செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

முழுமுதலோன்



(இன்று (17.02.15) மகா சிவாரத்திரியை முன்னிட்டு இந்தக் கட்டுரை.)

சிவமே முழுமுதல் பரம்பொருள், பரமாத்மா என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை. இப்படிக் கூறியதும், சிவத்துக்குப் பதிலாக வேறு பெயரைச் சொல்லி அவர்தான் மேலான கடவுள் என்றும், இல்லையேல் அவர் மட்டும்தான் கடவுள் என்றும் சிலர் வாதிடக் கூடும். அவ்வாறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் தெய்வங்களும், சிவத்துக்குள் அடக்கமே. ஏனெனில் உண்மை ஒன்றுதான். அதற்குப் பல்வேறு நாம, ரூபங்கள் இருக்கின்றன. இந்த நாம (பெயர்), ரூப (வடிவம் அல்லது தன்மை) விவாதங்களை விலக்கிவிட்டு உண்மையை ஆராய்ந்தால் அது சிவமாகவே இருக்கிறது என்பதை மேலோர்கள் உய்த்துணர்ந்தனர்.

அது ஏன்? சிவம் வேறு எதுவும் இருக்கக் கூடாதா? என்று கேட்டால், எது எல்லாவற்றிற்கும் மேலானதோ அதற்கு சிவம் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். அவ்வளவுதான். ஒற்றை உண்மையில் இருந்து இந்த உலகம் கிளைத்தது. இதன் ஆட்டங்கள் எல்லாம் முடிந்தபின் அந்த ஒற்றை உண்மைக்குள் மீண்டும் அடங்கப் போகிறது. இவ்வாறே மீண்டும் தோன்றி, இயங்கி, ஒடுங்கப்போகிறது. அவ்வாறு உலகின் எல்லா உயிர்களும், அல்லது உலகின் ஒட்டுமொத்த உயிர்ப்பும் தோன்றி, லயம் அடைகின்ற இறுதி இலக்கே சிவம்.

சிவம் என்பதற்குப் பொருள் மங்களம், நிறைவு. நிறைவு என்றால் முடிவு என்பது மட்டுமே பொருள் அல்ல. அவ்வாறு பொருள் கொண்டுதான் சிவனை அழிப்பவர் என்று தவறாகப் பொருள் கொள்கிறார்கள். மன நிறைவு என்றால் மனம் முடிந்துவிட்டது என்று பொருளா? இல்லையே? மனம் மகிழ்ச்சியால் அல்லது இன்பத்தால் முழுமை அடைந்திருக்கிறது, தேவைகள் பூர்த்தி பெற்றிருக்கின்றன என்றுதானே அர்த்தம். அதுபோல்தான் சிவம் என்றால் முழுமை என்று பொருள்.
அரைகுறையாய் முடிந்ததற்கு ஆனந்தமாக மங்களம் பாட முடியுமா? எதுவெல்லாம் தேவையோ அவையெல்லாம் பூர்த்தியாகி, திருப்திகரமாக முடிந்தால்தான் மங்களம். இல்லையேல் அமங்களம்தான். ஆகையால் இந்த ஒட்டுமொத்த உலகின் இயக்கமும் சரி, தனிமனிதன் வாழ்வின் இயக்கமும் சரி, முறையாக, நிறைவாக நிறைவடையச் செய்வது சிவமே அன்றி வேறு இல்லை. ரத்தம், சதை, நரம்பு, எலும்பு எல்லாம் சேர்ந்து உடல் இருக்கிறது. ஆனால் உயிர் இல்லையென்றால்... அது வெறும் சவம்தானே? அதற்கு சீவன் தருவதே சிவன்தான்.

ஆகையால்தான் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்றார் திருமூலர். இந்தச் சீவனாகிய சிவம் இல்லாவிட்டால் இந்த உடல் வெறும் சவம்தான். உயிர் நீங்கியபின் இந்த உடலைச் சுட்டுவிடுகிறோம். ஆகையால் நாமெல்லாம் நடமாடும் சுடுகாடுகள். இந்தச் சுடுகாட்டுக்குள்ளே சீவனாய் நடமிடுவது சிவம். சிவனின் மயானக் குடியிருப்பு குறிப்பால் உணர்த்துவது நம் தேகத்தைத்தான். அப்படியானால் ஆன்மா என்ற ஒற்றை உயிர்தானா சிவம் அப்படியல்ல. இந்த ஆன்மாவும் சிவம்தான், இதுபோன்ற ஆன்மாக்கள் அடைகின்ற இறுதி இலக்காகிய வீடுபேறாகிய ஒடுக்கமும் சிவம்தான்.

சிவம் நமக்குள்ளும் இருக்கிறார். நம்மை விடுத்து வெளியேயும் இருக்கிறார். யாதுமாகி இருக்கிறார். அனைத்தும் அவரது ஆடலே. நமக்குள் இருக்கும் சிவம் அவரது பிரதிபிம்பமே. மூலம் அந்தச் சிவம், பிரதிகள் நமக்குள்ளே உள்ள சிவங்கள். ஆனால், இந்தச் சிவத்தைத் தாங்கியிருக்கும் பாத்திரம் (உடல்கள், வடிவங்கள்) காரணமாக இவை வேறு, வேறு என்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஞானப் பக்குவத்தால் அனைத்தும் சிவம் என்பதை அறிந்துகொள்ளலாம். இதனைத்தான் சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ என்று கேட்கிறார் மகாகவி பாரதி.

நமது விருப்பத்தை, தேவையை நிறைவு செய்யும் அதாவது முடித்து வைக்கும் பரிபூரணமும் சிவமே. நமது பெரு விருப்பு வீடுபேறு, அதற்குமுன் சில சிறு விருப்புகளும் ஈடேறத்தானே வேண்டும். அவையெல்லாம் ஒன்று அனுபவித்து முடிந்துபோக வேண்டும். இல்லையேல், அது வேண்டாம் என்று பற்றறுத்து நிறைவு பெற வேண்டும். அந்தப் பக்குவத்தைத் தருவதும் சிவமேதான். ஆகையால்தான் மற்றைத் தெய்வ உருவங்கள் ஆபரணாதிகளோடு இருக்க, சிவம் அனைத்தும் விடுத்த ஆண்டிக் கோலத்தில் காட்சி தருகிறார்.

அவர் ஆண்டியாக இருந்தாலும் ஆள்பவரும் அவர்தானே. ஆகையால்தான் அந்தக் காலந்தொட்டே திருமணம் நடைபெறுதல், பிள்ளை பெறுதல் ஆகிய இல்வாழ்க்கைத் தேவைகள் நிறைவேற சிவபெருமானுக்கு விரதம் இருந்து வருகிறார்கள். சிவன் யோகீஸ்வரன். ஈஸ்வரன் என்றால் ஐஸ்வர்யங்களை உடையவன் என்று பொருள். யோக மார்க்கத்தில் திளைப்பவன் யோகி. சகல ஐஸ்வர்யங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் சிவ பெருமான் அவற்றைத் துய்க்காமல் மற்றவர்களுக்குத் தந்து உதவிக் கொண்டிருக்கிறார். அரசனும், செல்வம் படைத்தவர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு
.
சிவனது பெருமைகள், குணாதிசயங்களை உருவகப்படுத்தும் பழம் பெரும் புராணங்கள், மானுட வாழ்க்கைக்கு மேலும் பல முன்னுதாரணங்களைத் தருகின்றன. பிரபஞ்சத் தொடக்கத்தில் இறவா அமர நிலையை அடைவதற்கான அமுதத்தைப் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது உயிரைக் காக்கும் அமுதம் தோன்றுவதற்கு முன்பு உயிரை மாய்க்கின்ற ஆலகால விஷம் தோன்றுகிறது.
அதுவரை இறைவனாகிய சிவத்தை நினையாமல் தமது ஆசையைப் பூர்த்தி செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த தேவர்களும் அசுரர்களும் இடையூறு வந்ததும் இறைவனை அழைக்கிறார்கள். என்னை மதிக்காமல் போனாயே என்று தவிக்க விடாமல் விரைந்தோடி வருகிறார் சிவபெருமான். பெருகி வந்த விஷத்தை தானே விழுங்கி மற்ற உயிர்களைக் காக்கிறார். இதனால் சிவன் சிறிது நேரம் மயங்கிக் கிடந்தாலும், தனது பராக்கிரமத்தால் மீண்டும் எழுந்துகொள்கிறார். உலக உயிர்களின் நன்மைக்காக, கெடுதலைத் தாமே ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த தியாக ஸ்வரூபி சிவபெருமான். இதனால்தான் அவருக்கு தியாகராஜன் என்று பெயர்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணம். தொண்டர்களைப் பலி கொடுத்து சுகம் அனுபவிப்பவன் அல்ல, உண்மைத் தலைவன். தொண்டர்களின் துயருக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருபவனே தலைவன். அந்த வகையில் சிவனே சிறந்த தலைவன். அதனால்தான் அவரை மூவர் முதல்வன் என்று போற்றுகிறார்கள். பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று கடைசியில்தானே சிவன் இருக்கிறார் என்று கேட்டால், இறுதியில் அடைகின்ற இலக்குத்தானே உயர்ந்தது, இடையில் இருப்பனவா? உச்சம் என்பது இறுதி நிலை, நிறைவு நிலை, பரிபூர்ண நிலை அல்லவா? அந்த உச்சம்தான் உமாமகேசுவரன்.

நாம் அனைவரும் இறுதி இலக்காகிய வீடுபேற்றை, சிவத்துக்குள் நிறைவடையும் பேரானந்த நிலையை அடைகின்ற பக்குவத்தைப் பெறுகின்ற வகையில் நம்மை மீண்டும் பிறப்பு இறப்புச் சுழலாகிய பிறவிப் பெருங்கடலில் புகுத்தும் மறு உருவாக்கியும் அவரே. பக்குவம் அடைந்தபின் தம்முள் இணைத்துக்கொள்ளும் பரிபூரணரும் அவரே.
நம்மைக் காலவரம்புக்குள் புகுத்தும் சிவம், காலத்தைக் கடந்தவர். ஆகையால்தான் அவர் காலாதீதர் என்றும் மகாகாலர் (மகாகாளர்) என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மாக்களை பக்குவப்படுத்த பிறவிப் பெருங்கடலில் புகுத்தும் சிவத்தை பிறவா யாக்கைப் பெரியோன் என்று பழந்தமிழ் கொண்டாடுகிறது. மற்ற தெய்வங்கள் எல்லாம் பிறந்து இறக்கின்ற தன்மை உடையவை, இல்லையேல் வாழ்வாங்கு வாழ்ந்து தேவ நிலையை அடைந்தவை. அவற்றுக்கும் கால வரம்பு உண்டு. அந்தக் காலம் முடிந்தபின் ஆதியாய், அனாதியாய் திகழும் சிவத்துக்குள் ஒடுங்குகின்றன.

இதனால்தான் மற்ற தெய்வ வடிவங்கள் எல்லாம் தேவர்களாக இருக்க, சிவன் மட்டும் மகாதேவராக இருக்கிறார். ஈஸ்வரன் என்ற காரணப் பெயரும், சிறப்புப் பெயரும் சிவத்துக்கே உரியவை. ஏனைய தெய்வ வடிவங்களையும் ஈஸ்வரன் என்று சில சமயங்களில் கூறினாலும், சிவன் சர்வேஸ்வரனாக, பரமேஸ்வரனாக, மகேஸ்வரனாக இருக்கிறார்.
இதை உணர்ந்துதான் மிகப் பழமையான புராணங்களும், இதிகாசங்களும் சிவபெருமானை மகாதேவனாக, மகேஸ்வரனாகப் போற்றுகின்றன. பிற்காலப் புராணங்கள்தான் மற்றைத் தெய்வங்களை முன்னிறுத்துகின்றன. 

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ஜானகியை சுயம்வரத்தில் மணம் புரிவதற்காக தசரத ராமர் சிவ தனுஸை வளைத்ததைக் கேள்விப்பட்டதும் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமாகிய பரசுராமர் கோபம் கொள்கிறார். எவ்விதம்? சிவதனுஸு மிகப் பழமையானது. ஆகையால்தான் ராமா நீ அதை வளைத்துவிட்டாய் போலும், என்னிடம் இருக்கும் விஷ்ணு தனுசு புதியது இதை வளைத்துப்பார் என்று கொடுக்கிறார். இதில் பெறப்படும் உள்கருத்து என்ன? சிவன் மிகப் பழமையான கடவுள். அவர் பெயரால் வழங்கப்படும் வில்லும் பழமையானது என்று கூறுவதன் மூலம் சிவன் பழமையானவர் என்பதை உணர்த்துகிறார் பரசுராமர்.

சிவபக்தியில் பரசுராமரைவிட மேலானவர் யார்? விஷ்ணு அவதாரம் என்று போற்றப்படும் பரசுராமர், சிவனுக்கு ஏராளமான ஆலயங்களை ஸ்தாபித்தவர் மட்டுமல்ல, சிவபெருமானிம் சீடர். அத்துடன், தானே சிவரூபமாய் காட்சி தந்தவர். உடலெல்லால் விபூதி பூசி, ருத்திராட்சம் அணிந்திருந்ததோடு, சிவனின் ஆயுதமாகிய பரசு எனப்படும் கோடாரியையும் கையில் எப்போதும் தரித்தவர். (அதனால்தானோ, வைஷ்ணவர்கள் பரசுராமரை வணங்குவதில்லையோ?)
பரசுராமர் மட்டுமல்ல, ராமரும் சிவனை வணங்கி அருள் பெற்றவர்தான். பிராமண அரக்கானாகிய ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி, வீரஹத்தி தோஷம் நீங்க, ஈஸ்வரனுக்கு சிவலிங்கம் பிடித்து, ராமர் வழிபட்ட இடம்தான் ராமேஸ்வரம்.

இதுமட்டுமல்ல, கிருஷ்ணரும் மிகச் சிறந்த சிவபக்தர்தான். இதனை மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் அழகாக எடுத்துரைக்கிறது. உபமன்யு என்ற யோகியிடம் ஶ்ரீகிருஷ்ணர் பாசுபத தீட்சை பெற்று தவம் இருந்ததையும், சம்புவாகிய சிவனின் அருளால் தமக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அதற்கு சாம்பன் என்று கிருஷ்ணர் பெயரிட்டதையும் அனுசாசன பர்வத்தில் காணலாம். பாசுபத அஸ்திரம் பெற சிவனை வணங்குமாறு, அர்ச்சுனனுக்கு கிருஷ்ணரே உபதேசிக்கிறார். அவற்றையெல்லாம்விட, சிவ சஹஸ்ரநாமம் என்ற ஸ்தோத்திரத்தை ஶ்ரீகிருஷ்ணர்தான் உலக மக்களின் உய்வுக்காக உபதேசித்திருக்கிறார் என்பதற்கும் அனுசாசன பர்வமே அகச் சான்று.

ராவணனும் சிவபக்தன்தான், கம்சனும் சிவபக்தன்தான். அதற்காக, அவர்கள் செய்த தவறுகளுக்கான தண்டனைகளை சிவபெருமான் தள்ளிவிடவில்லை. ஏனெனில், இறைவன் மிகச் சிறந்த நடுநிலையாளன். அவர் விருப்பு, வெறுப்பின்றிச் செயல்படுகிறார். நமது பக்தியினால் நாம் விடுதலை அடைவதற்கான வழியைப் பெறலாம், ஆயினும் சில கர்மவினைகளுக்குத் தண்டனைதான் உய்வதற்கான வழி என்றால் அதைக் கொடுத்து, நம்மை பக்குவமடையச் செய்வதே இறைவனின் செயலாக இருக்கிறது.
இறுதியாக ஒரு விஷயம், சிவம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவர். சிவம்  - ஆண், பெண், அலி என்ற பேதமற்றவர். எல்லாவற்றையும் கடந்தவர். ஆயினும் பல சமயங்களில் ஆணாகக் காட்சி தருகிறார். அதேநேரத்தில் சரிபாதியை சக்திக்குக் கொடுத்து ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டினார். அர்த்தநாரி என்ற உருவத்தில் ஆண், பெண் சமத்துவத்தோடு இரண்டும் கலந்த நிலையினரை சமுதாயம் ஆதரிக்க வேண்டிய பக்குவத்தையும் போதிக்கிறார். நாராயணருக்குச் சரிபாதி கொடுத்து ஹரிஹரராக, சங்கர நாராயணராகவும் அவரே காட்சி தருகிறார்.
மேலும், சிவபெருமானின் உருவகமாகிய சிவலிங்கம், பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய முப்பெரும் தெய்வ வடிவங்களையும் உள்ளடக்கியது. சிவலிங்கத்தின் ஆவுடையாருக்குக் கீழே உள்ள பீடம் போன்ற அடிப்பாகம் பிரும்மா. இது ஆணும் பெண்ணுமற்ற தன்மையையும் குறிக்கிறது. அடுத்ததாக, நடுவில் உள்ள ஆவுடையார் எனப்படும் நடுப்பாகம் விஷ்ணு பாகம். இது பெண் தன்மையையும் குறிக்கிறது. மேலே உள்ள பாணம் எனப்படும் தண்டு போன்ற மேல் பாகம் ருத்ர பாகம். இது ஆண் தன்மையைக் குறிக்கிறது.
இவ்வாறாக யாதுமாகி நிற்கும் சிவமே முழுமுதற் கடவுள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சிவம் தனித்தும் இருக்கிறது, தன்னுள் அனைத்தையும் அடக்கியும் இருக்கிறது. சிவோஹம்.
-    பத்மன்