செவ்வாய், 20 நவம்பர், 2012

ஓர் எழுத்தாளனின் இலக்கணப் பெயர்ச்சி



வல்லினமாய் வாழத்தான் ஆசைப்பட்டான்
மெல்லியலாளின்
இடையெழுத்தைக் கண்டதன்பின்
சார்பெழுத்துக்கள் பெருகிடவே
சற்றே தடம்மாறினான்.



புணர்ச்சி விதிக்கு ஆளாகி
உறுப்பிலக்கணம் ஆய்ந்ததால்
வாய்த்த வினைத்தொகை அது.



பகரணகரமகர ஓசை மிகவே
கொள்கையில் குறுக்கம் பெற்று
இலக்கணப் போலிக்குச் சுட்டானான்.


ஆசைகள் நீண்டு அடியுரம் அற்றுப்போய்
ஈரம்போய் இடையிலே சோரம்போய்
தன்பற்று இரட்டிப்பாகி
முன்னின்ற மெய்திரிந்து ஈனம்மிகுந்து
பண்புகளின் இயல்புகளின் விகாரப்பட்டான்.



அவனது சிந்தனையில் தற்குறிப்பேறியது
இரட்டுற மொழிதலுற்றான்
வேற்றுப்பொருள் வைத்ததும்
பிறிது மொழிதலானான்.


மொத்தத்தில் எடுத்துக்காட்டு உவமைக்கு ஆசைப்பட்டவன்
இறுதியில் இழிபொருள் உவமையானான்.


-    பத்மன்


1 கருத்து: