ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வாசல் என்றும் வாழியவே!

(நடுநாயகமாய் அமர்ந்திருகிறார் கவிமாமணி வாசல் வசந்தப்பிரியன் )

(வாசல் என்ற கவிதை அமைப்பை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய வசீகரக் கவிஞர் கவிமாமணி வாசல் வசந்தப்பிரியன். மாதம்தோறும் முதல் ஞாயிறைக் கவிஞாயிறாய் புலரவைத்த அந்தப் புலவர், கடந்த மாதம் அமரரானார். மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், உள்ளகரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் மட்டுமின்றி சென்னை முழுவதும் , ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கவிஞர்களை ஆதரித்த, ஊக்குவித்த அந்தக் கவிவேந்தருக்கு நினைவஞ்சலி செலுத்த, இன்று (03.02.2013) மூவரசன்பேட்டை வியாபாரிகள் சங்கக் கட்டட திருமண மண்டபத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்னாரின் நினைவைப் போற்றி அடியேன் படைத்தளித்த கவிதையை இங்கே காணிக்கை ஆக்குகிறேன்.)


இல்லத்தின் வரவேற்பு வாசலென்பார் நல்ல
உள்ளத்தின் வரவேற்பு வாசல் அமைப்பேயாம்
பள்ளத்தில் பாய்ந்துவரும் நீர்விசைபோல் அன்பு
வெள்ளத்தால் தமிழ்வளர்த்தார் வசந்தப் பிரியனிவர்.

சொல்லெல்லாம் வெல்லமென தித்திக்கும் இவர்பேச்சு
இன்றெல்லாம் கேட்டாலும் தெவிட்டாதே இவர்கவிதை
நன்றெல்லாம் நவின்றிடுமே நானிலத்தில் இவர்கருத்து
வென்றெடுத்த நமைவிடுத்துப் போனதைய்யோ இவர்மூச்சு.


மூவரசன் பேட்டையிதை தமிழரசன் கோட்டையென
நாவரசன் அவரமைத்துக் கவிரசமே பருகவைத்தார்
நவரசமும் முகம்தேக்கி பரவசமாய் கவிபொழியும்
அவர்வசமாய் நாமிருக்க, அவசரமாய் போனாரே!

கவிஞர்கள் ஒருபோதும் சேர்ந்திருக்க மாட்டார்கள்
கசப்பான உண்மையிதைக் கசக்கியே எறிந்தவராம்
உவப்பாக மாதத்தின் முதல்கதிர் தினத்தன்று
தவமாக நமையிணைத்த தகையாளர் மறைந்தாரே!





தமிழ்க்கோட்டை வாசலிது தமிழாண்ட தலைவன்
புகழ்க்கோட்டை வாசலிது ஒருபோதும் மூடாது
வசந்தத்தை அரவணைத்து வாசமிகு தமிழ்க்கவிதை
வார்த்திட்ட வாசலிது என்றென்றும் வாழியவே!

        -    பத்மன்




2 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதம்.
    WONDERFUL AND NICE
    உங்களுக்கு நேரம் இருப்பின் எனது கூகுள் ப்ளாக்
    'easyhappylifemaker.blogspot.com' க்கு விஜயம் செய்யுங்கள்

    'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள் - WEAR 'CONFIDENT' GLASS AND DEFEAT THE WORLD
    For sample Click the link..
    http://easyhappylifemaker.blogspot.in/2013/01/wear-confident-glass-and-defeat-world.html

    பதிலளிநீக்கு
  2. #கவிஞர்கள் ஒருபோதும் சேர்ந்திருக்க மாட்டார்கள்
    கசப்பான உண்மையிதைக் கசக்கியே எறிந்தவராம்#

    Excellent words . Good poem ...

    பதிலளிநீக்கு