செவ்வாய், 15 ஜனவரி, 2013

புலாலும் ஆரியமும்



முகநூல் (பேஸ்புக்) இணையதளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு, ஆட்டை வெட்டித் தின்னலாமா? என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா? என்று அங்கலாய்த்திருந்தார். இந்தப் பதிலுரையில்  பொதிந்துள்ள சித்தாந்த, இனவாதக் குழப்பத்தைப் போக்கி, தெளிவுபடுத்தும் முகமாக, மயக்கம் அறுக்கும் மறுமொழியாக இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளேன்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும் தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?


ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா? இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?


“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆராத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?


சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமாக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைபிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர்காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?


அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.


இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)


ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)


ஆர்ய என்பது இனம் அல்ல, அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அவரால் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல்  சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)


தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப் படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி - கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் கட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?


இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.


வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே, அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.


மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, அனைத்துப் பிராமணர்களும் வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாச்சார மாண்புகளையும், முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).


ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.


முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம்.
-    பத்மன்


8 கருத்துகள்:

  1. தற்பொழுது உள்ள பிராம்மணர்கள் யாரும் ஆரியர் அல்லர். குறிப்பாக, தென்னாட்டில் என்று சொல்லலாம். அவர்களின் உருவ அமைப்பும், நிறமும், மொழித் திறனுமே இதற்கு சான்று. சமஸ்கிருதம் பேச்சு மொழியாக, எந்த குடும்பத்திலும் இல்லை. சமஸ்கிருதமே ஆரியர்களின் மொழி, தமிழ் திராவிடர் மொழி. சமஸ்கிருதம் எந்த குடும்பத்திலும் புழக்கத்தில் இல்லாததால், யாரையும் ஆரியர் என்று சொல்ல இயலாது. ஆர்யம் என்றே சொல்லே காலாவதியாகிவிட்டது, என்றே பொருள்படும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரிய கோவிலை எப்படி போற்றுகிறோமோ, அதைப் போல கோவில்களில் அர்ச்சனை செய்ய, புழக்கத்தில் இருக்கும் சமஸ்கிருதத்தை ஒரு புராண மொழியாக போற்றலாம் அவ்வளவே !

    சைவம் என்பது திராவிடர்களுக்கே உரித்தானது, ஆரியர்களுக்கு அல்ல. மத்தியா ஆசியாவில் இருந்து, ஆர்யர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக புகுந்து வந்த பொழுது இறைச்சிக்காக, கால்நடைகளை மட்டுமே ஓட்டி வந்தனர், பெண்கள் உடன் வரவில்லை. பெண்கள் ரிஸ்க் எடுக்க இயலாது என்று அவர்களை விட்டு விட்டு வந்திருக்கலாம். அந்த சமயத்தில் திராவிடர்கள் ஆற்றங்கரையோரம், நாகரீகம் அமைத்து, விவசாயம் செய்து வந்ததாக சிந்து சமவெளி ஆராய்ச்சி கூறுகிறது.

    திராவிடர்கள் தென்பகுதிக்கு புலம் பெயர்ந்த பொழுது, சைவமும், சைவ சமயமும் உடன் வந்தது. அதனால் தான் தென்னாட்டவர்க்குச் சிவனே ! என்ற சொற்றொடரும் வந்தது. தென்னாட்டு பிராம்மணர்களும், சைவ உணவுப் பழக்கத்தை இன்றளவிலும் கடைபிடிக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. ஆங்கிலேயன் நம்மை விட்டு போனாலும் அவன் விட்ட ஆரியன் - திராவிடன் கதையை இன்றளவும் பரப்பி வரும் அடிமை புத்தியுள்ள பல அடித்தொடிகள் இதை படித்த பிறகாவது கொஞ்சம் திருந்தட்டும் . இந்த பதிவினை என் ப்ளாகிலும் பகிர்ந்து கொள்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  3. ஆர்யன் திராவிடன் என்ற வெற்று பிதற்றல்கள் தேவையற்றது என நான் நினைக்கிறேன். உலகம் கையளவில் அடங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கு இங்கே கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும் சூழலில் மனிதமே அவசியம் என்று படுகிறது. ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களை உயர்த்திவிட சிந்திக்க வைக்க தந்தை பெரியார் அப்போதைய சூழலை சொல்லி மக்களுக்கு எடு(இடி)த்துரைத்தார் தற்போது சம வாய்ப்பு கிடைத்துள்ள, கிடைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ள இந்த நேரத்தில் அறிவாயுதம் ஒன்றையே கைக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். அறிவாயுதத்தை ஏந்தி வெல்வோம்.

    பதிலளிநீக்கு
  4. How many people and how many research have proved this myth of Aryan, Dravidan. Still for political reasons and perpectuating caste divide and hatread this nonsense continues in Tamilnadu

    பதிலளிநீக்கு
  5. Aryan, Dravidan myth still continues despite research and writings of high quality. Perpetuating the divide is for political gains and continuing the venom of upper and lower castes which is virtually extinct now.

    பதிலளிநீக்கு
  6. புலால் உண்ணுவதில் மட்டுமென்ன உலகம் முழுவதும் ஒரே வழக்கமா இருக்கிறது? ஒருவன் கண்ணில் கண்டதையெல்லாம் தின்கிறான்.மற்றொருவன் ஆடு கோழியை மட்டும் தின்கிறான்.எல்லாவற்றையும் தின்பவன் (நர மாமிசம் உட்பட) எதில் சேர்த்தி? திராவிடனா?ஆரியனா? அதற்கும் மேலா?மேன்மை பொருந்திய திராவிடர் என்ன சொல்கிறார்?

    பதிலளிநீக்கு
  7. பல விஷயங்கள் சேர்ந்து இங்கு குழப்புகின்றன.
    1.'ஆர்ய' என்றசொல் பண்பாட்டிலும் ஒழுக்க நெறியிலும் சிறந்தவரையே குறித்ததே தவிற, இனத்தைக் குறிக்கவில்லை. ராமாயணத்தில் ஒர் இடத்தில் சீதை ராமரை "ஆர்ய புத்ர" =ஆர்யன் மகனே என்று விளிக்கிறாள். அப்போது, சீதை யார்? ஆர்யன் என்று ராமரைச் சொல்லவில்லை- ஆர்யன் மகனே என்றால், அவன் அப்பன் தசரதன் ஆர்யன் என்றாகிறது! தசரதன் எப்படி ஆர்யன் ஆனான்? இதற்கு கம்பர் வாலியின் வாயிலாக பதிலளிக்கிறார். ராமரிடம் பேசும்போது, "வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே" என்று ராமரைச் சொல்கிறான். சீதை சொன்னது போல், இங்கும் தசரதனுக்குத்தான் பெருமை! ஏனினில், வாய்மை, மரபு ஆகிய இரண்டையும் காக்க, தன் உயிரை ஈந்தான் தசரதன்..அதனால் அவன் ஆர்யன் ஆனான்!
    2. இதன் இன்னொரு பரிமாணத்தை கீதையில் பார்க்கலாம். போர் வந்தவேளையில். களத்துக்கு வந்தபின், நான் போரிடமாட்டேன் என்கிறான் விஜயன். அப்போது கிருஷ்ணன் அவனிடம் ' ஆர்யனுக் கொவ்வாத இந்த இழிவான நிலை உனக்கு ஏன் வந்தது' (அனார்யஜுஷ்டம்- கீதை 2.2.)' அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் ஒரே கிளையைச்சார்ந்த அரச பரம்பரையினர் (குரு வம்சம்). அப்படியெனில், அர்ஜுனன் மட்டும் எப்படி அனார்யன் ஆவான்? ஆகவே இங்கும் இது குணம்பற்றி எழுந்த சொல் என்பது வெளிப்படை.
    3."ஆர்யதா" என்ற சொல் மனு தர்ம சாத்திரத்தில் 7ம் அத்யாயத்தில் 211வது ஸ்லோகத்தில் வருகிறது. கருணை, சௌர்யம், ஞானம் ஆகிய குணங்களுடன் சேர்த்து ஒரு குணமாகவே விளக்கப்படுகிறது. (ஆனந்த நாச்சியாரம்மா தமிழ் உரையைப் பார்க்கவும்.)
    4. சிவனையே ஆர்ய என்ற சொல்லால் சைவ நூல்களில் சொல்கிறார்கள் உ..ம் : " பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே"- மாணிக்கவாசகர்.
    5. பாரதத்தின் பகுதிகளுக்கு அன்று ப்ரம்மாவர்த்தம், ஆர்யாவர்த்தம்,ப்ரம்மரிஷி தேசம் என்றெல்லாம் பெயர்கள் வழங்கின. இவற்றின் விவரத்தை மநு ஸ்மிருதி 2ம் அத்யாயத்தில் பார்க்கலாம்.
    6. இந்த 'ஆர்யர்கள்' என்ற கருத்தை முதலில் சொன்னவர் மாக்ஸ் முல்லர். ஆனால் இதை மொழியியல் தொடர்பாகச் சொன்னாரே தவிர ,இனவாதமாகச் சொல்லவில்லை. இதை அவரே அடித்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆர்யன், திராவிடன் முதலிய இனங்கள் இருந்தன என்பதை இன்றைய அறிவியல் துறையினர் ஏற்றுக் கொள்வதில்லை.. இந்திய மக்களின் டி,என் ஏ DNA பற்றி ஆராய்ந்தவர்கள் , இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரே வகை என்று கண்டுள்ளனர்.

    திராவிட இன வாதிகளின் காலண்டர், 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு கிழிக்கப் படவே இல்லை! இவர்களின் கடிகாரமும் அன்றே நின்றுவிட்டது! பின்னர் வந்த ஆராய்ச்சி முடிவுகள் இவர்கள் கண்ணுக்குப் படாது!
    பிராமணர்களைப் பற்றிய செய்திகள் வராத சங்ககால நூல் எதுவும் இல்லை! அவர்கள் வேறு இனம், வேறு எங்கிருந்தோ வந்தவர்கள் என்று எந்த சங்க நூலிலும் இல்லை!
    குழந்தைகள் இருளைக் கண்டு அஞ்சுகிறார்கள், வயது வந்தவர்கள் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றார் பிளேட்டோ. இது நமது திராவிடஇன வாதிகளுக்கு சரியாகப் பொருந்தும்!

    பதிலளிநீக்கு