செவ்வாய், 29 அக்டோபர், 2013

காங்கிரஸ் : “கை”விடப்பட வேண்டிய கட்சி


காங்கிரஸ் – ஒரு காலத்தில் விடுதலைக்காகப் போராடிய கட்சி. தற்காலத்தில், மக்கள் அதனிடமிருந்தே விடுதலை பெறுவதற்காக அல்லது அதற்கு விடைகொடுத்து அனுப்புவதற்காகப் போராட வேண்டிய நிலையை அந்தக் கட்சியே உருவாக்கிவிட்டது. காரணம், காந்திஜியின் அறிவுரையை அந்தக் கட்சி கேளாமல்போனதே!
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பல்வேறு அரசியல் அபிலாஷைகள், சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்களையும் அவர்களது தொண்டர்களையும் மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைத்த அமைப்புதான் காங்கிரஸ். வெள்ளையர் அரசாங்கத்துக்கு கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக ஒருசில இந்தியத் தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகத்தான் காங்கிரஸ் பிறப்பெடுத்தது. இருப்பினும் பிற்காலத்தில், ‘சுயராஜ்ஜியம் எங்களது பிறப்புரிமை’ என்று முழக்கமிட்ட லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றோரின் பரிச்சயத்தால் பரிபூரண சுதந்திரப் போராட்டத்துக்கான கருவியாக காங்கிரஸ் உருவெடுத்தது. திலகரின் திடீர் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற மகாத்மா காந்தியின் தலைமையின்கீழும் இந்த லட்சியம் தொய்வுறாமல் போராடியது.


காங்கிரஸின் லட்சியமாக வளர்த்தெடுக்கப்பட்ட தேச சுதந்திரம் கிடைத்த உடன், காந்திஜி சொன்ன முதல் வார்த்தை: ‘காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும்’ என்பதே. ஆனால், அரசியல் லாபத்துக்காக, காந்திஜியின் பிம்பத்தைப் பிடித்துக்கொண்ட நேரு உள்ளிட்ட இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு, காந்திஜியின் இந்தக் கருத்து பிடிக்காமல் போய்விட்டது. சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லிச் சொல்லி எளிதில் வாக்கு திரட்டக் கிடைக்கும் வாய்ப்பைத் தவிர்த்துவிட அவர்கள் தயாரில்லை, இன்றளவிலும்கூட. ஆனால், சுதந்திரம் என்ன கடைச் சரக்கா, அவர்கள் வாங்கித் தருவதற்கு?
நாட்டின் சுதந்திரம், அதற்காகப் போராடிய ஒவ்வோர் இந்தியனின் ரத்தத்திலும், வியர்வையிலும், தியாகத்திலும் கிடைத்த விழுமிய வெற்றி. இதனை ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? இதுபோன்ற அரசியல் அடாவடிகள் நடக்கும் என்று தெரிந்ததால்தான் காங்கிரஸை அன்றே கலைத்துவிடச் சொன்னார் காந்திஜி. ஆனால் காங்கிரஸைக் கலைக்காதது மட்டுமல்ல, தேர்தல் ஆதாயத்துக்காகப் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சியின் கொடியைக்கூட தேசியக் கொடியைப் போன்று அமைத்து வாக்காளர்களை வசீகரிக்கும் ஏமாற்று வித்தையை சுதந்திரம் கிடைத்த தருணத்திலேயே தொடங்கியது காங்கிரஸ் தலைமை. இன்றளவிலும் அதுபோன்ற ஏமாற்றுத் தந்திரங்கள் தொடர்கின்றன.
காந்திக்கும் கந்திக்கும் வித்தியாசம் தெரியவிடாமல் நேரு-இந்திரா பரம்பரையினர் தங்கள் பெயருக்குப் பின்னே போட்டுக்கொள்ளும் குடும்பப் பெயர் இதற்கோர் நல்ல உதாரணம். நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா பிரியதர்சினியின் காதல் கணவர் ஃபெரோஸ் கந்தி. அவர் ஒரு பார்ஸி. அந்தச் சமூகத்தினரின் வழக்கப்படி, ஃபெரோஸ் தனது பெயருக்குப் பின்னே கந்தி என்ற தமது குடும்பத்தாரின் தொழிலால் அணைந்த பெயரை, அதாவது ஊதுபத்தி விற்பனை செய்யும் நபர் (கந்தம் என்றால் நறுமணம் என்று பொருள்) என்பதைக் குறிக்கும் கந்தி என்ற பெயரை பின்னொட்டாக வைத்துக்கொண்டார்.
ஆனால், காந்திஜியின் செல்வாக்கு, பேரளவில் மட்டுமல்ல பெயர் அளவிலும் தமக்கே வர வேண்டும் என்ற நோக்கில் இந்திரா கந்தி, இந்திரா காந்தி என்றானார். அவரது வழித்தோன்றல்களும் காந்திகள் ஆனார்கள். ஆங்கிலத்தில் கந்திக்கும், காந்திக்கும் ஒரே மாதிரியான எழுத்துகள்தானே? ஆனால் உச்சரிப்பில்...உண்மையான காந்திக்கும் இந்தப் போலி காந்திகளுக்கும் எழுத்துகள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் குணாதிசயங்கள்? அந்தக் காந்தியின் வாரிசுகள் யாரும் அரசியலில் இல்லை. அவர்களது பெயர்கள்கூட பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால் இந்தப் போலி காந்திகளின் பிறவாத வாரிசுகள்கூட இந்தியாவின் அரியணைக்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள். இதில் ராகுலை இளவரசர் என்று மோடி விளித்தால், வருத்தம் வேறு.
அது இருக்கட்டும். நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 10 ஆண்டுகள் தவிர, ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த குத்தகையாய் மத்திய அரசை தம் வசம் வைத்திருக்கும் காங்கிரஸால் நாடு கண்ட பலன் என்ன?  மகத்தான வளங்களும், மனித ஆற்றலும் நிறைந்த இந்தியா, உலகில் சிறந்த நாடுகளின் வரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
சிறிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் மட்டுமல்ல, பெரிய நாடான சீனாவும்கூட நமக்கு எத்தனையோ படிகள் முன்னேறத்தில்தானே இருக்கின்றன? ஊழல் சாதனையில் வேண்டுமானால் இந்தியாவுக்கு முதல் வரிசை காத்திருக்கும். இதுதானே காங்கிரஸின் சாதனை!
பாட்டியும், தந்தையும் தீவிரவாதத்துக்கு இரையானதாக வேதனைப் பட்டிருக்கிறார் ராகுல். உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள்தான். ஆனால், அந்தத் தீவிரவாதம் வேர்விட யார் காரணம்? காலிஸ்தான் பிரிவினைவாதி பிந்திரன்வாலேயை வளர்த்தது யார்? பஞ்சாபில் அகாலிதளத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக அருமைப் பாட்டி இந்திரா தானே அந்தக் கொடுமையைச் செய்தார்? இலங்கைத் தமிழர் பிரச்சனையை சிக்கலாக்கியது யார்? அங்கே தீவிரவாதம் வளர பாட்டி காரணம் என்றால், திக்குத் தெரியாமல் அரசியல் செய்து நிலைமையை மேலும் மோசமாக்கியது ராகுலின் தந்தை ராஜீவ் அல்லவா? வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்க்க முடியுமா?
நாடு பிரிவினை ஆகாது என்று காந்திஜி கொடுத்த வாக்குப் பொய்த்துப்போனதற்கு யார் காரணம்? எனது பிணத்தின்மேல் தான் பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் என்று சொன்ன மகாத்மாவின் கண்ணெதிரிலேயே கண்ணீர் வழிய நாடு பிரிந்ததற்கு யார் காரணம்? நேருவின் சுயநல அரசியல்தானே?
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவதற்கு முகமது அலி ஜின்னாவுக்கு நேரு அன்றே நேராய் வழிவிட்டிருந்தால், அல்லது ஜின்னாவின்  ஆரோக்கியமான போட்டிக்கு வாய்ப்பளித்திருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காதே? ஹிந்துப் பெரும்பான்மை கொண்ட இந்தியாவுக்கு சிறுபான்மை முஸ்லிம் தலைவர் ஜின்னா பிரதமராகி உலகுக்கு ஒரு புதுமையைக் கொடுத்திருக்குமே!  
ஜின்னா தனி நாடு கேட்டது ஹிந்துக்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற காரணத்துக்காக அல்ல, அப்படியிருந்தால், பல பிரச்சனைகள் இருந்தாலும், இன்றைய இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வது எப்படி? உண்மையான காரணம், ஜின்னாவும் நேருவும் இணைந்துபோக முடியாது என்பதுதானே! அதற்காகத்தானே பிரிந்து கிடைக்கும் நிலத்துண்டத்திற்காவது, தான் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கில் ஜின்னா பாகப்பிரிவினை செய்து பாகிஸ்தானைப் பெற்றார்?
பிளவுபட்ட இந்தியாவிலாவது ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக இணைந்துவாழ காங்கிரஸார் விட்டார்களா? தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் அவர்களை தாஜா செய்யும் வாக்குவங்கி அரசியலை வளர்த்தது காங்கிரஸ் தலைவர்கள்தானே? ஹிந்துப் பெரும்பான்மையை காட்டி முஸ்லிம்களை அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சலுகைகளை வழங்குவதுபோல் போக்குக்காட்டி ஹிந்துக்கள் மத்தியில் எரிச்சலூட்டுவதும் காங்கிரஸ் கண்டுபிடித்த உத்தி அல்லவா?
அதுசரி, இன்று பாரதிய ஜனதாவுக்கு மதவாத முத்திரை குத்தி, அந்தக் கட்சிக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவளித்து விடக்கூடாது என்று மன்றாடும் காங்கிரஸின் அன்றைய நிலை என்ன? பிளவுபடாத இந்தியாவில் காங்கிரஸை முஸ்லிம் லீக்கினர் எப்படிக் கருதினர்? அழைத்தனர்? ‘ஹிந்துக்களின் கட்சி’ என்றுதானே! தங்களுக்கும் ஏற்புடைய கட்சி என்று காங்கிரஸை முஸ்லிம்கள் அனைவரும் மதித்திருந்தால் தனிநாடாய் பாகிஸ்தான் உருவாகி இருக்குமா?
பிரிட்டிஷ் அரசு, நாட்டைவிட்டுப் போகும்போது வெறும் பிரதேசங்களை மட்டும் காங்கிரஸிடம் விட்டுச் செல்வில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி, தங்கள் சுயநலத்துக்காக நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டுவது, மக்களுக்கு நன்மை செய்வதுபோல் பாசாங்கு காட்டி கொள்ளையடிப்பது, அரசியல் இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது, நியாயவாதிபோல் காட்டிக்கொண்டு அநியாயம் புரிவது, அரசியல் எதிரிகளை மிரட்டிப் பணியவைப்பது, மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலனுக்காகவே உழைப்பதுபோல் காட்டிக்கொள்வது ஆகிய பல்வேறு கல்யாண குணங்களையும் தானமாக அளித்துச் சென்றிருக்கிறது. அந்தக் குணங்கள் குறைவுபடாமல் மென்மேலும் வளர்த்து போஷித்து வருகிறது காங்கிரஸ்.
ராஜீவ் காலத்தில் சிலபல கோடிகள் லஞ்சம், ஊழல் என்று தகவல் அடிபட்டது. அதற்கே மக்கள் கொதித்துப் போனார்கள். ஆனால், ராஜீவின் மனைவியார் சோனியா ஆட்டிப்படைக்கும் மன்மோகன் சிங் பொம்மை அரசோ பல ஆயிரம் கோடிகளைக் கடந்து பல லட்சம் கோடிக்கணக்கில் ஊழலில் மகத்தான வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் மரத்துக் கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு ஊழலை, மனித வாழ்வின் சாதாரண அங்கமாக மாற்றிக் காட்டியிருக்கிறது இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
லாலு, கருணாநிதி, முலாயம், மாயாவதி ஆகியோருடனான காங்கிரஸின் ‘கூடிப் பிரியும் கூடாநட்பு’ கண்ணாமூச்சி ஆட்டம், ஊழல்களுக்குப் புதிய பரிமாணத்தையும்; சி.பி.ஐ., விசாரணைக் கமிஷன் போன்ற அமைப்புகளை பொம்மலாட்டம்போல் ஆடவைக்கும் புதிய இலக்கணத்தையும் அல்லவா படைத்துள்ளது? மேலும், ‘எதிர்த்துக்கொண்டே ஆதரிப்பது, ஆதரித்துக்கொண்டே எதிர்ப்பது’ என்ற அரும்பெரும் அரசியல் சூத்திரத்தையும் அல்லவா அருட்கொடையாக அளித்திருக்கிறது?
கர்மவீரர் காமராஜரை எதிர்த்து ‘இந்திரா காங்கிரஸ்’ என்று தன் பெயரிலேயே இந்திரா கந்தி, தனிக் கட்சி கண்டபோதே, கொஞ்சநஞ்சம் மீதமிருந்த உண்மையான காங்கிரஸும் முழுமையாக உயிரிழந்துவிட்டது. இப்போது இருப்பது சோனியா காங்கிரஸ். இந்த காங்கிரஸால் நாடு சோனியாவதை எத்தனை நாள்தான் தாங்குவது? வருகின்ற தேர்தல் அதற்கு முடிவுரை ஆகட்டும்.
தற்கால காங்கிரஸின் தேர்தல் சின்னம் ‘கை’. அம்மன் கை காட்டினால் ‘அபயம்’ என்று பொருள். ஆனால் இந்திரா, சோனியா அன்னையர்கள் காட்டும் கையோ ‘ஆ! பயம்’ என்று அலற வைக்கின்றன. கை காட்டுவதற்கு மற்றுமொரு பொருள் ‘போதும்’ என்பது. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு, ‘நீங்கள் இதுவரை ஆண்டது போதும்’ என்று சொல்லி வாக்காளர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் விடை கொடுக்க வேண்டும். இல்லையேல், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண முடியாது.
-    பத்மன்