வியாழன், 1 நவம்பர், 2012

தசத்தலை – ஒருபிழை



பனிமலை பெயர்த்த பதினிணை புயத்தோன்
பரசிவம் படர்ந்த பதமன நயத்தோன்
சாத்திரம் அறிந்த சதுர்மறை திறத்தோன்
காத்திரம் வருத்திய கடுந்தவ வரத்தோன்.


இதந்தரு யாழிசை இன்னருங் குரலோன்
விதமுறு கலைகளில் வித்தகப் பெரியோன்
தேவரும் நடுங்கிடும் போர்புரி ராட்சதன்
யாவரும் வணங்கிடும் உயர்வழி பிராமணன். *


எழுபெரும் பத்தினி ஒருவளின் பதியவன் #
விழுமிய புகழ்நிறைப் புதல்வனைப் பெற்றவன்
அகத்தியன் வியந்திட இலக்கணம் அறிந்தவன்
உயர்த்திய நவிற்சியில் தசத்தலை படைத்தவன்.


அனுமனும் மெச்சிய அற்புத வடிவினன்
அண்ணலும் மயங்கிய அரும்பெரும் ஆற்றலன்
பிறன்மனை விழைந்த பெரும்பிழை அதனால்
திறன்புகழ் இழந்தே திகைத்திட வீழ்ந்தனன்.


சிறப்பெல்லாம் சேர்த்திட எத்தனைப் பிரயத்தனம்
இருப்பினும் ஒருபிழை கிடைத்தவை வியர்த்தமே!


(* பிரும்மதேவனின் கொள்ளுப் பேரன்தான் ராவணன். பிரும்மாவின் மகன் புலஸ்தியன். அவரது மகன், விஸ்ரவஸ் என்ற முனிவர். இவரது மகனே  ராவணன்.

# ராவணனின் மனைவி மண்டோதரி, ஏழு பத்தினிப் பெண்களில் ஒருவராகப்  போற்றப்படுகிறார்.)

-    பத்மன் 


3 கருத்துகள்:

  1. தசத்தலை, ஒரு பிழையால் தருதலையானான்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் பகிர்வும் அருமை... தகவல்களை அறிந்தேன்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. உண்மை! ஒரு பிழை போதும் நம் பெயர் கெட! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு