திங்கள், 15 செப்டம்பர், 2014

வீழவில்லை பாரதி!


 
 

தேடித் தமிழ்தினம் வளர்த்து - பலர்

                போற்றக் கவிதைகள் யாத்து - தேகம்

வாடினும் தேசத்துக் குழைத்து - பிறர்

                வாழப் பலசெயல்கள் புரிந்து - யாவரும்

கூடி சுதந்திரம் எய்திட - எய்தபின்

                வாழும் முறைகளும் மொழிந்து - பல

வேடிக்கை மனிதரை மாற்றிட - புவியில்

                தோன்றிய பாரதி தெய்வம் தானே?

-          பத்மன்


அமரஜீவிதன்


 
எனக்கு எப்போது அந்த ஆசை உருவானது என்று தெரியவில்லை. ஆனால் திடமாகப் பற்றிக்கொண்டுவிட்டது. வினோதமான முதலாவது, இரண்டாவது ஆயிரமாண்டு வரலாற்றுப் பேத்தல்களையும் தத்துவம் என்ற பெயரிலான கூத்துகளையும் படிக்காதே என்று எனது நண்பர்கள் கூறுவதை நான் எப்போதும் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் மறுதலித்த, ஆயின் என் மனதுக்குப் பிடித்த அந்த விஷயங்களின் தாக்கமாக இது இருக்கலாம். ஆனால் அந்த ஆசை எனக்கு இப்போது முற்றிவிட்டது. என்ன ஆசை? சொல்கிறேன். அதற்குமுன் என்குறித்த சிறு விவரம் தேவைப்படும்.

நான் சி.ஓ.இ.-ஹெச்யூ. 246719. எங்கள் வசிப்பிடப் பகுதியில் வழங்கும் பாஷையில் பூ.சா.உ.-மனி. 246719. அதாவது பூமிசார் உயிரினம் - மனிதன் பதிவு எண் 246719 என்று பொருள். கடந்த மூன்றாவது ஆயிரமாண்டின் கடைசி நூற்றாண்டில் எங்கள் முன்னோர் வசித்த பூமி பிரளய வெள்ளத்தில் மூழ்கிப்போக, எஞ்சிய மனிதர்களும் அவர்களால் (தங்கள் தேவைக்காக) காப்பாற்றப்பட்ட பிற உயிரினங்களும் உயிர்பிழைத்து அப்போதிருந்த விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால்  விண்வெளியி¢ல் ஒரு திரிசங்கு உலகத்தை உருவாக்கி ஜீவித்து வருகிறோம். ஜ¦வித்து வருகிறோம் என்றால் நரை, திரை, மூப்பு, மரணமின்றி காலாகாலமாக உயிர் வாழ்கிறோம் என்று அர்த்தமல்ல. எங்களுக்கும் அந்தப் பிணிகள் உண்டு.

எங்களில் சிலருக்கு இந்த வட்டத்தை மீறி நிலையான உயிர்ப்பை அதாவது மரணமில்லாப் பெருவாழ்வான அமர ஜீவிதத்தை அடைய ஓர் அவா. நீயெல்லாம் என்னய்யா விஞ்ஞானி? சாவது இயற்கைனு விட்டுட்டுப் போவியா? ரிசர்ச்ங்கற பேருல என்னத்தையோ உளறிட்டிருக்கயே!என்பதுபோன்ற வசைமொழிகளும் நையாண்டிகளும் அரசாங்கத்தின் தடைகளும்கூட அவர்களை மாற்றிட முடியவில்லை. நான் விஞ்ஞானியாக இல்லாவிட்டாலும் அவர்களது இந்த சோதனை முயற்சியை ஆதரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 5 வருடங்களுக்கு முன்புவரை மனைவி இருந்தாள். அவள் இல்லாத இடத்தை இப்போது அவளது ஹ்யூமெஷின் (Humachine) நிரப்பி வருகிறது.
ஹ்யூமெஷின், ஒருவரை அப்படியே நகலெடுக்க இயலாத குழப்பமான குளோனிங் முறைக்கும், பதிவுகளின்படி ஏறத்தாழ அசலை பிரதிபலிக்கும் இயந்திர ரோபோ முறைக்கும் இடையேயான புணர்ச்சியில் ஜனித்தது. (புணர்ச்சி என்பதற்கு தவறான அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். அந்த இரண்டு முறைகளின் கலந்துகட்டி இது, அவ்வளவே.)
இதுபோன்ற ஹ்யூமெஷின்களால், மரித்த ஒருவரின் ஸ்மரணையை தக்கவைத்துக் கொள்ளலாம். ஆனால் மரணத்தை வென்று வாழ முடியாது. அப்படி வாழமுடியும் என்பதற்கான ஹைபோதீஸிஸ்களை, ஜெனரேஷன் எக்ஸ்டிங்க்ட் (Generation Extinct) என்ற எங்களது சூப்பர் கம்ப்யூட்டரில் சேமித்துவைக்கப்பட்டுள்ள புராணங்களில் பார்க்க முடிகிறது. எங்களைப்போல் விண்வெளியில் உருவாக்கப்பட்டுள்ள மதர்ஷிப்புகளில் வசிக்கும் விஞ்ஞான வளர்ச்சி கண்ட மனிதர்களை பவனவாசிகள், வித்யாதரர்கள் என்றும் இதுபோல் பிரளயத்தில் மனிதர்கள் தப்பிப் பிழைக்க வழிகண்டவர்களை மனுக்கள் என்றும் நோவாக்கள் என்றும் அழைப்பதை அவை விவரிக்கின்றன. எங்களைப்போன்ற பவனவாசிகளை அமரர்கள் என்றும் ஏஞ்சல்கள் என்றும்கூட குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பவனவாசிகளான நாங்கள் உண்மையில் மரணத்தை வென்று நிலைத்திருப்பவர்கள் அல்லர். விஞ்ஞான வளர்ச்சியால் மரணத்தை முடிந்தவரை ஒத்திப்போட எங்களால் முடிகிறது. பழுதடைந்த உடல் உறுப்புகளை அவய அங்காடியில் சென்று மாற்றிக்கொள்ளலாம். உள்ளுறுப்பு, வெளியுறுப்பு இரண்டு வகைகளும் அங்கே கிடைக்கும். எல்லாம் ஸ்டெம் செல் மருத்துவத்தின் மகத்துவம். அப்படிப்பட்ட அவய அங்காடி ஒன்றின் வாசலில் என் நண்பனின் வரவுக்காகக் காத்திருந்தேன். அந்த அங்காடியின் உரிமையாளனான அவன் அண்மையில்தான் எனது தொடர்பு வட்டத்துக்குள் வந்தவன் என்றாலும் எனக்குப் பிடித்த விஷயங்களில் அவனுக்குள்ள மேதமை, உடனடியாக அவனை எனது சஹ்ருதயனாக ஏற்றுக்கொள்ளச் செய்துவிட்டது.
 
 
திடீரென எனது முதுகுப்புறத்தில் இளஞ்சூடாக ஏதோ பட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் ஆரணங்கு அவளது மார்பகத்தால் என்னை உரசியபடி. திரும்பிப் பார்த்த முகத்தின் மத்தியில் முத்தமிட்டாள். “எனது அளவு சரியாக இருக்கிறதா? சற்று பெரிது பண்ணலாம் என்று வந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தாயானால் கூடுதல் அம்சத்தோடு உன்னைக் களிப்புறச் செய்வேன்” என்றாள்.
“நீ எதை சரிசெய்து கொள்கிறாயோ? இல்லையோ? உனது தொண்டையை முதலில் நேர் செய்துகொள். இல்லையேல், உனது போன ஜென்மம் புரிய நேர்கிறது என்றேன். அவளது ரகசியம் வெளிப்பட்ட வெறுப்பில் என்னை முறைத்துச் சென்றாள்(ன்). இதுபோன்ற பீ.எம்.பி. கேஸுகள் இங்கே அதிகம்.
ஜெண்டர் டிரான்ஸ்ஃபர் வேண்டுவோருக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த Body Modification Programme – BMP. இதன்மூலம், ஆதியில் ஆணாகப் பிறந்தவரை அப்படியே பெண்ணாகவும், இதேபோல் பெண்ணாகப் பிறந்தவரை முழுமையான ஆணாகவும் எளிதில் மாற்றிவிட முடியும். இதைச் செய்துகொண்ட மனிதர்கள், பாடி மாடிஃபைடு பெர்சன்ஸ். பெண்களுக்கான பிள்ளைப்பேறு உபத்திரவத்தை முழுமையாகத் தாங்கிக்கொள்ள கர்ப்பக் கலசங்கள் என்ற நவீன சோதனைக் குழாய்கள் வந்துவிட்டபடியாலும், மாதாந்திர அவஸ்தைகள் நின்றுவிட்டபடியாலும் பால்மாறிகளுக்கு படுகொண்டாட்டம்தான். பால்மாற்றம் மனிதகுல விரோதம் என்று கடுமையாக எதிர்ப்பவர்களும், பாலினத்தை மாற்றிக்கொள்ளாமல் கணவன்-மனைவி ஒப்பந்தப்படி வாழ்க்கை நடத்துபவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். நானும் திடீர் தீவிபத்தில் இறந்துபோன என் மனைவியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். அது இருக்கட்டும். விஷயத்துக்கு வருவோம். ஏனென்றால் என் நண்பன் வந்துவிட்டான்.
வெகு நேரம் காத்திருக்கிறாயா?”
இல்லை. கழிந்த அரை மணி நேரமாகத்தான் காத்திருக்கிறேன்என்றேன் சிரித்தபடி. நான் அரை மணி நேரம் தாமதமாக வந்திருப்பதைக் குறிப்பிடுகிறாயா?” என்றான் அவனும் பதிலுக்கு சிரிப்பை உதிர்த்தபடி. இருவரும் அவனது அறைக்குள் சென்றோம். அங்கிருந்து மற்றொரு ரகசிய அறைக்குள் பிரவேசித்தோம்.
நீ சொன்ன இயந்திரம் இதுதானா?”
ஆம்.
ஒரு பெரிய குமிழ் போன்றிருந்த அந்த இயந்திரத்துக்குள் சென்றுவர லிஃப்ட் போன்ற வசதி இருந்தது. குமிழைச் சுற்றியிருந்த வட்டத் தகட்டில் வருடக் கணக்குபோல் ஏதோ குறிக்கப்பட்டிருந்தது. இது என்ன கால இயந்திரம்போல் இருக்கிறதே?” என்று கேட்டேன். பார்வைக்கு அப்படித்தான். ஆனால் பலன்கள் அதிகம். முக்கியமாக நமது சோதனை, கால இயந்திரத்தோடு தொடர்புடையதே என்றான்.
அப்படியானால், மரணமில்லாத அமரனாக, நினைத்ததை நிறைவேற்றும் தேவனாக மாற இந்த இயந்திரம் போதுமானதில்லையா?” எனது குரலில் அதிருப்தி வெளிப்பட்டது. இது சிக்கலான கேள்வி. சிறிது விளக்கம் தர முடியும். இதில் முயன்று பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லைஎன் ஆமோதிப்புக்காக முகத்தைப் பார்த்தான். தலையை ஆட்டியதும் தொடர்ந்தான்.
கால வரம்பைத் தாண்டி பயணிக்க முடியும் என்ற கருத்து, இரண்டாம் ஆயிரமாண்டின் பிற்பகுதியிலேயே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது நிரூபணமானது நாம் பூமியை விட்டுப் பெயர்ந்து வந்த பிறகே. எனினும் காலத்தைத் தாண்டிய பிரயாணத்தில் இப்போது நாம் வெறும் காட்சிப் பொருள் மட்டுமே. அதாவது வேறு காலத்திற்குள் நாம் பிரவேசிக்கும்போது ஒரு சாட்சியாக இருக்க முடியுமே தவிர, பங்கேற்பாளராக முடியாது. அந்தத் தடையை மீறி அடுத்த கட்டம் போனால்தான் நாம் அமரராவதும், காலத்தை வென்று ஜீவிப்பதும் சாத்தியமாகும்என்று முழக்கினான் எனது நண்பனான சி.ஓ.இ. ஹ்யூ 888666.
நீடித்த மௌனத்தைக் கலைத்தபடி அவனே மீண்டும் பேசினான்: வெளிக்குள் காலம் அடுத்தடுத்த புள்ளியாய் ஒரு சங்கிலித் தொடர்போல் உள்ளது. ஆக, காலம் ஒரேநேரத்தில் நிலையானது, தொடர்ச்சியானது. குறிப்பிட்ட காலப்புள்ளியில் அதற்குரிய காலம் மாறுபாடுடையது. ஆனால் மொத்த வெளியில் அந்தக் காலம் நிலையானது. நாம் காலத்தைக் கடந்து நிலைத்திருக்க இந்த வெளியைப் பற்ற வேண்டும். அதுதான் பூரணமானது. அதேவேளையில் அது சூனியமாகவும் இருப்பதுதான் சிக்கல்.
புரியவில்லை.
அதாவது காலாதீதமான ஒரு விஷயத்தில் பிரவேசிக்கும்போது எல்லாம் வல்ல நிலையை நாம் அடைந்துவிட முடியும். அதேநேரத்தில் ஏதுமில்லாத ஒன்றாகவும் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட மரணத்தை ஒட்டியதுதான் மரணமில்லாப் பெருவாழ்வும்.
நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”
வேறு ஒரு காலத்துக்குள் நாம் புகுந்துகொண்டு, அங்கு சாட்சியாக மட்டும் இல்லாமல் பங்கேற்பேளராகவும் இருக்க முடியுமானால் நாம் காலத்தையும் மரணத்தையும் வென்றவராகிறோம். அப்படி வேறு ஒரு காலத்துக்குள், முக்கியமாக விஞ்ஞான வளர்ச்சி இல்லாத முற்காலத்துக்குள்  நாம் புகுந்துகொண்டு சிறந்த பங்கேற்பாளராக அதாவது அங்கு ஒரு தேவனாக,  தெய்வமாகச் செயல்படுவதற்கான சில வசதிகள் இந்த இயந்திரத்தில் உள்ளன. நமது அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும் கடும் தடைகளுக்கும் பயந்து மிக ரகசியமாக இதனை உருவாக்கியிருக்கிறேன். Evolution Next  என்ற எனது இந்த அருமை இயந்திரத்தின் மூலம், அமரனாகும் முயற்சிக்கு நீ தயாரா?” என்று கேட்டான் நண்பன்.
அவனது குழப்பமான சித்தாந்தங்கள் எல்லாம் எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் எனது நீண்ட வருட ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் அவன் கேட்ட கேள்வி எனக்குப் பிடித்திருந்தது. உடனே சம்மதித்து அந்த மெஷினுக்குள் புகுந்தேன். இடம் என்று குறிப்பிட்டிருந்த பொத்தானை இந்தியாவுக்கு நேராகவும், காலம் என்று குறிப்பிட்டிருந்த பொத்தானை 6-ம் நூற்றாண்டு என்பதற்கு நேராகவும் சுழற்றினான். இயந்திரத்தை இயக்கட்டுமா?” என்று கேட்டான். எனது தலையசைப்புக்கு காத்திருக்காமலேயே அதனை இயக்கியதுபோல் தெரிந்தது.
அடிவயிற்றைக் கவ்வி இழுத்ததைப் போன்று பயங்கர வலி ஏற்பட்டது. காலத்தைக் கடந்து பயணிப்பதென்றால் சாதாரணமா? அப்படித்தான் இருக்கும் என்று தேற்றிக்கொண்டேன். எனது அவயங்களெல்லாம் எப்படி எப்படியெல்லாமோ மாறியதுபோன்ற ஓர் நினைப்பு. சிறிது நேரத்தில் வலிகள் எல்லாம் பறந்துபோய் உடல் லேசானது. மிதப்பதைப்போல் உணர்ந்தேன். உடலற்ற வெறும் ஆவி வடிவம் ஆகிவிடுவேனோ? மரணத்தை ஒட்டிதான் அமரத்தன்மையும் என்று நண்பன் கூறியது நினைவில் வந்து பகீரென்றது.
எங்கோ நான் இறங்கியதைப்போல் தெரிந்தது. என்னை என்னால் காண முடியவில்லை.  ஆனால் சுற்றியிருப்பதை என்னால் காண முடிந்தது. நான் வந்த வாகனம் உருமாறி இருப்பதைப் பார்த்தேன். காலப் பயணத்தின் கோலமா? திடீரென மக்கள் கூட்டம், எங்களது சூப்பர் கம்ப்யூட்டரின் ஜெனரேஷன் எக்ஸ்டிங்ட் பதிவுகளில் நான் பார்த்திருந்த கோலத்தில். சாமி என்று நான் இருந்த இடம் நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். சுயம்பு மூர்த்தின்னா இது? அதுவும் வாகனத்தோட எழுந்தருளியிருக்காரே?” என்றார் வயதான ஒருவர்.

அடுத்தடுத்து வினோதங்கள் தொடர்ந்தன. என் தலையில் எதை எதையோ கொட்டினார்கள். தீப தூபங்களைக் காட்டி உருக்கமாகப் பாடினார்கள். பிரார்த்தனை செய்துகொண்டு நிறைவேற்றக் கேட்டுக்கொண்டார்கள். என்ன கூத்துடா இது? இதிலிருந்து எப்போது எனக்கு விமோசனம்? அட கடவுளே! ஓ! இங்கு நான்தான் கடவுளா? இதுதானா நான் ஆசைப்பட்ட அமரஜீவிதம்? இந்தக் குழப்படிக்காகத்தான் இந்த ஆராய்ச்சிக்கு எங்கள் அரசாங்கம் தடை விதித்ததா? நாசமாப் போச்சு. 

- பத்மன்

வெள்ளி, 20 ஜூன், 2014

நல்வாக்கு (சுபாஷிதம்)


தமிழில் மூதுரை, முதுமொழி, பழமொழி, ஆன்றோர்மொழி என்று இருப்பதைப்போல் சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதம் என்று உள்ளது. பல்வேறு பெரியோர்கள், அறிஞர் பெருமக்கள் கூறியதன் தொகுப்பு இந்த சுபாஷிதம். 

இந்த சுபாஷிதங்களில் பல, நேரடியாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையாகவும் ஒருசில, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள நல்ல கருத்துகளை அப்படியே மொழிபெயர்த்தோ அல்லது உள்வாங்கி மாற்றியமைத்தோ படைக்கப்பட்டவையாகவும் உள்ளன.

சு என்றால் நல்ல என்று, பாஷிதம் என்றால் மொழி, வாக்கு என்றும் பொருள். ஆகையால் தமிழில் இதனை நல்வாக்கு என்று சொல்லலாம். இந்த சுபாஷிதங்களில் சிலவற்றை தமிழ் கூறும் நல்லுலகு நண்பர்களுக்காக இங்கே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.

1) தானங்களால் கரங்களுக்கு அழகு
   மோதிரத்தால் அல்ல
  குளியலால் உடலுக்குத் தூய்மை
   வாசனாதிகளால் அல்ல
  உபசரிப்பால் உண்டாகும் நிறைவு
   விருந்தால் அல்ல
  ஞானத்தால் உண்டாகும் முக்தி
   சடங்குகளால் அல்ல.

2) இரவுக்கு நிலா அழகு
   இயற்கைக்கு கதிரவன் அழகு
   வாக்கினுக்கு உண்மை அழகு
   வாழ்க்கைக்கு நன்னடத்தை அழகு.

3) பிறருக்கு உதவவே மரங்கள் காய்க்கின்றன
   பிறருக்கு உதவவே நதியும் பாய்கிறது
   பிறருக்கு உதவவே பசுவும் சுரக்கிறது
   பிறருக்கு உதவவே நமக்கிந்த உடம்பும்.

4) பூச்சிகளுக்கு காற்றால் பயம்
   பூக்களுக்கு குளிரால் பயம்
   மலைகளுக்கு இடியால் பயம்
   மனிதருக்கு தீயோரால் பயம்.
  

  





செவ்வாய், 4 மார்ச், 2014

இருக்கு ஆனா இல்லை




ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் என்னத்த கன்னையா சொல்லும் வரும் ஆனா வராது வசனத்தைப் போன்றதுதான், இறைவனைப் பற்றிய விளக்கமும். ஆம்! கடவுள் இருக்கு ஆனா இல்லை. ஏனிப்படி?
கன்னையா எதனால் வரும் ஆனா வராது…” என்று இழுக்கிறார். அவரால் காரை ஓட்ட இயலும் ஆனால் அவருக்கு இரவில் பார்வை மங்கிவிடுகின்ற காரணத்தால், அதாவது குறைபாடு உள்ள காரணத்தால் வண்டி ஓட்ட இயலாது.
 
இதைப்போல்தான் இறைவனை நாம் தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள இயலும். ஆனால், நம்மிடம் உள்ள குறைபாடு காரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை. நம்மால் அறிந்து கொள்ளப்படும்போது இறைவன் இருக்கிறார். அறிந்து கொள்ள இயலாதபோது அவர் இல்லை. ஆக, ஒரேநேரத்தில் அவர் இருந்து கொண்டே இல்லாமல் போகிறார், இல்லை எனும்போதிலும் இருந்து கொண்டிருக்கிறார்.


இறைவனை அறியாமல் இருப்பதற்கு நம்மிடம் உள்ள குறைபாடே காரணம். அந்தக் குறைபாடுதான் அறியாமை என்கிற மாயை. அதனை விலக்கினால் இறைவனின் இருப்பு புலப்படும். காலையில் விழித்ததும் கண்கள் மங்கலாகத் தெரிகின்றபோது, கண்களில் படர்ந்துள்ள படலத்தை தேய்த்து அகற்றுகிறோம். கண்ணொளி சுடர் வீசுகிறது. அதைப்போல் இந்த மாயப் படலத்தைத் துடைத்தெறிந்தால் இறைவனின் திருக்காட்சி கிட்டும்.


மாயை என்பது பொய்யல்ல, அதேநேரத்தில் உண்மையும் அல்ல. இரண்டும் கலந்து நம்மை மயங்கச் செய்வது. பழுது என்று தாண்டவும் முடியவில்லை, பாம்பு என்று மிதிக்கவும் முடியவில்லை என்ற நிலைதான் இந்த மாயை. அது ஒரு தோற்ற மயக்கம்.
 
தரையில் கிடக்கும் கயிறு பாம்பாக நினைக்க வைக்கிறதே, அவ்வாறு நினைக்கும் தருணத்தில் அது பாம்புதான், அந்த நினைப்புதான் நமக்கு பயத்தைத் தருகிறது. ஆனால், அது வெறும் கயிறுதான் என்பதை உணர்ந்துகொள்ளும்போது பயம் போய்விடுகிறது. அதனை நாம் எளிதில் தாண்டிச் சென்றுவிடுகிறோம். 

அதுபோலத்தான் மாயையும். நாம் வெறும் உடல்கள் என்று மயங்கிக் கிடக்கும்போது பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடிவதில்லை. ஆண்டவனை அறிந்து கொள்ள முடியவில்லை. நம்மில் இருப்பதும், நம்போல் அனைவரிலும், அனைத்திலும் இருப்பது அந்த இறைவனே என்பதை உணர்ந்துகொள்ளும்போது அந்த இறைவன் அறிந்து கொள்ளப்படுகிறான். நம்மில் ஆட்சி செய்யத் தொடங்குகிறான். 

நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ஏக இறைவனின் பிரதிபிம்பம் என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம். 


நாணம் வந்தால் தலை சாயும்,  ஞானம் வந்தால் தலைக்கனம் சாயும். நான், எனது என்ற உடல் சார்ந்த மயக்கம்- மாயை நீங்கி, நான் ஆண்டவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்ந்துகொள்ளும்போது சுயநலம் உள்ளிட்ட மலங்கள் நீங்குகின்றன, நிர்மலம் உண்டாகிறது. அப்போது எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்முள் இருப்பவனாகிறான், அதுவரை இல்லாததுபோல் இருக்கிறான்.

உதாரணத்துக்கு, காலையில் காண்கின்ற கதிரவன் மாலையில் இல்லை. அதனால் சூரியன் இல்லை என்று ஆகிவிடுமா? ஆயினும் மாலையில் இருந்து மறுநாள் விடியும் வரை சூரியன் இல்லை. எங்கே செல்கிறது சூரியன்? இயற்கையின் விதிப்படி மாலையில் மறைந்து கொள்கிறது.
ஆக, எப்போதும் இருக்கின்ற பகலவன் இல்லாததுபோல் தோன்றுகிறான். இதுதான் மாயை. அதுபோலத்தான் எப்போதும் எங்கும் இருக்கின்ற இறைவனும் இல்லாததுபோல் தோற்றம் கொடுக்கிறான்.

இரவு நேரத்தில் சூரியன் இல்லை என்று கூறுவது ஒருவகையில் உண்மைதானே? அதுபோல அறியாமை இருள் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் கடவுள் இல்லை என்று கூறுவதும் தற்சமய உண்மையே. காலையில் ஒளியுடன் சூரியன் உதிப்பதைப்போல, ஆத்மஞானம் பிரகாசிக்கும்போது ஆண்டவனும் அறியப்படுகிறான், நம்முள் உறைபவனாகிறான். இதுவே முக்காலமும் உண்மை. 


இதனைத்தான் தட்சிணமூர்த்தி ரூபத்தில் சிவபெருமான் நமக்கு போதிக்கிறார். அவரது காலடியில் கிடக்கும் அரக்கனுக்குப் பெயர் அபஸ்மாரன். அபஸ்மாரம் என்றால் மறதி, அறியாமை என்று பொருள். அந்த அறியாமையை ஒடுக்கி அண்ணாந்து பார்த்தால், அறிவின் மொத்த உருவமாகிய, உருவகமாகிய ஆண்டவன் தெரிவார்.

சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?’ என்று மகாகவி பாரதியார் எழுப்பிய கேள்வி எப்போதும் நம் மனத்தில், சிந்தனையில் எதிரொலிக்கட்டும். அந்த சுத்த அறிவு என்பது அனைத்திலும் இறைவன் இருப்பதை அறிந்துகொள்ளும் ஆத்ம ஞானமன்றி வேறில்லை. இதனை அறிந்தால்தான் மகாகவி கூறியபடி நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு என்பது நடைமுறை சாத்தியமாகும். அதுவரையில் கடவுள், நம்மிடம் இருக்கு ஆனா இல்லை.
    
   - பத்மன்