திங்கள், 17 ஜூன், 2013

முதல் நண்பா


 
(இன்று – 16.06.2013 - தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த எனது தந்தைக்கும் என்னைப் போன்ற தந்தையர்க்கும் எனது இந்தக் கவிதைக் காணிக்கை.) 

நினைவு தெரிந்த நாட்களில்

நீதான் எனக்கு முன்மாதிரி

நினைக்கத் தெரிந்த காலத்தில்

நீதான் எனக்கு முதல்எதிரி.

 

உன்னைக் கண்டுபயந்த நாட்களில்

விழுந்த அடிகளே வெற்றிப்படிகள்

என்னைக் கண்டேபயந்த பருவத்தில்

எழுந்திட வைத்தனநின் அறிவுரைகள்.

 

கைகளைப் பிடித்தபோது தட்டிவிட்டாய்

கால்களை ஊன்றக் கற்றுக்கொண்டேன்

ஓட்டத்தில் இடறினேன் தாங்கிப்பிடித்தாய்

ஒழுங்குடன் இயங்கப் பழகிக்கொண்டேன்.

 

அன்பே இல்லாதவன் எனநினைத்தேன்

அன்பின் ஆழத்தை அறியவைத்தாய்

வெறுப்பை உமிழ்பவன் எனஇகழ்ந்தேன்

வேடத்தை விலக்கி வெட்கவைத்தாய்.

 

பக்குவப் படுத்தவே பரிதவித்தாய்            


பட்டபின் நானும் உணர்ந்துகொண்டேன்

புரியாத வரையில் பயமூட்டியஅப்பா

புரிந்துகொண்ட பின்னரோ அப்பப்பா! 

-    பத்மன்

 

 

 

9 கருத்துகள்:

  1. கவிதை எழுதினேன்
    வெளியிடுமுன் தவறியது
    மறுபடியும் எழுதிடுமுன்
    நினைவினிலே தவறியது

    அருமையான கருத்துக்கள்
    ஆழமான எழுத்துக்கள்
    மேற்கத்திய வலையினிலே
    விழுந்ததற்கு வாழ்த்துக்கள்!

    தந்தையர்கள் படிக்க வேண்டும்
    தனயன்மார் உணர வேண்டும்
    பக்குவமாய் உறவுகளை
    புரிந்திடவோ உள் வாங்க வேண்டும்.

    சென்றிடு முன் ஒரு வார்த்தை
    உம் படத்தைப் பார்த்த போது,
    மனதில் வந்த அந்த வார்த்தை,
    லட்சணம்! லட்சணமாக இருக்கின்றீர்!!

    பதிலளிநீக்கு
  2. அப்பாவைப் பற்றிய கவிதையைப் படித்தேன். அருமை!

    அன்புடன்,
    ரமணன்

    பதிலளிநீக்கு
  3. அருமை... தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. உண்மையாய் அனுபவித்து எழுதியிருக்கின்றார். நாம் தந்தையாகும் போது நமது தந்தையை உணருவோம். வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கவிதையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி எனது பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளேன். மறக்காமல் உங்கள் பெயரை நீங்கள் எழுதிய கவிதை என்று எழுதியுள்ளேன். நன்றி

    பதிலளிநீக்கு
  6. கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அப்பா... அப்பா....
    கவிதை அப்பப்பா!

    பதிலளிநீக்கு
  8. அப்பால் போனபின் புரிந்து கொள்ளப்படுபவர் தான் அப்பாவோ?

    பதிலளிநீக்கு