புதன், 12 செப்டம்பர், 2012

நலம்தரும் நாகை நீலாயதாக்ஷி அம்மன்


அமைதியைவிட சிறந்த சாதனை வேறு எதுவும் இல்லை. திருப்தியைவிட சிறந்த மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. பேராசையை விட பெரிய வியாதி வேறொன்றும் இல்லை. கருணையை விட சிறந்த தர்மம் வேறு எதுவும் இல்லை. பேராசையை ஒழித்து அமைதியையும், திருப்தியையும் நமக்குத் தருவது ஆலய வழிபாடு. இன்று நாம் அறியவிருக்கும் ஆலயம் நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவில்.


சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது முதுமொழி. சிவம் நிலை ஆற்றல் என்றால், சக்தி இயங்கு ஆற்றல். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவை இரண்டின் ஒத்திசைவு அவசியம். அதனால்தான் இறைவன், அம்மையப்பனாகக் காட்சி தருகிறார். இதனை உணர்த்தும் வகையிலான சிவசக்தி ஆலயங்களில் ஒன்றுதான் நாகைக் காரோணம் எனப்படும் நாகை நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம்.

மதுரை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில். மதுரையம்பதி, பாடல் பெற்ற மிகப்பெரிய சிவஸ்தலமாகவும், சோமசுந்தரக் கடவுளின் உறைவிடமாகவும் திகழ்கின்ற போதிலும், மீனாக்ஷி அம்மன் ஆலயம் என்பதே பிரசித்தம். அதுபோல நாகப்பட்டினம் திருக்கோவில், சிவபெருமானின் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்றபோதிலும், நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம் என்றுதான் அழைக்கப்படுகிறது.


அம்மன் அருளாட்சி நடைபெறும் அறுபத்து நான்கு சக்தி ஸ்தலங்களிலே குறிப்பிடத்தக்கது இந்த ஆலயம். தாய்மையின் உருவகமாகப் போற்றப்படும் இறைவடிவமாகிய அம்பாள், பெண்மையின் ஐந்து படிநிலைகளை, பருவங்களை, ஐந்து வெவ்வேறு க்ஷேத்திரங்களில் தாங்கி நின்று அருள்பாலிக்கிறாள்.

அவற்றில், காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும், திருவாரூரில் திகழும் கமலாம்பிகை இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி திருமணமான சுமங்கலிப் பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களில் நடுநாயகமாக, கன்னிப்பெண் வடிவமாக அம்மன் திருக்காட்சி கொடுத்து தெய்வீக அருள் புரியும் சக்தி பீடம்தான் நாகை.


இங்கே அம்மனுக்குத் திருநாமம் நீலாயதாக்ஷி. இதன் பொருள், நீல நிறக் கண்ணுடையாள் என்பது. தூய தமிழிலே கருந்தடங்கண்ணி என்று அம்மனுக்குத் திருப்பெயர். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாக போற்றப்படுகிறாள். கவலைகளைப் போக்குகின்ற கருந்தடங்கண்ணியாக வணங்கப்படுகிறாள். இந்த நீலாயதாக்ஷி அம்மன் மீது முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய “அம்பா நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி சர்வ லோக சாக்ஷி” என்ற கிருதி, கர்நாடக இசை மேடைகளிலும், கலைகளைப் போற்றும் பக்தர்கள் நெஞ்சங்களிலும் இனிமையாய் ஒலிக்கிறது.


நாகப்பட்டினம் நகரிலேயே நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது, சோழநாட்டு காவிரித் தென்கரையில் அமைந்துள்ள  தேவாரப் பாடல் பெற்ற 82-வது சிவஸ்தலமும்கூட. அப்பர் அன்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் நான்கு பாடல்களும், பிள்ளைப்பெருமானாகிய திருஞானசம்பந்தர் இரண்டு பாடல்களும், இறைத்தோழராகிய சுந்தரர் ஒரு பாடலும் பாடியுள்ளனர். இங்கே இறைவனுக்கு காயரோகணேஸ்வரர் என்று திருநாமம்.


இந்த ஸ்தலத்துக்கு நாகப்பட்டினம் என்றும் நாகைக் காரோணம் என்றும் பெயர் வந்ததற்கு இறைவனின் மகிமையே காரணம். ஸ்ரீ மகாவிஷ்ணு சயனித்திருக்கும் பெருமை பெற்ற நாகங்களின் தலைவனாகிய ஆதிசேஷன், ஒருமுறை சிவராத்திரியின்போது இங்கே இறைவனை நாகேஸ்வரராகத் துதித்து வழிபட்டார் என்கின்றன புராணங்கள். 

காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், நண்பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகிய இடங்களில் சிவபெருமானை வழிபட்டு, இறுதியாக திருநாகையில் உள்ள இந்த ஸ்தலத்தில் தனது பூஜையை ஆதிசேஷன் நிறைவு செய்தாராம். அதனால் இந்த ஊருக்கு நாகப்பட்டினம் என்று பெயர் வந்ததாம்.



ஆதிசேஷன் வழிபாடு நடத்தியதால், இந்த ஸ்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. ஆதிசேஷனின் மகளை, சிவபக்தரான சாலீஸ்வர மஹாராஜா திருமணம் செய்துகொண்டதாகவும் ஸ்தலவரலாறு செப்புகிறது.

காயாரோஹணம் என்பது மருவி காரோணம் என்று அழைக்கப்படுகிறது. புண்டரீக முனிவர் இங்கே சிவபெருமானை வழிபட்டு தனது தேகத்துடன் உயரே சொர்க்கத்துக்குச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. காய ஆரோஹணம் அதாவது உடலுடன் மேலேறிய ஸ்தலம் என்பதால் இது நாகை காரோணம் என்றானது. புண்டரீக முனிவர் உடலுடன் சொர்க்கம் செல்ல அருள் பாலித்ததால், இங்கே உள்ள ஈஸ்வரன், காயாரோகணர் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறார்.



இந்த நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவிலுக்கு உள்ள மற்றொரு பெருமை, இது சிவபெருமான், தியாகராஜராகக் காட்சி தரும் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்பது. விடங்கம் என்றால், உளியால் செதுக்கி உருவாக்காமல் இயற்கையாய் தோன்றியது என்று பொருள்.

ஒருமுறை அரக்கர்களை அடக்க இந்திரனுக்கு சோழ மன்னனும் சிவபக்தனுமான முசுகுந்த சக்ரவர்த்தி உதவியபோது என்ன வேண்டும் என இந்திரன் கேட்டுள்ளான். அதற்கு, மஹா விஷ்ணுவின் ஹ்ருதயத்திலே ஆராதிக்கப்பட்டு, அவரால் இந்திரனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடனமாடும் சிவபெருமானின் திருமேனியாகிய விடங்கப் பெருமானைத் தரவேண்டும் என முசுகுந்த சக்ரவர்த்தி கோரினான்.


அவ்வாறு வழங்க விரும்பாத இந்திரன், போலியான ஆறு விடங்க ரூபங்களை உருவாக்கி, உண்மையானதையும் அவற்றுடன் சேர்த்துவைத்து, இவற்றில் உண்மையான விடங்கப் பெருமானைக் கண்டுபிடித்து எடுத்துச் செல்லுமாறு கூறினான். சிவபெருமான் மீதுள்ள பக்தியினால், சரியான விடங்கரை முசுகுந்தன் கண்டறியவே, ஆச்சரியப்பட்ட இந்திரன் ஏழு விடங்க மூர்த்திகளையும் வழங்கினானாம்.
அந்த ஏழு விடங்க லிங்கங்களையும் சோழ நாட்டில் ஸ்தாபித்து ஆலயம் எழுப்பினான், முசுகுந்தச் சோழன். அவற்றில் உண்மையான விடங்கப் பெருமானாகிய தியாகராஜர் அமைந்திருக்கும் ஸ்தலம், திருவாரூர். மற்ற ஆறு விடங்க ஸ்தலங்கள் திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவைமூர் மற்றும் திருநாகை.



நாகை நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவிலில் நீலாயதாக்ஷி, காயாரோகணர் மற்றும் தியாகராஜருக்கு தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. காயாரோகணருக்கு ஆதிபுராணேஷ்வரர் என்றும் பெயருண்டு. இங்குள்ள தியாகராஜர், சுந்தர விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு விடங்கருக்கும் தனித்தனி நடனங்கள் உண்டு. கோவில் விழாக்களில் இறைவனை சுமந்து செல்லும்போது அந்த வகை நடனத்தை ஆடியபடி அடியார்கள் சுமந்து செல்வார்கள். 


அந்த வகையில் நாகை சுந்தர விடங்கருக்குரிய நடனம், பரவர தரங்க நடனம் அல்லது விளத்திதானம் எனப்படுகிறது. கடல் அலை அசைவது போன்ற நடனம் என்று இதற்குப் பொருள். கடற்கரை நகரமான நாகப்பட்டினத்துக் கடவுள், கடல் அலை போல் நடனமிடுவது பொருத்தம்தானே?



இந்த ஆலயத்தில், திருவாரூரில் உள்ளதைப் போன்றே சுந்தர மூர்த்தி நாயனார் மற்றும் அவரது இணையான பரவை நாச்சியாருக்கும் சந்நிதி உள்ளது. இந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம், மாமரம். இங்குள்ள மாவடி விநாயகர் சக்தி வாய்ந்தவர். மேலும், நாகப்பட்டினம் என்பதால், நாகாபரண விநாயகரும் இந்த ஆலயத்திற்குள் காட்சி தருகிறார். அத்துடன், வெண்கலத்தால் ஆன பஞ்சமுக வினாயகரும் விசேஷமானவர்தான்.

இந்த ஆலயத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தெற்குப் பகுதியில் தேவ தீர்த்தமும், மேற்குப் பகுதியில் புண்டரீக முனிவரால் உருவாக்கப்பட்ட புண்டரீக தீர்த்தமும் உள்ளன.


புராண காலத்திலேயே இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், வரலாற்று ரீதியில் இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன. பிற்காலச் சோழர்களும் பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர். எனினும் அன்னியர் ஆட்சியின்போது இங்கிருந்த உண்மையான கோமேதக விடங்க லிங்கம் கொள்ளை போனதாகவும், தற்போதுள்ள கோமேதக விடங்க லிங்கம் பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. நாகப்பட்டினம், டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இந்த ஆலயத்தில் உள்ளன.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நீலாயதாக்ஷி அம்மன் ஆலயத்தின் பிரும்மோத்சவ விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப் பூரத்தின்போது அம்மனுக்கு 10 நாள் உத்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. மேலும், ஆனி  மாதத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமண வைபவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது சாலீஸ்வர மஹாராஜா திருவுருவச் சிலை முன்பு இத் தெய்வீகத் திருமணம் நடத்தப்படுவது வழக்கம்.



ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளைப் போல அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தாலும், ஆதிசேஷன் வழிபட்ட இந்த நாகைக் காரோணத்திற்கு வந்து கருணைமழை பொழியும் நீலாயதாக்ஷி அம்மனையும், காயாரோகணப் பெருமானையும் வழிபட்டால், அனைத்துத் துன்பங்களும் பறந்தோடி விலகி, நமது வாழ்க்கை ஆரோகணத்திலேயே மேலேறிச் செல்லும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. நாமும் ஒருமுறை நம்பிக்கையுடன் நாகை சென்று வருவோம்!

-    பத்மன்


6 கருத்துகள்:

  1. மனம் கவர்ந்த பதிவு. புகைப்படம் மன நிறைவை தந்தது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதவு , சுவையான தகவல் . நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவிலின் சிறப்புக்கள்... எத்தனை எத்தனை விளக்கங்கள்... படங்கள் அருமை... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. Wonderful article. I visited the temple recently. Had I known these details earlier, I would have enjoyed the visit much more.

    பதிலளிநீக்கு
  5. எங்க ஊருக்கு எப்ப வந்தீரு? சொல்லவேயில்ல.

    பதிலளிநீக்கு
  6. மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனாருக்கு அருள் புரிந்து இறையுணர்வு சாதிகளைக் கடந்தது என்று நிரூபித்த அருட்தலம்!

    பதிலளிநீக்கு