வியாழன், 8 ஆகஸ்ட், 2013

“பிழை”ப்போர் பிழைப்பு




உயிருள்ள சடலமோ?
உணர்வற்ற பிண்டமோ?
கொடுமைகள் நிகழ்ந்திடினும்
கொதித்திடா மானிடரே!

வயிறுதான் வளர்ப்பதற்கே  
வாய்மையை அடகுவைத்தீர்
மயிருதான் உதிர்வதுபோல்
மானத்தை உதிரவிட்டீர்!

நேர்மையைக் கழுவியோரை
நெடுஞ்சாணாய் வணங்குகின்றீர்
நன்மையைக் கருதுவோரை
நகைத்தே விரட்டுகின்றீர்!

திறமையிலாத் தலைமைக்குப் 
பெருமைகளைப் பூசுகின்றீர்
திறமைமிகக் கொண்டோரை
திகைத்தேதான் ஏசுகின்றீர்!
 

பொருளில்லா நண்பர்களைப்
பொருள்படுத்த மறுக்கின்றீர்
பொருளுடையோன் கயவனேனும்
பொசுக்கென்று சேருகின்றீர்!

உரிமைகளை நிலைநாட்டும்
ஒற்றுமையைக் குலைக்கின்றீர்
சலுகைகளைப் பெற்றிடவே
சார்பெடுத்துக் குழைகின்றீர்!

நண்பர்களை மதிக்காமல்
நாணமின்றிச் சாடுகின்றீர்
மேலிடத்தான் மிதித்தாலும்
கால்பிடிக்க ஓடுகின்றீர்!

உழைப்பும் உண்மையுமே
உரியநேரம் உயர்வுதரும்
பிழைப்பதற்குப் பிழைசெய்தால்
பிழைத்தாலும் இழிவுதரும்.

-          பத்மன்

3 கருத்துகள்:

  1. பிழைப்பதற்குப் பிழைசெய்தால்
    பிழைத்தாலும் இழிவுதரும்.
    அருமையான வரிகள்.
    புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா?

    பதிலளிநீக்கு
  2. நேர்மை , உழைப்பு இரண்டின் மேலும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் ஜீவன்களின் உரத்த குரல் இந்த கவிதை ...

    பதிலளிநீக்கு