வெள்ளி, 30 நவம்பர், 2012

புத்திசாலி சிறுமி



முன்னொரு காலத்துல அண்ணன்-தம்பி ரெண்டு பேரு இருந்தாங்க. மூத்தவன் பேரு மூர்த்தி, பணக்காரன். இளையவன் பேரு இன்னாசி, ஏழை. ரெண்டு பேரும் ஒரு நாள் பக்கத்து ஊர்ல வருஷாவருஷம் நடக்கற குதிரைச் சந்தைக்குப் போனாங்க. மூத்தவன் ஆண் குதிரை ஒண்ணையும், இளையவன் பெண் குதிரை ஒண்ணையும் விக்கறதுக்குக் கொண்டு போனாங்க.


      வழியில இருட்டிப்போனதால சத்திரத்துல தங்கினாங்க. குதிரை ரெண்டையும் வாசல்ல தனித்தனித் தூணுல கட்டியிருந்தாங்க. விடிஞ்சபின்ன ரெண்டுபேரும் வெளில வந்து பார்த்தா ஆச்சர்யம்! மூணு குதிரை இருந்தது. அந்த மூணாவது குதிரை பெருசா இல்ல, சின்னூண்டு குட்டி. ராத்திரிலே பெண் குதிரை பிரசவிச்சது. அம்மா மடில பால் குடிச்சிட்டு முன்னங்கால தூக்கி கஷ்டப்பட்டு நடக்க முயற்சி பண்ணின அந்தக் குட்டி, ஆண் குதிரை பக்கமா தவழ்ந்து வந்தது. அதைப் பார்த்த ஆண் குதிரை அன்பா கனைச்சது. அந்த நேரம்தான் அண்ணன்-தம்பி ரெண்டு பேரும் வெளில வந்து மூணு குதிரையைப் பார்த்தாங்க.


      மூர்த்தி சொன்னான் “இந்தக் குட்டி என்னோடது. என் குதிரை பெத்தது.” இதைக் கேட்ட ஏழைத் தம்பி இன்னாசி சிரிச்சான். “ஆண் குதிரை எங்கனாச்சும் குட்டி போடுமா? இது என் பெண் குதிரையோடது” அப்படின்னான். ரெண்டு பேருக்கும் சண்டை முட்டிக்கிச்சு. வழக்கு பஞ்சாயத்துக்குப் போனது. ஒவ்வொரு வருஷமும் குதிரைச் சந்தை  தொடங்குற போதும், பஞ்சாயத்துல நீதிபதியா அந்நாட்டு ராசாவே இருக்கிறது வழக்கம். அதுனால இந்த வழக்கை ராசாவே விசாரிச்சாரு.


      அண்ணன்-தம்பி சச்சரவைக் கேட்டதுமே அவருக்கு விஷயம் விளங்கிப் போச்சு. தம்பியோடதுதான் அந்தக் குதிரைக் குட்டின்னு நியாயமா தீர்ப்பு சொல்ல நெனச்சாரு. அப்போப் பார்த்து கெட்ட நேரமோ என்னவோ, தம்பிக்காரனுக்கு திடீர்னு ஒரு கண்ணு துடிச்சது. அதப் பார்த்த ராசா, ஆகா! இந்த ஏழை, தனக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுன்னு கண்ண சிமிட்டறானேன்னு நெனச்சாரு.

      மரியாதை தெரியாத இந்தப் பயல தண்டிக்கனும்னு தீர்மானிச்சாரு. அதனால “இந்த வழக்கு ரொம்ப சிக்கலா இருக்கு. இதுக்குத் தீர்ப்பு சொல்றது முடியாத காரியம்னு நெனக்கிறேன். அதுனால நான் நாலு புதிர் போடறேன். அதுக்கு யாரு பதில் கண்டுபிடிச்சிட்டு வர்றாங்களோ அவங்களுக்குத்தான் குதிரைக் குட்டி சொந்தம்” அப்படின்னு சொன்னாரு. “உலகத்திலேயே மிக வேகமானது எது? கொழுப்பு நெறைஞ்சது எது? மிருதுவானது எது? மேலும் விலை மதிக்க முடியாத உசத்தியானது எது?” அப்படிங்கற நாலு புதிரையும் சொன்னாரு.



      வர வழியில மூர்த்தி யோசிச்சான். அடடா, இந்தப் புதிருங்களுக்கு நம்மால பதில் சொல்ல முடியாதே? பதில் சொன்னாத்தானே குதிரைக் குட்டிய வாங்க முடியும்? அப்ப திடீர்னு அவனுக்கு ஒரு நெனப்பு தட்டிச்சு. அவன்கிட்ட கடன் வாங்கியிருந்த காய்கறிக்காரி சிரிக்கச் சிரிக்கப் பேசுவா, சாமர்த்தியக்காரின்னு கூட சில பேரு சொல்லுவாங்க. அவகிட்டப் போனான் மூர்த்தி. நாலு புதிருக்கு விடை சொன்ன கடன்ல ஒரு பகுதியை கழிச்சிக்கறேன்னு சொன்னான். அவ, தான் எவ்வளவு சாமர்த்தியக்காரின்னு அப்போ நிரூபிச்சா. கடன் முழுசையும் தள்ளுபடி செஞ்சா விடை சொல்றேன்னா.

      மூர்த்தி சரின்னதும், குசும்பு பிடிச்ச அந்தக் காய்கறிக்காரி, உலகத்துலேயே ரொம்ப வேகமானது என் புருஷனோட கோவேறுக்கழுதை, போன வருஷம் ஓடிப்போனது இன்னும் அது அகப்படலே. ரொம்பக் கொழுப்பு நெறஞ்சது எங்க வீட்டு எருமை மாடுதான். அதோட பாலுல எவ்வளவு தண்ணி கலந்தாலும் கெட்டியா இருக்கும். ரொம்ப மிருதுவானது என் மெத்தைல இருக்கிற குயில் இறகு. ரொம்ப உசத்தியானது என் தம்பியோட ஒரு வயசுக் கொழந்தை. உலகத்துல உள்ள தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் என் மருமகனை விட்டுத்தர மாட்டேன் அப்படின்னு அவ சொன்னா.

      இதே போல வீட்டுக்கு சோகமா திரும்பின இன்னாசியைப் பார்த்து அவனோட அஞ்சு வயசு மக, “என்னப்பா விஷயம்”னு கேட்டா. மகளைவிட்டா வேற ஆதரவு இல்லாத அவன் நடந்ததைச் சொல்லி ராசாவோட நாலு புதிரையும் சொன்னான். ஏழையோட மக, அவளோட  வயசையும் மிஞ்சின புத்திசாலி.


      “அப்பா, கவலைப்படாத. நான் பதில் சொல்லறேன். அதைப்போய் ராசாட்ட சொல்லு. உலகத்துலேயே ரொம்ப வேகமானது வடக்குப் பக்கத்துலேர்ந்து வீசற வாடைக்காத்து. ரொம்ப கொழுப்பு உள்ளது, பயிர் விளையிற நிலம். ஏன்னா அதுல விளையற பயிர்களை தின்னுட்டுதான் மிருகங்களும், மனிஷங்களும் பலம் ஆகிறோம். உயிர் வாழறோம். உலகத்துலேயே மிருதுவானது குழந்தையோட ஸ்பரிசம். மிக உசத்தியானது நேர்மை” அப்படின்னு பதில் சொன்னா.

                புதிருக்கு விடை சொல்ல சகோதரர்கள் ரெண்டு பேரும், ராசாவோட அரண்மனைக்குப் போனாங்க. மூத்தவன் பதில்களைக் கேட்டதும் ராசாவும், பிரதானிகளும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இளையவன் பதில் சொன்னதும் ராசாவோட முகத்துல ஈயாடலே. இவ்வளவு புத்திசாலித்தனமா சொல்லிட்டானேன்னு அவரு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிச்சது. அதுவும் உலகத்துலேயே உசத்தியானது நேர்மைன்னு நாலாவது புதிருக்கு பதில் சொன்னபோது ராசா முகம் கறுத்துப்போச்சு. ஏழைக்கு அதுவரை நியாயம் கிடைக்காம நாமதான் ஏமாத்திட்டு இருக்கோம்னு அவரோட மனசாட்சி உறுத்தினாலும், அவைக்கு முன்னால தன் தப்ப ஏத்துக்க அவரால முடியலே.


      ”யார் உனக்கு இந்த பதில்களைச் சொன்னது?” உறுமினாரு ராசா. தன்னோட அஞ்சு வயசு மகள்தான்னு இன்னாசி உண்மயைச் சொன்னதும், “இந்த சின்ன வயசுலே இவ்வளவு பெரிய புத்திசாலியா உன் மக இருக்கறதுக்கு கண்டிப்பா பரிசு தரணும். உன்னோட அண்ணன் உரிமை கொண்டாடற குதிரைக் குட்டியையும், அதோடு சேர்த்து ஆயிரம் வராகனும் உனக்குத் தரலாம். ஆனா.....” என்று சொன்ன ராசா சபையோரைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார்.

      இன்னாசியைப் பார்த்து, “உனக்கு ஒரு வாரம் அவகாசம் தரேன். நீ உன் மகளோட இங்கு வரணும். உன் மக பெரிய புத்திசாலி இல்லையா? அதனால ஒரு சோதனை வைக்கறேன். உன் மக இங்க வரும்போது அம்மணமாகவும் வரக்கூடாது, ஆடை அணிஞ்சும் வரக்கூடாது; மிருகங்கள் மேல ஏறியும் வரக்கூடாது, நடந்தும் வரக்கூடாது; அவ எனக்குப் பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாது. நான் சொன்னபடி உன் மக வந்த, உனக்கு குதிரைக் குட்டியும் பரிசும் உண்டு. இல்லேன்னா திமிரு பிடிச்ச உன்னோட தலைய சீவிடுவேன்” அப்படின்னு ராசா சொன்னாரு.


      சபையிலே இருந்தவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. ராசாவோட நிபந்தனையை இந்த ஏழை நெறைவேத்த முடியாதுன்னு நெனைச்சாங்க. கண்ணீரோட வீட்டுக்குத் திரும்பினான் இன்னாசி. அழுதுகிட்டே அவன் சொன்னத அமைதியா மக கேட்டா. “நாளைக்கே நாம அரண்மனைக்குப் போகலாம். ஒரு புறாவைப் பிடிச்சிட்டு வாங்க. அப்புறம் நான் சொல்லறபடி நீங்க செய்யுங்க. உங்களுக்குப் பரிசு நிச்சயம்” அப்படின்னு சொன்னா. மக சொன்னபடி அவமேல மீன் வலையால போர்த்தி, கூடைல வெச்சு அரண்மனைக்குத் தூக்கிட்டுப் போனான் இன்னாசி.

      ராசா சொன்னபடி இன்னாசியோட மக, அம்மணமாகவும் வரல, ஆடையும் உடுத்தல; மிருகங்கள் மேலயும் வரல, நடந்தும் வரல; அப்போ ராசா கேட்டாரு: “நான் சொன்ன மூணாவது நிபந்தனை என்னாச்சு? பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாதே?’’. உடனே தன் கையில வெச்சிருந்த புறாவை ராசாவை நோக்கிப் பறக்க விட்டா அந்தப் பொண்ணு. அது அவர் கைல சிக்காம பறந்து போச்சு. இப்போ மூணுலயும் ஏழையோட மக ஜெயிச்சிட்டா.

      அப்பாவும் ராசாவுக்கு திருப்தி வரல. “உன் அப்பா உண்மையிலேயே ஏழையா? அவருக்கு இந்தக் குதிரைக் குட்டி வேணுமா”ன்னு கேட்டாரு. “ஆமாம். நாங்க ரொம்ப ஏழை. எங்க அப்பா, நதியில பிடிச்சிட்டு வர்ற முயலையும், மரத்துலேர்ந்து பறிச்சிட்டு வர்ற மீன்களையும் வெச்சுதான் நாங்க வாழறோம்” அப்படின்னா.


      ஹோஹோன்னு சிரிச்சாரு ராசா. “இவ்வளவுதானா உன் புத்திசாலித்தனம்? எங்கேயாவது ஆத்துல முயலும், மரத்துல மீனும் கிடைக்குமா?” அப்படின்னு கேட்டாரு. “உங்க ஆட்சில ஆண் குதிரை மட்டும் குட்டி போடும்போது, இது நடக்கக் கூடாதா?” அப்படின்னு பதிலுக்குக் கேட்டா சின்னப் பொண்ணு. இதைக் கேட்டதும் ராசாவும், மத்த எல்லாருமே சிரிச்சுட்டாங்க.

      இனியும் நாம வீராப்பு காட்டக் கூடாதுன்னு நெனைச்ச ராசா, சொன்னபடியே குதிரைக் குட்டியோட, ஆயிரம் வராகனும் கொடுத்து இன்னாசியையும் அவனோட மகளையும் வாழ்த்தி அனுப்பி வெச்சாரு. “என்ன இருந்தாலும் என் ராஜ்ஜியத்துலதான் இந்த மாதிரி புத்திசாலிக் குழந்தைகள் பிறக்க முடியும்”ன்னு மீசையை முறுக்கிக்கிட்டாரு ராசா.

-    பத்மன் 

5 கருத்துகள்:

  1. அருமையான கதை... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பத்மன் மிக நன்றாக உள்ளது.உலகில் உயர்ந்தது நேர்மை என்பது நிறைவானது.
    தவறே செய்யாத மனிதர் உலகில் உண்டா ? எங்கோ படித்த தொடர்.
    ஆனால் ஒப்புக்கொள்ளுதல் நேர்மை.
    மல்லிகை வாசனை மலர்ச்சியிலே
    உள்ள உவகை நேர்மை நெகிழ்ச்சியிலே
    மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நேர்மை நேர் வழி கைக் கொள்வோம்
    வளர்க வாழ்க எத்தினமும் நற்தினம் ஆகுக
    ஆரா

    பதிலளிநீக்கு
  3. பண்பான பத்மனுக்கு

    பார்த்தாவின் காலை வணக்கம்.

    புத்திசாலி சிறுமியின் நேர்மை சிறுவர்களுக்கு மட்டுமல்ல

    பெரியவர்களுக்கும் தேவை, எக்காலத்துக்கும்...

    நன்றி


    பதிலளிநீக்கு