செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தவளை வாயா? தந்திர வலையா?




தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறிய கருத்தும் அந்த வகையைச் சேர்ந்ததாய் விமர்சிக்கப்படுகிறது. “வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது, மூன்றாவது கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமர் ஆவார்” என அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்ற அத்வானி, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று கூறியது மிகப் பெரிய சர்ச்சையையும், அத்வானிக்கு மிகப் பெரிய இழப்பையும் ஏற்படுத்தியது. எனினும் அத்வானி சொன்னது உண்மைதான். ஜின்னா அடிப்படையில், மத அடிப்படைவாதி அல்லர், சமயச் சார்பற்றவர்தான். ஆனால், சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேருதான் வருவார் என்பதை சரியாக கணித்த அவர், தான் பிரதமர் ஆவதற்காக முஸ்லிம்களை மத ரீதியில் ஒன்றுதிரட்டி பாகிஸ்தான் என்னும் தனிநாட்டை உருவாக்கினார்.


மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என்பது தவறு, ஜின்னாவை பாகிஸ்தானின் தந்தை என்பது பொருந்தும். ஏனெனில், பாரதம் எனப்படும் இந்தியா, பன்னெடுங்காலமாக உள்ள பழம்பெரும் நாடு. ஆனால், இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிளந்து பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பெற்றுத் தந்ததால், ஜின்னாவை பாகிஸ்தானின் தந்தை என்று அழைப்பதில் தவறில்லை.

முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை ஏற்படுத்தியபோதிலும் அதனை இந்தியாவைப்போல் மதச்சார்பற்ற நாடாக வைத்திருப்பதே ஜின்னாவின் கனவு. அது அவரது வாழ்நாளிலேயே சிதைந்தது. ஜின்னாவின் உண்மையான ஆசையைக் கூறி பாகிஸ்தானை மதவாதப் பிடியில் இருந்து வெளிக்கொண்டு வரும் நோக்கிலும், அதேநேரத்தில் தன்மீதான மதவாதி என்ற முத்திரையை நீக்கும் நோக்கிலும் ஜின்னா மதச்சார்பற்றவர் என்ற கருத்தை அத்வானி பாகிஸ்தானில் எடுத்துக் கூறினார். ஆனால் அது நேர்மாறான பலனைத் தந்தது.


நாட்டைப் பிளந்த ஜின்னாவை எப்படி மதச்சார்பற்றவர் என்று அத்வானி  கூறலாம் என்று காங்கிரஸ்காரர்கள் வானத்துக்கு எகிறிக் குதிக்க, சங்கப் பரிவார் அமைப்புகளோ பிரதமர் ஆகும் கனவில் இருந்த அத்வானியை கைகழுவிவிட்டன. பாகிஸ்தானோடும் நட்பு பூண்டு, மதச்சார்பற்ற பிம்பத்துடன் நாட்டின் பிரதமராகவும் ஆகலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று நினைத்த அத்வானி தலையில் பெரும் பாறாங்கல்லாய் அவரது கருத்து விழுந்தது.

இப்போது அத்வானி மீண்டும் திருவாய் மலர்ந்தருளியிருப்பது “நுணலும் தன்  வாயால் கெடும்” என்ற விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. “அத்வானிக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. பாரதிய ஜனதா மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடும் என்பதை அவரே ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது அவரது பேச்சு” என காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
நரேந்திர மோதி, பிரதமர் ஆகும் கனவில் இருக்கிறார், அவரை பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் இல்லை என அறிவிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அடம் பிடிக்கிறது. இந்நிலையில் மோதியின்  வளர்ச்சியைத் தடுக்கவும், அதற்காக நிதீஷ் குமார் போன்றோருக்கு பிரதமர்  பதவிக்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் அத்வானி இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது.


ஆக, இப்போதும் தவளை வாயர் என்ற விமர்சனத்துக்கு அத்வானி ஆளாகி இருக்கிறார். ஆனால், இதில்தான் அத்வானியின் ராஜதந்திரம் மறைந்திருக்கிறது. சென்ற முறை பாரதிய ஜனதா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த கூட்டணி பலமே காரணமாக அமைந்தது. இப்போதோ கூட்டணிக் கட்சிகள் காங்கிரசோடு முரண்டு பிடிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் கைக்கு கை கொடுத்த ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி ஆரம்பித்த கட்சி அசுர பலத்தைக் காட்டி, காங்கிரசை மிரட்டியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிராந்திய பலம் வாய்ந்த கட்சிகள் அதிக அளவில் வெளியே வர அத்வானியின் கருத்து ஒரு தூண்டுகோலாய் அமையும். காங்கிரசோடு முன்பே கூட்டணி வைத்து அது பகிரும் தொகுதிகளையும் பின்னர் ஜெயித்தால் அது தயவு காட்டும் பதவிகளையும் பெறுவதைவிட விலகி நின்று போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வென்றால், பிறகு காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவிடம் வலுவான பேரம் பேசலாமே என்று கூட்டணிக் கட்சிகள் கருதலாம்.



இதுபோல் மாநிலக் கட்சிகள் தனித்து நின்றால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது காங்கிரஸ் ஆகத்தான் இருக்கும். ஏனெனில், காங்கிரசுக்கு பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் உள்ள செல்வாக்கைவிட பாரதிய ஜனதாவுக்கு கூடுதலாகவே உள்ளது. காங்கிரசின் பெரிய அளவிலான கூட்டணியே, முக்கியமாக மாநிலப் பெரிய கட்சிகளுடனான கூட்டே அதன் பலத்துக்குக் காரணம். அதை உடைக்க அத்வானியின் பேச்சு பயன்படும்.


இதற்கு ஆதாரம்போல், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பண்டோபாத்யாய் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே தேதி குறித்து தனிக்குடித்தனம் போகக் காத்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியோ, பஹுஜன் சமாஜோ காங்கிரசுக்கு பெரிய பங்கு கொடுக்க எப்போதுமே தயாரில்லை.


தமிழகத்தில் வேண்டுமானால் கருணாநிதியின் தி.மு.க., காங்கிரஸ் நாமஸ்மரணத்தை தொடரலாம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தி.மு.க-வின் ஆதரவு காங்கிரசுக்கு பலமா, பலவீனமா என்பது ஒரு தொடரும் பட்டிமன்றம். ஆக கூட்டணிக் கட்சிகள் கழன்று கொண்டால் அதிகம் திண்டாடப்போவது காங்கிரஸ்தான். பல்வேறு ஊழல்களாலும், விலைவாசி ஏற்றத்தாலும் காங்கிரஸ் அரசு அதன் ஆயுளை எண்ணிக் கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் அது கரை சேர்வது மாபெரும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய சாத்தியமில்லை.


இந்நிலையில் மூழ்கும் கப்பலுக்கு மேலும் ஒரு அடி பலமாகக் கொடுக்கும் நோக்கிலேயே அத்வானி, மூன்றாவது கட்சியைச் சேர்ந்தவருக்கு பிரதமர் ஆக வாய்ப்பு என்ற அஸ்திரத்தை பிரயோகப்படுத்தியுள்ளார் என எண்ணத் தோன்றுகிறது.

-    பத்மன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக