வெள்ளி, 31 மே, 2013

மனிதம் வாழ்வின் புனிதம்



(நண்பர்களே! நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் தங்களுடன் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

உங்களுக்காக ஒரு கவிதைக் கதை இதோ...)

நெடுஞ்சாலையில் விரைந்த வாகனம் மோதி
முகந்தெரியாத ஒருவன் மரண விளிம்பில்
அடடா! என்றுகூறியபடி கடந்துசென்றனர் பலர்
போயிருச்சா? என்றுகேட்டபடி சூழ்ந்துநின்றனர் சிலர்.



தூரத்தில் தொப்பித்தலைகளைப் பார்த்ததும் கூட்டம் கலைந்தது
கீழே விழுந்தவனின் உடல் ரத்தவெள்ளத்தில் துடித்தது
அருகேவந்த காக்கிச்சட்டை அக்கம்பக்கம் பார்த்தது
கூடவந்தவர்களிடம் சொன்னது:
"நம்ம ஏரியா ஒரு முழத்துக்கு முன்னாலேயே முடிஞ்சுபோச்சு."

தபதபவென ஒரு கூட்டம் ஓடிவந்தது
"எங்க ஏரியா தலைவர் மகனை எந்த நாய்டா அடிச்சுப்போட்டது?"
கேள்விகளுடன் சோடா பாட்டில்களும் பறந்தன
படபடவெனக் கடைகளின் கதவுகள் மூடிக்கொண்டன.



ஏரியா மாறிவந்த காக்கிச்சட்டைகள்
எப்போதோ காணாமல் போயிருந்தன
கல்வீச்சில் சிலருக்கு மண்டை உடைந்தது
போக்குவரத்து ஒருமணி நேரம் ஸ்தம்பித்தது.

இவற்றையெல்லாம் காணச் சகிக்காமலோ கண்ட திருப்தியிலோ
விழுந்து கிடந்தவனின் மூச்சு விடைபெற்றது.



மனிதம் வாழ்வின் புனிதம்தான்
அதனால்தான் நாம் அதனைப் போற்றுகிறோம்,
பின்பற்றுவதில்லை.

     - பத்மன்