வியாழன், 30 ஜூலை, 2015

ஆகலாம் கலாம்



(கடந்த  4 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அப்துல் கலாம் அவர்களை, பிரைம் பாயிண்ட் திரு. சீனிவாசன் உதவியால், தமிழக ஆளுநர் மாளிகைக் கட்டடத்தில் நேரில் சந்தித்து உரையாடும் பாக்கியம் பெற்றேன். அப்போது கலாமைப் புகழ்ந்து நான் எழுதிய வெண்பாக்களை அவரிடம் படித்துக் காண்பித்து சமர்ப்பித்தேன். அருமை என்று வாழ்த்தினார். ஆனால் கொடுமை - அதன் பிரதியைத் தொலைத்துவிட்டேன். யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை தாள் பிரதியும், மூளைப் பிரதியும். ஆகையால், கலாம் அவர்களின் நல்லடக்க தினமான இன்று (30.07.15) அவர் குறித்து உடனடியாக எழுதிய இந்தக் கவிதையை அந்த அமர நாயகன் அப்துல் கலாமுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.)

சாதிவெறி கடந்து சமத்துவம் பேணினால் சாதிக்கலாம்
நீதிநெறி நடந்து நேர்மை பேணினால் நிலைக்கலாம்
கருணை மொழிபேசி கடுமை போக்கினால் ஆக்கலாம்
கடமை வழிசென்று கயமை நீக்கினால் காக்கலாம்
மடமைத் தனம்நீங்கி மாற்றங்கள் செய்திட அழிக்கலாம்
வறுமைத் தளைநீக்கி வளர்ச்சிக்கு உழைத்திட செழிக்கலாம்
விஞ்ஞானம் தனைக்கொண்டு விவரங்கள் அறிந்திட சோதிக்கலாம்
மெய்ஞானம் தனைக்கண்டு மேன்மை அடைந்திட வாதிக்கலாம்
தேகம் மறந்து தேசம் நினைத்திட தலைவனாகலாம்
நேசம் மிகுந்து தொண்டு புரிந்திட தெய்வமாகலாம்
அத்தனையும் செய்தவர்தாம் எங்கள் அய்யா அப்துல்கலாம்
அவர்வழி சென்றால் கட்டாயம் ஆகலாம் நாமும்கலாம்

-    - பத்மன்



கொசுறாக ஒரு புதுக்கவிதை

ஏவுகணை நாயகர்
இறுதியில் தன்னையே ஏவியதன்மூலம்
கடவுள் தனது மானுட வேஷம் கலைத்து
மறுபடியும் விண் புகுந்தார்.



ஞாயிறு, 7 ஜூன், 2015

அப்பப்பா சின்னப்பா


(தமிழ்த் திரையுலகின் முதல் இரண்டு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமரர் பி.யூ. சின்னப்பாவின் நூற்றாண்டு கடந்த 5-ஆம் தேதி (05.06.2015) தொடங்கியதை முன்னிட்டு, அவரது சிறப்பைக் கூறும், இந்தக் கட்டுரையை கலை, திரைப்பட ரசிகர்களுக்கும் பழைமையை நேசிப்பவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய புதுக்கோட்டை புகழ்வாணர் திரு. ப. வெங்கட்ராமன் (திருவாளர் பிவி) அவர்களுக்கு நன்றி.)
பெயர்தான் சின்னப்பா, அவரது திறமையும், திரையுலக சாதனைகளும் வியந்து நம்மைச் சொல்ல வைக்கும் அப்பப்பா. செயற்கரிய செயல் புரிந்த மூத்தவர்களை பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். பிதாமகர் என்றால் அப்பாவின் அப்பா என்று பொருள். மிகத் திறமையுடயவர்களை அப்பன் என்றும், மிக மிகத் திறமைசாலிகளை அப்பனுக்கெல்லாம் அப்பன் என்றும் புகழ்வது இதன் உட்பொருள். பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முப்பாட்டன் என்பதோடு மாபெரும் பராக்கிரமசாலி என்பதால், பிதாமகர் என்ற அவருக்கான விளிச்சொல், மற்ற மூத்த திறமைசாலிகளுக்கும் விரிவுபட்டுவிட்டது.  அந்த வகையில் தமிழ்த் திரையுலகின் அப்பப்பா (பிதாமகர்) பி.யூ. சின்னப்பா.
அவர் நடித்த படங்கள் இரண்டு டஜன்களுக்கு இரண்டு அதிகம் (26). அவர் வாழ்ந்த ஆயுளோ மூன்று டஜன்களுக்கு ஒன்று குறைவு (35). இத்தனைக் குறுகிய காலமே வாழ்ந்து, குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்துள்ளபோதிலும், நிறைவான திறமைகளைக் காட்டி அமரத்துவம் பெற்றுவிட்ட அற்புத நடிகர் பி.யூ. சின்னப்பா.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பாடிய திரைப்படப் பாடல்கள் அடங்கிய கிராமபோன் ரெக்கார்டுகள், விற்பனையில் ரெக்கார்டு (சாதனை) புரிந்தன. அவர் மறைந்து 65 ஆண்டுகள் கழிந்த இன்றைய நவீன காலத்திலும் அவரது பாடல்களும், படங்களும் அடங்கிய டி.வி.டி-களுக்கு மிகுந்த டிமாண்டு உள்ளது. அவர் மறைந்தாலும், அவரது புகழ் மறையவில்லை.
எனது தாத்தா காலத்து நடிகரான பி.யூ. சின்னப்பாவை வியந்து, எனது பிள்ளைகளுக்கும், அவர்களது வயதை ஒத்த மற்ற இளைய தலைமுறையினருக்கும் நான் உரைக்கிறேன் என்றால், அங்குதான் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் பி.யூ. சின்னப்பாவின் திறமை பளிச்சிடுகிறது.
புதுக்கோட்டை உலகநாதன் பிள்ளை சின்னசாமி என்ற இயற்பெயர் கொண்ட பி.யூ. சின்னப்பா, 1916-இல் புதுக்கோட்டையில் பிறந்தார். தனது  தந்தை உலகநாதன் பிள்ளையை அடியொற்றி, சிறு வயதிலேயே நாடக நடிகரானார். நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நாடக உலகில் நுழைந்த சின்னப்பா, சதாரம் நாடகத்தில் பால பக்காத் திருடனாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்தார்.
 8 வயதில் தத்துவ மீனலோசனி வித்வ பால சபையில் சேர்ந்த அவர், பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு மாறினார். அங்கு தொடக்கத்தில் 15 ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்கும் கதாநாயக நடிகனாக சில மாதங்களிலேயே உயர்ந்தார். அப்போது அவருக்கு ஜோடியாக பெண் வேடம் போட்டவர் யார் தெரியுமா? சாட்சாத் புரட்சித் திலகம் எம்ஜியார்.
பி.யூ. சின்னப்பாவுக்கு இணையாக (ஜோடியாக) நடித்த எம்.ஜி. ராமச்சந்திரன், அவருக்கு இணையாக தானும் உயர வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஏனெனில் நாடகத்திலும் சரி, திரையுலகிலும் சரி எம்ஜியாரின் ஆதர்ச நாயகன், பி.யூ. சின்னப்பாதான்.
நடிப்பு, நல்ல குரல் வளம் ஆகியவற்றோடு நடனம், சண்டை ஆகிய பல கலைகளிலும் வல்லவர் பி.யூ. சின்னப்பா. குஸ்தி, மல்யுத்தம், சிலம்பாட்டம், வாள்வீச்சு, பட்டா சுருள் வீச்சு ஆகியவற்றில் கைதேர்ந்த வித்தகர். சகலகலா சக்ரவர்த்தியான பி.யூ.சின்னப்பாவைப்போல் வர வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜியார் சண்டைக் காட்சிகளில் விசேஷ கவனம் செலுத்தினார். தனது லட்சிய கதாநாயகனான பி.யூ. சின்னப்பா நடித்த ரத்னகுமார் (1949) திரைப்படத்தில் துணை நடிகராக எம்ஜியார் நடித்துள்ளார்.
எம்ஜியாருக்கு மட்டுமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் நடிகர் மன்னர் பி.யூ. சின்னப்பா. பிற்காலத்தில் இரட்டை வேடங்களிலும் மூன்று வேடங்களிலும் வித்தியாசமான தோற்றங்களிலும் சிவாஜி கணேசன் கலக்கினார் என்றால், அதற்கு முன்னோடி பி.யூ.சி-யே. தமிழ்த் திரையுலகில் பி.யூ. சின்னப்பாதான் முதன்முறையாக இரட்டை வேடம் போட்டவர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா இரட்டை வேடம் பூண்ட உத்தம புத்திரன் 1940-ல் வெளியாகி, அவருக்குப் புகழ் மகுடம் சூட்டியது. இதே பெயரில், இதே கதையில் சிவாஜி நடித்த உத்தம புத்திரன் 1958-இல் வெளியானது.
இதேபோல், 1941-ல் பி.யூ. சின்னப்பா நடித்த ஆர்யமாலா திரைப்படம்தான், பின்னர் 1958-ல் சிவாஜி நடிப்பில் காத்தவராயனாக மலர்ந்தது. மேலும் 1944-ல் பி.யூ.சி. நடிப்பில் உருவான ஹரிச்சந்திராதான், 1968-ல் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான ஹரிச்சந்திராவுக்கு முன்னோடி. தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக மூன்று வேடமிட்டவரும் பி.யூ.சி.தான். 1949-ல் வெளியான மங்கையர்க்கரசி திரைப்படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் காமரூபன் காமரூபி கதைதான் மங்கையர்க்கரசி திரைப்படக் கதைக்கு மூலம். இந்தத் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
இதேபோல், மதனகாமராஜன் கதைகளில் மந்திரிகுமாரனாகிய மதனகாமராஜன் சொல்லும் 12 கதைகளில் ஒன்றான ஜகதலபிரதாபன் அதே பெயரில் பி.யூ. சின்னப்பா நடிப்பில், 1949-இல் திரைப்படமாக வெளியானது. இந்தப் படத்தில்  தாயைப் பணிவேன் என்ற பாடல் காட்சியில், பாடகர், கஞ்சிரா வாசிப்பவர், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், கொன்னக்கோல் சொல்பவர் (ஜதி சொல்பவர்) என 5 வித தோற்றங்களில் (கெட்டப்-களில்) அசத்தியிருப்பார் பி.யூ.சின்னப்பா. (மிகவும் கஷ்டமான ஜதி சொல்வதை தானே செய்தார் பி.யூ.சி.) இதை முன்மாதிரியாகக் கொண்டே, திருவிளையாடல் திரைப்படத்தில் பாட்டும் நானே பாடல் காட்சியில் 5 விதத் தோற்றங்களில் அற்புதம் படைத்தார் நடிகர் திலகம்.
மேலும் திருவிளையாடல் திரைப்படத்தில் மீனவ வேடம் பூண்ட சிவபெருமானாக வரும் சிவாஜி கணேசனின் ஒயிலான நடை ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றதைப்போல், அதற்கு முன்னோடியாக, ஜகதலபிரதாபன் திரைப்படத்தில் தாய்-தந்தையைக் காணவரும்போது கதாநாயகனான பி.யூ. சின்னப்பா நடந்துவரும் துள்ளல் நடை ரசிகர்களை வசீகரித்தது.. மனோன்மணி திரைப்படத்தில் பி.யூ. சின்னப்பாவின் வாள்வீச்சு பிற்காலத்தில் எம்ஜியாரிடம் வெளிப்பட்டதென்றால், அதே திரைப்படத்தில் அவரது கம்பீரமான நடையும், கனஜோரான பேச்சும் பிற்காலத்தில் சிவாஜியிடம் பிரதிபலித்தன.
எனது தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர் என்பதோடு, நடிக பேதமின்றி தமிழ், ஹிந்தி திரைப்படங்களை நன்கு ரசித்தவர். அவர் சிலாகித்துக் கூறியதால், ரஞ்சன், எம்.கே. ராதா, பி.யூ.சி., எம்.கே.டி., எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, ராஜ் கபூர், குரு தத், பிரான் ஆகிய அக்கால நடிகர்களை நானும் ரசிக்கத் தொடங்கினேன். எனது கல்லூரிப் பருவத்தில் மதுரை சிட்டி திரையரங்கில் மங்கையர்க்கரசி, ஜகதலபிரதாபன் (எத்தனையாவது ரீ ரிலீஸோ) திரைப்படங்களை பல முறை ரசித்துப் பார்த்திருக்கிறேன். பின்னர் தொலைக்காட்சியிலும் இணைய தளத்திலும் கிருஷ்ணபக்தி, மனோன்மணி உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்துள்ளேன்.
கிருஷ்ணபக்தி திரைப்படத்தில் 6 நிமிடங்கள் வரும் பாடிக்கொண்டே கதைசொல்லும் கதாகாலட்சேப காட்சி ஒன்றை ஒரே டேக்கில் நடித்திருக்கிறாராம் பி.யூ. சின்னப்பா. அந்தத் திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா பாடிய சாரசம் வசீகரம், எல்லோரும் நல்லவரே ஆகிய பாடல்களும், ரத்னகுமாரில் வரும் ஆஹா அதிசயம் இதாமே ஆகிய பாடல்களும் சாகா வரம் பெற்றவை. இதேபோல், மங்கையர்க்கரசியில் அவர் பாடிய காதல் கனிரசமே, பார்த்தால் பசிதீரும் ஆகிய பாடல்களும் அமரத்துவம் பெற்றவை. குபேர குசேலா படத்தில் பி.யூ. சின்னப்பா பாடிய, கரகரப்ரியா ராகத்தில் அமைந்த நடையலங்காரம் கண்டேன் பாடல், இன்றளவிலும் தமிழ்த் திரையுலகின் முதலிடம் பெற்ற பாடலாகவும், காலம்காலமாக ரசிகர்களுக்குப் பிரியமான பாடலாகவும் அமைந்துள்ளது.
1936-இல், தனது 20-ஆவது வயதில் சந்திரகாந்தா திரைப்படத்தில் பி.யூ. சின்னசாமி என்று அறிமுகமான பி.யூ. சின்னப்பா, 1942-இல் பிருத்விராஜன் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஏ. சகுந்தலாவை 1944-இல் இல்வாழ்விலும் கரம்பிடித்தார். உத்தமபுத்திரன், தயாளன், தர்மவீரன், ஆர்யமாலா, மனோன்மணி, மங்கையர்க்கரசி, ஜகதலபிரதாபன், கிருஷ்ணபக்தி, கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த பி.யூ. சின்னப்பா நடித்த கடைசிப் படம் சுதர்சன் 1951-ல் அவரது மறைவுக்குப் பின்னர் வெளியானது. தனது 35-ஆவது வயதில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இன்றளவிலும் விடை காணமுடியாத மர்மமான முறையில் அகால மரணமடைந்ததால் பி.யூ. சின்னப்பாவின் திரையுலகப் பயணம் மட்டுமின்றி வாழ்க்கைப் பயணமும் திடீரென முடிவுற்றது. இருப்பினும், ரசிகர்களின் மனங்களில் அவரது வெற்றிப் பயணம் முடிவின்றி தொடர்கின்றது.
-    பத்மன்

வியாழன், 16 ஏப்ரல், 2015

தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!


தமிழர்களின் மரபுச் சின்னமான தாலியை, பெண்களின் அடிமைச் சின்னம் என்று கூறி, அதனை அகற்றும் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் அறைகூவல் விடுத்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திடீர் ஞானோதயத்தால் மறுதலிக்கப்பட்ட, ஆனால் பெருவாரியான தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தை (ஏப்ரல் 14), அந்த நிகழ்வுக்கான தினமாகவும் அறிவித்தது.
இந்தக் கேலிக்கூத்துக்கு காவல்துறை தடை விதித்தபோதிலும், உயர் நீதிமன்றத்தின் தடை நீக்கம், மீண்டும் தடை என்ற குழப்படிக்கு மத்தியில், அவசர அவசரமாக இந்த தாலி அகற்றும் அலங்கோலம் அரங்கேறியது.  தமிழர்களின் திருமண வாழ்வில் தாலி இடைக்காலத்தில் வந்ததுதான், அதனை அகற்றி எறிவதில் என்ன தவறு?” என்பது இவர்களது வாதம்.
திருமணம், குடும்ப வாழ்க்கை என்பதே இடைக்காலத்தில் வந்ததுதான். ஆதிகாலத்தில் எதுவும் இல்லை. அந்தக் கற்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா? காடுகளில், மலைகளில் கூட்டமாக வாழ்ந்த மனிதன், குடும்பமாக வாழத் தலைப்பட்டதால்தான் சமூகம் உருவானது, நாகரிகமும், பண்பாடுகளும் மலர்ந்தன. அந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும்தான் தமிழர்களின் கலாசார அடையாளங்களாக நாம் போற்றுகிறோம், வழிவழியாய் பின்பற்றுகிறோம். அதன் உட்பொருளை உணர்ந்துகொள்ளாமல், கட்டுடைக்கிறோம் என்று கட்டாந்தரையில் முட்டி மோதுவதா பகுத்தறிவு?
தாலி கட்டுவது என்பது ஆரியர், அதாவது வடநாட்டார் அதாவது பிராமணர் வழக்கம் என்றும் அதனை தமிழர்கள் மீது புகுத்திவிட்டனர் என்றும் சில அமைப்பினர் கூறுவதில் உண்மை இல்லை.
நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எதையாவது பிரச்னையாக்கித் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகத்தான் இது தெரிகிறது.
தாலி கட்டும் பழக்கத்துக்கு அந்தணர் ஓதுகின்ற வேதத்தில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியாது. வேதத்தில் அது இல்லை. வைதீகம் என்று கூறி நடத்தப்படுகின்ற சடங்குகளிலே தாலி இருக்கிறது. ஆனால் வேத இலக்கியங்களில் இல்லை.
வைதீகச் சடங்குகளும் அவற்றுக்கான சம்ஸ்கிருத மந்திரங்களும் காலப்போக்கில், அந்தந்த வட்டாரங்களுக்கு, அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. உதாரணத்துக்கு, திராவிட இயக்கத்தாரின் திராவிட நாட்டு வரையறைக்குள் இடம்பெறும் ஆந்திரத்தில் நடைபெறும் வைதீகத் திருமணச் சடங்குகள் தமிழர்தம் வைதீகச் சடங்குகளில் இருந்து வேறானவை. இதேபோல்தான் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் வைதீகச் சடங்குகளும் மாறுபாடுடையவை. ஆக வைதீகச் சடங்குகளில் இடம்பெற்றாலும் தாலிக்கு வேத நிரூபணம் இல்லை.


அதேசமயம், தமிழர்தம் சங்க இலக்கியத்திலே திருமணச் சடங்குகளும் இருக்கின்றன, தாலியும் இருக்கிறது. ஊர் கூடித் திருமணம் நடத்தும் முறை ஏன் வந்தது என்பதற்கு பொய்யும் வழுவும் தோன்றிய பி்ன்னர் ஐயர் யாத்தனர் கரணம்  என்ப (கற்பியல்   - 143) என்ற தொல்காப்பியச் செய்யுள் விடை தருகிறது.
விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையிலே தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றுவதும், தவறுகளும் மலிந்துவிட்ட காரணத்தால்தான், கரணம் எனப்படும் திருமண முறையை, சமூகத் தலைவர்கள் கொண்டுவந்தனர் என்பது இதன் பொருள்.
இந்தத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் விளக்கம் தருகிறது. (கற்பியல் - 140)
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினர் கொடுப்ப, கொள்வதுவே.
மணப்பெண்ணை ஏற்பதற்கு உரிய குடியைச் சேர்ந்த மணமகன், அப் பெண்ணைத் தனக்கு இல்லாளாகத் தருவதற்கு உரிய குடியைச் சேர்ந்தோர் கொடுக்க, ஏற்றுக்கொள்வதே திருமணம் என்கிறது தொல்காப்பியம்.
இவ்வாறாக தகுதியுடைய மணமகனுக்கு, தகுதி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருகின்றனர். அந்தத் தகுதியை எவ்வாறு தேர்ந்தெடுத்தனர்?  வீரமுடைய ஆண்மகனுக்கே முதலிடம். ஆகையால் புலியோடு போராடி அதனுடைய பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து, தன் வீரப் பரிசாக பெண்ணுக்குத் தாலியை அணிவித்தான் அக்காலத் தமிழன். பின்னர் உண்மையான புலிப் பல்லைக் கொண்டு வருவது அருகி, பொன்னால் ஆன புலிப்பல், தாலியில் இடம்பெற்றது. ஆகையால்தான், இக்காலத்திலும் தமிழர்களின் தாலியின்  கீழே இருபுறமும் புலிப் பல் போன்ற தோற்றத்துடன் அமையப் பெற்றுள்ளது.
சங்க காலத்திலே சிறுவர்கள்தான் ஐம்படைத் தாலி அணிந்தார்கள், பெண்கள் தாலி அணிந்ததில்லை என்று கூறுவது திரிபுவாதம். தாலி என்றால் அணியப்படும் கயிறு என்று பொருள். அவ்வகைத் தாலி ஒன்றை அதாவது கயிற்றை, சிறுவர்கள் அணிந்தார்கள் என்பது உண்மையே. அதேபோன்று பெண்களும் மங்கல நாணாகிய கயிற்றை அணிந்திருக்கிறார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாலி அணிந்ததற்கு ஏது சங்க இலக்கிய ஆதாரம் என்பதற்கு கீழ்வரும் பாடல்கள் விடைதரும்.
அகநானூற்றில் கயமனார் இயற்றிய ஏழாம் பாடலின் வரி  பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி”  என்று அமைந்துள்ளது.  பாலைத் திணையில் அமைந்த இந்தப் பாடல், தலைவியைப் பார்த்து செவிலித் தாய் பாடியது. பருவப் பெண்ணின் உடல் மாற்றத்தைக் கூறும் அந்தப் பாடலில், தங்கத்தோடு புலிப்பல் கோத்த ஒளிவீசிய தாலியை தன் மகள் அணிந்திருப்பதாக செவிலித் தாய் பாடுகிறாள்.
அந்தத் தாலி, திருமணமான பெண்கள்  கழுத்தில் அணியும் தாலிதானா  என்பதற்கு புறநானூற்றின் 127-ஆவது பாடல் சான்று தருகிறது. அப்பாடல், ஆய் என்னும் குறுநில மன்னனை வாழ்த்தி, புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
ஆய் எனும் மன்னனின் கோயில் அதாவது அரண்மனையானது, யாழிசைத்த பாணர்களுக்கு அம்மன்னன் யானைகளைப் பரிசாகத் தந்து விட்டதால், வெறிச்சோடிக் கிடக்கும் யானை கட்டும் தறிகளில் காட்டு மயில்கள் அச்சமின்றி அமர்ந்திருக்கும் வகையிலும், ஆய் குலத்துப் பெண்கள் ஈகையாக கொடுக்க இயலாத மங்கலநாணாகிய தாலி அன்றி வேறு எந்த அணிகலனும் அணியாத நிலையிலும் பொலிவிழந்து காணப்பட்டாலும், மற்ற மன்னர்களின் அரண்மனையைவிட அதுவே உயர்ந்தது என்கிறார் புலவர். ஏனெனில் ஆயின் கொடைத்தன்மை அத்தகையது. அப்படிப்பட ஆய் மன்னனின் வீட்டுப் பெண்களிடம், மற்ற நகைகள் தங்காமல்போயினும், தங்கத்தாலான தாலி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.  ஏனெனில், கொடை வள்ளல் ஆய் மன்னனாலேயே கொடையாக அளிக்கப்பட முடியாத புனிதம் வாய்ந்தது அந்தத் தாலி என்பதுதானே இதன் பொருள்.
இதோ அந்தப் பாடல் வரிகள்:
                “களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
     பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
     களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
     கான மஞ்ஞை கணனொடு சேப்ப
     ஈகை யரிய விழையணி மகளிரொடு
     சாயின் றென்ப வாஅய் கோயில்
ஈகை அரிய இழையணி மகளிர் என்ற வரிகளை நோக்க வேண்டும். ஈகை அரிய இழை என்பது மங்கல நாணாகிய தாலியைத் தவிர வேறு என்ன?
அது இருக்கட்டும், முதலில் தாலி என்ன அடிமைச் சின்னமா? இல்லையில்லை. தமிழர்களின் வீரம் சார்ந்த கலாசாரத்தின் அடையாளம். வீரத்தைக் காட்ட முதலில் உண்மையான புலிப்பல்லைக் கோத்த தாலி அணிவித்த தமிழன், பிறகு புலிநகம் வைக்கும் இடத்திலே பொன்னை வைத்து, தனக்குப் பெண்ணை வைத்துக் காப்பாற்றும் பொருள் பலம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினான்.


தாலி, ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கும் சின்னம் அல்ல, பெண்ணுக்கு ஆண் தரும் காணிக்கை. அதைக் கழுத்தில் அணிவிப்பது, ஆணுக்குப் பெண் அடிமை என்பதைக் காட்டுவதற்கு அல்லவா என்று கேட்டால், விருதுகளையும், விளையாட்டுப் பதக்கங்களையும் தாலிபோல் மாலையாகக் கழுத்தில்தானே இப்போதும் அணிவிக்கிறார்கள்? அது என்ன அவமானமா அல்லது கௌரவமா? பதக்கம் அணியப் பெறுபவர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்வது மரபு, இயல்பான செயலும்கூட. இதில் எங்கே வந்தது அடிமைத்தனமும் அவமானமும்?
அதுபோல, தனது இல்லக் கிழத்தியை கௌரவிக்கும் வகையிலேயே அவளுக்குத் தாலியைக் கழுத்தில் அணிவித்தனர் நமது தமிழ் முன்னோர்கள். இது அவமானம் அல்ல, அடையாளம்.

மகாகவி பாரதி, கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம் என்று கூறியதற்கிணங்க, திருமணம் ஆன ஆண்களும் இனிமேல் தாலி அணிய வேண்டும் என்று வேண்டுமானால் போராடலாம். அதை விட்டுவிட்டுத் தாலியை அவிழ்ப்போம், அறுப்போம் என்று கிளம்புவது புரட்சியல்ல, சிந்தனை வறட்சி!

- பத்மன்