வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பொருள் தரும் குறள்



வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று வாழ்வது வாழ்க்கையல்ல.  அதற்கு ஓர் அர்த்தம், பொருள் இருக்கிறது. வாழ்க்கை ஓர் அனுபவமாக இருக்கலாம், ஆனால் அதனை அனுபவிக்க சில அடிப்படை லட்சியங்கள் உள்ளன. பாரத மெய்ஞான மரபின்படி, வாழ்வின் புருஷார்த்தங்கள், அதாவது அடிப்படை நோக்கங்கள்- தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு).

இதில் முதல் மூன்றான அறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால்தான் இறுதி இலக்காகிய வீடு (விடுதலை) கிடைக்கும். முக்தி என்பது, இறப்புக்குப் பின் அடைவது மட்டுமல்ல, இருக்கும்போதும் அனுபவிக்கக் கூடியதுதான். அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது, தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது.

அதனால்தான் தமிழகத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மொழியும் முப்பாலாகிய திருக்குறளைப் படைத்தார். இந்த முப்பாலிலேயே அப்பாலும் (வீடுபேறும்) அடங்கிவிடுகிறது. இதைத்தான் திருவள்ளுவர்,
“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
 தெய்வத்துள் வைக்கப் படும்” (- குறள் 50)
என்று ஒரே குறளில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால், வானில் உறைகின்ற தெய்வத்துக்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்கிறது திருக்குறள்.

மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனையே ஈஸ்வரன் என்றுதான் அழைக்கிறோம். இதன் பொருள், அனைத்து ஐஸ்வர்யங்களையும், அதாவது பொருள் வளங்களையும் உடையவன் என்பதே. ஆக, வாழ்க்கைக்கு பொருள் அவசியமாகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

பர உலக வாழ்விற்கு அதாவது, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதற்கு, மோட்சப் பெருவாழ்வு வாழ்வதற்கு, அறப்பண்புகளாகிய அருள் எவ்வாறு அவசியமோ, அதேபோல, இந்த மண்ணுலகில் இக வாழ்வை நன்கு வாழ்வதற்கு பொருள், அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். பொருளின் இந்தப் பெருமையை, அருளுடைமை என்ற அதிகாரத்தில் அவர் கூறியிருப்பது கூடுதல் சிறப்புடையது. அந்தக் குறள்:
     “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
       இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” (குறள் 247)


ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாகக் கருதி, கடைபிடிக்க வேண்டும். பொருள்சார் விழிப்புணர்வு (financial awareness) அவசியம் என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் முழங்கியிருக்கிறது. உலகின் முதல் பொருள் நூல் என்று வர்ணிக்கப்படும் அர்த்த சாஸ்திரம், நம்நாட்டு அறிஞர் சாணக்கியரால்தான் படைக்கப்பட்டது.

ஆயினும் ஒருகாலத்தில் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த இந்தியா, இன்று செல்வவளம் மிகுந்த நாடாக இல்லை. இதனை ஏழைநாடு என்று சொல்வதைவிட ஏழைகள் மிகுந்த நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் தமது பொருள்வளத்தைப் பெருக்கிக் கொள்வது அவசியம். இதனை, அர்த்த சாஸ்திரத்திற்கு இணையான பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இவ்விதம் எடுத்துரைக்கிறது:
     “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
       பொருளல்ல தில்லை பொருள்.” (குறள் 751)

அதாவது, ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருள்படுத்தக் கூடியவராக, மதிக்கப்படக் கூடியவராக மாற்றக் கொடிய சிறப்பு, பொருளை (செல்வத்தை) தவிர வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. எவ்வளவு அழகான குறள்.


இன்னொரு குறளில், பொருள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை,
     “இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை
       எல்லாரும் செய்வர் சிறப்பு.” (குறள் 752)
என்று சற்று அதிரடியாகவே கூறுகிறார் திருவள்ளுவர். இதன் பொருள், ஏழைகள் அவமதிப்புக்கு உரியவர்கள் என்பது அல்ல. செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும், இல்லாதவரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பு. ஆகையால் அதனைச் சுட்டிக்காட்டி, அனைத்து மக்களையுமே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று தூண்டுகிறார் தெய்வப்புலவர்.

இவ்வாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டினர், குறிப்பாகத் தமிழர்கள், பொருளாதார வல்லமை உடையவர்களாகத் திகழ, திருவள்ளுவர் பல்வேறு யோசனைகளை, வழிமுறைகளை, அறிவுரைகளை மிக அருமையாக சின்னஞ்சிறு குறள் பாக்களில் எடுத்தியம்பியுள்ளார். “பொருள்” நிறைந்த அந்தக் குறள்களை உங்களுடன் அவ்வப்போது இனி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்.

    -    பத்மன்

3 கருத்துகள்:

  1. குறள் எண் 247 -க்கு அடுத்த குறளில் பொருளின் நிலையை மிக அருமையாக சொல்கிறார்...

    அதே போல் நீங்கள் குறிப்பிட்ட (குறள் எண் 751-760) பொருள்செயல்வகை அதிகாரத்தில் இன்றைய நிலையை விளக்கும் போது ஞாபகம் வரும் பாட்டு சுருக்கமாக...

    ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே-அவனை
    உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே...
    என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை-உலகம்
    எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே...

    ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான்-பணம்
    அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்...
    ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை-இதை
    எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை...

    உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
    உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு...
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
    மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு-நாளும்
    முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு...

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே-இதைப்
    பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே...
    பிழைக்கும் மனிதனில்லே...
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே...

    ரொம்ப நாட்கள் கழித்து பாட வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. Very Good..

    To make a new world.. visit to my blog ‘easyhappylifemaker.blogspot.com’
    புது உலகம் செய்வதற்காக எனது சிறு முயற்சி தான் எனது கூகிள் ப்ளாக்.

    பலவித நடக்க வேண்டிய மாற்றங்கள், சிந்தனைகள் பலவித கோணங்களில் எனக்கு தெரிந்த அளவு வழங்கியிருக்கிறேன். ஒரு உதாரணமாக

    மெகா சாதனை படைத்த
    உங்களுடன் ஒரு சிறப்பு பேட்டி - டி .வி யில் -
    A SPECIAL T.V INTERVIEW WITH YOU
    FOR YOUR MEGA SUCCESS
    http://easyhappylifemaker.blogspot.in/2013/02/a-spl-tv-interview-with-u-for-ur-mega.html

    பதிலளிநீக்கு
  3. Dear Padman

    It is good to see your article that too during budget time.
    Regards
    S Partha

    பதிலளிநீக்கு