செவ்வாய், 24 டிசம்பர், 2013

மூன்றாம் பாலும் முறையில்லா உறவும்


`வேலியில் போவதை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்பதற்கு, இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவின் அடிப்படையில்  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதே மிகச் சிறந்த உதாரணம். இயற்கைக்கு மாறான ஓரினச் சேர்க்கையை (ஒருபால் உடலுறவை) தண்டனைக்குரிய குற்றம் என்கிறது 377-ஆவது பிரிவு.
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து சட்டத்தின் மாட்சிமையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களான ஒருசிலர் மேல்முறையீடு செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் மத்திய அரசே மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல, வேதனையையும் சேர்த்து அளிக்கிறது.
முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினமான அரவாணிகள் (திருநங்கைகள்) பிரச்னை வேறு. முப்பாலுக்கு அப்பாலாய், ஆணாக இருந்துகொண்டே ஆணோடு உடலுறவு கொள்வதற்கும், பெண்ணாக இருந்துகொண்டே பெண்ணோடு உடலுறவு கொள்வதற்கும் உரிமை கோருகின்ற ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை வேறு.
அரவாணிகள், இயற்கையின் உற்பத்திப் பிழை. இதில் அவர்களது குற்றம் எதுவும் இல்லை. ஆனால், ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைப் பிழை அல்ல, செயற்கைப் பிழை, சேர்க்கைப் பிழை. வெளிப்புறத்தில் ஆணின் உடலில் இருந்தபோதிலும் உள்புறத்திலும் மனரீதியிலும் பெண்ணாக பாவிக்கும் அல்லது உணர்ந்துகொள்ளும் மனிதர்களே அரவாணிகள். (இதேபோல் பெண்ணாகப் பிறந்து ஆணாகக் கருதுகின்ற, திரிந்துபோன மனிதர்களும் ஒருசிலர் உண்டு.

அரவாணிகளின் இந்தக் குறைபாட்டின் காரணமாக அவர்களை சமுதாயம் ஒதுக்குவது தவறு, அரவணைக்க வேண்டும் என்ற குரல் சமீபகாலமாக ஓங்கி ஒலிக்கிறது. அது தவறல்ல. மாற்றுத் திறனாளிகளைப்போல இந்த மாற்றுப் பாலினர்களுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. முக்கியமாக, குடும்பத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த மூன்றாம் பாலினருக்கு அன்பும், பாசமும் தரப்பட வேண்டும்.
ஆனால், மனித உணர்வுகளில் உள்ள அன்பு, பாசம், நட்பு ஆகிய உணர்வுகளுக்காக அல்லாமல், காமம் என்ற உணர்வுக்காக மட்டுமே, அதுவும் இயற்கைக்குப் புறம்பான முறை தவறிய காமத்துக்காக மட்டுமே கோரப்படும் ஓரினச் சேர்க்கை என்பது எப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கது? ஓர்  ஆணோ பெண்ணோ சக ஆண் அல்லது பெண்ணிடம் அன்பு, நட்பு பாராட்டுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரப்படுவதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. ஆனால், இந்த ஓரினச் சேர்க்கை முழுக்க, முழுக்க கலவி சம்பந்தப்பட்டதே. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் வசதிக்காக, சமுதாயத்தால் ஆதரிக்கப்பட வேண்டிய மூன்றாம் பாலினர்களின் பின்னால் வெட்கமில்லாமல் ஒளிந்துகொள்கிறார்கள்.
`ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்றார் மகாகவி பாரதியார். `ஆண்களோடு ஆண்களும், பெண்களோடு பெண்களும் சேர்ந்து வாழ்வம் இந்த நாட்டிலே என்று இயற்கைக்கு மாறான கோஷத்தை இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இது எங்களது உரிமை என்று உரிமைக் குரலும் எழுப்புகிறார்கள்.
ஓரினச் சேர்க்கை என்பது விருப்பத்தின்பாற்பட்டது, தனிமனித விருப்பின் அடிப்படையில் ஆனது என்பது இவர்களது வாதம். இதற்கு, மத்திய அமைச்சரும் பிரபல வழக்குரைஞருமான கபில் சிபலும் வக்காலத்து வாங்கி வாதாடுகிறார். தனிமனித விருப்பு என்பது சமுதாய வெறுப்பைச் சம்பாதிக்கும்போது, சமுதாய ஒழுங்கமைதியைச் சிதைக்கும்போது அதனை ஆதரித்தல் தகுமா?
முதலில், திருமணமாகாமல் ஆணோடு சேர்ந்து வாழும் பெண்ணுக்கான உரிமைகளே சட்டப்பூர்வமாகத் தரப்படவில்லை. முறையாகத் திருமணம் செய்துகொண்டு ஆணோடு வாழும் பெண்ணுக்குத் தரப்படும் ஜீவனாம்சம், சொத்தில் பங்கு உள்ளிட்ட உரிமைகளை மணமாகாமல் உடன்வாழும் பெண்ணுக்கும் தரப்பட வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரினச் சேர்க்கைக்கு உடனடியாக `உதவிக் கரம் நீட்டும் மத்திய அரசு இந்தத் தீர்ப்பு குறித்து வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்?
மாறிவரும் இளைய சமுதாயத்தின் விருப்பத்தை உணர்ந்துகொண்டு ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தரவேண்டும் என்பது சிலரது வாதம். இதில் அரசியல்வாதிகளும் அடங்குவர். இளைய சமுதாயமே பொங்கி எழுந்து இதற்காகப் போராடுவதுபோன்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஒருவேளை இளைய சமுதாயம் அப்படியொரு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது மூத்தோர்கள், சான்றோர்களின் கடமை அல்லவா?
ஓரினச் சேர்க்கை தவறான பாதையா? இதற்கு புராண, இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றனவே! என்று சிலர் கேட்கிறார்கள். அர்த்தநாரீஸ்வர வடிவத்தையும் மோகினி அவதாரத்தையும் அரவாண் கதையையும் இதற்கு உதாரணங்களாகக் காட்டுகிறார்கள். இது தவறு.
பரமசிவனின் அர்த்தநாரீஸ்வர தத்துவம், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்காகச் சுட்டிக்காட்டப்படுவது. மோகினி அவதாரம் என்பது, பொதுவாக ஆணாக வர்ணிக்கப்படும் கடவுள் பெண்ணாகவும் அவதரிக்கலாம் என்பதற்கு உதாரணம். ஶ்ரீகிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவாணுக்கு ஒருநாள் மனைவியாக இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. அதனால்தான் அரவாண் பலியானதற்காக கூவாகத்தில் கூத்தாண்டவர் திருவிழாவின்போது திருநங்கைகள் தாலியறுத்து ஒப்பாரி வைத்து அழும் சடங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இவையெல்லாம் திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்துக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளப்படலாமே தவிர, முறையற்ற ஓரினச் சேர்க்கைக்கான அங்கீகாரமாகக் கருதப்படக்கூடாது. ஏனெனில், மூன்றாம்பால் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது அங்கே ஒரே பாலினம் என்பது அடிபட்டுப் போகிறது.
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மூன்றாம் பாலினமாக தன்னை அடையாளம் காண்பவரை அவ்வாறு அடையாளப் படுத்திக்கொள்ள நினைப்பவரை அங்கீகரிக்கலாம். இதுபோன்ற அரவாணிகள் செக்ஸைவிட சக மனிதர்கள் என்ற அங்கீகாரத்தைத்தான், சமூகத்தின் அன்பைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். சூழ்நிலை நிர்பந்தத்தால் அல்லது ஆணாதிக்க அடக்குமுறையால் அரவாணிகளில் சிலர் அல்லது பலர், கலவித் தொழிலையே வாழ்க்கைப் பாதையாக அமைத்துக்கொள்ளும் அவலம் நேரிடுகிறது.
ஆனால் தனிமனித விருப்பம் என்றும் உரிமை என்றும் இவர்கள் பல பெயர் சொல்லி அழைக்கும் முறையற்ற காமத்துக்கு எதற்காக சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும்? லஞ்சம் வாங்குவது பல பேரின் விருப்பம் என்பதால் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா? வியாபாரம் என்று வந்தால் எப்படியாவது ஏமாற்றத்தானே செய்கிறார்கள் என்பதற்காக மோசடி செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா?
விருப்பத்துக்கு மதிப்பளிப்பது என்றால் பலதார திருமணத் தடைச் சட்டம்,  விபசாரத் தடைச் சட்டம், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் இவையெல்லாம் எதற்கு?
ஆணும் பெண்ணுமாக சேர்ந்துவாழும் சமுதாயத்தில் சில தவறுகள், குற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுப்பாடு இருக்கும்போதே குற்றங்கள் நடக்கின்றன என்றால், இந்தக் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் சிதைந்துபோனால் என்ன ஆகும்? மனித நாகரிகத்தின் அடித்தளமான குடும்பம் என்ற அமைப்பே சிதைந்துபோகுமே?
ஓரினச் சேர்க்கையாளர்கள் தாங்களும் குடும்பம் நடத்துகிறோம், எங்களுக்கும் குழந்தைப் பாசம் உண்டு என்று கூறி தத்து எடுத்துக்கொள்ளப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தத்து எடுக்கும் குழந்தையின் மனநிலை, எதிர்காலம் எப்படி இருக்கும்?
வக்கரித்த காமத்தைத்தான் உரிமை என்றும் விருப்பம் என்றும் பூசிமெழுகி இவர்கள் அங்கீகாரம் கோருகிறார்கள். இவர்கள் தங்களை மூன்றாம் பாலாக முன்னிறுத்தவில்லை. முறையற்ற காமத்துக்குத்தான் அங்கீகாரம் கோருகிறார்கள். 
 சம்ஸ்கிருத இலக்கணத்தில் சொற்களுக்கு ஆண்பால் (புலிங்கம்), பெண்பால் (ஸ்த்ரீலிங்கம்), நடுப்பால் (நபும்ஸகலிங்கம்) என்று மூன்று பால் இருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ் இலக்கணத்திலே சொற்களுக்கு இதுபோல் மூன்றாம் பாலினம் இல்லை. இருப்பினும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், கிளவியாக்கத்தில் (சொல்லாக்கத்தில்) மக்களைப் பற்றிச் சொல்லும்போது ஆண், பெண் மட்டுமின்றி ஆண்தன்மை நீங்கிய மூன்றாம் பாலினர் பற்றிய குறிப்பு உள்ளது. மூன்றாம் பாலினரை, பெண்மையாய் சுட்ட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆக, மூன்றாம் பாலினம் இருப்பதை அந்தக் காலத்தில் இருந்தே சமுதாயம் ஏற்றிருக்கிறது.
அதேநேரத்தில், ஒரே பாலினத்துக்குள்ளான முறையற்ற காமத்தை எந்த இலக்கியமும், புராணமும், எந்தச் சட்டமும் எக்காலத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ் இலக்கணத்திலே, பொருந்தாக் காமம்  எனப்படும் கைக்கிளை (ஒருதலைக் காதல்), பெருந்திணை (வயது வித்தியாசம் பாராத காதல்) ஆகியவற்றுக்கு மதிப்பில்லாத போதிலும், இடம் இருக்கிறது. ஆனால், ஓரினச் சேர்க்கை எனப்படும் கொடுந்திணையான, பாலினம் பாராத பொல்லாக் காமத்துக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இனிமேலும் அளிக்கப்படக் கூடாது.
ஏனெனில், மூன்றாம் பாலினத்தாரைப்போல ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்னை உடல் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்ததே. ஆகையால் மனத்தைக் கட்டுப்படுத்தும் மார்க்கத்தை இவர்களுக்கு சமுதாயமும் சட்டமும் கற்றுத்தர வேண்டுமே தவிர, அவர்கள் மனம்போன மார்க்கத்தில் திரிவதற்கு அங்கீகாரம் தந்துவிடக் கூடாது.
    -    பத்மன்

5 கருத்துகள்:

  1. அடுத்த கட்டமாக இவர்கள் விலங்குகளோடு புணர்வதையும் குற்றமல்ல என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  2. ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப் பட்டால் சிறுவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவார்கள்!

    பதிலளிநீக்கு