ஞாயிறு, 21 ஜூலை, 2013

முள் கிரீடம்



 திறமை எனக்கு முள்கிரீடம்
 தீரா ரணமே தருகிறது
 பெருமை எனக்குப் பரிதாபம்
 பேசாத் துணையாய் வருகிறது


           

 வெறுமை எனது பொக்கிஷமாம்
 வேண்டாப் பரிசாய் குவிகிறது

 அருமை எனது அடையாளம்

 அடையா இலக்கோ நீள்கிறது


 
  கடமை எனக்கு உயிர்மூச்சு

  கழுத்தை அதுவே நெரிக்கிறது

  உழைப்பே எனது உற்சாகம்

  உதவா உறவாய் இருக்கிறது.

  -    பத்மன்

திங்கள், 1 ஜூலை, 2013

விடுதலை ஆற்றுப்படை



(ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் ஸ்லோகத்திற்கு எனது மொழிபெயர்ப்புக் கவிதை – பத்மன்)


மனம்புத்தி தன்னுணர்வு எண்ணம் நானல்ல
கேள்விசுவை முகர்வு பார்வையும் நானல்ல
விண்ணோ புவியோ தீயோவளி யோவல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

மூச்சுக் காற்றுமல்ல ஐந்து வளியுமல்ல
மூலம் ஏழுமல்ல ஐந்து படிவுமல்ல
பேச்சுறுப் பல்லகைகால் பிறப்புறுப் புமல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

விருப்புவெறுப் பில்லை பொறாமை மோகமில்லை
புகழ்பெருமை யில்லை பகையுணர் வுமில்லை
அறமில்லை பொருளில்லை காமமில்லை வீடுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

பாவமில்லை புண்யமில்லை இன்பமில்லை துன்பமில்லை
மந்த்ரமில்லை தீர்த்தமில்லை வேதமில்லை வேள்வியில்லை
உண்பதில்லை உணவுமில்லை உண்பவனும் நானில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 
சாவுமில்லை ஐயமில்லை எனக்கு சாதிபேதமில்லை
தாயுமில்லை தந்தையிலை நான்பிறப் பதில்லை
உறவுமில்லை நட்புமில்லை குருவுமில்லை சீடனில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

நான்மாறுபடு வதில்லை உருவமே துமில்லை
எங்கும்பரந் துள்ளநான் எதிலுமொட் டுவதில்லை
விடுதலை யென்பதில்லை விழைந்தறி வதுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.