்தார் சங்கப் பிரதிநிதி திரு. ராமநாதன் ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர்.



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்றார் வள்ளுவப் பெருமான். தமிழர்களின் மனக்கவலையை மாற்ற தளராமல் தொண்டு செய்துவந்த திரு. அ.சொ., தனக்குவமை இல்லாதான் தாளை, கைலாய யாத்திரை மூலம், நேரடியாகவே சேர்ந்துவிட்டார். பூத உடலை உதிர்த்துவிட்டாலும், அவரது புகழுடம்பு நிலைத்துநின்று, நமது தமிழ்ப் பணிகளுக்கு உதவட்டும்.

- பத்மன் 


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

தென்முகக் கடவுள் துதி





(ஸ்ரீஆதிசங்கரர் அருளிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் எனது மொழிபெயர்ப்புக் கவிதை – பத்மன்)


காப்புச் செய்யுள்கள்

ஆதியில் பதுமனைப் படைத்தவர் எவரோ
அவருக்கு மறைபொருள் உரைத்தவர் எவரோ
ஆத்ம ஒளியாய் என்னுள் உறைபவர் எவரோ
அவர் பாதம் பணிந்தேன் விடுதலை வேண்டி.

மௌனத்தின் விளக்கத்தால் பரம்பொருள்
தத்துவத்தைப் பறைசாற்றும் இளைஞன்
முதுபெரும் ஞானிகள் யோகிகள்
      சீடராய் சூழப்படும் முனிவன்
ஆசான்களின் தலைவன் அறிவொளி
      முத்திரையன் ஆனந்த வடிவோன்
ஆத்மாவின் ரசிகன் புன்சிரிப்பு
      வதனன் தென்முகத்தான் போற்றி.



ஸ்தோத்திரங்கள்

ஆடியில் நோக்கிடும் சூழல்போல் உள்ளே வெளியுறும் உலகம்
தன்னுள் கண்டிடும் கனவில் வெளியோ உலகோடு தோற்றம்
உண்மை ஒன்றுதான் பிரும்மம் ஆத்மா அதனுடை பிம்பம்
அன்புடேன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.

விதையுள் இருக்கும் மரம்போல் அவனுள் கிடந்த உலகம்
அவனது மாயா சக்தியால் எடுத்தது பலப்பலத் தோற்றம்
தன்னிச்சை யாலனைத்தும் படைத்த அவனோ மாபெரும் யோகி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.


அவனது ஒளியால் பொய்யுலகு கொடுக்கிறது
     உண்மைபோல் தோற்றம்
அவனே போதித்தான் உண்மையை நீயே 
    அதுவெனும் மறைபொருளை
அதனை உணர்ந்தால் மட்டுமே அறுந்திடும்
    பிறவிச் சுழற்சி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
    கடவுளே போற்றி.

பல்துளைப் பாண்டத்து உள்ளிட்ட விளக்கு பல்லொளி பெருக்கும்
அவனுடை ஒளியே அனைத்திலும் ஒளிர்ந்து பார்வை யுமாகும்
அறிவேன் என்ற விழிப்புங்கூட அவனது அறிவே கொடுக்கும்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



உடல்மூச்சு ஐம்புலன் செய்கைச்சினை மாறுபடு 
    புத்தியோடு வெறுமைநான்
பேதைபால ரந்தகர் மூடர்போல கலக்கமுடை 
    அறிவரிது மொழிவர்
மாயசக்தி காட்டிடும் மயக்கமிந்த அறியாமை
     அழிப்பது டனதனை
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
     கடவுளே போற்றி.

கிரகணம் பிடித்தாலும் சூரியசந்திரர் உண்மையில்
     ஒளியிழப் பதில்லை
உறக்கத்தில் உணர்வு மனதுதொடர் பறுந்தாலும் 
     அறிவாற்றல் மறைவதில்லை
உறக்கத்தை விழித்தவன் அறிவதுபோல முன்மாயை 
     அறிவான் ஆதமஞானி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
     கடவுளே போற்றி.



உடலுக்கு உண்டாம் குழந்தை முதலாம் பல்நிலை தனிலும்
மனதுக்கு உண்டாம் விழிப்பு முதலாம் பல்நிலை தனிலும்
ஒருபோல் எப்போதும் வீற்றிருந்து ஞானமுத்திரை காட்டிடும் இறையே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.

கனவு விழிப்பு இருநிலையில் காரண காரிய உறவுகளால்
தலைவன் தொண்டன் ஆசான் சீடன் தந்தை மகனாம்
உலகின் அனுபவம் பல்பேதம் அவனுடை மாயை ஆற்றலே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



புவிநீர் தீவளி ஆகாயம் சூரியன் சந்திரன் ஜீவாத்மா
அசையும் அசையா பிரபஞ்சத் தினெட்டும் அவனுடை வெளிப்பாடாம்
பிரும்மன் அவனே சத்தியம் அறிந்தால் ஒடுங்கும் ஆணவம்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



ஆத்மனின் பரந்த தன்மை இங்கே பகரப் பட்டது
இதனைக் கேட்போர் படித்தோர் உட்பொருள் இருத்துவோர் அடைவர்
எங்கும் வியாபிக்கும் பேற்றையும் எல்லாம் வல்ல இறைநிலையும்
எட்டின் சாரமும் அவராவர் முழுமதியும் மகிழ்வும் எட்டுவர்.

நிறைவுச் செய்யுள்கள்

ஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர்
அருங்கிழவோர் சீடராம் ஆசான் இளைஞராம்
மௌனமே ஆசான் மொழியாகும் சீடருக்கோ
முற்றிலும் தீர்ந்தது ஐயம்.



ஆலமரத்து அடிவீற்று தியானிப்பார் நம்மீது
அளித்தருள்வார் ஞானத்தை அண்டிடும் அடியோர்க்கு
மூவுலகின் குருவீசன் தென்முகத் தேவன்
மூள்பிறவித் துயரறுக்கும் கோவே போற்றி.