சனி, 24 நவம்பர், 2012

கருணைக்கு மறுபெயர் கசாப்




(பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் கூட சிலர் விமர்சிப்பதைப் பார்த்து எழுந்த அறச்சினத்தால் உருவான அங்கத (satire) கட்டுரை இது.)


உலகத்தில் தோன்றிய எத்தனை மனிதர்கள், தங்களது பெயருக்குப் பொருத்தமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அப்படி நடந்துகொண்ட புண்ணிய மகான்களில் ஒருவர்தான் அஜ்மல் கசாப். கசாப் என்ற அரபு வார்த்தையின் பொருள், கால்நடைகளை வெட்டுபவர். அஜ்மல் என்றால் அழகு என்று அர்த்தம். கால்நடைகளை வெட்டும் குலத்தில் அவதரித்த இவர்தான் அந்தச் செயலை எத்தனை அழகாகச் செய்திருக்கிறார்?


நான்கு கால் ஜீவன்களைக் கொல்வது நமக்கு அழகல்ல என்று, இரண்டு கால் ஜீவன்களை அல்லவா அஜ்மல் கசாப் கொன்று தள்ளி இருக்கிறார். அதுவும் வெட்டுவது பழமையான பத்தாம்பசலித்தனம் என்பதால், நவீன கொலைக்கருவியான துப்பாக்கியைக் கொண்டு, காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் படபடவென சுட்டுத் தள்ளியுள்ளாரே?


இந்தியாவின் ஜனத்தொகையை குறைப்பதற்காக இறைவன் அனுப்பிவைத்த அற்புதக் கருவி அல்லவா அஜ்மல் கசாப்! நமது பாதுகாப்புப் படையினரின் முட்டாள்தனத்தால், இவரோடு பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்து, மக்கள்தொகையைக் குறைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்ட மற்ற அஹிம்சா மூர்த்திகள் அநியாயமாய் உயிரிழக்க, இவர் மட்டும்தானே நமக்கு முழுசாகக் கிடைத்தார்.


அப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த கசாப்பை காலாகாலத்திற்கு சிறை என்ற பெயரிலே உல்லாசமாய் தங்கவைத்து, வேண்டுகின்ற அளவுக்கு பிரியாணி இத்யாதிகளை வழங்கி போற்றிப் பாதுகாப்பது அல்லவோ நமது கடமை? நமது நாட்டு அப்சல் குருவுக்கு அப்படித்தானே உபசரிக்கிறோம்? அயல்நாட்டில் இருந்து வந்ததால் அஜ்மலுக்கு தனி நீதியா?

எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்று தாய்நாடான பா(க்)கிஸ்தானே கைகழுவிவிட்ட இந்த துர்பாக்கியசாலியான உத்தமரை நாம் அல்லவோ தத்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்? அதற்குப் பதில், சட்டத்தின் முன் நிறுத்தி, நாமே வழக்கறிஞரையும் அமர்த்தி வாதாடி, மரண தண்டனையை  அல்லவோ வழங்கி விட்டோம்?


சரி, மரண தண்டனையை அறிவித்ததோடு திருப்திபட்டால் போதாதா? எத்தனைப் பேருக்கு தீர்ப்பு வழங்கிய கையோடு இந்தப் பிரச்சினையை மறந்துவிட்டு, இயற்கையே அதன் கடமையை நிறைவேற்றட்டும் என்று பெருந்தன்மையாக விட்டு விட்டோம்? கசாப்பிடம் மட்டும் ஏன் இந்த காட்டுமிராண்டித்தனம்? துப்பாக்கியை கையில் எடுத்த அப்பாவி அஜ்மல் கசாப்பின் கழுத்திலே தூக்குக் கயிற்றை மாட்ட எத்தனை நெஞ்சழுத்தம்?



அப்பாவி இந்தியர்களிடம் தனக்கு இல்லாத கருணை, தனக்காவது கிடைக்கட்டுமே என்ற நினைப்பில், போனால் போகிறது என்று பெரிய மனதுடன் குடியரசுத்தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்தாரே கசாப்?  அவரது கருணை மனு என்ன கருணைக் கிழங்கோ, தொட்டால் கை அரிக்கும் என்று தள்ளுபடி செய்துவிட்டார்களே? கருணை மனுவை கண்டும் காணாதபடி, எந்த முடிவும் எடுக்காமல் கமுக்கமாக இருக்கும் கலையையாவது பின்பற்றி இருக்கலாமே?

மரண தண்டனை, நாகரீகம் நிறைந்த மக்கள் சமுதாயத்திற்கு ஏற்புடையது அல்ல என்று அறிவுசீவிகள் கர்ச்சிப்பது இவர்கள் காதில் விழவில்லையா? தீவிரவாதிகளாகவும், கொடூரக் கொலையாளிகளாகவும் மாறியவர்கள், மக்களைக் கொன்று குவிப்பது அவர்களது பிறப்புரிமை, கண்டிக்கவும் கூடாத கட்டாயக் கடமை. அதனை நிறைவேற்றியதற்கு மரண தண்டனையா? இது அடுக்குமா?

திருமணம்கூட செய்துகொள்ளாமல், கொல்லுவது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்த கொள்கைக் கோமான் கசாப். அந்த குணக்குன்றுக்கு மரண தண்டனை மட்டுமல்ல, ஆயுள் தண்டனைகூட விதித்திருக்கக் கூடாது. அவரது நினைவாக, இனிமேல் பயங்கரப் படுகொலைகள் செய்யும் தீவிரவாதிகளுக்கும், கொடூரக் கொலையாளிகளுக்கும் மரண தண்டனை, ஆயுள் தண்டனை வழங்குவதைத் தவிர்ப்போம். சமூகத்தில் இதுபோன்ற (பிறர் உயிர் போக்கும்) தியாகிகளை சாதாரணமாக நடமாடவிட்டு, சந்தோஷம் தொலைந்தாலும், சகல தோஷங்களும் நீங்கச் செய்வோம்.


-    பத்மன்

To read in English : Kasab, an another name of Kindness

4 கருத்துகள்:

  1. வாழ்க வஞ்சப்புகழ்ச்சி .நன்றி

    பதிலளிநீக்கு
  2. கசாப்பின் குண்டு துளைத்த கள்ளச் சந்தையில் வாங்கிய துப்பாக்கிக் கவசங்களை கொள்முதல் செய்த கொலைகாரர்களை என்று தூக்கிலிடுவது. சலாஸ்கரையும், கர்கரேவையும் கொன்றது கசாப்பா? இல்லவே இல்லை.....மகாத்மாவின் குல்லாவைப் போட்டுக் கொண்டு மாதா பிதாக்களைக் கூட மாட்டுச் சந்தையில் விற்கத் துணிந்த மனிதக் கேவலங்கள் அல்லவா?. மகாபாரதத்தில் வீடுமன் போல கண்டிப்பாக சலாஸ்கரும், கர்கரேயும் உயிரை விடும் நேரத்தில் கசாப்.......இது நீ துளைத்த குண்டல்ல.....எங்கள் அரசியல் வாதிகளின் அக்கிரமத்தினால் என் நெஞ்சில் உன் குண்டுக்கு வழி கொடுத்த அவர்கள் வழங்கிய புல்லட் புரூப் எனப் பெயரிடப்பட்ட சாக்குக் கவசங்கள் என்று தான் கூறியிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு