புதன், 14 நவம்பர், 2012

நாடு உங்களுக்காக


(இன்று குழந்தைகள் தினத்தை ஒட்டி, நாளைய பாரதத் தலைவர்களுக்கு இந்தக் கவிதை மலர்)



ஏடு தூக்கிடும் பாலகரே
நாடு உமக்காய் இருக்கிறதே
தேடும் கல்வியின் துணையாலே
நாளும் நன்மைகள் செய்வீரே!



நோயால் மனிதர் வாடுகிறார்
நோவால் துயரப் படுகின்றார்
தாயாய் அன்பு காட்டிடுவீர்
தயவாய் மருத்துவர் ஆகிடுவீர்!



பசியால் மக்கள் வாடுகிறார்
பார்த்தே சும்மா இருப்பீரோ?
கசியும் நீரையும் சேமித்தே
கனிவாய் உழவு செய்திடுவீர்!



கல்வி அறியா பாமரர்கள்
கலங்கியே வாழ்வில் அஞ்சிடுவார்
கண்டும் காணாது இருப்பீரோ?
கருத்துடன் ஆசான் ஆகிடுவீர்!


நாட்டைக் கெடுக்கும் எதிரிகளும்
நம்மைச் சூழ்ந்தே இருந்திடுவார்
நடுங்கும் கோழையாய் நிற்பீரோ?
நல்ராணுவ வீரர் ஆகிடுவீர்!


உலகில் நாமும் உயர்ந்திடவே
உயர்வாணிகம் தானே துணையாகும்
பண்டம் யாவும் படைத்திடுவீர்
பலநாடுகள் சுற்றியே விற்றிடுவீர்!


புதுப்புதுத் தொழில்கள் பெருகிடவே
புத்தி விஞ்ஞானம் முக்கியமாம்
ஆற்றலில் நாடு சிறந்திடவே
அறிவியல் மேதை ஆகிடுவீர்!



எல்லா வளமும் இருந்தாலும்
நல்லோர் ஆட்சி வேண்டுமன்றோ?
வாழ்வே மக்கள் சேவைக்காய்
ஆளும் தலைவரும் ஆகிடுவீர்!


எந்தத் தொழில்நாம் செய்தாலும்
எல்லாம் தேசத் திருப்பணியாம்
சந்தித் தெருவும் பெருக்கிடுவோம்
சந்திரனுக் கும்போய் வருவோம்!

-    பத்மன்

3 கருத்துகள்:

  1. நண்பன் பத்மனுக்கு

    நாடு உங்களுக்காக
    நல் கவிதை படைத்திட்டிர்
    வாழ்க வளமுடன்

    என்றும் நன்புடன்

    பார்த்தா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான வரிகள் ஐயா...

    இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி. தங்கள் திரட்டி நன்கு வளர வாழ்த்துகள். தங்கள் திரட்டியில் கருத்துகளைப் பகிர எனக்கும் விருப்பமே.

    பதிலளிநீக்கு