செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காற்று


ஓசையில் கிளைத்த விரிவெனும் விசை
ஆசைகள் முளைத்த அதிர்வெனும் அணு
தோற்றம் மறைத்த தோற்றத் தொடக்கம்
தோன்றிய அனைத்தின் தோன்றா ஒடுக்கம்
  
விரிசுடர் நெருப்பை விளைவித்த தந்தை 
விரிசடைக் கடவுளின் வீறுடை வடிவு
நாசியுள் நுழையும் உயிரெனும் மூச்சு
வாசியில் வசிக்கும் வாழ்வெனும் அமுது

நெறிபட வாழ்வோர் வாழ்வைப் போல
இதம்பட வீசும் இனிய தென்றல்
தறிகெட்டுப் போனோர் தவறினைப் போல
முறைகெட்டுப் பாயும் முரட்டுப் புயல்

பொசுக்கும் தீயின் பொல்லா நண்பன்              
பொழியும் மழைக்கோ பருவத் தோழன்
அலைகளை எழுப்பும் கடலின் பகைவன்
அலைகளால் இணைக்கும் அறிவியல் துணைவன்.

- பத்மன்

2 கருத்துகள்:

  1. நாசியில் நுழையும் உயிரெனும் மூச்சு
    வாசியில் வசிக்கும் வாழ்வெனும் அமுது..
    அருமை... வாசி யோகத்தை பற்றி சிறப்பாக காற்று மூலம் கூறியுள்ளீர்கள். ஆனால், அலைகளை எழுப்பும் கடலின் பகைவன் என்ற வரியின் கருத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை. கொண்டல்காற்று, வாடைக்காற்று, சோழகக்காற்று, தென்றல்காற்று என்ற வகையில் பல காற்றுகள் கடலில் வீசும். இதில் சோழகக்காற்று போன்ற வடகிழக்குப்பருவமழை காலக்காற்றுகள் மட்டுமே அலைகளை மலைகளாக தூக்கி எறியும் வலு படைத்தவை. மற்றவை தாலாட்டும் தொட்டிலாக கடலை வருடக்கூடியவை. பருவமழையை கரைக்கு அழைத்துச்செல்வதில் காற்றின் பங்கு அதிகம்...கருத்து தவறு என்றால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  2. நண்பரே, காற்றின் பல குணங்களில் ஒன்று, கடல் நீரை அலைக்கழித்து, அலைகளை எழுப்புவது. சந்திரனின் ஆகர்ஷணத்தாலும் கடல் ஓதம் எனப்படும் கடல் பொங்கி அலை எழும்புவதும் உண்டு. அது வேறு. கடல் பிரயாணத்தின்போது, பெரிய அலைகளை எழுப்புவது புயற்காற்று என்பதாலும், அது சதா கடல் நீரை அடித்து அடித்து கடலைச் சீண்டுவது போலும் இருப்பதால் கடலின் பகைவன் என்றேன். மேலும், வாடைக் காற்று வடக்கிருந்து வீசுவது, அது கடும் குளிரைத் தருவது. தென்றல் தெற்குப் பக்கத்தில் இருந்து வீசுவது, மிக இனிமையானது. இதேபோல், கிழக்கு(குணக்கு)ப் புறத்தில் இருந்து வீசுவது கொண்டல், மேற்கு(குடக்கு)ப் பக்கத்தில் இருந்து வீசுவது கோடைக் காற்று. இதில் சோழகக் காற்று என்பது எங்கிருந்து வீசுகிறது... தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு