திங்கள், 30 ஜூலை, 2012

பள்ளி கொண்ட பரமேஸ்வரர்



பள்ளி கொண்ட பரந்தாமன் திருக்கோலத்தை பல கோவில்களில் பார்த்திருக்கலாம். ஆனால், பள்ளி கொண்ட பரமேஸ்வரைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு அபூர்வத் திருக்காட்சியை தரிசனம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் போக வேண்டிய க்ஷேத்திரம், சுருட்டப்பள்ளி.
சென்னைக்கு 56 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த ஸ்தலத்தில், பல அதிசயங்களையும் அபூர்வ மகிமைகளையும் உள்ளடக்கிய பள்ளிகொண்ட ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சிவபெருமானுக்குரிய சிறப்பு வழிபாடான பிரதோஷ வழிபாடு தோன்றிய ஸ்தலம் இதுதான் என்பதே, இந்த ஆலயத்தின் பெருமையைப் பறைசாற்றும்.

சுருட்டப்பள்ளி என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? இதற்கான காரணத்தை அறிய, ஸ்தல வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மிகவும் அலுப்பில் படுத்துக்கிடக்கும் ஆளைப் பார்த்து “என்ன சுருண்டு படுத்துருக்காரு?” என்று கேட்போம் அல்லவா? அதுபோல உலகத்தையே கட்டிக் காப்பாற்றும் பரமேஸ்வரன், இந்த ஸ்தலத்தில் சுருண்டு படுத்து, அதாவது பள்ளி கொண்டு ஓய்வெடுக்கிறார். ஏன்?
முன்பொருகாலத்தில், சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை அடைவதற்காக, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். கூர்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவை நடுவில் அச்சாக வைத்து, மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்கிற பெரிய பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள்.


அப்போது, பாற்கடலில் இருந்து ஆலம் என்ற விஷமும், வாசுகி பாம்பின் பெருமூச்சில் இருந்து ஹாலம் என்ற விஷமும் சேர்ந்து, ஆலஹால விஷமாய் பெருக்கெடுத்தது. அமிர்தம் கிடைக்கும் என்ற ஆவலில் இருந்த தேவர்களும் அசுரர்களும் அவர்களோடு சேர்ந்து அனைத்து ஜீவராசிகளுமே அச்சத்தில் நிலைகுலைந்து நின்றார்கள்.

அமிர்தத்தைக் கடைவதற்கு முன் அவர்கள் மறந்துபோன பரமேஸ்வரன் அப்போது அவர்களது நினைவுக்கு வந்ததும் “அபயம் பரமேஸ்வரா” என்று அலறி ஓடுகிறார்கள். உடனே அங்கு காட்சி கொடுத்த சிவபெருமான், நந்தியும் சுந்தரரும் திரட்டிக் கொடுத்த ஆலஹால விஷத்தை அப்படியே ஒரு நாவல் பழம் போல் உருட்டி வாயில் போட்டு விழுங்கிவிடுகிறார்.
அவர் அந்த விஷத்தை விழுங்கினாலும் சரி, இல்லையேல் வெளியே உமிழ்ந்தாலும் சரி, அனைத்து ஜீவராசிகளும் இறந்துபடும். அதனால் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக, அந்த விஷத்தை தம் கண்டத்திலேயே (கழுத்திலேயே) தேக்கிக் கொண்டார் நஞ்சுண்ட நாதர். அதனால் சிவபெருமானுக்கு தியாகராஜர் என்றும் நீலகண்டர் என்றும் பெயர் வந்தது.

பக்தர்களுக்காக எதையும் செய்து காப்பாற்ற பரமேஸ்வரன் எப்போதுமே தயாராக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப் பிரதோஷ புராணத்தின் உட்கருத்து. அதேநேரத்தில் ஆலஹால விஷத்தை அருந்தியதால் சிவபெருமான் மயக்கமாகி, அன்னை பார்வதி தேவி மடியில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தாராம். அதனால் இந்த ஸ்தலத்துக்குப் பெயர் சுருட்டப்பள்ளி.
இங்கே லிங்க ரூபத்தில் வால்மீகீஸ்வரர் ஆகவும், உருவத் திருமேனியாய் பள்ளிகொண்டீஸ்வரர் ஆகவும் சிவபெருமான் காட்சி தருவது கூடுதல் சிறப்பு. விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ராஜகோபுரம் வழியாக ஆலயத்துக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் வால்மீகி ஈஸ்வரர், மரகதம்பிகை சன்னதிகளும், வலது புறத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன.

இந்தக் கோவில் ஐதீகப்படி, முதலில் மரகதாம்பிகையை தரிசிக்க வேண்டும். அம்மன் சன்னதி வாசலில் துவாரபாலர்களுக்குப் பதிலாக குபேரர் இருக்கிறார். இடபுறத்தில் சங்கநிதி, வலப்புறத்தில் பதுமநிதி என தமது தேவிகளோடு, செல்வத்துக்கு அதிபதியான குபேரர் காட்சி தருகிறார். உள்ளே கருவறையில் மரகதாம்பிகை அம்மனின் ஒருபுறத்தில் நமது விருப்பத்தை நிறைவேற்றும் தேவலோகப் பசுவான காமதேனுவும், மறுபுறத்தில் நாம் கேட்பதைக் கொடுக்கும் தேவலோக மரமான கற்பக விருட்சமும் இருக்கின்றன.
அம்மன் சன்னதிக்கு முன்பு, சாளக்கிராம கணபதி வீற்றிருக்கிறார். எங்கும் நிறைந்திருப்பதால் கணபதியையும் விஷ்ணு என்று அழைப்பார்கள். அதற்கேற்ப, விஷ்ணுவின் அடையாளமான சாளக்கிராமத்திலேயே இங்கு பிள்ளையார் அமைந்திருக்கிறார். அம்மன் சன்னதி உள்பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். எமனின் திக்கு என்று கூறப்படும் தெற்கு நோக்கி இந்த முருகன் அருள்பாலிப்பதால், இவரை வணங்கினால் மரண அபாயம், சாவு பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
மரகதாம்பிகை சன்னதியின் வெளிப் பிரகாரத்தில் ராமலிங்கேஸ்வரர் மற்றும் வால்மீகீஸ்வரர் சன்னதிகள் எதிரெதிராய் அமைந்துள்ளன. பிரதோஷத்தின்போது அபிஷேகம் செய்யப்படும் நந்தி, ராமலிங்கேஸ்வரர் சுற்றுச்சுவரில் இருந்தபடி, வால்மீகீஸ்வரைப் பார்த்தபடி உள்ளது.

வால்மீகீஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கம். வேறு எங்கும் காண இயலாதபடி இந்த லிங்கம் வித்தியாசமாக முக்கோண வடிவில் இருப்பது விசேஷம். ராமாயண காவியத்தை எழுதுவதற்கு முன்பு, இங்குதான் சிவபெருமானை நோக்கி வால்மீகி தவம் இருந்தாராம். அதனால் இந்த லிங்கத்திற்குப் பெயர் வால்மீகி ஈஸ்வரர்.
வால்மீகி ஈஸ்வரர் சன்னதிக்கு இடது புறத்தில் உள்ள கல்லில் சிறுவர்களின் காலடித் தடங்கள் உள்ளன. அவை, ராமபிரானின் புதல்வர்களான லவன் மற்றும் குசனின் காலடித்தடங்கள் என்று கூறப்படுகிறது. வால்மீகி முனிவருடன் சேர்ந்து அவர்களும் இங்கு சிவபெருமானை வழிபட்டார்களாம்.

வால்மீகீஸ்வரர் சன்னதி வெளிப்புறச் சுவரில், குரு பகவானான தட்சிணாமூர்த்தி, வழக்கமான சிவகுருவாக தனித்து இராமல்,  பிருகஸ்பதியாக, தனது பத்தினி தாராவோடு இணைந்து காட்சி தருகிறார். இடதுகாலை தூக்கி மடித்தபடி குரு பகவான் ஒயிலாக அமர்ந்திருக்க, அவரை பின்புறத்தில் இருந்து தழுவியபடி அவரது தேவியான தாரா காட்சியளிக்கிறார். இதனால் இந்த தட்சிணாமூர்த்திக்கு தாம்பத்திய தட்சிணாமூர்த்தி என்று திருநாமம். திருமணம் கைகூடவும், பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேரவும், மகிழ்ச்சியான நீண்ட திருமண வாழ்வு அமைவதற்கும் அருள் வழங்குவதில் இந்த தாம்பத்திய தட்சிணாமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர்.

இந்த ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுமே தம்பதி சமேதரர்களாக இருப்பது கவனிக்கத்தக்க அம்சம். வால்மீகீஸ்வரர் – மரகதாம்பிகை, பள்ளிகொண்ட ஈஸ்வரர் – சர்வமங்களாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி; சாஸ்தா – பூரணை, புஷ்கலை; சுப்பிரமணியர் – வள்ளி, தெய்வானை; குபேரன் – சங்கநிதி, பதுமநிதி; தட்சிணாமூர்த்தி – தாரா, காசி விஸ்வநாதர் – விசாலாக்ஷி என தம்பதி சமேதராக தெய்வங்கள் காட்சி தருவது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு உத்தரவாதம்  அளிக்கிறது.
மரகதாம்பிகை, வால்மீகீஸ்வரர் தரிசனத்துக்குப் பின், வலப்புறம் உள்ள பள்ளிகொண்ட ஈஸ்வரர் சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்யவேண்டும். வழக்கமாக லிங்க ரூபத்தில் காட்சி தரும் சிவபெருமான், இங்கே பிற தெய்வங்களைப்போல் மனித உருவத்தில் காட்சி தருகிறார். அதிலும் விசேஷமாக, பெருமாளைப்போல் பள்ளிகொண்ட நிலையில் தரிசனம் தருகிறார். பள்ளிகொண்ட ஈஸ்வரர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்த கோலத்தில் இருக்கிறார். மிக அற்புதமான 16 அடி நீள விக்ரகத்தைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். இங்கே அம்பாளுக்கு சர்வ மங்களாம்பிகை என்பது திருநாமம்.

மகாவிஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, மார்கண்டேய மகரிஷி, அகஸ்திய முனிவர், வால்மீகி முனிவர், இந்திரன், நாரத மகரிஷி, சனகாதி முனிவர்கள், நந்திகேஸ்வரர், வள்ளி – தெய்வானை சமேதராய் முருகப் பெருமான், கணபதி என சகல தேவர்களும், ரிஷிகளும் பார்வதி – பரமேஸ்வரரைச் சூழ்ந்து நிற்பதுபோல் தத்ரூபமாய் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து கைலாசமே இறங்கி வந்ததுபோன்ற இந்தத் திருக்கட்சியை வேறு எந்தக் கோவிலிலும் காண இயலாது.
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பம்சம், இங்கே சிவபெருமான் விஷ்ணுவைப்போல் சயன கோலத்தில் இருப்பது மட்டுமின்றி, இங்கே பிரசாதம் கூட பெருமாள் கோவிலில் உள்ளதைப்போல் தான். இங்கே விபூதி எனப்படும் திருநீறுக்குப் பதிலாக, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டு, தலையில் ஜடாரியும் வைக்கப்படுகிறது.

பிரதோஷம் தோன்றிய வரலாறையே ஸ்தல வரலாறாகக் கொண்ட இந்தக் கோவிலில் பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இரண்டு நாள் முன்பாக, திரயோதசி திதியில், மாலை நாலரையிலிருந்து ஆறரை மணிக்குள் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த பிரதோஷ நேரம் முடிந்தபிறகுதான், சிவபெருமான் மயக்கத்தில் இருந்து மீண்டு, எல்லா உயிர்களையும் நாம் காப்பாற்றிவிட்டோமே என்று மகிழ்ச்சியில் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஐதீகம்.

இந்த பிரதோஷ வழிபாட்டின்போது நந்தியின் இரண்டு கொம்புகளின் இடையே சிவலிங்கத்தை தரிசனம் செய்யவேண்டும். சிவபெருமானின் வாகனமாகவும், அந்தரங்கப் பணியாளராகவும் இருக்கின்ற நந்திப்   பெருமானின் செவிகளில் நமது வேண்டுதல்களைச் சொல்லவேண்டும். நந்தி சிலைக்கு அருகம்புல் மாலை போட்டு, காப்பரிசி நைவேத்தியம் செய்வது கூடுதல் பலன் தரும். மாசி மாதம், மஹா சிவராத்திரிக்கு முதல்நாள் வருகிற பிரதோஷம் மஹா பிரதோஷம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு தோன்றிய சுருட்டப்பள்ளி, சென்னையில் இருந்து திருப்பதி போகிற வழியில் ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ளது. கிண்டி, கோயம்பேடு, பாடி, ரெட் ஹில்ஸ் அல்லது பாரிஸ் கார்னர், பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், மாதவரம், ரெட் ஹில்ஸ் வழியாக காரனோடை பாலத்துக்கு வரவேண்டும். அங்குள்ள சுங்கச் சாவடியை தாண்டி இடதுபுறமாக பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியே சுருட்டப்பள்ளியை அடையலாம்.


ஊத்துக்கோட்டையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுட்டப்பள்ளி ஆலயம், தமிழ்நாடு எல்லை முடிந்து ஆந்திர எல்லை தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பிரதோஷ வரலாறு தோன்றிய சுருட்டப்பள்ளிக்குச் சென்று நாம் சிவபெருமானை வழிபட்டால், நமது எல்லா தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் சந்தோசம் நீடிக்கும்.

-    பத்மன்

1 கருத்து: