ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மேலான எங்கள் பாலா



(பிரபல பொருளாதார மேதையும், உலகில் சிறந்த நிர்வாகவியல் மற்றும் கணக்கியல் குருவும், பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் என்.ஆர்.ஐ. தமிழரும், அமெரிக்காவின் கெல்லாக் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், சென்னை கிரேட் லேக்ஸ் நிர்வாகவியல் கல்லூரி நிறுவனரும், திருக்குறள் பற்றாளரும், பண்பாளரும், என்னையும் தமது நட்பு வட்டத்துக்குள் இணைத்துக் கொண்டவருமான பவளவிழா நாயகர் டாக்டர்  பாலா. வி. பாலச்சந்திரன் அவர்கள் பற்றிய எனது அந்தாதிக் கவிதை. இந்தக் கவிதைக்கு என்னைத் தூண்டிய குழந்தை இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களுக்கு எனது நன்றி. இந்தக் கவிதை திரு. பி.வி. அவர்களின் 70 ஆண்டுக்கால நட்பைப் பாராட்டி டாக்டர் பாலா 9.09.2012 அன்று சென்னையில் நடத்திய நட்புத் திருவிழாவின்போது பாடப்பட்டது. -    பத்மன்)


வேளாண்மை செய்துயிரைப் போற்றுகின்றார் வேளாளர்
வாளாண்மை செய்துமண்ணைக் காக்கின்றார் வேந்தருமே
தாளாண்மை செய்துபொருள் சேர்க்கின்றார் வாணியரும்
மேலாண்மைப் பண்பதிலே மேல்.



மேலாண்மைக் கல்வியிலே மேல்நாடும் போற்றிடவே
கீழ்வானச் சூரியன்போல் வந்துதித்த சந்திரரே
பாலாவென் றன்பினாலே பாருக்குள் நண்பரெல்லாம்
பாராட்டும் பண்பாள ரே.


பாராட்டு உந்தனுக்குப் பார்முழுது முள்ளதன்றோ?
பாரக் குபாமாவும் நாடுகின்றார் நின்னை
பொருளியலும் பொல்லாக் கணக்கியலும் நின்சேவை
பெற்றே பொலிந்தது பார்.


பாரினில் பாரதர் போதனை ஆற்றலை
பார்த்தோம் கெல்லாக்கு பல்கலை தன்னில்
படித்தவர் உன்னிடம் வந்தார் முதலிடம்
பாசத்தால் "அங்கிளும்" ஆனாய்.


பாசத்தால் நண்பர்க்கு பாராட்டுச் செய்வதில்
பாரினில் உந்தனுக்கு நேர்யாரு முண்டாமோ?
பாரிவள்ளல் சாகவில்லை பாரிதோ என்றேதான்
பாலாவாய் வந்தன ரோ?


பாலாவின் நண்பரு மேபலாவில் தேன்சுவையாம்
நாளாகிப் போனாலும் வீணாகா நட்புமலர்
தோளோடு தோளிணைந்து தொண்டுபல செய்கின்றார்
தோழராம் வெங்கட ராமன்.


தோழருக்குச் சீர்செய்ய தோன்றிய சங்கமிங்கே
பாலராய் நாள்கழிந்து பாசம் பொழிகின்றார்
மேலான நட்புக்கு மேதினியில் ஓர்சுட்டு
பாலாவின் நட்பெனக் கூறு.



கூறுபுகழ் பாரதத்தின் மேன்மையை மேனாட்டில்
நாட்டினாய் நல்லபுகழ் கூட்டினாய் மேனாடு
சென்றாலும் தாய்நாட்டு வேர்தன்னைப் போற்றினாய்
நின்ற சீர்வளத்தால் நீ.



நின்றிடுமே நின்புகழ் மாமல்லன் ஊரிலுமே
கல்லிலே கலைவண்ணம் கண்டவன் மண்ணிலே
கல்லூரி வைத்திட்டாய் வையம் வியந்திடவே
மாஏரி என்றே பெயர்.


மாஏரி போன்றதாம் நீபெற்ற பட்டங்கள்
மாதாவும் பத்மஸ்ரீ மைந்தனுக்குத் தந்திட்டாள்
தாலாட்டுத் தந்ததமிழ் தான்மறவா பேராளா
பாலாவே நட்புக்கு வேள்.

-   -  பத்மன்



4 கருத்துகள்:

  1. அன்பான நண்பரே
    தங்களுடைய கவிதையின் ஆக்கம் பாராட்டுக்குரியது
    உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    பார்த்தா

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான மனிதரைப் பற்றி அறிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு