செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சுகம் தரும் சுதந்திரம்



[நாளை (15.08.2012) சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது இந்த சுதந்திரச் சிந்தனைக் கவிதை]


தம்மைத்தா மேயாளும் திறமே சுதந்திரம்
தான்தோன்றித் தனங்களுக்குப் பெயரா சுதந்திரம்?
செம்மைநம் மைச்செய்து விடுவது சுதந்திரம்
செமையாய் தீமைக்குட் படுவதோ சுதந்திரம்?



அடிமைத் தளைகளை அறுத்தெறிவது சுதந்திரம்
அடிமையாய் போதைக்கு அகப்படுவதோ சுதந்திரம்?
காதல் வாழ்வைக் கைப்பிடிப்பது சுதந்திரம்
காமத் தீக்குவடி கால்வடிப்பதோ சுதந்திரம்?



கருத்தால் உலகைத் திருத்துவது சுதந்திரம்
வருத்தும் வம்பை உறுத்துவதோ சுதந்திரம்?
கலைகளில் உன்னதம் வடிப்பது சுதந்திரம்
கலைமகள் ஆடையைக் களைவதோ சுதந்திரம்?



  
உழைக்கும் மனிதர்க்கு ஓய்வு சுதந்திரம்
உழைக்கா வீணரின் சோம்பலோ சுதந்திரம்?
கடமைகள் நிறைவுறக் கடைப்பிடிப்பது சுதந்திரம்
மடமைகள் நிறைந்திட மடைதிறப்பதோ சுதந்திரம்?



பரத்தினில் பரம்பொருள் பற்றிட சுதந்திரம்
பரத்தையர் உறவாட பக்திவேஷமோ சுதந்திரம்?
இகத்தினில் பெரும்பொருள் சேர்த்திட சுதந்திரம்
இல்லாதோர் வயிற்றினில் அடிக்கவோ சுதந்திரம்?




இயற்கையைச் சுவைத்திட இன்முகச் சுதந்திரம்
இயற்கையைச் சிதைத்திட இசைவதோ சுதந்திரம்?
அறத்தினைக் காத்திட மறப்போரிடல் சுதந்திரம்
அறத்தினை மறந்திட்ட மதப்போரோ சுதந்திரம்?


தன்னலன்கள் காத்திட தரலாம் சுதந்திரம்
தன்னலம் மட்டும் பேணவோ சுதந்திரம்?
எள்துணைக் குற்றமும் இல்லா தொழிந்திடின்
எல்லா விடத்தும் சுகம்தரும் சுதந்திரம்



-    பத்மன்

1 கருத்து: