ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பஞ்சபாண்டவர் பூஜித்த பஞ்சலிங்க ஆலயம்




சிங்கத்தின் வாய் திறந்திருந்தால் இரை தானாகவே வந்து விழுந்து விடுவதில்லை. வேட்டையாடினால்தான் அதற்கு இரை கிடைக்கிறது. அதுபோல முயற்சியின் மூலமே லட்சியம் நிறைவேறுகிறதே அன்றி, வெறும் கற்பனைக் கோட்டைகளால் அது நிறைவேறுவதில்லை. நமது முயற்சியைத் திருவினையாக்கும் தெய்வத் திருத்தலங்களில் இப்போது நாம் அறியவிருப்பது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகேயுள்ள இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயம்.

நமது பாரதப் பண்பாட்டில் பஞ்ச என்று சொல்லப்படும் ஐந்துக்கு தனி மகத்துவம் உண்டு. நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம். இந்த பஞ்ச பூதங்களும், சப்தம் எனப்படும் ஓசை, ஸ்பர்ஷம் எனப்படும் தொடு உணர்வு, ருசி எனப்படும் சுவை உணர்வு, ரூபம் எனப்படும் வடிவம், கந்தம் எனப்படும் வாசனை ஆகிய பஞ்ச தன்மாத்திரைகளால் உருவாகி வெளிப்பட்டவை.



இந்த பஞ்ச பூதங்களாகவும், அவற்றின் அடிப்படை மூலக் கூறுகளான பஞ்ச தன்மாத்திரைகளாகவும் இருப்பது, எல்லாம் வல்ல இறைவனின் சித்தமே என்பது ஆன்றோர் வாக்கு. இதை உணர்த்தத்தான் பஞ்ச பூதங்களுக்குரிய விசேஷ ஸ்தலங்களில் பரமேஸ்வரன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி பஞ்ச லிங்கங்களாக, பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஐந்து லிங்கங்களாக ஒரே இடத்தில் சிவபெருமான் காட்சி கொடுக்கும் வித்தியாசமான க்ஷேத்திரம்தான் இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயம்.

பஞ்ச பாண்டவர்களில் தருமன் அறப்பண்புக்கும், பீமன் பலத்திற்கும், அர்ச்சுனன் வீரத்திற்கும், நகுலன் புத்திக்கும், சகாதேவன் பக்திக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ஐந்து குணாதிசயங்களுக்கு ஏற்றாற்போல் ஐந்து சிவலிங்க ஆலயங்கள், இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரையில் ஒருசேர  அமைந்துள்ளன.



தருமன் வணங்கிய நீலகண்டேஸ்வரரின் பெயரினாலேயே இந்த ஆலயம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. ராஜகோபுரம் வழியாக நுழைந்ததும் நேரே காட்சி கொடுப்பது நீலகண்டேஸ்வரர்தான். அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுவதற்காக, தாம் நஞ்சை அருந்தி, தேவர்களுக்கும் மகான்களுக்கும் அமுதம் கிடைக்க அருள்பாலித்த தியாகச் செம்மல் அல்லவா நீலகண்டர்? தியாகத்தைவிட, பிறர் நலனுக்காக தாம் துன்பத்தை ஏற்கத் தயாராக இருப்பதைவிட மிகச் சிறந்த தர்ம சிந்தனை உண்டா? அப்பேர்பட்ட நீலகண்டேஸ்வரரை முதலில் இங்கு வணங்குகிறோம்.

பழமண்ணிப் படிக்கரையில் உள்ள நீலகண்டேஸ்வரர், பாற்கடல் கடைந்த போது மட்டுமல்ல, பஞ்ச பாண்டவர்களுக்காகவும், இங்கே நஞ்சைப் போக்கி அமுதம் வழங்கியிருக்கிறார். இங்கே பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை அறிந்த துரியோதனன், சகுனியின் ஆலோசனையின்படி இங்குள்ள பிரும்ம தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து விடுகிறான். அந்த நச்சுக் குளத்தில் பஞ்ச பாண்டவர்கள் நீராட வரும்போது, அதுகுறித்து அம்பாள் ஈசனிடம் முறையிடுகிறாள்.



அம்பிகையின் பார்வை பட்டால் அந்த நச்சுக்குளம் அமிர்த குளமாக மாறிவிடும் என்று ஈசன் கூற அப்படியே அம்பிகை செய்கிறாள். அதனால் இங்குள்ள அம்மனுக்கு அமிர்தகரவள்ளி என்று திருப்பெயர். தரும சிந்தனை பெற வேண்டியவர்களும், குறிக்கோள் நிறைவேற வேண்டியவர்களும் இந்த நீலகண்டரை வழிபட்டு பலன் பெறலாம்.



நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரை நாதர் ஆலயம் உள்ளது. படிக்கரை நாதருக்கு அருகே மங்களாம்பிகை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. வம்பு வழக்குகள் நீங்கவும், வழக்கு விவகாரங்களில் வெற்றி வேண்டுபர்களும் இந்த பட்டிக்கரைநாதரை வணங்கி வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இலுப்பைப்பட்டு பஞ்சலிங்க ஆலயத்தில் நாம் மூன்றாவதாக வணங்க வேண்டியது, பீமன் வழிபட்ட மகதீஸ்வரர். மகத் என்றால் பெரிய என்று பொருள். பீம என்பதற்கும் பெரிய என்று பொருள் உண்டு. பக்தனுக்கும், பகவானுக்கும் என்ன ஒரு பெயர் பொருத்தம். இந்த மகதீஸ்வரர் ஷோடஷ லிங்கமாகக் கட்சி தருகிறார். அதாவது இந்த லிங்கத் திருமேனியில் பதினாறு பட்டைகள் இருக்கும். சரிவர திதி கொடுக்க இயலாதவர்கள் மற்றும் பிதுர்கடன் உள்ளவர்கள் மகதீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்றலாம் என்பது ஐதீகம்.



இலுப்பைப் பட்டில் நகுலன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பரமேசர். இவரை வணங்குவதன் மூலம் வீடு, வாகன வசதி, நிலபுலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவப் பூர்வமான நம்பிக்கை. இதேபோல் சகாதேவன் வழிபட்ட சிவலிங்கம், முக்தீஸ்வரர். பக்தி இருந்தால் முக்தி நிச்சயம் என்பதை, பக்திமானான சகாதேவன் பிரதிஷ்டை செய்த முக்தீஸ்வரரின் திருநாமம் எடுத்துரைக்கிறது.

இவரை வணங்குவதன் மூலம் ஜாதக தோஷங்கள், கால தோஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மேலும், பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய பஞ்ச லிங்கங்களை நாமும் வணங்கினால், பஞ்சமகா பாவங்களும் நீங்கி புண்ணியம் எய்தலாம் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. மேலும் இங்கு கோவில் கொண்டிருக்கும் அமிர்தகரவள்ளி மற்றும் மங்கலாம்பிகையை தரிசிப்பதன் மூலம் நச்சுகளைப் போன்ற தோஷங்கள் நீங்கி மகாசக்தியும், மங்களமும் நிலைக்கும் என்பதும் ஐதீகம்.



இந்த ஸ்தலம் சிவபெருமானுக்கு மட்டுமல்ல, அவர்தம் மைந்தனான முருகப் பெருமானுக்கும் உகந்ததாகும். இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் நீலகண்டேஸ்வரர் மற்றும் படிக்கரைநாதருக்கு அருகே என இரண்டு சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இரண்டு இடங்களிலும் வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தெயவீகத் திருக்காட்சி தருகிறார்.

மேலும், இந்தப் பகுதியில் ஓடும் காவிரி நதியின் கிளை ஆறான மண்ணியாறு முருகப் பெருமான் அருளால் உருவானது எனப் புராணங்கள் கூறுகின்றன. அந்த மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்தலம் என்பதால் இந்த இடத்துக்கு பழமண்ணிப் படிக்கரை என்று பெயர். அத்துடன் இலுப்பை மரம் மிகுந்திருப்பதால் இலுப்பைப் பட்டு என்றும் பெயர் வந்ததாம். பட்டு என்பது இந்தப் பகுதியில் மிகுந்திருக்கும் நெசவாளர் சமுதாயத்தைக் குறிக்கும் சொல் என்றும் கூறுவாருண்டு.



பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் மகதீஸ்வரர் சந்நிதிக்கு அருகே இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கே வலம்புரி மற்றும் இடம்புரி என இரண்டு விதங்களிலும் ஆணைமுகத்தான் நமக்கு அருள்புரிகிறார். இந்த இரட்டை விநாயகரை பஞ்ச பாண்டவர் மனைவியான திரௌபதி வழிபட்டிருக்கிறாள். மேலும் ஆனந்தத் தாண்டவம் ஆடும் மற்றொரு விநாயகரும் இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார்.

பழமண்ணிப் படிக்கரை பஞ்ச லிங்க ஆலயத்தின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம். முற்காலத்தில் மாந்தாதா என்ற அரசன் நாட்டையும் உடல் வலிமையையும் இழந்து அலைந்து திருந்தபோது, உரோமச மகரிஷி இந்த ஸ்தலத்தில் உறையும் ஈசனின் மகிமையை எடுத்துரைத்து, இங்குள்ள ஆலயங்களை சீர்படுத்தி வழிபட உபதேசித்தார். அதன்படி மாந்தாதா அரசன் இங்கே மண்ணியாற்றைக் கடந்து படகில் வந்தபோது ஒரு இலுப்பைக் காயும் மிதந்து வந்ததாம். ஈசனுக்கு விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் உகந்தது என்பதால் அதனை அரசன் எடுத்து வந்து இங்கே ஸ்தல மரமாக நட்டு வைத்தான் என்கிறது ஸ்தல வரலாறு.



பழமண்ணிப் படிக்கரை நீலகண்டேஸ்வரரை முற்காலத்தில் பிரும்மாவும் வழிபட்டிருக்கிறார். தான் நீராடுவதற்காக பிரும்மா உருவாக்கியதால் இங்குள்ள குளத்துக்கு பிரும்ம தீர்த்தம் என்று பெயர். பஞ்ச பாண்டவர்களுக்காக இறைவனும் இறைவியும் அருள்புரிந்ததால் இந்தக் குளம் அமிர்த தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி தினத்தன்று பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் சிறப்பாக உத்சவம் கொண்டாடப்படுகிறது. அப்போது பஞ்ச மூர்த்திகளும் வீதிஉலா வருவார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கும், கார்த்திகை தோறும் முருகப் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.



வரலாற்று ரீதியில் இந்தக் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆயினும் இது எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை சுந்தரர் பாடிய தேவாரத் திருமுறைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. காவிரிக்கு வடகரையில் உள்ள சோழ நாட்டு சிவஸ்தலங்களில் முப்பதாவது ஸ்தலமாக இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை க்ஷேத்திரம் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலுப்பைப் பட்டுக்கு மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்தில் செல்லலாம். மணல்மேடு என்ற இடத்தில் இறங்கிக் கொண்டால், அங்கிருந்து  மூன்று கிலோமீட்டர் தொலைவில் பாப்பாக்குடி செல்லும் வழியில் இலுப்பைப் பட்டு கிராமம் உள்ளது.



உடல் அழுக்குகளைப் போக்கி புறத் தூய்மை பெறுவதற்கு ஆற்றில் குளிக்க படிக்கரை உதவுகிறது. நமது உள்ள அழுக்குகளையும் பாவங்களையும்  போக்கி உள்ளத் தூய்மையும் புண்ணியமும் பெற பழமண்ணிப் படிக்கரை நமக்கு உதவுகிறது. இழந்த செல்வம், புகழ் ஆகியவற்றை மீண்டும் அடைவதுடன், வாழ்வில் ஏற்றம் பெற்று இறைவனின் பாதர விந்தங்களையும் மீண்டும் அடைய இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை பஞ்சலிங்க ஆலயத்துக்கு ஒருமுறையாவது சென்று வருவோம்.

     - பத்மன் 


3 கருத்துகள்: