ஞாயிறு, 9 டிசம்பர், 2012

“புனித”ப் போர்


‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என அஹிம்சை வழியில் விடுதலைப் போரில் பாரத மக்கள் இணைந்திடப் பாடினார் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை. ஆனால் வேறு நோக்கத்திற்காக இப்போது பாரத மக்களுக்கு எதிராக கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடத்தப்படுகிறது. இந்தப் போர், கொலை ஆயுதத்தைத் தூக்காமல், தந்திர வலை ஆயுதத்தைத் தூக்கி, மூளைச்சலவை செய்து ஹிந்துக்களை மதமாற்றும் கிறிஸ்தவ திருச்சபைகளின் “புனித”ப் போர்.


மேற்காசியாவில் வாழ்ந்த பாவிகள் மனம்திருந்துவதற்காக சத்தியத்தின் வழியை போதித்து, அதற்குப் பரிசாக சிலுவையில் மரித்த இயேசு பிரான் புனிதர் என்பதிலும் அவர் வணக்கத்துக்குரியவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் ஒருவர் மட்டுமே கடவுள் என்றும், கடவுளை அடைவதற்கான வழிகாட்டி என்றும் மற்ற மதத்தின் மகான்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள்,அவர்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் எல்லாம் சைத்தான்கள் என்றும் கூறுவது எந்தவகை ஆன்மிகம்?

ஆண்டாண்டு காலமாய் கபிலர், புத்தர், சங்கரர், ராமானுஜர், மத்வர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், வள்ளலார், பாரதியார் என எத்தனையோ மகான்களை அடுத்தடுத்து இந்தப் புவிக்குத் தந்த பாரதத்தில் உள்ள மக்களை, எல்லாவித நல்ல நம்பிக்கைகளும் இறைவனிடம் கொண்டு செல்லும் என்ற பரந்த மனப்பான்மையை இதுபோன்ற மகான்களின் மூலம் பெற்றிருக்கும் மக்களைப் பார்த்து பாவிகள் என்று அழைப்பது என்ன நியாயம்? எந்தவித இறைபக்தி?

மக்களுக்காக ரத்தம் சிந்திய இயேசுவின் பெயரால் மேலைநாடுகளில் ரத்தம்  சிந்தவைக்கப்பட்ட மக்கள் எத்தனைப் பேர்? சிலுவைப்போர் என்ற பெயரில் எத்தனை பேர் கொன்று குவிக்கப்பட்டனர்? அதற்கு முன்பாகவே, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில், paganism என்று பொதுவாக அழைக்கப்படும் நாட்டுப்புற மதங்களைப் பின்பற்றியவர்களை பூண்டோடு அழித்து, அந்த மதங்களின் அடையாளமே இல்லாமல் செய்துவிட்டார்களே? Witch hunt என்ற பெயரில் எத்தனைப் பெண் சாமியார்கள் எரித்தும், சிதைத்தும் கொல்லப்பட்டனர்?


இந்தியாவில்கூட போர்த்துக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் ஏற்படுத்திய ரணங்களை கோவாவில் காணலாம். சென்னையில்கூட, கடற்கரையில் இருந்த  மயிலை கபாலீஸ்வரர் கோவில், இவர்களால் கபளீகரம் செய்யப்பட்டு பின்னர் இடிபாடுகளோடு இடம் மாறியது.

இப்போது ஆயுதங்களை கைவிடுத்து, கத்தியில்லாத யுத்தத்திற்கு தயாராகிவிட்டார்கள். இயேசுவை வணங்குவதால் தாங்கள் சொர்க்கத்துக்குப் போவோம் என்ற நம்பிக்கை மதம் மாற்றும் இறை(ரை) பணியாளர்களிடம் இருக்கிறதோ இல்லையோ, மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்ற நம்பிக்கையே இவர்களிடம் விஞ்சி நிற்கிறது.

எல்லோரிடமும் இறைத்தன்மை இருக்கிறது, அதை நோக்கிப் பயணியுங்கள் என்றும் எல்லா வழிகளும் ஒரே இலக்கையே சென்றடையும் என்றும்  சொல்லுகின்ற ஹிந்து மதம் இவர்கள் பார்வையில் காட்டுமிராண்டி மதம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற ஹிந்து மதம், சகிப்புத்தன்மை அற்ற மதம். ஆனால், எனது நம்பிக்கைக்கு இவர்களையும் மாற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடிப்பதுடன், பாவிகள், சைத்தான்கள் என்றும் பிற நம்பிக்கையாளர்களை சாடுகின்ற  இவர்கள்தான் சகிப்புத்தன்மைக்கும், அன்புக்கும் சொந்தக்காரர்கள்.

.
சிலுவையில் மரித்த இயேசுவின் பெயரால் உண்மையையும் சிலுவையில் அறைந்து தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் திரிசூலநாதர் ஆலயத்தின் அருகே உள்ள மலை பிருங்கி ரிஷி தவம் செய்தது என்று கருதப்படுவதால், அது பிருங்கி மலை என்று பெயர்பெற்றது. அது எப்படியோ பரங்கி மலை என்று மருவியது. அதற்கு ஏற்றாற்போல, வரலாற்றுச் சான்றுகளே இல்லாமல் அது தாமஸ் வந்து தங்கிய மலை என்று கதை கட்டி  விட்டார்கள். தற்போது அது செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிவிட்டது.

அதுபோன்ற புதிய சரடு, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் தற்போது அரங்கேறியுள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, தேவசகாயம் பிள்ளை என்று மதம் மாறிய நீலகண்டப் பிள்ளை, மதம் மாறிய காரணத்துக்காகவே திருவாங்கூர் படைக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாராம். அதற்காக அவருக்கு போப் சிபாரிசின் பேரில் அமர்க்களமாய் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் உண்மை வரலாறு என்ன சொல்கிறது? கொலைத் தண்டனை விதித்த வில்லனாக சித்தரிக்கப்படும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மர், வரப்புழா சர்ச் கட்ட வரியில்லா நிலம் கொடுத்து உதவியவர்.

மேலும், நீலகண்டப்பிள்ளையை மதம் மாற்றியதாக, கிறிஸ்துவத்தை போதித்தவராக கூறப்படும் டச்சுக்காரரான டிலனாய், புரோட்டஸ்டன்ட் மதப்பிரிவினர். அவர் எப்படி கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவில் சேர நீலகண்டப் பிள்ளையைத் தூண்டியிருப்பார்? அத்துடன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் படைப்பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்த டிலனாய்க்காக உதயகிரி கோட்டையில் சர்ச் ஒன்றை கார்த்திகைத் திருநாள் மகாராஜா கட்டிக் கொடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, நீலகண்டப் பிள்ளை எனப்படும் தேவசகாயம் பிள்ளை என்று ஒருவர் இருந்தாரா? என்பதற்கே வரலாற்றுச் சான்று இல்லை. வெறும் செவி வழிக்கதை மட்டுமே. அதை யார் கிளப்பி விட்டார்களோ? மேலும், திருவாங்கூர் சமஸ்தான வரலாற்று ஆவணங்களின் படி ராஜத்துரோகம், கொலை, களவு போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


வரலாற்றைத் திரித்து யாருக்கோ புனிதர் பட்டம் கொடுக்கட்டும். ஆனால் அதற்காக, பரந்த மனப்பான்மையோடு செயல்படும் ஹிந்துக்கள், அவ்விதமே நடந்து கொண்ட மார்த்தாண்ட வர்மா உள்ளிட்ட நமது முன்னோர்கள் எதற்கு படுகொலை செய்த பாவிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டும்?

இந்தியாவை மதமாற்றக் களமாகக் கருதும் திருச்சபையினர் ஏற்கெனவே புனிதர் பட்டம் கொடுத்த ஒருவரின் வரலாற்றைப் பார்ப்போம்.  அவர்தான் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர். ஸ்பெயினில் பிறந்து போர்த்துகீசியர்களின் பேராதரவுடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தீவிர கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்தவர் சேவியர். கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகும் ரகசியமாக சொந்த மத வழிபாடுகளில் ஈடுபட்டவர்களுக்கும், மதம் மாற மறுக்கும் அப்பாவிகளுக்கும் inquisition எனப்படும் சித்திரவதை செய்து கொல்லும் தண்டனையைத் தர வேண்டும் என பாடுபட்டவர் இந்த சேவியர். அவர் இறந்த பிறகு, அவரது இந்த முயற்சி உயிர்பெற்றது. கோவாவில் 1560-ல் கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த inquisition என்ற அந்த வதை படலத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.


முக்கியமாக ஒரு விஷயம். தற்போது புனிதர் என்று அறிவிக்கப்பட்டுள்ள தேவசகாயம் பிள்ளை ஜனவரி 14-ம் தேதிதான் கொல்லப்பட்டார் என்று ஆன்மீக நாட்டத்தைவிட மதமாற்றம் செய்யும் பணியே முக்கியம் என்று கருதும் திருச்சபையினர் கூறுகின்றனர். அந்த ஜனவரி 14-ம் தேதிதான் தமிழர்கள் பொங்கல் கொண்டாடுகிறோம். முன்பு கிரீசிலும், ரோமிலும் நடந்ததை நினைத்தால், நமது பொங்கல் பண்டிகையும் விரைவில், ஞானஸ்நானம் பெற்று ‘பொங்கல்’ ஆகலாம். எச்சரிக்கை!
-    
  - பத்மன் 

6 கருத்துகள்:

  1. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன ஏசு கிறிஸ்துவின் பெயரை சொல்லி நடந்த கொலைகள் தான் எத்தனை எத்தனை ? ஏசுவை கும்பிடா விட்டால் 2000 இல் உலகம் அழிந்து விடும் என்றார்கள் , பிறகு 2012 இப்படி கதை விட்டு மதத்தை வளர்க்க சொல்லி எந்த கடவுள் சொன்னார் . ஏசுவை கும்பிட்டால் தான் சொர்க்கம் என்றால் ஏசு பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? முதலில் மதம் , கடவுள் எல்லாம் அவரவர்கள் தனிப்பட்ட விஷயம் , அதை எப்பொழுது சோப்பு ,சீப்பு போல விற்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே அந்த கடவுள் மேல் மதிப்பு போய் விடுகிறது . ஹிந்து மதத்தை பற்றிய புரிதலும் , தெளிதலும் வளரும் வரை இது போன்ற வியாபாரங்கள் தொடர்ந்துகொண்டு தானிருக்கும் . தானாக விரும்பி மதம் மாறுவதில் தப்பில்லை , ஆனால் மக்களின் ஏழ்மையையும் , அறியாமையையும் பயன்படுத்தி மூளைச்சலவை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை இது போன்ற துன்பவியல் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டு தானிருக்கும் ...

    பதிலளிநீக்கு
  2. உள்ளங்கனி நெல்லிபோல் கருத்துக்கள், மறுப்பவர்கள் சான்றோடு மறுக்கலாம். மதிப்போர்கள் இந்த கட்டுரையை மீள்பதிவு செய்யலாம். திரு. அனந்தபத்மனாபன் அனுமதியோடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனந்து மற்றும் சந்திரசேகரன். இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்ய நினைப்பவர்கள் உடனடியாக அப்படியே மறுபதிவு செய்யலாம், பகிரலாம், என் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. மாற்று மதம், மாற்று மொழி, மாற்று கலாசாரம், மாற்று கருத்து உடையோரை அவரவர் தன்மைப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கருத்துகளை மறுதலிக்கலாம், ஆனால் காழ்ப்போடு வெறுக்கக் கூடாது. மேலும் எனது கருத்து மட்டுமே சிறப்பு என்று வெறி கொள்ளவும் கூடாது. அது மதமாக இருந்தாலும் சரி, இஸமாக இருந்தாலும் சரி, இதுவே மானுடம் வாழ்வதற்கான விதி. அன்புடன் பத்மன்

      நீக்கு
  3. dec 28 ananda vikadan 139 haai madhan ans for qn about2ooo ; 100per cent wrong historically this calender calculation; dec 99 dinamalar daily nagerkoil edition xian priest msgd advt also told bible not mentioned dec25 is not birth date of chirst

    பதிலளிநீக்கு
  4. திரு அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் சென்றார். அவர் சென்று திரும்பிய இடம் எல்லாம், டேங்கர் லாரியில் தண்ணீர் வைத்து, சாலை முழுவதும் கழுவிவிட்டவர்களின் மதம் தான் என்ன? ஹராமி என்று கூறி கழுவிவிட்டனர். மதமாற்றம் செய்பவர்களுடைய முக்கிய இலக்கு, கிராமப்புற மக்களும், மீனவ மக்களும்hக உள்ளனர். கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் வந்தபோது, அதற்காக எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றன? இத்தனைக்கும் கட்டாயமாக மதமாற்றம் செய்தால் மட்டுமே தண்டனை என்பதைக்கூட இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஓட்டுக்காக போலி மதச்சார்பின்மையை கட்சிகள் கடைபிடிக்கும் வரையில் இதற்கு முடிவு இல்லை. நாம் அனைவரையும் சகோதரர்களாக பாவிக்கின்றோம். அவர்கள் நம்மை ஒரு கண்ணத்தில் அடித்தாலும் நாம் மறு கண்ணத்தைத்தான் காண்பிக்கின்றோம். உண்மையில் நாம்தான் அவர்கள் மதத்தின் கோட்பாடுகளை கடைபிடிக்கின்றோம்.

    பதிலளிநீக்கு