ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நடைமுறை மனிதர்கள்


 

எங்கள் பரந்த மனப்பான்மை பகைமை
நாங்கள் பரப்புவது பரஸ்பரம் சந்தேகம்
எங்கள் ஒற்றுமை இனவேற்றுமை
எங்கள் பொதுநோக்கம் சுயநலம்.




எரிந்த கரியினுள் 
செறிந்த நெருப்பாய்
நாங்கள் நீட்டும்
நேசக் கரங்களினுள்ளும்
நாச நரம்புகள்.


நாங்கள் கண்டுபிடித்த 
அமைதிச் சாதனம்
அணுகுண்டு ஆயுதம்
இதற்கொரு முழுவாய்ப்பளித்தால்
இனியொரு பிரச்சனையில்லை
எங்கும் அமைதிதான்.... 
மரண அமைதி.



எங்களுக்குப் பிடித்தவை
மதபோதைகள்தான்,
மதபோதனைகள் அல்ல.

எனவேதான் நாங்கள்
கடவுளுக்குக் கட்சிகட்டி,
மனிதனுக்குப் பாடைகட்டுகிறோம்.

                              - பத்மன்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

முடியாத முடிவு



இந்த உலகம்
ஒன்றுமில்லாத ஒன்று
என்பதில் எனக்குத்
தெளிவான குழப்பம்.

உறுதியான சஞ்சலத்துடன்
அடைய விழைகிறேன்
இல்லாத இருப்பை.



அறியவொண்ணா அறிவைப்
பெறக் காண்பேனோ
காணவியலாக் காட்சியை?

பேசாத மொழியிலும்
ஓசையிலா இசையிலும் அது
உறைவதாக உணர்த்தப்படுகிறேன்.


தொடக்கத்தின் முடிவு
மரணத்தில் மறுவாழ்வா?
ஜீவிதத்தில் சமாதியா?

சந்தேகமான நம்பிக்கையுடன்
இணக்கமான முரண்.



-    பத்மன்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

புலாலும் ஆரியமும்



முகநூல் (பேஸ்புக்) இணையதளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு, ஆட்டை வெட்டித் தின்னலாமா? என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா? என்று அங்கலாய்த்திருந்தார். இந்தப் பதிலுரையில்  பொதிந்துள்ள சித்தாந்த, இனவாதக் குழப்பத்தைப் போக்கி, தெளிவுபடுத்தும் முகமாக, மயக்கம் அறுக்கும் மறுமொழியாக இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளேன்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும் தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?


ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா? இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?


“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆராத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?


சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமாக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைபிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர்காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?


அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.


இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)


ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)


ஆர்ய என்பது இனம் அல்ல, அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அவரால் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல்  சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)


தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப் படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி - கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் கட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?


இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.


வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே, அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.


மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, அனைத்துப் பிராமணர்களும் வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாச்சார மாண்புகளையும், முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).


ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.


முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம்.
-    பத்மன்


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்



(சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவையொட்டித்  தொடங்கப்பட்டுள்ள “விவேகானந்தம் 150” என்னும் தனிச்சிறப்பு இணையதளத்தில் இதே தலைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரையை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன். எனது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்களை "விவேகானந்தம் 150" இணையதளத்தைப் பார்த்துப் பயன்பெறுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.)


ஓர் அருள் பேரலை, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் இருந்து எழுந்து, அமெரிக்காவில் பொங்கிப் பிரவாகித்து, பார் முழுதும் பயன்பெறும் வகையில் பாய்ந்தோடியது. அந்த அருள் வெள்ளம் இன்றளவும், என்றளவும் வற்றாத ஜீவநதி. வங்கத்தில் தோன்றிய அந்த வெள்ளப் பெருக்கால், பாரதத்தில் இன்னமும் வேதாந்த ஞானம், ஹிந்து மதாபிமானம், மனிதாபிமானம், தேசப்பற்று, சமுதாயத் தொண்டு, சமூகச் சீர்திருத்தம், ஒற்றுமை உணர்வு, உலக சகோதரத்துவம் ஆகிய பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. அந்த அருள் பேரலைதான் சுவாமி விவேகானந்தர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


அந்த அருள்ஞானப் பேரொளியை, இளஞ்சிங்கத் துறவியைப் பெற்றெடுத்தது வேண்டுமானால் வங்காளமாக இருக்கலாம், கண்டெடுத்தது நமது தங்கத் தமிழகம்தான். சுவாமி விவேகானந்தர் என்ற ஞானப் பொக்கிஷத்தின் மாண்பை உணர்ந்து உலகுக்கு முதன்முதலில் உரைத்தது மட்டுமின்றி, அவர் தமது ஞானப் பெட்டகத்தைத் திறந்து உலகுக்கு எடுத்து உரைக்கவும் உதவியது நமது தமிழகமே.

சிகாகோ சர்வ சமய மாநாடு 
சுவாமிஜி ஒரே நாளில் உலகப் புகழ் பெறவும், உலகில் பாரதம் மற்றும் ஹிந்து மதத்தின் பெருமை உணரப்பட்டு புகழ் பரவவும் காரணமாக அமைந்த, 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் (சர்வ சமய மாநாட்டில்) அவர் பங்கேற்க வழிவகை செய்து உறுதுணை புரிந்தது, தமிழகத்தின் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதிதான். அந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல, சுவாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் நமது தமிழகமே நிழலாய் நிற்கிறது.


சுவாமிஜி, தமது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், பரிவ்ராஜகராக கடந்த 1888 முதல் 1892 முற்பாதி வரை வாராணசி (காசி) தொடங்கி, வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார். ஆயினும், 1892 இறுதியில் தமிழகத்தில் சுவாமிஜி பாதம் பதித்த போதுதான், அவரது வாழ்வில் புதிய திருப்புமுனை நேரிட்டது. பாழ்பட்டு நின்றிருந்த பாரதத்தின் வாழ்விலும் பொற்கால விடியல் புலப்பட்டது.

1892 டிசம்பர் மாதம், பாரதத்தின் கடைக்கோடிப் பகுதியான கன்யாகுமரியில் சுவாமி விவேகானந்தர் காலடி எடுத்து வைத்தார். அதுவரை உலக நாடுகளின் மிதியடியாய் கிடந்த பாரதம், உலகின் மணிமகுடம் என்பதை உணர்த்துவதற்கான விதை அங்கேதான் ஊன்றப்பட்டது.


கன்யாகுமரி கடலின் நடுவே, பகவதி அம்மன் குமரி வடிவில் தவம் புரிந்த பாறையொன்றில், சுவாமி விவேகானந்தர் அன்னையின் அருளோடு மூன்று நாள் தவமிருந்தார். (1892 டிசம்பர் 25,26,27). இங்கேதான் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார முன்னேற்றத்திலும் இந்தியர்களைத் தட்டியெழுப்பி, மீண்டும் முந்தைய மகோன்னத நிலைக்கு உயர்த்தத் தாம் பாடுபட வேண்டும் என்ற கைவல்ய ஞானத்தை சுவாமிஜி பெற்றார். இதுதான் சுவாமிஜியின் கன்யாகுமரி பிரதிக்ஞை எனப் புகழ்பெற்றது. (இந்த உலகப் புகழ் பெற்ற பாறையில் தான் 1970-ல் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எழுந்தது.)

மன்னர் பாஸ்கர சேதுபதி 
இந்த உறுதி வந்தபின்னர், அதற்கான உத்வேகம் சுவாமிஜியின் மதுரைப் பயணத்தின்போது கிடைத்தது. அங்கே ராமநாதபுரம் மன்னர் அரண்மனையில் மன்னர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தபோது, சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி பங்கேற்று உரை நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திய மன்னர், அதற்கான அறிமுகக் கடிதத்தையும் தந்தார். அதன்படி அமெரிக்கா சென்று உரையாற்றி, அந்தப் புகழோடு மேலை நாடுகளை வலம்வந்து, உலகைக் கவர்ந்த ஒப்பற்ற துறவியாய் 1897-ல் தாய் நாடு திரும்பிய சுவாமிஜிக்கு பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, கும்பகோணம், சென்னை என தமிழகத்தில்தான் நாட்டிலேயே முதன்முறையாக வரவேற்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்)
சமயம் மற்றும் சமூகத் தொண்டு ஆற்றுவதற்கான ராமகிருஷ்ண மிஷன் எனப்படும் ராமகிருஷ்ண அறக்கட்டளை அமைப்பை நிறுவ வேண்டும் என்ற சுவாமிஜியின் எண்ணத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதும் தமிழகம்தான். 1897-ல் சுவாமிஜி நாடு திரும்பியபோது சென்னையில் பிலிகிரி ஐயங்கார் என்பவருக்குச் சொந்தமான ஐஸ் ஹவுஸ் எனப்படும் கெர்னான் கோட்டையில் பிப்ரவரி முதல் 14-ம் தேதி வரை ஒன்பது தினங்கள் தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு இடங்களில் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அப்போது சுவாமிஜியின் தமிழக சீடர்களும், அன்பர்களும் ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர். கொல்கத்தா சென்றதும் இதற்கு வழி செய்வதாகக் கூறிய சுவாமிஜி அப்படியே செய்தார்.

1897 மார்ச் மாதத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அன்புக்குரிய சீடரும், சகோதரத் துறவியுமான சசி எனப்படும் ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பினார் சுவாமிஜி. பிலிகிரி ஐயங்காரின் ஐஸ் ஹவுஸ் கட்டடத்திலேயே தென்னிந்தியாவின் முதல் ராமகிருஷ்ண மடம் ஸ்தாபிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பேலூர் (கொல்கத்தா) மடத்தைத் தவிர்த்து, முதன்முறையாக அமைக்கப்பட்ட ராமகிருஷ்ண மடம் இதுதான். 

சென்னை  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் 
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் 1886-ல் பேலூர் மடத்தை சுவாமிஜி உருவாக்கியபோதிலும், சென்னை மடத்துக்குப் பின்னர்தான் அது புனரமைக்கப்பட்டது, ராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் நிறுவப்பட்டது. 1907-க்குப் பிறகு ,மயிலாப்பூர் பகுதிக்கு ராமகிருஷ்ண மடம் இடம் மாறியது. தற்போது ஐஸ் ஹவுஸ் கட்டடம், தமிழக அரசின் ஆதரவோடு விவேகானந்தர் இல்லம் ஆகப் பரிமளிக்கிறது.


சுவாமிஜியின் லட்சியங்களான வேதாந்த ஞானம், சமூகத் தொண்டு ஆகிய கருத்துகளைப் பரப்புவதற்காக முதன்முறையாகப் பத்திரிகைகள் தோன்றியதும் தமிழகத்தில்தான். சுவாமி விவேகானந்தர் மீது அபிமானம் கொண்ட தமிழர்களான அளசிங்கப் பெருமாள், ஜி. வெங்கடரங்கா ராவ், எம்.சி. நஞ்சுண்ட ராவ் ஆகியோர் 1895 செப்டம்பர் மாதத்தில் “பிரம்மவாதின்” என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். 14 ஆண்டுகள் வெளிவந்த இந்த ஆன்மிக, கலாசாரப் பத்திரிகை 1909-ல் அளசிங்கப் பெருமாளின் மரணத்தோடு நின்றுபோனது. எனினும், இந்தப் பத்திரிகையை சென்னை ராமகிருஷ்ண மடமே ஏற்று, 1914 முதல் “வேதாந்த கேசரி” என்ற பெயரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

பிரபுத்த பாரத பழைய இதழ் 

சுவாமிஜியின் பரிபூர்ண ஆசியோடு தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய  இதழ் “பிரபுத்த பாரத”. விழிப்படைந்த பாரதம் என்ற பொருள் பொதிந்த இந்தப் பெயரைச் சூட்டியதே சுவாமிஜிதான். 115 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஆங்கிலப் பத்திரிகையை, கடந்த 1896- ஜூலையில் சுவாமிஜியின் தமிழகச் சீடர்களான எழுத்தாளர் பி.ஆர். ராஜம் ஐயர் (தமிழின் இரண்டாவது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர்), பி. அய்யாசாமி, ஜி.ஜி. நரசிம்மாசார்யா, பி.வி. காமேஸ்வர ஐயர் ஆகியோர் சென்னையில் தொடங்கினர். 24 வயதே நிரம்பிய பி.ஆர். ராஜம் ஐயர் இதன் முதலாவது ஆசிரியராகப் பொறுப்பேற்று திறம்பட நடத்திவந்த நிலையில், இரண்டாண்டுகளில் திடீரென இறந்துவிடவே, பின்னர் அல்மோராவுக்கு பத்திரிகை அலுவலகம் இடம் மாறியது.
பி.ஆர். ராஜம் ஐயர் 
தமது தமிழ்ச் சீடர்கள் “பிரபுத்த பாரத” என்ற பெயரில் தொடங்கிய, ராமகிருஷ்ண இயக்கத்தின் இந்த ஆங்கிலப் பத்திரிகை மீது சுவாமிஜி மிகுந்த ஆர்வமும், அபிமானமும் கொண்டிருந்தார். இதனை சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி நிவேதிதா இவ்விதம் கூறியுள்ளார்: “சுவாமிஜி இந்தப் பத்திரிகை மீது தனி அன்பு கொண்டிருந்தார். இப்பத்திரிகைக்கு அவர் சூட்டிய பெயரே இதற்குச் சான்று. தமது அமைப்புகள் மீது அவருக்கு தணியாத ஆர்வம் உண்டு. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் இந்தப் பத்திரிகையின் பங்கு சுவாமிஜிக்கு ஓர் ஆதாரமாக அமைந்தது. தமது குருநாதரின் கருத்துகள் பிரச்சாரங்களின் மூலமும், பணிகளின் மூலமும் கொண்டு செல்லப்படுவதைப்போல இதுபோன்ற பத்திரிகைகள் மூலமும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என சுவாமிஜி விரும்பினார்.” இந்த பிரபுத்த பாரத பத்திரிகையில், “To the Awakened India” (விழிப்படைந்த பாரதத்திற்கு) என்ற தலைப்பில் கவிதை ஒன்றையும் சுவாமி விவேகானந்தர் எழுதியுள்ளார்.


சுவாமி விவேகானந்தரின் காலத்திலேயே, அவரது ஆங்கிலச்  சொற்பொழிவுகளைத் தொகுத்து முதன்முறையாக இந்திய மொழி ஒன்றில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமையும் தமிழுக்கே உரியது. இவ்விஷயத்தில் வங்கத்தையும் விஞ்சிவிட்டது தமிழகம். தமிழகத்தில் வெளிவந்த மிகச் சிறந்த தேசபக்திப் பத்திரிகைகளில் ஒன்றான லோகோபகாரியின் ஆசிரியராகச் செயல்பட்டவர் வி. நடராஜ ஐயர். இவர் கடந்த 1898-ல் சுவாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் திரட்டி, தமிழில் மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ‘ஞானத் திரட்டு’ என்னும் பெயர்கொண்ட இந்த நூலின் முதல் தொகுதியை சுவாமிஜிக்கே அனுப்பினார், நடராஜ ஐயர். அதனைப் பெற்றுக்கொண்டு சுவாமிஜி டார்ஜிலிங்கில் இருந்து 1898 ஏப்ரல் 15-ம் தேதி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் இதோ:


“அன்புடையீர்! உங்கள் ஏழாம் தேதி கடிதமும், எனது சொற்பொழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்களது பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துகளை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்யவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்ற வழி அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

சுவாமிஜியைப் பெருமைப்படுத்துவதில் தமிழர்களின் முதன்மை இதனோடு நின்றுவிடவில்லை. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே அவரது பெயரில் முதன்முதலாக சங்கம் அமைத்ததும் தமிழகம்தான். அதிலும் ஒரு புதுமை. பொய்யான பகுத்தறிவுக்கும், போலி சீர்திருத்தவாதிகளின் கருத்துகளுக்கும் மயங்கிக் கிடந்த ஒரு தன்மானத் தமிழர்தான், சுவாமி விவேகானந்தரின் உண்மைப் பகுத்தறிவையும், சத்தியமான சீர்திருத்தங்களையும் உணர்ந்துகொண்டு, அவருக்கு  முதல் சங்கத்தை நிறுவினார்.

சென்னையில் சீடர்களுடன் சுவாமிஜி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி நாயுடு. சுயமரியாதை இயக்கத்தில் சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்த இவர், சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தையும், சுவாமிஜியின் கம்பீரமான படத்தையும் காண நேர்ந்ததால் ஞானக்கண் திறக்கப் பெற்றார். சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்புவதையே தனது நோக்கமாக வரித்துக்கொண்ட இவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. சுவாமிஜியின் பேச்சுகளை எல்லாம் மனப்பாடம் செய்துகொண்டு, பின்னர் அவரைப் போலவே வேடமணிந்துகொண்டு, மேடைகளில் ஏறி வீர முழக்கமிடுவார் வெங்கடசாமி நாயுடு. இறுதியில், இவ்வாறு சுவாமிஜி அமெரிக்காவில் பேசினார் என்று கூறி முடிப்பார்.

அமெரிக்காவில் சீடர்களுடன் சுவாமிஜி 
அத்தகு விவேகானந்த அபிமானியான வெங்கடசாமி நாயுடு, சுவாமிஜியைப் போலவே ஏழைகளுக்காகத் துயருற்று, அவர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்துவந்தார். இந்த நோக்கத்திற்காகவே “விவேகானந்த வேதாந்த சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார். சுவாமிஜி காலத்தில் அவரது பெயரிலேயே தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுதான் என்பதற்கு, சுவாமிஜி எழுதிய கடிதமே சான்று. தமது பெயரில் தொடங்கப்பட்ட சங்கம் என்பதால், பெறுனர் பகுதியில் சங்கத்தின் முழுப்பெயரைப் போடாமல், சற்று கூச்சத்துடன், Viv. Society  என்றே சுருக்கமாகக் குறிப்பிட்டு, கலிபோர்னியாவில் இருந்து சுவாமிஜி 1900-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி எழுதிய கடிதம் இதோ:


“அன்புடையீர்! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல்வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிவாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துகள். இறைவனில் என்றும் உங்கள் விவேகானந்த.” (இந்த வேங்கடசாமி நாயுடு, பின்னாளில் நாட்டறம்பள்ளியில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை அமைவதற்கும் உறுதுணையாக இருந்தார்.)


சுவாமிஜியைக் கொண்டாடுவதில் அக்காலத்திலிருந்தே தமிழகம்தான் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. அவரது 150-வது ஜெயந்திக் கொண்டாட்டத்திலும் முதன்மை வகித்து, பல புதுமைகளைத் தமிழர்களாகிய நாம் படைப்போம். சுவாமிஜியின் லட்சியக் கனவாகிய, அனைத்துத் துறைகளிலும் உலகின் குருவாய் பாரதம் ஆகிட தமிழர்களாகிய நாம் தயாராவோம். மகாகவி பாரதியின் வாக்குப்படி, பாரதம் வையத் தலைமை கொள்ள, சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்பி, தமிழர்கள் வைரநெஞ்சுடன் தோள்கொடுப்போம்.

-          பத்மன்


வெள்ளி, 11 ஜனவரி, 2013

உண்மையான ஆண்கள் – சுவாமிஜியும், மகாகவியும்



(சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு இந்தக் கட்டுரை.)

சமீபத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஹிந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையில் (Taking the Aggression out of Masculinity by Sanjay Srivatsava, Anthropologist – Jan. 3) வெளியாகியுள்ள கருத்து, அபத்தத்தின் உச்சகட்டம். சுவாமிஜியின் ஆண்மைமிகு தோற்றம், இந்திய ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் அடையாளமாம். தேசியம் என்ற பெயரில் அது சகித்துக்கொள்ளப்பட்டதோடு, போற்றி வளர்க்கவும்பட்டதாம். கோணல் புத்தி என்பதற்கு நேர் எடுத்துக்காட்டு, இந்த வாதம்தான்.


ஆண்கள் தங்கள் சுயநலத்துக்காக வெளிவேஷத்தோடு காட்டும் பரிவு பெண்களுக்கு அவசியமில்லை என்றும், மாதர்குலம் தம்மைத்தாமே பலவீனர்கள் என்று நினைப்பதை விட்டொழித்து மன மற்றும் ஆன்ம பலத்தோடு உலக வாழ்க்கையை அணுகவேண்டும் என்றும் உண்மையான அக்கறையோடு உபதேசித்தவர் சுவாமிஜி. ஆனால் அரிதாரம் பூசிய போலிப் பெண்ணியவாதிகள் ஆண்மை என்றால் என்ன? பெண்மை என்றால் என்ன?  என்பதன் உள்ளர்த்தத்தை உணர்ந்துகொள்ளாமல் மனம்போன போக்கில் மண்வாரித் தூற்றுகிறார்கள்.

ஆண்மை என்பது ஆளும் திறன் - பிறரை மட்டுமல்ல, தன்னையும் அடக்கி ஆளும் திறன். அதேபோல் பெண்மை என்பது பேணும் கலை - தன்னை மட்டுமல்ல, பிறர் நலனையும் பேணும் கலை. ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் புதைந்து கிடக்கிறது. இதுதான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். நவீன விஞ்ஞான ஆய்வுக் கருத்துகளும், இந்தத் தத்துவத்தைத்தான் வேறு வார்த்தைகளில் மொழிகின்றன.


பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்றும், ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்றும் ஆனந்தக் கூத்தாடியவர் மகாகவி பாரதி. அவரே, பாஞ்சாலி சபதத்தில், துரியோதனன் அவையில் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை அவையோர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கையாலாகாத்தனத்தை எடுத்துரைக்க “சீச்சீ பெட்டைப் புலம்பல்” என்று கூறியிருக்கிறார். இதனால் பாரதியை ஆணாதிக்கவாதி என்று கூறிவிட முடியுமா?

தற்காலத்து பெண்ணியவாதிகள் அப்படித்தான் கூறுவார்கள் போலும். பெண்மையைப் போற்றிய பாரதி ஏன் ஆண்மையின் அடையாளமாக மிகப் பெரிய மீசை வைத்திருந்தார்? என்றுகூட கேள்வி கேட்பார்கள், இந்தப் போலிப்  பெண்ணுரிமைவாதிகள்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்” என்று தன்னையே பெண்ணாக பாவித்துக்கொண்டு, உண்மையான பெண் சுதந்திரம் போதித்தவர், மகாகவி பாரதி. அவர் இப்படிப்பட்ட பெண்கள் முன்னேற்றப் புரட்சிக்காரராக உருவானதற்கு ஒருவகையில் சுவாமிஜிதான் காரணம்.


1905-ல் வாராணசியில் (காசியில்) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற மஹாகவி பாரதி, டம்டம் நகரில், சுவாமிஜியின் சீடர் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார்.  அப்போது மனைவியை அழைத்துவரவில்லையா? என்று சகோதரி நிவேதிதா கேட்க, பெண்பிள்ளைகளை இதுபோல் அழைத்து வரும் வழக்கம் இல்லை என்று பதில் கூறியிருக்கிறார் பாரதி. அப்படியானால், நீங்கள் கேட்கும் தேச சுதந்திரம் எப்படிப் பூர்த்தியாகும்? என்று கேட்டார் சகோதரி நிவேதிதா. அப்போதுதான் மகாகவியின் ஞானக்கண் விழித்தது. சகோதரி நிவேதிதையை தனது ஆன்மீக குருவாக ஏற்றார் மகாகவி பாரதியார். அவரது பேச்சிலும், மூச்சிலும் தேச சுதந்திரத்தோடு, பெண் சுதந்திரமும் புகுந்து கொண்டது. அந்தவகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.

அப்பேர்பட்ட மகாகவி பாரதியார், “கற்பு நிலையெனச் சொல்லவந்தார் இருகட்சிக்கும் இஃதைப் பொதுவில் வைப்போம்” என்று போதித்தார். இதன் உட்பொருள், பெண்களுக்கு மட்டுமல்ல பிறன்மனை நோக்காப் பேராண்மை என்ற கற்பு ஆண்களுக்கும் அவசியம் என்பதுதான். தற்காலத்து போலிப் பெண்ணியவாதிகள் மறைமுகமாகத் தூண்டிவிடுவதுபோல், ஆண்களில் சிலர் (பலர்?) பேணாத கற்பு, பெண்களுக்கு எதற்கு என்பதல்ல!

-    - பத்மன்