(தத்துவங்களின் பின்னணியில் அமைந்த ஓர் திகில் கதை)
நான் தனிமை விரும்பி.
ஒரு தனியார் கம்பெனி மேனேஜர். கைநிறைய சம்பளம். போன மாசம்தான் இந்தப் பெரிய வீட்டை
வாங்கிப் போட்டேன். வீடு என்று சொல்லக்கூடாது, கோட்டை. இந்தக் கிராமத்தில் இதைப் பள்ளிக்கோட்டை பங்களா என்கிறார்கள்.
கிராமத்தின் பெயரும் சித்தன்பள்ளி. அது என்ன பள்ளி? இங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
இந்த வீட்டுக்கும்
ஊருக்கும் பள்ளி என்ற பெயருக்கும் ஏதோ விசேஷத் தொடர்பு - அர்த்தம் இருக்கிறது.
காரைக்குடிப் பக்கத்து நாட்டுக்கோட்டைச் செட்டியார் வீடுகளைப் பிரதியெடுத்ததுபோல்
வீடு கலையம்சமாக இருந்தது. ஆனால் ரொம்பப் பழைய நெடி. தேக்கு, பளிங்கு அனைத்திலும்
பழமை பளிச்சிட்டது.
சென்னைக்கு அருகே
புழலுக்குப் பக்கத்தில் 5,
6 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சித்தன்பள்ளி. பிசாசு பங்களா என்று கதை உலவி
வருவதால் சல்லிசாகக் கிடைத்தது. எனக்கு அமானுஷ்யத்தில் ஆர்வம் உண்டு, நம்பிக்கை இல்லை.
அதனால் வாங்கிவிட்டேன். இன்றுதான் குடியேறினேன். அதிகம் பேசிவிட்டேன். தூங்கப்
போகிறேன்.
என் காதருகே திடீரென
மூச்சிரைப்பு சப்தம். தோள்பட்டையில் உஷ்ணக் காற்றை உணர்ந்து விழித்தேன். அந்த
மூச்சிரைப்பு மனிதனுக்குரியதல்ல. ஏதோ மிருகத்தின் இரைப்பு. மெல்லியதாக கிர்ர்
என்று உறுமியது போலவும் இருந்தது. போர்வையை விலக்கிவிட்டு எழுந்தபோது எதுவுமே
நடவாததுபோல நிசப்தம். இந்த அமைதி பல ஆண்டுகளாகப் பழகிப்போனது. ஆனால் இன்று ஏதோ
ஒன்று அன்னியப்பட்டது. புது இடமானதால் இருக்குமோ? இடம் ஒரு பொருட்டே அல்ல, தனிமை இருள் எனக்குப் பழகிப்போனதாயிற்றே!
தூரத்தில் ஏதோ
பிராண்டுகிற சப்தம். இங்கேதான் எங்கோ ஓர் அறைக்குள். நான் வீட்டின் நடுவில் பெரிய
முற்றத்தில் படுத்துக்கொண்டிருக்கிறேன். எழுந்து போகிறேன். இங்கேதான்...
இங்கேதான்... வலதுபுறத்தில் ஓர் அறையிலிருந்து. தனியாளான நான் புதிதாக வாங்கிக்
குடியேறிய இந்த பங்களாவை இன்னமும் முழுமையாக ஆராய்ந்து பார்க்கவில்லை. வலப்புற
அறையைத் திறந்ததும் சப்தம் கூடுதலாகக் கேட்டது. எங்கே? லைட்டைப் போட்டதில் நாலு பக்கங்களிலும் ஒன்றுமில்லை. ஆனால் சப்தம். இங்கே
தரைக்குக் கீழே. குனிந்து கீழ்நோக்கி உற்றுப் பார்த்தபோது... ச் ச் ... கரண்ட்
போய்விட்டது.
லைட்டரின் உதவியுடன்
பார்த்தேன். நல்ல உசத்திக் கம்பளம். எலி ஏதாவது கம்பளத்தின் அடியிலிருந்து
பிராண்டுகிறதோ? எலிக்கா இத்தனை சப்தம்? பெருச்சாளியாக
இருக்குமோ? சற்று எச்சரிக்கையுடன்
கம்பளத்தைச் சுருட்டிவிட்டு நோக்கினேன். ஒன்றுமில்லை. லைட் வந்துவிட்டது. நல்ல
பளிங்குத் தரை, இரண்டடி அகலக் கற்கள்
பதித்ததாக. ஒரு கல் மட்டும் சற்று எழும்பியிருந்ததுபோல் தெரிந்தது.
நான் நினைத்தது
சரிதான். அதை நெம்பிப் பார்த்தால் என்ன? கஷ்டப்பட்டு, நெம்பி, கல்லை விலக்கியபோது
ஆச்சரியம். கீழே படிக்கட்டு தெரிந்தது. அப்படியானால் நிலவறை இருக்கிறது. இறங்கிச்
சென்றபோது லைட்டின் வெளிச்சம் சிறிதளவே வந்தது. மீண்டும் லைட்டரை உபயோகித்துப்
பார்த்தபோது அதிர்ந்தேன். எதிரே ஒரு பன்றி, என்னை முறைத்தபடி.
இல்லை. அது ஒரு சிலை.
நான் பயந்துவிட்டேனா? ஓர் அதிர்ச்சி.
அவ்வளவுதான். லைட்டரை அருகே கொண்டு சென்று பார்த்ததில், யானையில் அமர்ந்தபடி,
பன்றித் தலையுடன் கூடிய ஒரு தேவனின் சிலை தெரிந்தது. சுமார் நாலடி இருக்கும்
சிலை. பீடத்தில் படிக்க முடியாத பாஷையில் ஏதோ எழுதியிருந்தது. எங்களூர் சாஸ்திரிகள்
வைத்திருந்த புத்தகத்தில் இதுபோன்ற எழுத்துகளைப் பார்த்திருக்கிறேன். கிரந்தம்
என்று சொன்னதாக ஞாபகம்.
மீண்டும் சிலையைப்
பார்க்க நிமிர்ந்தபோது அந்தப் பன்றியின் முகத்தில் கண்கள் உருண்டதுபோல் தெரிந்தது.
அதன் வாய் திடீரென அசைந்தது. `ஓடிப்போ, இந்த வீட்டை விட்டு' சப்தம் என் காதில்
பயங்கரமாகக் கேட்டது.
படுக்கை மீது எழுந்து
உட்கார்ந்திருக்கிறேன். ஊர்மக்கள் சொன்ன கதைகள் மனத்தில் பதிந்ததன் விளைவா? விருட்டென்று எழுந்து, வலப்புற அறைக்குள்
சென்றேன். கீழே கம்பளத்தைச் சுருட்டிப் பார்த்ததில், ஒரு பளிங்குக் கல் மேடாக. நெம்பியபோது நிலவறையும் அப்படியே. ஆச்சரியமாய்
அதனுள் இறங்கிப் பார்த்ததில் மகா ஆச்சரியம்.
உண்மையிலேயே அங்கு பன்றித் தலையுடன் ஒரு தேவன் சிலை.

அதற்குப் பின் எனக்கு
நிம்மதி இல்லை. மெல்ல மெல்ல என் தனிமை மோகம் தகர்க்கப்பட்டு வருகிறது. தூக்கத்தில்
அடிக்கடி பன்றித்தலை தோன்றி, போய்விடு, போய்விடு என்று
மிரட்டிக்கொண்டே இருந்தது. அன்று தெருவோரம் சாதுவாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு
பன்றி திடீரென்று என்னை நோக்கி ஆவேசமாகக் கடிக்கப் பாய்ந்தது. நல்லவேளை, யாரோ சிலர்
என்புறமிருந்து பன்றியை நோக்கி கல் எறிந்து விரட்டினார்கள்.
மற்றொரு நாள் என் காரை எதிர்ப்புறமிருந்து
வெகு வேகமாக ஒரு லாரி மோத வந்தது. எப்படியோ காரை வளைத்து தப்பித்து நிறுத்திப்
பார்த்ததில், ஒரு நிமிடம் நின்று
சென்ற அந்த லாரியின் பெயர்ப் பலகையில் வராகப்பெருமாள் என்று எழுதியிருந்தது.

இதையே நினைத்துக்
கொண்டிருந்தபோது, ஆபிஸ் ஏ.சி. அறையிலும்
புழுக்கமாக இருந்தது. அறையை விட்டு வெளியே வந்தபோது, கிளார்க் சுரேஷ்வர் லஞ்ச் சாப்பிக்கொண்டே `தினமணி’ பத்திரிகையைக் காட்டியபடி தனது சகாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன்
சொன்னதில் பள்ளிச் சந்தம் என்ற வார்த்தை காதில் விழுந்தது. என் மனம், பள்ளிக் கோட்டை, பள்ளிச் சந்தம் என்று
சம்பந்தப்படுத்திப் பார்த்தது. சாப்பிட்டு முடித்ததும் எனது அறைக்கு வருமாறு
சுரேஷ்வரிடம் சொன்னேன். சொன்னபடியே வந்தான்.
“அது என்ன செய்தி?”முழித்தான். “அதுதான் பேப்பரில்
படித்தாயே பள்ளிச் சந்தம்..”
“சமண, பௌத்தக் கோவில்களுக்கு
அந்தக் காலத் தமிழ் மன்னர்கள் அளித்த நிலக்கொடை. இப்படி தானம் பெற்ற இடங்களில் பல
சமணக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கு. இப்போ சென்னையைச் சுத்தி பல இடங்கள்ல பூமியைத்
தோண்டும்போது ரிஷபதேவர்,
மகாவீரர்னு எங்களோட தீர்த்தங்கரர் சிலைகள்
கிடைக்குது. சமீபத்துல கிடைச்ச சிலை பத்தி பேப்பர்ல போட்டிருக்கான்.”
“நீ மார்வாடியா?”
“இல்லை. தமிழ் சமணன்.
நயினார் சாதின்னு சொல்வாங்க. ஆரணி, வந்தவாசி, காஞ்சி பக்கம்
இப்பவும் எங்க ஆட்கள் அதிகம் உண்டு.”
“தமிழ் ஜைனனா?” வியந்தேன். “உனக்கு சித்தன்பள்ளி
பத்தித் தெரியுமா?”
“உங்க புது வீடு
அங்கதானே இருக்கு? ஒருகாலத்துல அங்க எங்க
பள்ளி அதாவது கோவில் இருந்ததா சொல்வாங்க. பின்னாடி தீயசக்திகளால அழிஞ்சுபோச்சு.
இப்போ சமணர் யாரும் அங்க இல்ல. நீங்க வாங்கியிருக்கற வீடு, அந்தக் கோவிலோட இடிபாட்டுப் பொருட்களைக் கொண்டு அப்புறமா கட்டின மாளிகைன்னு
சொல்வாங்க”
“அந்தத் தீயசக்திகள்
இன்றும் உலவுகிறதா?” எனக்கு வியர்த்தது. “என்ன ஒரு மாதிரியா
ஆயிட்டீங்க?” சுரேஷ்வரிடம் சொல்லி¢த்தான் ஆக வேண்டும்.
சொல்லிவிட்டேன், என்னைக் காப்பாற்றக்
கூடிய பதில் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன்.
“புழல்ல எங்களோட
சாஸ்திரியார் குணபத்ர சூரி இருக்கார். அவருக்கு நிறைய விஷயம் தெரியும். ஏதாவது
உபாயம் சொல்வார். உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா இன்னக்கி ராத்திரி உங்க
வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்.” சம்மதித்தேன்.
இரவு 9 மணி வரை சுரேஷ்வர்
வரவில்லை. ஆனாலும் இன்று நிம்மதியான அமைதி நிலவுவதை அனுபவித்தேன். போன்
கிணுகிணுத்தது. சுரேஷ்வர்தான்.
“சார். சாஸ்திரி
எங்கேயோ வெளியே போயிருக்கார். இன்னும் வரல. எப்படியும் காலைல வந்துருவாராம்.”
“காலைலதான் வருவாரா?”எனது குரலின்
அதிருப்தி அவனைத் தைத்திருக்க வேண்டும். “இல்லேனா ஒண்ணு செய்றீங்களா சார்? உங்க ஊர்லய சுடுகாட்டுப் பக்கத்துல மகாவடுகன்னு ஒரு தந்திரி இருக்கார். அவரைப்
பார்ககறீங்களா?” ‘சரி’ என்று சொல்லி ஃபோனை
வைத்தேன்.
திடீரென எனக்கு கிலி
அதிகரிக்கத் தொடங்கியது. பன்றியின் உறுமல் சப்தம் கேட்டது போன்ற பிரமை. இல்லை, நிஜமான சப்தம்தான், ஏதோ பேசுவதுபோல். ‘போகாதே’ என்று கத்தியதுபோல்
இருந்தது. இதுவரை இங்கிருந்து ஓடிப்போகுமாறு மிரட்டிய பன்றி ஏன் போகாதே என்கிறது.
மந்திரவாதி பயமா? விருட்டென வெளியே
வந்து கதவைப் பூட்டி, காரை எடுத்துக்
கிளம்பினேன். இப்போது ‘போகாதே’ என்ற சப்தம் கெஞ்சலாகக் கேட்டது.

குடிசையின் உள்ளே, எலும்புகளைத்
தலையிலும் கழுத்திலும் பூமாலையாகச் சூடிக்கொண்டு, உடலெங்கும் கருப்புச் சாம்பலைப் பூசியபடி, ‘வாமதேவாய நமோ’, ‘கால பைரவாய நமோ’ என்று ஒரு ஆஜானுபாகு முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னர்
மண்டையோடு. ‘வா மகனே’ திடீரென கண்விழித்து
அவர் அழைத்தபோது திடுக்கிட்டேன். உடம்பு நடுங்கியது.
“பயப்படாதே. அசுர
சக்திகளை அழிப்பவனும் அசுரன்போல்தான் இருப்பான். உனது பன்றித் தொல்லையேப் போக்கி
மகாசுகமளிக்கிறேன்” என்றார் தந்திரி.
சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தேன்.
“என் பிரச்சினை எப்படித் தெரியும்?”
“சித்தி மகனே சித்தி.
ஆஷாட அமாவாஸ்யை அன்று என்னிடம் நீ வருவாய். அந்தப் பன்றியின் கணக்குத்
தீர்க்கப்படும் என்பது விதி. புறப்படலாமா?” என்னுடைய
ஆமோதிப்புக்குக் காத்திராமலேயே கிளம்பினார். உள்ளே பார்த்து, “வா, சிந்தாமணி. வேளை
வந்துவிட்டது” என்றார்.
வனப்பான பெண் ஒருத்தி
அரை மயக்க நிலையில் வெளிப்பட்டாள். “இவள் ஒரு யோகினி. பாகசனப் பிரியை” என்று சிரித்தார்.
அவள், புகழ்ச்சியால் வெட்கப்பட்டதுபோல்
தெரிந்தது.
நாங்கள் வீட்டை
அடைந்தபோது பன்றியின் ஆவேச சப்தம் வரவேற்றது. நிலவறையை நெருங்க, நெருங்க மேலும்
அதிகரித்தது. தந்திரி வைத்திருந்த பையிலிருந்து பூஜைப் பொருட்கள் என்று எடுத்து
வைத்தவை ஆச்சரியமளித்தன. சாராயக் குடுவை, மாமிசம், மீன். இப்போது
பன்றியின் உறுமல் அதிகரித்தது.
“துஷ்ட சக்திகள்
இதற்குத்தான் கட்டுப்படும் மகனே. அந்தச் சாராயத்தை எடுத்துப் பன்னித் தலையில்
ஊத்து. மாமிசத் துண்டையும் மீனையும் எடுத்து அப்பு” என்றார்.
நாற்றம் தாளாமல்
முகத்தைச் சுளித்து, ஒரு கையால் மூக்கைப்
பிடித்தபடி அவர் சொன்னதைச் செய்ய முயன்றேன். அப்போது பன்றி தன் சக்தியெல்லாம்
திரட்டி அடிவயிற்றில் உறுமிய சப்தம் கேட்டது. “ஓடுடா” என்ற வார்த்தை என்
காதில் விழுந்தது.
“தயங்காதே. அது
சொல்வதைக் கேட்டு பயப்படாதே. செயல்படு” தந்திரி
கட்டளையிட்டார். செய்தேன். படிப்படியாகப் பன்றியின் உறுமல் அழுகுரல்போல் தேய்ந்து
நின்றது.
“மகனே! முழுமையாக இது
அடங்கிவிடவில்லை. நீ மேலே சென்று இரு. நான் இந்த யோகினியுடன் பகாசனத்தில்
இருந்துவிட்டு அழைக்கிறேன். அப்போது உனக்கு சமாதிநிலையை சாதிக்கிறேன். பிறகு
உனக்கு மகாநிம்மதி” என்றார்.
அவர் சொன்னது ஒன்றும்
புரியவில்லை. படிக்கட்டுகளில் ஏறி மேலே வந்தேன். அரைமணி கழித்து யோகினி மேலே
வந்தாள். அவளது மயக்கநிலை மேலும் அதிகரித்திருந்தது. கால்கள் தள்ளாடின. தந்திரி
அழைத்தார். “வா மகனே! அவள் போய்க்
கொள்வாள்.”
அப்போது என் காதில் “கடைசியாக
எச்சரிக்கிறேன். ஓடிப்போ”
என்ற மிரட்டல் கேட்டது. “பயப்படாதே! அது சும்மா பூச்சாண்டி காட்டுகிறது. அதன் சக்தியெல்லாம்
போய்விட்டது. சிறிது நேரத்தில் முழுமையாக அழிந்துவிடும். வா” என்றார். சென்றேன்.
“உன் மேலாடையைக்
கழற்றிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்” என்றார்.
தியானம் செய்து
எனக்குப் பழக்கமில்லை. எனினும் அமர்ந்தேன். அவர் இடுப்பிலிருந்து ஒரு சிமிழ்
எடுத்தார். அதில் ரத்தச் சிவப்பாக இருந்த குங்குமத்தை எடுத்து என் புருவ மத்தியில்
பொட்டு வைத்தார். “இது உண்மையான
செந்தூரம்” என்று அவர் சிரித்தபடி
கூறியதுபோல் தெரிந்தது. எப்போது கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தேன்? ஆகா அற்புதம்!
அடடா! என்ன அனுபவம்...
ஐயையோ என்ன இது? திடீரென்று பன்றி என்
கழுத்தைக் கவ்வுவதைப் போல் இருக்கிறதே... கொஞ்ச நேரம்தான் அந்த வலி. விடுபட்டு
விட்டேன். தந்திரி சொன்ன மகா சுகத்தை, மகா நிம்மதியை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்.
பிற்சேர்க்கை: சுரேஷ்வரிடம் குணபத்ர
சூரி சாஸ்திரியார் கோபமாகக் கேட்டார்: “என்ன? அந்த சுடுகாட்டுத்
தந்திரியிடமா உன் மேனேஜரை அனுப்பினாய்? அவன் மகாவிரதன் ஆயிற்றே?”
“மகாவிரதனா?”
“காபாலிகர்கள் என்றும்
பைரவ மார்க்கிகள் என்றும் கூறப்படும் வழக்கொழிந்த கொடும் வாமாசார மார்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் மகாவிரதர்கள். இப்போது எங்கேனும் அரிதாகக் காணப்படும் அவர்கள், சங்கேத பரிபாஷைகளைத்
தவறாக அர்த்தம் செய்துகொண்டு, பஞ்சமகாரம் என்ற பெயரில் மது அருந்தி, மாமிசம், மீன் சாப்பிட்டு, பெண்ணுடன் மைதுனம்
அதாவது உடலுறவு மூலம் யோகசித்தி அடைய முயல்பவர்கள்.”
“மேனேஜரோட பங்களால
சிலையா இருக்கற பன்றிமுகத் தீயசக்தியிடமிருந்து காப்பாத்தறத்துக்காகத்தான் அந்த
தந்திரியைப் பார்க்கும்படி சொன்னேன்”
“அடடா! உன் மேனேஜரின்
பங்களா நமது (சமணர்) கோவில் இடிபாடுகளைக் கொண்டு கட்டியது. அங்கு உள்ளதாகக்
கூறப்படும் பன்றிமுகச் சிலை, மணிபத்ரவீரன் என்ற க்ஷேத்ர பாலன். அதாவது காவல் தெய்வம். அது தீமைகளிலிருந்து
காப்பாற்றுமே தவிர, தீமை
செய்யக்கூடியதல்ல. ஆனால் அந்தத் தந்திரி... காபாலிகர்களின் மகாவிரதம் மகா
கொடுமையானதல்லவா? சிவபெருமான், பிரம்மாவின் தலையை
அரிந்த புராணக் கதைக்கு அனாசாரமான அர்த்தம் கற்பித்து, அதனைப் பின்பற்றி, குறிப்பிட்ட மனிதனின்
கழுத்தை வெட்டி, அந்த கபாலத்தில்
உணவருந்தினால் பின்னர் முக்தி கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கை உடையவர்கள் ஆயிற்றே?”
கிலியுடன் இருவரும்
பள்ளிக்கோட்டை பங்களாவுக்கு வந்து பார்த்தபோது, தலையற்ற ஒரு முண்டம் இருந்தது. பன்றிமுகத் தேவனின் சிலை ரத்தக் குளியலில்
நொறுங்கிக் கிடந்தது.
- பத்மன்