ஞாயிறு, 10 மார்ச், 2013

சிவயோகி ஸ்ரீ கிருஷ்ணர்




(மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மாதவன் போற்றும் மாகாதேவன் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரை.)  

கிருஷ்ண பகவான், மகாவிஷ்ணுவின் அவதாரமாயிற்றே, அவர் சிவபக்தரா, சிவயோகியா? என்று ஆச்சரியப்படுபவர்கள் இருப்பார்கள். மகாபாரதத்தின் 13-வது பர்வமாகிய அனுசாசன பர்வத்தில்தான் சிவசஹஸ்ரநாமம் உரைக்கப்பட்டிருக்கிறது. உரைத்தவர் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர்.

அம்புப் படுக்கையில் கிடந்த பிதாமகர் பீஷ்மரின் வேண்டுகோளை ஏற்று, யுதிஷ்டிரர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்களுக்கு சிவபெருமானின் மகிமையை, அந்த மகாபுருஷரின் ஆயிரத்தெட்டு திருநாமங்களை உரைக்கிறார் கிருஷ்ணர். இந்த சிவசஹஸ்ரநாமம், அனுசாசன பர்வத்தில் முதலாவதாகிய தானதர்ம பர்வத்தில் பதினாங்காம் அத்தியாயத்தில் தொடங்குகிறது.

மகேஸ்வரரின் பெருமையைப் பற்றிக் கூறுமாறு தர்மர் கேட்டுக்கொண்டபோது,  அதனை விண்டுரைக்கும் சக்தி தமக்கு இல்லையென்றும், விஷ்ணுவின் அவதாரமாகிய கிருஷ்ணர் அதனைக் கூறவல்லவர் என்றும் பீஷ்மர் தெரிவிக்கிறார்.

அப்போது, கிருஷ்ணர் தமது ருத்ரபக்தியால்தான் உலகை வியாபித்திருக்கிறார் என்றும், பத்ரிகாசிரமத்தில் கிருஷ்ணர், பொன்போன்ற கண்களையுடைய சிவபெருமானை மகிழ்வித்து, அவரிடமிருந்து எல்லா உலகங்களுக்கும் எல்லா விஷயங்களைவிடவும் அதிகப் பிரியாமாயிருக்கும் தன்மையையைப் பெற்றிருக்கிறார் என்றும் பிதாமகர் கூறுகிறார்:

       रुद्रभक्त्या तु कृष्णेन जगत व्याप्तं महात्मना /
       तम् प्रासाद्य तथा देवं बदर्यां किल भारत //
       अर्थात प्रियतरत्वञ्च सर्वलोकेषु वै तथा /
       प्राप्तवानेव राजेन्द्र सुवर्णाक्षान महेस्वरात् //
     (ருத்ரபக்த்யா து க்ருஷ்ணேன ஜகத்வ்யாப்தம் மஹாத்மனா
     தம் ப்ரஸாத்ய ததா தேவம் பதர்யாம் கில பாரத
     அர்த்தாத் ப்ரியதரத்வஞ்ச ஸர்வலோகேஷு வை ததா
     ப்ராப்தவானேவ ராஜேந்த்ர சுவர்ணாக்ஷான் மகேஸ்வராத்)

மேலும், உலகிற்கு உற்பத்தி ஸ்தனாமாகிய மகாதேவரின் ஐஸ்வர்யம் எப்படிப்பட்டது என்பதை புத்திரனை விரும்பித் தவம் செய்தபோது அச்சுதராகிய கிருஷ்ணரே நேரில் கண்டிருக்கிறார் என்கிறார் பீஷ்ம பிதாமகர். (சிவப்ரசாதத்தால் ஜாம்பவதியிடம் கிருஷ்ணருக்குப் பிறந்த மகன்தான் சாம்பன். சம்புவின் அருளால் பிறந்தவன் என்பதால் அவனுக்கு சாம்பன் என்று பெயர்.)

     ऐश्वर्यं यत् रुचं तस्य जगत्योने: महात्मनः
     ततोऽयं दृष्टवान् साक्षात पुत्रार्थे हरिरच्युतः
       (ஐஸ்வர்யம் யத்ருசம் தஸ்ய ஜகத்யோநேர் மகாத்மன:
     ததோயம் த்ருஷ்டவான் சாக்ஷாத் புத்ரார்த்தே ஹரிரச்யுத:)

இப்படியாக, பீஷ்மரின் வேண்டுகோளைத் தொடர்ந்து உபமன்யு மஹரிஷி, தமக்கு உபதேசித்த சிவசஹஷ்ரநாமத்தை பக்தியுடன் பகர்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

தமது சிவபக்தியை கிருஷ்ணரே அனுசாசன பர்வத்தில் பிறிதோரிடத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தாம் அடைந்துள்ள நன்மைகளுக்கும், தமக்குக் கிடைத்துள்ள புகழுக்கும் விரிசடைக் கடவுளிடம் (கபர்தின்) தாம் கொண்டுள்ள பக்தியே காரணம் என்றும், காலையில் துயில் எழுந்ததும் புலன்களை அடக்கி சதருத்ரீயத்தைப் பாடித் தாம்  பிரார்த்திப்பது வழக்கம் என்றும் தருமரிடம் கிருஷ்ணர் கூறுகிறார்:

     इन्धते कथयिष्यामि नमस्कृत्वा कपर्दिने /
       यदवाप्तं महाराज श्रेयो यच्चार्जितं यशः //
       प्रयत: प्रातरुत्थाय यदधीये विशां पते  /
       प्राञ्जलीः शथरुद्रीयं तेन निकयाः कुरु //
       (இந்ததே கதயிஷ்யாமி நமஸ்க்ருத்வா கபர்தினே
     யதவாப்தம் மஹாராஜா ஸ்ரேயா யச’:
     ப்ரயத: ப்ராதருத்தாய யததீயே விசாம்பதே
     ப்ராஞ்சலி: சதருத்ரீயம் தேன மே நிகயா: குரு)

உபமன்யு மகரிஷியிடம் சிவதீட்சை பெற்று சிவபெருமானை நோக்கித் தாம் தவம் புரிந்ததையும், உமாதேவி சகிதமாய்த் தோன்றிய பரமேஸ்வரனைத் தாம் கண்டு புளகாங்கிதம் அடைந்ததையும் வர்ணிக்கிறார் கிருஷ்ணர். ஞானம் நிரம்பிய பிராமணர்கள், தவசிரேஷ்டர்களிடம் மகாதேவரின் மகிமை குறித்து எட்டு நாட்கள் தாம் உரையாடியதையும், எட்டாம் நாளில் தீட்சை பெற்று, மழித்த முகத்துடன், முனிவருக்கே உரிய தண்டத்தை ஏந்தியபடி தாம் தவம் மேற்கொள்ளத் தொடங்கியதையும் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.

முதல் ஒரு மாதம் பழங்களை மட்டுமே உட்கொண்டும், 2-ம் மாதத்தில் தண்ணீர் மட்டுமே பருகியும்,  3 முதல் 5-ம் மாதம் வரை வெறும் காற்றை மட்டுமே சுவாசித்தும், ஒற்றைக்காலில் நின்றபடி, இருகைகளையும் உயரே கூப்பியபடி தாம் தவமிருந்ததாகவும், தவத்தின் இறுதியில் ஆயிரம் சூரியனின் ஜோதியுடன் சிவபெருமான் பிரத்யட்சமாகியதாகவும் யதுகுல சிரேஷ்டர் விளம்புகிறார்.

       दिने अष्टमे च विप्रेण दीक्षितोऽहं यथाविधि /
       दण्डी मुण्डी कुशी चीरी कृताग्धो मेखली तथा //
       मासमेकं फलाहारो द्वितीयं सलिलासनः /
       त्रुतीयञ्च चतुर्थैच पञ्चमं चानिलासनः //
       एकपादेन तिष्ठश्च ऊर्ध्वबाहुरतान्त्रितः /
       तेज: सूर्यसहश्रस्य अपश्यं दिवि भारत //

       (தினே அஷ்டமே ச விப்ரேண தீக்ஷிதோ அஹம் யதாவிதி
     தண்டி முண்டி குஷீ சீரீ க்ருதாக்தோ மேகலீ ததா
     மாஸமேகம் ஃபலாஹாரோ த்விதீயம் ஸலீலாசன:
     த்ருதீயம் ச சதுர்த்தை ச பஞ்சமம் சானிலாசன:
     ஏகபாதேன திஷ்டச்ச ஊர்த்வபாஹு: அதந்த்ரித:
     தேஜ: சூர்யசஹஷஸ்ரஸ்ய அபச்’யம் திவி பாரத:)




உமையம்மையோடு சிவபெருமான் தோன்றியது, மேகக்கூட்டத்தின் நடுவே சந்திரனும் சூரியனும் இணைந்து தோன்றியதைப்போல் காட்சியளித்ததாகவும், இதைக்கண்டு தமக்கு மயிர்க்கூச்செறிந்ததாகவும் (ரோமாஞ்சனம் ஏற்பட்டதாகவும்); அனைத்துத் தெய்வங்களின் அடைக்கலமாகவும், அனைத்துத் துயரங்களைத் துடைப்பவராகவும் விளங்கும் ஹரனைத் தாம் கண்ணாரக் கண்டதாகவும் கண்ணனாய் அவதரித்த ஹரி விவரிக்கிறார் :

     रराज भगवान् सतत्र देव्या सह महेश्वरः /
       सोमेन सहित सूर्यो यथा मेघःस्तितस्तथा //
                संह्रुष्टरोमा कौन्तेय विस्मयोत्पुल्ललोचन: /
       अपश्यं देवसंगानाम् गथिमादिहरंहरम् //
     (ரராஜ பகவாம்ச தத்ர தேவ்யா சஹ மகேஸ்வர:
     சோமேன சஹித சூர்யோ மேகஸ்திதஸ்ததா
     சம்ஹ்ருஷ்ட ரோமாகௌந்தேய விச்மயோத்புல்லலோச்சன:
     அபச்’யம் தேவசங்கானாம் கதிம் ஆதிஹரம்ஹரம் 

இதனைத் தொடர்ந்து தமது தலைசிறந்த பக்தியின் மூலம் 8 வரங்களை சிவபெருமானிடமிருந்து பெற்றதையும் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.
இதெற்கெல்லாம் உச்சமாக, சிவசஹஷ்ரநாம உத்தரபாகத்தில், யாருக்கு சிவபக்தி ஏற்படும் என்பதை எடுத்துரைப்பதுடன், மகாதேவனிடம் பக்தி கொண்டவர்கள் பிறவிச் சுழலில் அகப்படாமல் முக்தி அடைவார்கள் என்பதையும் திண்ணமுடன் உரைக்கிறார் கண்ணன்.

பாவச் செயல் புரிபவர்களும், அமங்களங்களால் மாசடைந்தவர்களும், தமோ மற்றும் ரஜோ குணங்கள் மேலிட்டவர்களும் ஈஸ்வரனை வழிபடுவதில்லை – சித்தம் திருந்திய துவிஜர்கள் (மோட்சத்துக்குரிய மார்க்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள்) சிவபெருமானை நன்கு வழிபடுகிறார்கள் என்கிறார் கிருஷ்ணர். மேலும் எந்த மனிதர்கள் இந்தப் புவியில் மகாதேவ பக்தர்களோ அவர்கள் பிறவிச்சுழலுக்கு வசமாக மாட்டார்கள் என்பது தம்முடைய நிச்சயமான கருத்து என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் ஹரிகிருஷ்ணர்:

     அசுபை: பாபகர்மணோ யே நரா: கலுஷீக்ருதா:
     ஈசானம் ந ப்ரபத்யந்தே தமோராஜஸவ்ருத்தயா:
     ஈஸ்வரம் சம்ப்ரபத்யந்தே த்விஜா பாவித பாவனா
     ஏவமேவ மகாதேவ பக்தா யே மானவா புவி:
     ந தே சம்சாரவசகா இதி மே நிச்சிதா மதி
     இதி மே நிச்சிதா மதி ஓம் நம இதி


இந்த ருத்ர பக்தி காரணமாகவே ஸ்ரீகிருஷ்ணரை, காஷ்மீர சைவர்கள் (ஈஸ்வராத்வயவாத சைவர்கள்) சிவனின் அம்சமாகத் துதிக்கிறார்கள்.  சிவோஹம் (நான் சிவம்) என்ற பாவனையில் பகவத் கீதையை கிருஷ்ணர் அருளியதாகக் கூறி அதனை அத்வைதப் பொக்கிஷமாக மதிக்கின்றனர்.

இதே கருத்தை வலியுறுத்தித்தான் மகாகவி பாரதியார் தமது “கண்ணன் என் சேவகன்” என்ற பாடலிலே,
     “கண்ணன் என்னகத்தே கால்வைத்த நாள்முதலாய்
     எண்ணம் விசாரம் எதுவும் அவன்பொறுப்பாய்
     செல்வம் இனமாண்பு சீர்சிறப்பு நற்கீர்த்தி
     கல்வி அறிவு கவிதை சிவயோகம்
     தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
     ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!”
என்று பாடியுள்ளார். கண்ணனை ஆராதிப்பதன் மூலம் பக்தனுக்கு சிவயோகமும், சிவஞானமும் கைகூடுகின்றது என்பதை கண்ணன் வழியிலேயே மகாகவி பாரதியும் தீர்மானமாகக் கூறுகிறார்.

நன்றாகக் கொழுந்துவிட்டு எரிகின்ற அக்னியைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நாலாபுறமும் செக்கச்செவேலென்று தீ எரிந்தாலும், நடுவிலே ஒருவித நீலநிறம் நின்றிருக்கும். அதுபோல்தான் சிவந்த மேனியுடைய சிவபெருமானுக்கும் சியாமளவர்ணனான கிருஷ்ணனுக்கும் இடையேயுள்ள பந்தம்.

அதனால்தான் கருமைநிறக் கண்ணன், மகாராஷ்டிர மாநிலத்திலே செம்மைநிற விட்டலனாகவும், லிங்கமேனியனாகவும் காட்சி தருகிறான். அவன் அவதரித்ததே சிவபெருமானின் அம்சமாகிய பைரவருக்குரிய அஷ்டமி திதியில்தானே? 

சிவம் என்றால் மங்களம் என்றும் விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்து இருப்பது என்றும் பொருள். எது எங்கும் வியாபித்துள்ளதோ அது மங்களகரமானது, எது மங்களகரமானதோ அதுவேதான் எங்கும் வியாபித்திருக்கிறது. கிருஷ்ணர் தமக்குப் பதியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோபிகா ஸ்திரீகள் சிவபெருமானைத் துதித்ததையும் மகாபாரதம் எடுத்துரைக்கிறது. ஜீவாத்மாக்களான கோபிகா ஸ்திரீகள், பசுபதியாகிய சிவபெருமானின் தாளினைப் பற்றவேண்டும் என்பதை கோபாலனாகிய கிருஷ்ணர் வலியுறுத்தியிருக்கிறார் என்பதற்கும் மஹாபாரதமே சான்று.


-    பத்மன்