வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நூல் வெளியீட்டு விழா அழைப்பு



அன்பார்ந்த நண்பர்களே! நேயர்களே!

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய நூறு ஸ்தோத்திரங்கள் கொண்ட சிவானந்த லஹரீ பக்தி இலக்கியத்தை சிவகளிப் பேரலை என்ற பெயரில் தமிழ்க் கவிதை நூலாக மொழிபெயர்த்து, விளக்கவுரையுடன் வடித்துள்ளேன். அதில் ஒரு கவிதை இதோ:


ஆயிரம் தெய்வமுண்டு அற்பமாம் வரம்தர
ஆழ்கனவிலும் நினையேன் அவர்தம் தொழுகை
அரிபதுமன் அருகிருந்தும் அறியவொண்ணா சாம்பனே
அரிதாம் நின்திருவடி தொழுதலை வேண்டுவனே!

அந்த நூலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கியுள்ளனர்.

அந்நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 29.09.2012 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.




அனைவரும் வருகை தந்து நூல் வெளியீட்டு விழாவின் வெற்றிக்கு உறுதுணை புரியுமாறு வேண்டுகிறேன்.

அனைவரும் வருக! சிவ ஆனந்தத்தைப் பருக!

அன்புடன் பத்மன் 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பஞ்சபாண்டவர் பூஜித்த பஞ்சலிங்க ஆலயம்




சிங்கத்தின் வாய் திறந்திருந்தால் இரை தானாகவே வந்து விழுந்து விடுவதில்லை. வேட்டையாடினால்தான் அதற்கு இரை கிடைக்கிறது. அதுபோல முயற்சியின் மூலமே லட்சியம் நிறைவேறுகிறதே அன்றி, வெறும் கற்பனைக் கோட்டைகளால் அது நிறைவேறுவதில்லை. நமது முயற்சியைத் திருவினையாக்கும் தெய்வத் திருத்தலங்களில் இப்போது நாம் அறியவிருப்பது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகேயுள்ள இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயம்.

நமது பாரதப் பண்பாட்டில் பஞ்ச என்று சொல்லப்படும் ஐந்துக்கு தனி மகத்துவம் உண்டு. நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம். இந்த பஞ்ச பூதங்களும், சப்தம் எனப்படும் ஓசை, ஸ்பர்ஷம் எனப்படும் தொடு உணர்வு, ருசி எனப்படும் சுவை உணர்வு, ரூபம் எனப்படும் வடிவம், கந்தம் எனப்படும் வாசனை ஆகிய பஞ்ச தன்மாத்திரைகளால் உருவாகி வெளிப்பட்டவை.



இந்த பஞ்ச பூதங்களாகவும், அவற்றின் அடிப்படை மூலக் கூறுகளான பஞ்ச தன்மாத்திரைகளாகவும் இருப்பது, எல்லாம் வல்ல இறைவனின் சித்தமே என்பது ஆன்றோர் வாக்கு. இதை உணர்த்தத்தான் பஞ்ச பூதங்களுக்குரிய விசேஷ ஸ்தலங்களில் பரமேஸ்வரன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி பஞ்ச லிங்கங்களாக, பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஐந்து லிங்கங்களாக ஒரே இடத்தில் சிவபெருமான் காட்சி கொடுக்கும் வித்தியாசமான க்ஷேத்திரம்தான் இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயம்.

பஞ்ச பாண்டவர்களில் தருமன் அறப்பண்புக்கும், பீமன் பலத்திற்கும், அர்ச்சுனன் வீரத்திற்கும், நகுலன் புத்திக்கும், சகாதேவன் பக்திக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ஐந்து குணாதிசயங்களுக்கு ஏற்றாற்போல் ஐந்து சிவலிங்க ஆலயங்கள், இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரையில் ஒருசேர  அமைந்துள்ளன.



தருமன் வணங்கிய நீலகண்டேஸ்வரரின் பெயரினாலேயே இந்த ஆலயம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. ராஜகோபுரம் வழியாக நுழைந்ததும் நேரே காட்சி கொடுப்பது நீலகண்டேஸ்வரர்தான். அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுவதற்காக, தாம் நஞ்சை அருந்தி, தேவர்களுக்கும் மகான்களுக்கும் அமுதம் கிடைக்க அருள்பாலித்த தியாகச் செம்மல் அல்லவா நீலகண்டர்? தியாகத்தைவிட, பிறர் நலனுக்காக தாம் துன்பத்தை ஏற்கத் தயாராக இருப்பதைவிட மிகச் சிறந்த தர்ம சிந்தனை உண்டா? அப்பேர்பட்ட நீலகண்டேஸ்வரரை முதலில் இங்கு வணங்குகிறோம்.

பழமண்ணிப் படிக்கரையில் உள்ள நீலகண்டேஸ்வரர், பாற்கடல் கடைந்த போது மட்டுமல்ல, பஞ்ச பாண்டவர்களுக்காகவும், இங்கே நஞ்சைப் போக்கி அமுதம் வழங்கியிருக்கிறார். இங்கே பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை அறிந்த துரியோதனன், சகுனியின் ஆலோசனையின்படி இங்குள்ள பிரும்ம தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து விடுகிறான். அந்த நச்சுக் குளத்தில் பஞ்ச பாண்டவர்கள் நீராட வரும்போது, அதுகுறித்து அம்பாள் ஈசனிடம் முறையிடுகிறாள்.



அம்பிகையின் பார்வை பட்டால் அந்த நச்சுக்குளம் அமிர்த குளமாக மாறிவிடும் என்று ஈசன் கூற அப்படியே அம்பிகை செய்கிறாள். அதனால் இங்குள்ள அம்மனுக்கு அமிர்தகரவள்ளி என்று திருப்பெயர். தரும சிந்தனை பெற வேண்டியவர்களும், குறிக்கோள் நிறைவேற வேண்டியவர்களும் இந்த நீலகண்டரை வழிபட்டு பலன் பெறலாம்.



நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரை நாதர் ஆலயம் உள்ளது. படிக்கரை நாதருக்கு அருகே மங்களாம்பிகை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. வம்பு வழக்குகள் நீங்கவும், வழக்கு விவகாரங்களில் வெற்றி வேண்டுபர்களும் இந்த பட்டிக்கரைநாதரை வணங்கி வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இலுப்பைப்பட்டு பஞ்சலிங்க ஆலயத்தில் நாம் மூன்றாவதாக வணங்க வேண்டியது, பீமன் வழிபட்ட மகதீஸ்வரர். மகத் என்றால் பெரிய என்று பொருள். பீம என்பதற்கும் பெரிய என்று பொருள் உண்டு. பக்தனுக்கும், பகவானுக்கும் என்ன ஒரு பெயர் பொருத்தம். இந்த மகதீஸ்வரர் ஷோடஷ லிங்கமாகக் கட்சி தருகிறார். அதாவது இந்த லிங்கத் திருமேனியில் பதினாறு பட்டைகள் இருக்கும். சரிவர திதி கொடுக்க இயலாதவர்கள் மற்றும் பிதுர்கடன் உள்ளவர்கள் மகதீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்றலாம் என்பது ஐதீகம்.



இலுப்பைப் பட்டில் நகுலன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பரமேசர். இவரை வணங்குவதன் மூலம் வீடு, வாகன வசதி, நிலபுலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவப் பூர்வமான நம்பிக்கை. இதேபோல் சகாதேவன் வழிபட்ட சிவலிங்கம், முக்தீஸ்வரர். பக்தி இருந்தால் முக்தி நிச்சயம் என்பதை, பக்திமானான சகாதேவன் பிரதிஷ்டை செய்த முக்தீஸ்வரரின் திருநாமம் எடுத்துரைக்கிறது.

இவரை வணங்குவதன் மூலம் ஜாதக தோஷங்கள், கால தோஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மேலும், பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய பஞ்ச லிங்கங்களை நாமும் வணங்கினால், பஞ்சமகா பாவங்களும் நீங்கி புண்ணியம் எய்தலாம் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. மேலும் இங்கு கோவில் கொண்டிருக்கும் அமிர்தகரவள்ளி மற்றும் மங்கலாம்பிகையை தரிசிப்பதன் மூலம் நச்சுகளைப் போன்ற தோஷங்கள் நீங்கி மகாசக்தியும், மங்களமும் நிலைக்கும் என்பதும் ஐதீகம்.



இந்த ஸ்தலம் சிவபெருமானுக்கு மட்டுமல்ல, அவர்தம் மைந்தனான முருகப் பெருமானுக்கும் உகந்ததாகும். இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் நீலகண்டேஸ்வரர் மற்றும் படிக்கரைநாதருக்கு அருகே என இரண்டு சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இரண்டு இடங்களிலும் வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தெயவீகத் திருக்காட்சி தருகிறார்.

மேலும், இந்தப் பகுதியில் ஓடும் காவிரி நதியின் கிளை ஆறான மண்ணியாறு முருகப் பெருமான் அருளால் உருவானது எனப் புராணங்கள் கூறுகின்றன. அந்த மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்தலம் என்பதால் இந்த இடத்துக்கு பழமண்ணிப் படிக்கரை என்று பெயர். அத்துடன் இலுப்பை மரம் மிகுந்திருப்பதால் இலுப்பைப் பட்டு என்றும் பெயர் வந்ததாம். பட்டு என்பது இந்தப் பகுதியில் மிகுந்திருக்கும் நெசவாளர் சமுதாயத்தைக் குறிக்கும் சொல் என்றும் கூறுவாருண்டு.



பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் மகதீஸ்வரர் சந்நிதிக்கு அருகே இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கே வலம்புரி மற்றும் இடம்புரி என இரண்டு விதங்களிலும் ஆணைமுகத்தான் நமக்கு அருள்புரிகிறார். இந்த இரட்டை விநாயகரை பஞ்ச பாண்டவர் மனைவியான திரௌபதி வழிபட்டிருக்கிறாள். மேலும் ஆனந்தத் தாண்டவம் ஆடும் மற்றொரு விநாயகரும் இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார்.

பழமண்ணிப் படிக்கரை பஞ்ச லிங்க ஆலயத்தின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம். முற்காலத்தில் மாந்தாதா என்ற அரசன் நாட்டையும் உடல் வலிமையையும் இழந்து அலைந்து திருந்தபோது, உரோமச மகரிஷி இந்த ஸ்தலத்தில் உறையும் ஈசனின் மகிமையை எடுத்துரைத்து, இங்குள்ள ஆலயங்களை சீர்படுத்தி வழிபட உபதேசித்தார். அதன்படி மாந்தாதா அரசன் இங்கே மண்ணியாற்றைக் கடந்து படகில் வந்தபோது ஒரு இலுப்பைக் காயும் மிதந்து வந்ததாம். ஈசனுக்கு விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் உகந்தது என்பதால் அதனை அரசன் எடுத்து வந்து இங்கே ஸ்தல மரமாக நட்டு வைத்தான் என்கிறது ஸ்தல வரலாறு.



பழமண்ணிப் படிக்கரை நீலகண்டேஸ்வரரை முற்காலத்தில் பிரும்மாவும் வழிபட்டிருக்கிறார். தான் நீராடுவதற்காக பிரும்மா உருவாக்கியதால் இங்குள்ள குளத்துக்கு பிரும்ம தீர்த்தம் என்று பெயர். பஞ்ச பாண்டவர்களுக்காக இறைவனும் இறைவியும் அருள்புரிந்ததால் இந்தக் குளம் அமிர்த தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி தினத்தன்று பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் சிறப்பாக உத்சவம் கொண்டாடப்படுகிறது. அப்போது பஞ்ச மூர்த்திகளும் வீதிஉலா வருவார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கும், கார்த்திகை தோறும் முருகப் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.



வரலாற்று ரீதியில் இந்தக் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆயினும் இது எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை சுந்தரர் பாடிய தேவாரத் திருமுறைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. காவிரிக்கு வடகரையில் உள்ள சோழ நாட்டு சிவஸ்தலங்களில் முப்பதாவது ஸ்தலமாக இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை க்ஷேத்திரம் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலுப்பைப் பட்டுக்கு மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்தில் செல்லலாம். மணல்மேடு என்ற இடத்தில் இறங்கிக் கொண்டால், அங்கிருந்து  மூன்று கிலோமீட்டர் தொலைவில் பாப்பாக்குடி செல்லும் வழியில் இலுப்பைப் பட்டு கிராமம் உள்ளது.



உடல் அழுக்குகளைப் போக்கி புறத் தூய்மை பெறுவதற்கு ஆற்றில் குளிக்க படிக்கரை உதவுகிறது. நமது உள்ள அழுக்குகளையும் பாவங்களையும்  போக்கி உள்ளத் தூய்மையும் புண்ணியமும் பெற பழமண்ணிப் படிக்கரை நமக்கு உதவுகிறது. இழந்த செல்வம், புகழ் ஆகியவற்றை மீண்டும் அடைவதுடன், வாழ்வில் ஏற்றம் பெற்று இறைவனின் பாதர விந்தங்களையும் மீண்டும் அடைய இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை பஞ்சலிங்க ஆலயத்துக்கு ஒருமுறையாவது சென்று வருவோம்.

     - பத்மன் 


செவ்வாய், 18 செப்டம்பர், 2012

குறுந்தொகை குறும்பா – 7, 8




குறுந்தொகை குறும்பா – 7


எவ்வழி உறவோ நாமிருவர்?
செம்மண் பெய்த மழைநீர்போல்
கண்டதும் உள்ளம் கலந்தனவே.
-    பத்மன்





குறுந்தொகை குறும்பா – 8


குட்டிப் பாம்பு கடித்தது
கொம்பு யானை துடித்தது
அவள் பார்த்த நான்.
-    பத்மன் 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உயர்வைத் தரும் உய்யக்கொண்டான் திருமலை


விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே நம்மை உயர்த்துகின்றன. சோம்பலும், அவநம்பிக்கையும் நம்மைத் தாழ்த்துகின்றன. கஷ்டங்களில் இருந்து விடுபட ஒரே வழி, அவற்றைப் போராடி வெல்வதுதான். இதற்குத் தேவையான மனத் தெம்பை இறை நம்பிக்கையே நமக்கு அளிக்கிறது.

இதை உணர்த்தத்தான் இறைவன், நாம் விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் சில கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, அவரை வழிபடும் வகையில், சில ஸ்தலங்களில்  உயரே மலை மேலே கோவில் கொண்டிருக்கிறார். அந்தவகையில் இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் மலைக்கோவில், திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் திருமலை.


திருச்சி என்றதுமே நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையும் உச்சிப் பிள்ளையார் கோவிலும் பலரது நினைவில் நிழலாடும். திருச்சியில் அங்கு மட்டுமல்ல, வேறொரு இடத்திலும் மலைக்கோட்டையும், உச்சிக்கோவிலும் சிறப்புற அமைந்துள்ளன. அந்த இடம்தான், திருச்சிக்கு மேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடி. இது அற்புதமான சிவஸ்தலம்.

திருமலை என்றால் போற்றுதலுக்குரிய, வணக்கத்துக்குரிய மலை என்று பொருள். வடக்கே, வேங்கடம் எனப்படும் திருப்பதியில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஒரு திருமலை என்றால், தெற்கே சிவபெருமானுக்கு திருச்சியில் இந்தத் திருமலை.

மலைதோறும் ஆடுகின்ற முருகப் பெருமான், திருச்சி மாவட்டத்தில் வயல் நடுவே வயலூரில் வீற்றிருக்க, அவரது அண்ணன் விநாயகர் திருச்சி மலைக்கோட்டையிலும், அப்பன் சிவபெருமான் உய்யக்கொண்டான் திருமலையிலும் உறைவது வித்தியாசமான தெய்வ சங்கல்பம்தான்.


உய்யக்கொண்டான் திருமலை என்று பெயரைக் கேட்டதும் மிகப் பெரிய மலையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சுமார் ஐம்பது அடி உயரமுள்ள சிறிய குன்றுதான். உய்யக்கொண்டான் கால்வாய் கரையினிலே இந்தக் குன்று அமைந்துள்ளது. குன்றின் மேலே கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு ஏறிச் செல்ல, படிகள் உள்ளன. படிக்கட்டுகளைக் கடந்து சென்று உயரே இறைவனை தரிசிக்கும் அனுபவம், பல படிகளைக் கடந்துதான் உயர முடியும் என்ற வாழ்க்கை அனுபவத்தை நமக்கு உணர்த்தத்தானே?

கீழே இருந்து முதல் 10 படிகள் ஏறியதுமே விநாயகப் பெருமானின் சந்நிதி நம்மை வரவேற்கிறது. இங்கு வருபவர் வினையெல்லாம் தீர்ந்துவிடும் அச்சமில்லை, மேலே ஏறிச் சென்று ஈசனை வழிபடுங்கள் என்பதுபோல் ஆரம்பத்திலேயே அடிவாரத்தில் ஆனைமுகன் நம்மை எதிர்கொண்டு ஆசீர்வதிக்கிறார். அவரை வணங்கி,  ஆசிகளை வாங்கிக்கொண்டு சுமார் நூறு படிகளுக்கு மேல் கடந்து சென்றால் மேலே அற்புதமான கோவில்.


மலை மேலே வலுவான கோட்டையாக உய்யக்கொண்டான் திருமலைக் கோவில் திகழ்கிறது. ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றி சுற்றுச் சுவரும் அதற்கு வெளியே ஆறு அடி கனமுள்ள வலிமையான மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளன.

உள்ளே ஆலயத்தில் ,மேற்கு நோக்கி சிவபெருமான் சந்நிதி அமைந்துள்ளது. மூலவருக்கு உஜ்ஜீவனேஸ்வரர் என்று திருநாமம். தூய தமிழில் உச்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார். வாழ்வில் மேலான நிலைமையை அடைய, வாழ்வின் உச்சியை அடைய நமக்கு அருள்பவர் என்று இதற்குப் பொருள். நாம், வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மேலான முக்தி நிலையை அடைவதற்கு வழிகாட்டுபவர் என்றும் பொருள்.


மேலும் பக்தர்களை அன்பினால் ஆட்கொள்பவர் என்பதால் உய்யக்கொண்டான் திருமலையில் அருளாட்சி செய்யும் சிவபெருமான், ஆளுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் சந்நிதி உள்பிரகாரத்தில் உள்ள கோஷ்டத்தில், கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் அல்லது மஹா விஷ்ணு இருப்பது வழக்கம். ஆனால் இங்கே வித்தியாசமாக பெண்ணுக்கு சரிபாதி தந்தவராய், அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

உய்யக்கொண்டான் ஆலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள். கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்று திருப்பெயர். தூய தமிழில் இதற்கு மைவிழியாள் என்று பொருள். கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல், தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து, மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகா என்ற திருநாமத்துடன் அம்பிகை அருளுகிறாள்.


உய்யக்கொண்டான் திருக்கோவிலை 1,200 ஆண்டுகளுக்கு முன்பு நந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்குப் பன்னெடுங்காலம் முன்பே இங்கே ஆலயம் இருந்ததாக புராணங்கள் பகர்கின்றன. ராமாயண காலத்தில் ராவணனின் படைத்தளபதியாக இருந்த கரன் என்ற அரக்கன், இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வரங்களைப் பெற்றதாக ஸ்தலவராலாறு கூறுகிறது.

மார்க்கண்டேய மகரிஷி 16 வயது நிறைவடையும் தருணத்தில் இங்கே வந்து வழிபட்டிருக்கிறாராம். 16 வயது நிறைவடைந்ததும் தனது உயிரை எமன் வாங்கிவிடுவான் என்ற காரணத்தால், தன்னைக் காப்பாற்றும்படி  உச்சிநாதரை மார்க்கேண்டேயர் மனமுருக வேண்டியிருக்கிறார். உடனே மனமிரங்கிய அம்பாள் சிவபெருமானை கேட்டுக்கொள்ள, மார்க்கண்டேய மகரிஷிக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை இங்குதான் சிவபெருமான் வழங்கினாராம்.


ஆகையால் இங்கு வந்து உச்சிநாதரை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. உய்யக்கொண்டான் திருமலையில் நாரதர், உபமன்யு போன்ற மகரிஷிகளும் சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள்.

வரலாற்று ரீதியில் நந்திவர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலுக்கு சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுகளில் இந்தக் கோவில் பற்றிய குறிப்புகளும், அரசர்கள் செய்வித்த இறைப்பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.


முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டின் மூலம், இந்தக் கோவிலைச் சுற்றி ரதகாரர் என்ற தனி சமுதாயத்தினர் வாழ்ந்ததாகவும், கோவில் ரதங்களை வடிவமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுவந்ததும் தெரியவருகிறது.

பிற்காலத்தில், மலைக்கோட்டையோடு அமைந்த உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலை கைப்பற்ற பிரஞ்சுப் படைகளும், பிரிட்டிஷ் படைகளும் மோதியுள்ளன. சிறிது காலம் பிரஞ்சுக்காரர் வசமிருந்த இந்தக் கோவிலைக் கைப்பற்ற பிரிட்டிஷ் படையினர், மேஜர் லாரன்ஸ் என்ற தளபதியின் தலைமையில் கடும் சண்டை புரிந்துள்ளனர். அப்போது பிரிட்டிஷாரின் பீரங்கிக் குண்டுகளை இந்தக் கோவில் மதில் சுவர்கள் தாங்கி நின்ற வடுக்களை, இப்போதும் காணலாம்.


திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படும் உய்யக்கொண்டான் திருமலை, தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சோழநாட்டு சைவத் திருக்கோவில்களில் நான்காவது ஆலயமாக இது சாற்றப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இந்தக் கோவிலைப் போற்றிப் பாடியுள்ளனர். கற்குடி மாமலையார் என்றே இங்குள்ள சிவபெருமானை தேவாரம் புகழ்கிறது. இதேபோல் பெரிய புராணத்திலும் இந்த ஸ்தலம் கற்குடி என்று குறிப்பிட்டு துதிக்கப்படுகிறது.

உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். கோவில் புனித தீர்த்தமான ஞானவாவி, குன்றின் மேலேயே மலைக் கோட்டைக்குள் அமைந்துள்ளது.

தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் திருமலைக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.


பீரங்கித் தாக்குதலுக்கும் நிலைகுலைந்து போகாமல் உய்யக்கொண்டான் திருமலைக் கோவில் நெடிதுயர்ந்து நிற்கிறது. அதுபோல் இங்கே வந்து வணங்கும் பக்தர்களும் வாழ்வில் எந்தப் பிரச்சினை வந்தாலும், உச்சிநாதர் அருளால் அதனை முறியடித்து, மேலான நிலையை அடைவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- பத்மன்

புதன், 12 செப்டம்பர், 2012

நலம்தரும் நாகை நீலாயதாக்ஷி அம்மன்


அமைதியைவிட சிறந்த சாதனை வேறு எதுவும் இல்லை. திருப்தியைவிட சிறந்த மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. பேராசையை விட பெரிய வியாதி வேறொன்றும் இல்லை. கருணையை விட சிறந்த தர்மம் வேறு எதுவும் இல்லை. பேராசையை ஒழித்து அமைதியையும், திருப்தியையும் நமக்குத் தருவது ஆலய வழிபாடு. இன்று நாம் அறியவிருக்கும் ஆலயம் நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவில்.


சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது முதுமொழி. சிவம் நிலை ஆற்றல் என்றால், சக்தி இயங்கு ஆற்றல். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவை இரண்டின் ஒத்திசைவு அவசியம். அதனால்தான் இறைவன், அம்மையப்பனாகக் காட்சி தருகிறார். இதனை உணர்த்தும் வகையிலான சிவசக்தி ஆலயங்களில் ஒன்றுதான் நாகைக் காரோணம் எனப்படும் நாகை நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம்.

மதுரை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில். மதுரையம்பதி, பாடல் பெற்ற மிகப்பெரிய சிவஸ்தலமாகவும், சோமசுந்தரக் கடவுளின் உறைவிடமாகவும் திகழ்கின்ற போதிலும், மீனாக்ஷி அம்மன் ஆலயம் என்பதே பிரசித்தம். அதுபோல நாகப்பட்டினம் திருக்கோவில், சிவபெருமானின் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்றபோதிலும், நீலாயதாக்ஷி அம்மன் ஆலயம் என்றுதான் அழைக்கப்படுகிறது.


அம்மன் அருளாட்சி நடைபெறும் அறுபத்து நான்கு சக்தி ஸ்தலங்களிலே குறிப்பிடத்தக்கது இந்த ஆலயம். தாய்மையின் உருவகமாகப் போற்றப்படும் இறைவடிவமாகிய அம்பாள், பெண்மையின் ஐந்து படிநிலைகளை, பருவங்களை, ஐந்து வெவ்வேறு க்ஷேத்திரங்களில் தாங்கி நின்று அருள்பாலிக்கிறாள்.

அவற்றில், காசியில் உறையும் விசாலாக்ஷி குழந்தையாகவும், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாக்ஷி சிறுமியாகவும், நாகையில் விளங்கும் நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாகவும், திருவாரூரில் திகழும் கமலாம்பிகை இளம் பெண்ணாகவும், மதுரையில் அரசாளும் மீனாக்ஷி திருமணமான சுமங்கலிப் பெண்ணாகவும் வணங்கப்படுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களில் நடுநாயகமாக, கன்னிப்பெண் வடிவமாக அம்மன் திருக்காட்சி கொடுத்து தெய்வீக அருள் புரியும் சக்தி பீடம்தான் நாகை.


இங்கே அம்மனுக்குத் திருநாமம் நீலாயதாக்ஷி. இதன் பொருள், நீல நிறக் கண்ணுடையாள் என்பது. தூய தமிழிலே கருந்தடங்கண்ணி என்று அம்மனுக்குத் திருப்பெயர். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாக போற்றப்படுகிறாள். கவலைகளைப் போக்குகின்ற கருந்தடங்கண்ணியாக வணங்கப்படுகிறாள். இந்த நீலாயதாக்ஷி அம்மன் மீது முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய “அம்பா நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி சர்வ லோக சாக்ஷி” என்ற கிருதி, கர்நாடக இசை மேடைகளிலும், கலைகளைப் போற்றும் பக்தர்கள் நெஞ்சங்களிலும் இனிமையாய் ஒலிக்கிறது.


நாகப்பட்டினம் நகரிலேயே நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது, சோழநாட்டு காவிரித் தென்கரையில் அமைந்துள்ள  தேவாரப் பாடல் பெற்ற 82-வது சிவஸ்தலமும்கூட. அப்பர் அன்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் நான்கு பாடல்களும், பிள்ளைப்பெருமானாகிய திருஞானசம்பந்தர் இரண்டு பாடல்களும், இறைத்தோழராகிய சுந்தரர் ஒரு பாடலும் பாடியுள்ளனர். இங்கே இறைவனுக்கு காயரோகணேஸ்வரர் என்று திருநாமம்.


இந்த ஸ்தலத்துக்கு நாகப்பட்டினம் என்றும் நாகைக் காரோணம் என்றும் பெயர் வந்ததற்கு இறைவனின் மகிமையே காரணம். ஸ்ரீ மகாவிஷ்ணு சயனித்திருக்கும் பெருமை பெற்ற நாகங்களின் தலைவனாகிய ஆதிசேஷன், ஒருமுறை சிவராத்திரியின்போது இங்கே இறைவனை நாகேஸ்வரராகத் துதித்து வழிபட்டார் என்கின்றன புராணங்கள். 

காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில், நண்பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகிய இடங்களில் சிவபெருமானை வழிபட்டு, இறுதியாக திருநாகையில் உள்ள இந்த ஸ்தலத்தில் தனது பூஜையை ஆதிசேஷன் நிறைவு செய்தாராம். அதனால் இந்த ஊருக்கு நாகப்பட்டினம் என்று பெயர் வந்ததாம்.



ஆதிசேஷன் வழிபாடு நடத்தியதால், இந்த ஸ்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. ஆதிசேஷனின் மகளை, சிவபக்தரான சாலீஸ்வர மஹாராஜா திருமணம் செய்துகொண்டதாகவும் ஸ்தலவரலாறு செப்புகிறது.

காயாரோஹணம் என்பது மருவி காரோணம் என்று அழைக்கப்படுகிறது. புண்டரீக முனிவர் இங்கே சிவபெருமானை வழிபட்டு தனது தேகத்துடன் உயரே சொர்க்கத்துக்குச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. காய ஆரோஹணம் அதாவது உடலுடன் மேலேறிய ஸ்தலம் என்பதால் இது நாகை காரோணம் என்றானது. புண்டரீக முனிவர் உடலுடன் சொர்க்கம் செல்ல அருள் பாலித்ததால், இங்கே உள்ள ஈஸ்வரன், காயாரோகணர் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறார்.



இந்த நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவிலுக்கு உள்ள மற்றொரு பெருமை, இது சிவபெருமான், தியாகராஜராகக் காட்சி தரும் சப்த விடங்க ஸ்தலங்களிலே ஒன்று என்பது. விடங்கம் என்றால், உளியால் செதுக்கி உருவாக்காமல் இயற்கையாய் தோன்றியது என்று பொருள்.

ஒருமுறை அரக்கர்களை அடக்க இந்திரனுக்கு சோழ மன்னனும் சிவபக்தனுமான முசுகுந்த சக்ரவர்த்தி உதவியபோது என்ன வேண்டும் என இந்திரன் கேட்டுள்ளான். அதற்கு, மஹா விஷ்ணுவின் ஹ்ருதயத்திலே ஆராதிக்கப்பட்டு, அவரால் இந்திரனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடனமாடும் சிவபெருமானின் திருமேனியாகிய விடங்கப் பெருமானைத் தரவேண்டும் என முசுகுந்த சக்ரவர்த்தி கோரினான்.


அவ்வாறு வழங்க விரும்பாத இந்திரன், போலியான ஆறு விடங்க ரூபங்களை உருவாக்கி, உண்மையானதையும் அவற்றுடன் சேர்த்துவைத்து, இவற்றில் உண்மையான விடங்கப் பெருமானைக் கண்டுபிடித்து எடுத்துச் செல்லுமாறு கூறினான். சிவபெருமான் மீதுள்ள பக்தியினால், சரியான விடங்கரை முசுகுந்தன் கண்டறியவே, ஆச்சரியப்பட்ட இந்திரன் ஏழு விடங்க மூர்த்திகளையும் வழங்கினானாம்.
அந்த ஏழு விடங்க லிங்கங்களையும் சோழ நாட்டில் ஸ்தாபித்து ஆலயம் எழுப்பினான், முசுகுந்தச் சோழன். அவற்றில் உண்மையான விடங்கப் பெருமானாகிய தியாகராஜர் அமைந்திருக்கும் ஸ்தலம், திருவாரூர். மற்ற ஆறு விடங்க ஸ்தலங்கள் திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவைமூர் மற்றும் திருநாகை.



நாகை நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவிலில் நீலாயதாக்ஷி, காயாரோகணர் மற்றும் தியாகராஜருக்கு தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. காயாரோகணருக்கு ஆதிபுராணேஷ்வரர் என்றும் பெயருண்டு. இங்குள்ள தியாகராஜர், சுந்தர விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு விடங்கருக்கும் தனித்தனி நடனங்கள் உண்டு. கோவில் விழாக்களில் இறைவனை சுமந்து செல்லும்போது அந்த வகை நடனத்தை ஆடியபடி அடியார்கள் சுமந்து செல்வார்கள். 


அந்த வகையில் நாகை சுந்தர விடங்கருக்குரிய நடனம், பரவர தரங்க நடனம் அல்லது விளத்திதானம் எனப்படுகிறது. கடல் அலை அசைவது போன்ற நடனம் என்று இதற்குப் பொருள். கடற்கரை நகரமான நாகப்பட்டினத்துக் கடவுள், கடல் அலை போல் நடனமிடுவது பொருத்தம்தானே?



இந்த ஆலயத்தில், திருவாரூரில் உள்ளதைப் போன்றே சுந்தர மூர்த்தி நாயனார் மற்றும் அவரது இணையான பரவை நாச்சியாருக்கும் சந்நிதி உள்ளது. இந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம், மாமரம். இங்குள்ள மாவடி விநாயகர் சக்தி வாய்ந்தவர். மேலும், நாகப்பட்டினம் என்பதால், நாகாபரண விநாயகரும் இந்த ஆலயத்திற்குள் காட்சி தருகிறார். அத்துடன், வெண்கலத்தால் ஆன பஞ்சமுக வினாயகரும் விசேஷமானவர்தான்.

இந்த ஆலயத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தெற்குப் பகுதியில் தேவ தீர்த்தமும், மேற்குப் பகுதியில் புண்டரீக முனிவரால் உருவாக்கப்பட்ட புண்டரீக தீர்த்தமும் உள்ளன.


புராண காலத்திலேயே இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், வரலாற்று ரீதியில் இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன. பிற்காலச் சோழர்களும் பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர். எனினும் அன்னியர் ஆட்சியின்போது இங்கிருந்த உண்மையான கோமேதக விடங்க லிங்கம் கொள்ளை போனதாகவும், தற்போதுள்ள கோமேதக விடங்க லிங்கம் பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. நாகப்பட்டினம், டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இந்த ஆலயத்தில் உள்ளன.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நீலாயதாக்ஷி அம்மன் ஆலயத்தின் பிரும்மோத்சவ விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப் பூரத்தின்போது அம்மனுக்கு 10 நாள் உத்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. மேலும், ஆனி  மாதத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமண வைபவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது சாலீஸ்வர மஹாராஜா திருவுருவச் சிலை முன்பு இத் தெய்வீகத் திருமணம் நடத்தப்படுவது வழக்கம்.



ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளைப் போல அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தாலும், ஆதிசேஷன் வழிபட்ட இந்த நாகைக் காரோணத்திற்கு வந்து கருணைமழை பொழியும் நீலாயதாக்ஷி அம்மனையும், காயாரோகணப் பெருமானையும் வழிபட்டால், அனைத்துத் துன்பங்களும் பறந்தோடி விலகி, நமது வாழ்க்கை ஆரோகணத்திலேயே மேலேறிச் செல்லும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. நாமும் ஒருமுறை நம்பிக்கையுடன் நாகை சென்று வருவோம்!

-    பத்மன்