செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதியைப் பாடுவோம்




(இன்று [11.12.2012] வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி மஹாகவி பாரதியார் இல்லத்தில் பாரதி திருவிழாவில், ஜதி பல்லக்கு உட்பட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.   வழக்கம்போல் வழக்கறிஞர் திரு. ரவி, திரு. சுப்பு ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதுபெரும் கவிஞர் திரு. முருகசரணன், மஹாகவி பாரதிக்குப் போர்த்திய பொன்னாடை மற்றும் பொற்கிழி பெறுகின்ற பாக்கியம் பெற்றார். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் என் மானசீக குருநாதர் (நேரில் பார்க்கத்தான் வழியில்லையே) மஹாகவி பாரதிக்கு நான் அர்ப்பணித்த பாட்டு அஞ்சலியை இங்கே சமர்ப்பிக்கிறேன். – பத்மன்)


பல்லவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்
ஆண்டுதோறும் கூடுவோம் அவன்புகழைப் பாடுவோம்
அனுபல்லவி
பாரதியை – நம்ம பாரதியை – மகாகவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்


சரணங்கள்
தாய்மொழிப் பற்றதனை ஊட்டியவன் பாரதி
தாய்நாட்டுப் பெருமையினைத் தீட்டியவன் பாரதி
நாய்போல நமைநினைத்தோர் நடுங்கவைத்தான் பாரதி
நானிலத்தில் ஈடுஇல்லா நற்கவிஞன் பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்றுசொன்ன பாரதி
நன்றுமிகு புதுமைகளைப் படைத்தளித்த பாரதி
பாரதமே பாருக்கெல்லாம் திலகமென்ற பாரதி
பாங்குடனே பாரதத்தின் பெருமைசொன்ன பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


வீறுடனே விடுதலைக்குப் பாட்டுரைத்த பாரதி
கூருடனே விடுதலையின் பொருளும்சொன்ன பாரதி
யாருடனும் அன்புகொண்ட அருள்சுரபி பாரதி
தார்வேந்தர் போலநம்மை நிமிரச்செய்த பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


பெண்ணியத்தைப் போற்றினான் பேடிகளை மாற்றினான்
சாதிகளைத் தூற்றினான் சமத்துவத்தைச் சாற்றினான்
தேசீயத்தை நாட்டினான் தெய்வீகத்தைக் காட்டினான்
காவியங்கள் பாடினான் அமரகாவியமாய் ஆகினான்.
                              (பாரதியைப் பாடுவோம்)



4 கருத்துகள்: