சனி, 26 செப்டம்பர், 2015

ஆய்வுக்கு அப்பாற்பட்டதா இடஒதுக்கீடு?

(நண்பர்களே, தினமணியில் இன்று (26.09.15) வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம் இது).

நேற்றுவரை உயிர்காக்கும் மருந்தாக மதிக்கப்பட்ட ஒரு பொருள், இன்று பக்கவிளைவைக் கொடுக்கும் என்பது மறுஆய்வின் மூலம் கண்டறியப்படும்போது அதனைக் கைவிடுகிறோம், இல்லேயைல் பக்கவிளைவைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் தன்மையை மாற்ற முனைகிறோம். இது மருத்துவம் சார்ந்த அறிவியல் யதார்த்தம். இத்தனை ஆண்டுகளாக அந்த மருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றியதன் காரணமாக, அதனை மறுஆய்வே செய்யாமல் காலாகாலத்துக்கும் தொடர வேண்டும் என்று யாரும் வாதிடுவதில்லை. அப்படி வாதிடுவது அறிவுடையோர் செயலும் ஆகாது என்பதை அனைவரும் ஏற்பர்.
ஆனால், நம் நாட்டின் சமூகக் கொடுமைக்கு மருந்தாய் அமைந்த இடஒதுக்கீடு  மட்டும் மறுஆய்வே செய்யாமல் தொடர வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம் இடஒதுக்கீட்டின் பலன் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குச் சரிவர கிடைத்திருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்காமல், யார்யாரோ அதற்கு அடாவடியாகப் பங்கு கேட்கும் அசாதாரண சூழ்நிலை தோன்றியதன் காரணமாக, இடஒதுக்கீடு முறையை அது எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். இது ஏதோ தெய்வக் குத்தம் என்பதைப்போல் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஏன் சாமியாடத் தொடங்கிவிட்டார்கள்.
இடஒதுக்கீடு என்ன சங்கப் பலகையா, புதிது புதிதாக ஆட்கள் அமர அமர நீண்டுகொண்டே போவதற்கு? இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகக்கூடாது என்பது அரசியல் சாசன விதிமுறை. இதனை விஞ்சி தமிழகம் போன்ற மாநிலங்களில் 69 சதவீதம் வரை கொடுக்கப்படும்போது ஒவ்வோர் ஆண்டும் அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகி சிறப்பு அனுமதி பெற வேண்டியிருக்கிறது. இன்னும்கூட பல ஜாதியினர் தங்களுககும் இடஒதுக்கீட்டின் பலன் கி்டைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இத்தகு கோரிக்கை எழுப்பும் போராட்டம், தென் மாநிலங்களைத் தாண்டி, வட மாநிலங்களிலும் தற்போது பரவத் தொடங்கிவிட்டது. அங்கு சற்று உக்கிரமாகவே அப் போராட்டம் வெடித்துள்ளது. முதலில் ராஜஸ்தான் மாநிலத்தின் நிலச்சுவான்தார்களாகவும் ஆதிக்க சாதியாகவும் இருக்கும் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி மறியல்களையும் மகா பஞ்சாயத்துகளையும் நடத்தினர். அதைவிட ஒருபடி மேலே போய், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் ஹார்திக் படேல் என்ற 22 வயது இளைஞரின் தலைமையில் திரண்டெழுந்து இடஒதுக்கீடு போராட்டத்துக்காக லட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து, அதனைத் தொடர்ந்து போலீஸாரின் துப்பாக்கியும் வெடித்ததில் 9 மனித உயிர்கள் பலி வாங்கப்பட்டன.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீடு முறை குறித்து சமூக நோக்கில் மறுஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார். உடனே, சமூகநீதிக் காவலர்கள் எனறு கூறிக்கொள்ளும் ஜாதிக் கட்சியினர் கொதித்து எழுந்துவிட்டனர். "மோகன் பாகவத் தான் பாஜகவின் உச்ச நீதிமன்றம், அவர் சொல்வதைத்தான் பிரதமர் மோடி கேட்பார், இடஒதுக்கீட்டுக்கு இனி மூடுவிழாதான்" என்பதைப்போல் வசவு மழைகளைப் பொழியத் தொடங்கிவிட்டனர். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றா மோகன் பாகவத் கூறினார்? மறுஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றுதானே கூறினார். அதற்குள் இவர்களாகவே தீர்ப்பு எழுதி விடுகிறார்களே!
சரி, மோகன் பாகவத் தான் இந்தக் கருத்தை முதன்முறையாகக் கூறியிருக்கிறாரா? 

இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்ததுடன், அதனை அரசியல் சாசனத்திலும் இடம்பெறச் செய்த சட்ட மேதையும், அரசியல் சாசன சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரும் அல்லவா இதனைக் கூறியிருக்கிறார். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் (40 ஆண்டுகள் கழித்து) இடஒதுக்கீட்டின் பலன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு முறையாகப் போய் சேர்ந்திருக்கிறதா, இதனால் அவர்கள் பலன் அடைந்திருக்கிறார்களா என்பதை மறு ஆய்வு செய்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதானே பாபா சாகேப் பகர்ந்தார். ஆனால், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினரை நேரடியாக அழுத்தும் ஆதிக்க சாதியினரே பிற்காலத்தில் தங்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்று கேட்டு அதனைப் பெறுவார்கள், மேலும் மேலும் பெறுவதற்காகப் போராட்டம் நடத்துவார்கள் என்பதை அவர் அப்போது அறிந்திருப்பாரா? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கிறார்கள், அவர்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்பது நியாயம்தான். அதே நியாயம், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும், முதல் தலைமுறை பட்டப் படிப்பில் நுழையும் உயர் ஜாதியினருக்கும் பொருந்தாதா?
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், பிராமணர் போன்ற ஒருசில உயர் ஜாதியினரைத் தவிர, பிற உயர் ஜாதி, நடு ஜாதியினர்கள் ஏதோ ஒரு உப ஜாதியைக் கூறி மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட என்ற ஜாதிச் சான்றிதழைப் பெற்று இடஒதுக்கீட்டுச் சலுகைக்கான போட்டி்யில் இறங்குகிறார்கள். அதிலும் வேதனை என்னவென்றால், தாழ்த்தப்பட்ட (தலித்), பழங்குடியின வகுப்பினரிலேகூட இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற்று முன்னுக்கு வந்தவர்களின் வாரிசுகள்தான், பெரும்பாலும் வாழையடி வாழையாக அதனை அனுபவிக்கின்றனர். அந்த ஜாதியினரில் இதுவரை இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்காதவர்களுக்கு முன்னுரிமை தருவதில்லை. இதற்காகத்தான் கிரீமி லேயர் என்ற வரைமுறை வேண்டும் என்ற கோரி்ககை எழுந்தபோது, அது ஏதோ கிருமி என்பதைப்போல துரத்தி அடித்தனர் சமூகநீதிக் காவலர்கள்.
ஆனால், இடஒதுக்கீட்டின் பலன், அதற்கு உரிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஜாதியினரில் அனைத்துப் பேருக்கும் சென்றடைய வேண்டும் என்ற தனது லட்சியம், அலட்சியம் செய்யப்படுவதை நினைத்து அண்ணல் அம்பேத்கரே வருத்தப்பட்டிருக்கிறார். இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட மனிதனுக்குத் தருவது அல்ல, அவர் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் பிரதிநிதியாகச் செயல்படக் கொடுக்கப்படும் அங்கீகாரமே அது என்பது அம்பேத்கரின் கருத்து. அந்த வகையில் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கத் தொடங்கும், தலித் உள்ளிட்ட சமூ்கத்தினர், சங்கிலித் தொடர்போல தமது சமூகத்தின் கடையனுக்கும் கடைத்தேற்றம் கிடைக்க உதவுவார்கள் என்பது அண்ணலின் எதிர்பார்ப்பு. ஆனால் நடந்தது என்ன
ஜாதிகளின் ஒழிப்பு (அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்ஸ்) என்ற நூலில் தனது வேதனையை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:
"நமது படித்த இளைஞர்கள் எப்போதுமே நமது சமூகத்தைவிட்டு பறந்து சென்றுவிடத் துடிக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர் உயர்கிறாரோ, அந்த அளவுக்கு சமூகத்தைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறார். தனது ஜாதியை மறைத்துக்கொண்டு, ஆதிக்க சக்திகளுடன் கைகோக்க முனைகிறார். சமுதாயத்தில் தமக்கு என்ன இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்ப்பதில்லை. பிறப்பில் தொடங்கி இறப்பு வரை ஜாதி தொடர்கிறது. இதனை நமது மக்கள் மறந்துவிடுகிறார்கள். 
நமது படித்த இளைஞர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி கிடைத்தவுடன் அவர்கள் நமது சமூகத்துக்கு சேவை செய்வார்கள் என்றுதான் நான் கருதினேன். ஆனால் படித்து முடித்துவிட்டு குமாஸ்தாக்கள் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் நமது சமூகத்தினர், தங்கள் வயிற்றை நிரப்புவதில்தான் குறியாக இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். 
இந்த நிலையை, அம்பேதகருக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாகக் கூறியிருக்கிறார் நமது மகாகவி சுப்ரமண்ய பாரதியார். 'ஆறில் ஒரு பங்கு' என்ற அவரது புதினத்தில் வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படித்த இளைஞனாகிய கதாநாயகன், தனது ஜாதியை மறைத்து பொய் சொல்லி கதாநாயகியோடு பழகுவார். அதனைத் தெரி்ந்துகொள்ளும் கதாநாயகி, "உனது ஜாதி குறித்து உனக்கே ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை, வெளிப்படையாக அதனைக் கூறி, சொந்த சமூகத்தின் நலனுக்காக நீ ஏன் பாடுபடவில்லை" என்று கேள்விக்கணைகளால் துளைப்பாள்.
ஆக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் கடைக்கோடிப் பேருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்றுசேரவில்லை என்பதே இன்றளவிலும் யதார்த்த உண்மை. இவ்வாறு செல்லவிடாமல், அந்த ஜாதியினரில் முன்னேறிய ஒரு சிலரே தடைக்கல்லாக விளங்குகின்றனர் என்பதும் பூசி மெழுகாமல் ஏற்கக் கூடிய உண்மையே.
அங்கே நிலைமை இப்படியிருக்க, ஜாட், படேல் போன்ற ஆதிக்க ஜாதியினரும் இடஒதுக்கீடு கேட்டுப் பெற்றால், அது சமூக அநீதி அல்லவா அதிலு் படேல் ஜாதி போராட்டக்காரர்கள் எனன கூறுகிறார்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லையென்றால் வங்கிக் கணக்குகளில் உள்ள முதலீடுகள் திருப்பி எடுக்கப்படும் என்கிறார்கள். எடுக்கவும் தொடங்கிவிட்டார். மாநிலத்தின் பொருளாதார நிலையையே தங்களால் அசைத்துவிட முடியும் என்று கூறும் ஜாதியினருக்கு எதற்கு இடஒதுக்கீடு
இத்தகு சூழ்நிலையில் இடஒதுக்கீட்டின் பலன்கள் உண்மையிலேயே அது சென்று சேர வேண்டியவர்களுக்குச் சென்றிருக்கிறதா, இன்னும் எத்தனைக் காலத்துக்கு இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்,  வேறு எந்தப் பிரிவினராவது இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கத் தக்கவர்களா என்பதையெல்லாம் மறுஆய்வு செய்து பார்ப்பதே சிறந்தது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து தைரியமான முடிவை எடு்ககாமல் சமூக நீதிக் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கட்சியினரைப் போல, வாக்கு வங்கியைக் கருதி விலகி ஓடுவது ஏன்?
- பத்மன்