ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

முழுமுதலோன்



(இன்று (17.02.15) மகா சிவாரத்திரியை முன்னிட்டு இந்தக் கட்டுரை.)

சிவமே முழுமுதல் பரம்பொருள், பரமாத்மா என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை. இப்படிக் கூறியதும், சிவத்துக்குப் பதிலாக வேறு பெயரைச் சொல்லி அவர்தான் மேலான கடவுள் என்றும், இல்லையேல் அவர் மட்டும்தான் கடவுள் என்றும் சிலர் வாதிடக் கூடும். அவ்வாறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் தெய்வங்களும், சிவத்துக்குள் அடக்கமே. ஏனெனில் உண்மை ஒன்றுதான். அதற்குப் பல்வேறு நாம, ரூபங்கள் இருக்கின்றன. இந்த நாம (பெயர்), ரூப (வடிவம் அல்லது தன்மை) விவாதங்களை விலக்கிவிட்டு உண்மையை ஆராய்ந்தால் அது சிவமாகவே இருக்கிறது என்பதை மேலோர்கள் உய்த்துணர்ந்தனர்.

அது ஏன்? சிவம் வேறு எதுவும் இருக்கக் கூடாதா? என்று கேட்டால், எது எல்லாவற்றிற்கும் மேலானதோ அதற்கு சிவம் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். அவ்வளவுதான். ஒற்றை உண்மையில் இருந்து இந்த உலகம் கிளைத்தது. இதன் ஆட்டங்கள் எல்லாம் முடிந்தபின் அந்த ஒற்றை உண்மைக்குள் மீண்டும் அடங்கப் போகிறது. இவ்வாறே மீண்டும் தோன்றி, இயங்கி, ஒடுங்கப்போகிறது. அவ்வாறு உலகின் எல்லா உயிர்களும், அல்லது உலகின் ஒட்டுமொத்த உயிர்ப்பும் தோன்றி, லயம் அடைகின்ற இறுதி இலக்கே சிவம்.

சிவம் என்பதற்குப் பொருள் மங்களம், நிறைவு. நிறைவு என்றால் முடிவு என்பது மட்டுமே பொருள் அல்ல. அவ்வாறு பொருள் கொண்டுதான் சிவனை அழிப்பவர் என்று தவறாகப் பொருள் கொள்கிறார்கள். மன நிறைவு என்றால் மனம் முடிந்துவிட்டது என்று பொருளா? இல்லையே? மனம் மகிழ்ச்சியால் அல்லது இன்பத்தால் முழுமை அடைந்திருக்கிறது, தேவைகள் பூர்த்தி பெற்றிருக்கின்றன என்றுதானே அர்த்தம். அதுபோல்தான் சிவம் என்றால் முழுமை என்று பொருள்.
அரைகுறையாய் முடிந்ததற்கு ஆனந்தமாக மங்களம் பாட முடியுமா? எதுவெல்லாம் தேவையோ அவையெல்லாம் பூர்த்தியாகி, திருப்திகரமாக முடிந்தால்தான் மங்களம். இல்லையேல் அமங்களம்தான். ஆகையால் இந்த ஒட்டுமொத்த உலகின் இயக்கமும் சரி, தனிமனிதன் வாழ்வின் இயக்கமும் சரி, முறையாக, நிறைவாக நிறைவடையச் செய்வது சிவமே அன்றி வேறு இல்லை. ரத்தம், சதை, நரம்பு, எலும்பு எல்லாம் சேர்ந்து உடல் இருக்கிறது. ஆனால் உயிர் இல்லையென்றால்... அது வெறும் சவம்தானே? அதற்கு சீவன் தருவதே சிவன்தான்.

ஆகையால்தான் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்றார் திருமூலர். இந்தச் சீவனாகிய சிவம் இல்லாவிட்டால் இந்த உடல் வெறும் சவம்தான். உயிர் நீங்கியபின் இந்த உடலைச் சுட்டுவிடுகிறோம். ஆகையால் நாமெல்லாம் நடமாடும் சுடுகாடுகள். இந்தச் சுடுகாட்டுக்குள்ளே சீவனாய் நடமிடுவது சிவம். சிவனின் மயானக் குடியிருப்பு குறிப்பால் உணர்த்துவது நம் தேகத்தைத்தான். அப்படியானால் ஆன்மா என்ற ஒற்றை உயிர்தானா சிவம் அப்படியல்ல. இந்த ஆன்மாவும் சிவம்தான், இதுபோன்ற ஆன்மாக்கள் அடைகின்ற இறுதி இலக்காகிய வீடுபேறாகிய ஒடுக்கமும் சிவம்தான்.

சிவம் நமக்குள்ளும் இருக்கிறார். நம்மை விடுத்து வெளியேயும் இருக்கிறார். யாதுமாகி இருக்கிறார். அனைத்தும் அவரது ஆடலே. நமக்குள் இருக்கும் சிவம் அவரது பிரதிபிம்பமே. மூலம் அந்தச் சிவம், பிரதிகள் நமக்குள்ளே உள்ள சிவங்கள். ஆனால், இந்தச் சிவத்தைத் தாங்கியிருக்கும் பாத்திரம் (உடல்கள், வடிவங்கள்) காரணமாக இவை வேறு, வேறு என்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஞானப் பக்குவத்தால் அனைத்தும் சிவம் என்பதை அறிந்துகொள்ளலாம். இதனைத்தான் சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ என்று கேட்கிறார் மகாகவி பாரதி.

நமது விருப்பத்தை, தேவையை நிறைவு செய்யும் அதாவது முடித்து வைக்கும் பரிபூரணமும் சிவமே. நமது பெரு விருப்பு வீடுபேறு, அதற்குமுன் சில சிறு விருப்புகளும் ஈடேறத்தானே வேண்டும். அவையெல்லாம் ஒன்று அனுபவித்து முடிந்துபோக வேண்டும். இல்லையேல், அது வேண்டாம் என்று பற்றறுத்து நிறைவு பெற வேண்டும். அந்தப் பக்குவத்தைத் தருவதும் சிவமேதான். ஆகையால்தான் மற்றைத் தெய்வ உருவங்கள் ஆபரணாதிகளோடு இருக்க, சிவம் அனைத்தும் விடுத்த ஆண்டிக் கோலத்தில் காட்சி தருகிறார்.

அவர் ஆண்டியாக இருந்தாலும் ஆள்பவரும் அவர்தானே. ஆகையால்தான் அந்தக் காலந்தொட்டே திருமணம் நடைபெறுதல், பிள்ளை பெறுதல் ஆகிய இல்வாழ்க்கைத் தேவைகள் நிறைவேற சிவபெருமானுக்கு விரதம் இருந்து வருகிறார்கள். சிவன் யோகீஸ்வரன். ஈஸ்வரன் என்றால் ஐஸ்வர்யங்களை உடையவன் என்று பொருள். யோக மார்க்கத்தில் திளைப்பவன் யோகி. சகல ஐஸ்வர்யங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் சிவ பெருமான் அவற்றைத் துய்க்காமல் மற்றவர்களுக்குத் தந்து உதவிக் கொண்டிருக்கிறார். அரசனும், செல்வம் படைத்தவர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு
.
சிவனது பெருமைகள், குணாதிசயங்களை உருவகப்படுத்தும் பழம் பெரும் புராணங்கள், மானுட வாழ்க்கைக்கு மேலும் பல முன்னுதாரணங்களைத் தருகின்றன. பிரபஞ்சத் தொடக்கத்தில் இறவா அமர நிலையை அடைவதற்கான அமுதத்தைப் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது உயிரைக் காக்கும் அமுதம் தோன்றுவதற்கு முன்பு உயிரை மாய்க்கின்ற ஆலகால விஷம் தோன்றுகிறது.
அதுவரை இறைவனாகிய சிவத்தை நினையாமல் தமது ஆசையைப் பூர்த்தி செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த தேவர்களும் அசுரர்களும் இடையூறு வந்ததும் இறைவனை அழைக்கிறார்கள். என்னை மதிக்காமல் போனாயே என்று தவிக்க விடாமல் விரைந்தோடி வருகிறார் சிவபெருமான். பெருகி வந்த விஷத்தை தானே விழுங்கி மற்ற உயிர்களைக் காக்கிறார். இதனால் சிவன் சிறிது நேரம் மயங்கிக் கிடந்தாலும், தனது பராக்கிரமத்தால் மீண்டும் எழுந்துகொள்கிறார். உலக உயிர்களின் நன்மைக்காக, கெடுதலைத் தாமே ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த தியாக ஸ்வரூபி சிவபெருமான். இதனால்தான் அவருக்கு தியாகராஜன் என்று பெயர்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணம். தொண்டர்களைப் பலி கொடுத்து சுகம் அனுபவிப்பவன் அல்ல, உண்மைத் தலைவன். தொண்டர்களின் துயருக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்வருபவனே தலைவன். அந்த வகையில் சிவனே சிறந்த தலைவன். அதனால்தான் அவரை மூவர் முதல்வன் என்று போற்றுகிறார்கள். பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று கடைசியில்தானே சிவன் இருக்கிறார் என்று கேட்டால், இறுதியில் அடைகின்ற இலக்குத்தானே உயர்ந்தது, இடையில் இருப்பனவா? உச்சம் என்பது இறுதி நிலை, நிறைவு நிலை, பரிபூர்ண நிலை அல்லவா? அந்த உச்சம்தான் உமாமகேசுவரன்.

நாம் அனைவரும் இறுதி இலக்காகிய வீடுபேற்றை, சிவத்துக்குள் நிறைவடையும் பேரானந்த நிலையை அடைகின்ற பக்குவத்தைப் பெறுகின்ற வகையில் நம்மை மீண்டும் பிறப்பு இறப்புச் சுழலாகிய பிறவிப் பெருங்கடலில் புகுத்தும் மறு உருவாக்கியும் அவரே. பக்குவம் அடைந்தபின் தம்முள் இணைத்துக்கொள்ளும் பரிபூரணரும் அவரே.
நம்மைக் காலவரம்புக்குள் புகுத்தும் சிவம், காலத்தைக் கடந்தவர். ஆகையால்தான் அவர் காலாதீதர் என்றும் மகாகாலர் (மகாகாளர்) என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மாக்களை பக்குவப்படுத்த பிறவிப் பெருங்கடலில் புகுத்தும் சிவத்தை பிறவா யாக்கைப் பெரியோன் என்று பழந்தமிழ் கொண்டாடுகிறது. மற்ற தெய்வங்கள் எல்லாம் பிறந்து இறக்கின்ற தன்மை உடையவை, இல்லையேல் வாழ்வாங்கு வாழ்ந்து தேவ நிலையை அடைந்தவை. அவற்றுக்கும் கால வரம்பு உண்டு. அந்தக் காலம் முடிந்தபின் ஆதியாய், அனாதியாய் திகழும் சிவத்துக்குள் ஒடுங்குகின்றன.

இதனால்தான் மற்ற தெய்வ வடிவங்கள் எல்லாம் தேவர்களாக இருக்க, சிவன் மட்டும் மகாதேவராக இருக்கிறார். ஈஸ்வரன் என்ற காரணப் பெயரும், சிறப்புப் பெயரும் சிவத்துக்கே உரியவை. ஏனைய தெய்வ வடிவங்களையும் ஈஸ்வரன் என்று சில சமயங்களில் கூறினாலும், சிவன் சர்வேஸ்வரனாக, பரமேஸ்வரனாக, மகேஸ்வரனாக இருக்கிறார்.
இதை உணர்ந்துதான் மிகப் பழமையான புராணங்களும், இதிகாசங்களும் சிவபெருமானை மகாதேவனாக, மகேஸ்வரனாகப் போற்றுகின்றன. பிற்காலப் புராணங்கள்தான் மற்றைத் தெய்வங்களை முன்னிறுத்துகின்றன. 

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ஜானகியை சுயம்வரத்தில் மணம் புரிவதற்காக தசரத ராமர் சிவ தனுஸை வளைத்ததைக் கேள்விப்பட்டதும் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமாகிய பரசுராமர் கோபம் கொள்கிறார். எவ்விதம்? சிவதனுஸு மிகப் பழமையானது. ஆகையால்தான் ராமா நீ அதை வளைத்துவிட்டாய் போலும், என்னிடம் இருக்கும் விஷ்ணு தனுசு புதியது இதை வளைத்துப்பார் என்று கொடுக்கிறார். இதில் பெறப்படும் உள்கருத்து என்ன? சிவன் மிகப் பழமையான கடவுள். அவர் பெயரால் வழங்கப்படும் வில்லும் பழமையானது என்று கூறுவதன் மூலம் சிவன் பழமையானவர் என்பதை உணர்த்துகிறார் பரசுராமர்.

சிவபக்தியில் பரசுராமரைவிட மேலானவர் யார்? விஷ்ணு அவதாரம் என்று போற்றப்படும் பரசுராமர், சிவனுக்கு ஏராளமான ஆலயங்களை ஸ்தாபித்தவர் மட்டுமல்ல, சிவபெருமானிம் சீடர். அத்துடன், தானே சிவரூபமாய் காட்சி தந்தவர். உடலெல்லால் விபூதி பூசி, ருத்திராட்சம் அணிந்திருந்ததோடு, சிவனின் ஆயுதமாகிய பரசு எனப்படும் கோடாரியையும் கையில் எப்போதும் தரித்தவர். (அதனால்தானோ, வைஷ்ணவர்கள் பரசுராமரை வணங்குவதில்லையோ?)
பரசுராமர் மட்டுமல்ல, ராமரும் சிவனை வணங்கி அருள் பெற்றவர்தான். பிராமண அரக்கானாகிய ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி, வீரஹத்தி தோஷம் நீங்க, ஈஸ்வரனுக்கு சிவலிங்கம் பிடித்து, ராமர் வழிபட்ட இடம்தான் ராமேஸ்வரம்.

இதுமட்டுமல்ல, கிருஷ்ணரும் மிகச் சிறந்த சிவபக்தர்தான். இதனை மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் அழகாக எடுத்துரைக்கிறது. உபமன்யு என்ற யோகியிடம் ஶ்ரீகிருஷ்ணர் பாசுபத தீட்சை பெற்று தவம் இருந்ததையும், சம்புவாகிய சிவனின் அருளால் தமக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அதற்கு சாம்பன் என்று கிருஷ்ணர் பெயரிட்டதையும் அனுசாசன பர்வத்தில் காணலாம். பாசுபத அஸ்திரம் பெற சிவனை வணங்குமாறு, அர்ச்சுனனுக்கு கிருஷ்ணரே உபதேசிக்கிறார். அவற்றையெல்லாம்விட, சிவ சஹஸ்ரநாமம் என்ற ஸ்தோத்திரத்தை ஶ்ரீகிருஷ்ணர்தான் உலக மக்களின் உய்வுக்காக உபதேசித்திருக்கிறார் என்பதற்கும் அனுசாசன பர்வமே அகச் சான்று.

ராவணனும் சிவபக்தன்தான், கம்சனும் சிவபக்தன்தான். அதற்காக, அவர்கள் செய்த தவறுகளுக்கான தண்டனைகளை சிவபெருமான் தள்ளிவிடவில்லை. ஏனெனில், இறைவன் மிகச் சிறந்த நடுநிலையாளன். அவர் விருப்பு, வெறுப்பின்றிச் செயல்படுகிறார். நமது பக்தியினால் நாம் விடுதலை அடைவதற்கான வழியைப் பெறலாம், ஆயினும் சில கர்மவினைகளுக்குத் தண்டனைதான் உய்வதற்கான வழி என்றால் அதைக் கொடுத்து, நம்மை பக்குவமடையச் செய்வதே இறைவனின் செயலாக இருக்கிறது.
இறுதியாக ஒரு விஷயம், சிவம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவர். சிவம்  - ஆண், பெண், அலி என்ற பேதமற்றவர். எல்லாவற்றையும் கடந்தவர். ஆயினும் பல சமயங்களில் ஆணாகக் காட்சி தருகிறார். அதேநேரத்தில் சரிபாதியை சக்திக்குக் கொடுத்து ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டினார். அர்த்தநாரி என்ற உருவத்தில் ஆண், பெண் சமத்துவத்தோடு இரண்டும் கலந்த நிலையினரை சமுதாயம் ஆதரிக்க வேண்டிய பக்குவத்தையும் போதிக்கிறார். நாராயணருக்குச் சரிபாதி கொடுத்து ஹரிஹரராக, சங்கர நாராயணராகவும் அவரே காட்சி தருகிறார்.
மேலும், சிவபெருமானின் உருவகமாகிய சிவலிங்கம், பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய முப்பெரும் தெய்வ வடிவங்களையும் உள்ளடக்கியது. சிவலிங்கத்தின் ஆவுடையாருக்குக் கீழே உள்ள பீடம் போன்ற அடிப்பாகம் பிரும்மா. இது ஆணும் பெண்ணுமற்ற தன்மையையும் குறிக்கிறது. அடுத்ததாக, நடுவில் உள்ள ஆவுடையார் எனப்படும் நடுப்பாகம் விஷ்ணு பாகம். இது பெண் தன்மையையும் குறிக்கிறது. மேலே உள்ள பாணம் எனப்படும் தண்டு போன்ற மேல் பாகம் ருத்ர பாகம். இது ஆண் தன்மையைக் குறிக்கிறது.
இவ்வாறாக யாதுமாகி நிற்கும் சிவமே முழுமுதற் கடவுள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சிவம் தனித்தும் இருக்கிறது, தன்னுள் அனைத்தையும் அடக்கியும் இருக்கிறது. சிவோஹம்.
-    பத்மன்


வெள்ளி, 20 ஜூன், 2014

நல்வாக்கு (சுபாஷிதம்)


தமிழில் மூதுரை, முதுமொழி, பழமொழி, ஆன்றோர்மொழி என்று இருப்பதைப்போல் சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதம் என்று உள்ளது. பல்வேறு பெரியோர்கள், அறிஞர் பெருமக்கள் கூறியதன் தொகுப்பு இந்த சுபாஷிதம். 

இந்த சுபாஷிதங்களில் பல, நேரடியாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையாகவும் ஒருசில, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள நல்ல கருத்துகளை அப்படியே மொழிபெயர்த்தோ அல்லது உள்வாங்கி மாற்றியமைத்தோ படைக்கப்பட்டவையாகவும் உள்ளன.

சு என்றால் நல்ல என்று, பாஷிதம் என்றால் மொழி, வாக்கு என்றும் பொருள். ஆகையால் தமிழில் இதனை நல்வாக்கு என்று சொல்லலாம். இந்த சுபாஷிதங்களில் சிலவற்றை தமிழ் கூறும் நல்லுலகு நண்பர்களுக்காக இங்கே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.

1) தானங்களால் கரங்களுக்கு அழகு
   மோதிரத்தால் அல்ல
  குளியலால் உடலுக்குத் தூய்மை
   வாசனாதிகளால் அல்ல
  உபசரிப்பால் உண்டாகும் நிறைவு
   விருந்தால் அல்ல
  ஞானத்தால் உண்டாகும் முக்தி
   சடங்குகளால் அல்ல.

2) இரவுக்கு நிலா அழகு
   இயற்கைக்கு கதிரவன் அழகு
   வாக்கினுக்கு உண்மை அழகு
   வாழ்க்கைக்கு நன்னடத்தை அழகு.

3) பிறருக்கு உதவவே மரங்கள் காய்க்கின்றன
   பிறருக்கு உதவவே நதியும் பாய்கிறது
   பிறருக்கு உதவவே பசுவும் சுரக்கிறது
   பிறருக்கு உதவவே நமக்கிந்த உடம்பும்.

4) பூச்சிகளுக்கு காற்றால் பயம்
   பூக்களுக்கு குளிரால் பயம்
   மலைகளுக்கு இடியால் பயம்
   மனிதருக்கு தீயோரால் பயம்.
  

  





செவ்வாய், 4 மார்ச், 2014

இருக்கு ஆனா இல்லை




ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் என்னத்த கன்னையா சொல்லும் வரும் ஆனா வராது வசனத்தைப் போன்றதுதான், இறைவனைப் பற்றிய விளக்கமும். ஆம்! கடவுள் இருக்கு ஆனா இல்லை. ஏனிப்படி?
கன்னையா எதனால் வரும் ஆனா வராது…” என்று இழுக்கிறார். அவரால் காரை ஓட்ட இயலும் ஆனால் அவருக்கு இரவில் பார்வை மங்கிவிடுகின்ற காரணத்தால், அதாவது குறைபாடு உள்ள காரணத்தால் வண்டி ஓட்ட இயலாது.
 
இதைப்போல்தான் இறைவனை நாம் தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள இயலும். ஆனால், நம்மிடம் உள்ள குறைபாடு காரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை. நம்மால் அறிந்து கொள்ளப்படும்போது இறைவன் இருக்கிறார். அறிந்து கொள்ள இயலாதபோது அவர் இல்லை. ஆக, ஒரேநேரத்தில் அவர் இருந்து கொண்டே இல்லாமல் போகிறார், இல்லை எனும்போதிலும் இருந்து கொண்டிருக்கிறார்.


இறைவனை அறியாமல் இருப்பதற்கு நம்மிடம் உள்ள குறைபாடே காரணம். அந்தக் குறைபாடுதான் அறியாமை என்கிற மாயை. அதனை விலக்கினால் இறைவனின் இருப்பு புலப்படும். காலையில் விழித்ததும் கண்கள் மங்கலாகத் தெரிகின்றபோது, கண்களில் படர்ந்துள்ள படலத்தை தேய்த்து அகற்றுகிறோம். கண்ணொளி சுடர் வீசுகிறது. அதைப்போல் இந்த மாயப் படலத்தைத் துடைத்தெறிந்தால் இறைவனின் திருக்காட்சி கிட்டும்.


மாயை என்பது பொய்யல்ல, அதேநேரத்தில் உண்மையும் அல்ல. இரண்டும் கலந்து நம்மை மயங்கச் செய்வது. பழுது என்று தாண்டவும் முடியவில்லை, பாம்பு என்று மிதிக்கவும் முடியவில்லை என்ற நிலைதான் இந்த மாயை. அது ஒரு தோற்ற மயக்கம்.
 
தரையில் கிடக்கும் கயிறு பாம்பாக நினைக்க வைக்கிறதே, அவ்வாறு நினைக்கும் தருணத்தில் அது பாம்புதான், அந்த நினைப்புதான் நமக்கு பயத்தைத் தருகிறது. ஆனால், அது வெறும் கயிறுதான் என்பதை உணர்ந்துகொள்ளும்போது பயம் போய்விடுகிறது. அதனை நாம் எளிதில் தாண்டிச் சென்றுவிடுகிறோம். 

அதுபோலத்தான் மாயையும். நாம் வெறும் உடல்கள் என்று மயங்கிக் கிடக்கும்போது பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடிவதில்லை. ஆண்டவனை அறிந்து கொள்ள முடியவில்லை. நம்மில் இருப்பதும், நம்போல் அனைவரிலும், அனைத்திலும் இருப்பது அந்த இறைவனே என்பதை உணர்ந்துகொள்ளும்போது அந்த இறைவன் அறிந்து கொள்ளப்படுகிறான். நம்மில் ஆட்சி செய்யத் தொடங்குகிறான். 

நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ஏக இறைவனின் பிரதிபிம்பம் என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம். 


நாணம் வந்தால் தலை சாயும்,  ஞானம் வந்தால் தலைக்கனம் சாயும். நான், எனது என்ற உடல் சார்ந்த மயக்கம்- மாயை நீங்கி, நான் ஆண்டவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்ந்துகொள்ளும்போது சுயநலம் உள்ளிட்ட மலங்கள் நீங்குகின்றன, நிர்மலம் உண்டாகிறது. அப்போது எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்முள் இருப்பவனாகிறான், அதுவரை இல்லாததுபோல் இருக்கிறான்.

உதாரணத்துக்கு, காலையில் காண்கின்ற கதிரவன் மாலையில் இல்லை. அதனால் சூரியன் இல்லை என்று ஆகிவிடுமா? ஆயினும் மாலையில் இருந்து மறுநாள் விடியும் வரை சூரியன் இல்லை. எங்கே செல்கிறது சூரியன்? இயற்கையின் விதிப்படி மாலையில் மறைந்து கொள்கிறது.
ஆக, எப்போதும் இருக்கின்ற பகலவன் இல்லாததுபோல் தோன்றுகிறான். இதுதான் மாயை. அதுபோலத்தான் எப்போதும் எங்கும் இருக்கின்ற இறைவனும் இல்லாததுபோல் தோற்றம் கொடுக்கிறான்.

இரவு நேரத்தில் சூரியன் இல்லை என்று கூறுவது ஒருவகையில் உண்மைதானே? அதுபோல அறியாமை இருள் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் கடவுள் இல்லை என்று கூறுவதும் தற்சமய உண்மையே. காலையில் ஒளியுடன் சூரியன் உதிப்பதைப்போல, ஆத்மஞானம் பிரகாசிக்கும்போது ஆண்டவனும் அறியப்படுகிறான், நம்முள் உறைபவனாகிறான். இதுவே முக்காலமும் உண்மை. 


இதனைத்தான் தட்சிணமூர்த்தி ரூபத்தில் சிவபெருமான் நமக்கு போதிக்கிறார். அவரது காலடியில் கிடக்கும் அரக்கனுக்குப் பெயர் அபஸ்மாரன். அபஸ்மாரம் என்றால் மறதி, அறியாமை என்று பொருள். அந்த அறியாமையை ஒடுக்கி அண்ணாந்து பார்த்தால், அறிவின் மொத்த உருவமாகிய, உருவகமாகிய ஆண்டவன் தெரிவார்.

சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?’ என்று மகாகவி பாரதியார் எழுப்பிய கேள்வி எப்போதும் நம் மனத்தில், சிந்தனையில் எதிரொலிக்கட்டும். அந்த சுத்த அறிவு என்பது அனைத்திலும் இறைவன் இருப்பதை அறிந்துகொள்ளும் ஆத்ம ஞானமன்றி வேறில்லை. இதனை அறிந்தால்தான் மகாகவி கூறியபடி நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு என்பது நடைமுறை சாத்தியமாகும். அதுவரையில் கடவுள், நம்மிடம் இருக்கு ஆனா இல்லை.
    
   - பத்மன்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

சொக்கநாதரின் சுவையான லீலைகள்




திருவிளையாடல் என்றதுமே, திரைப்படத்தின் தாக்கம் காரணமாக அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, புலவர் தருமிக்காக சிவபெருமான்,   நக்கீரனுடன்,  என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?”  என்று நீட்டி முழக்கும் வசனம்தான். இதில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேஎன்று  உரைக்கும் நக்கீரனைப் பார்க்கும்போது,  ஆகா! கடவுளே வந்தாலும் அவரிடம் உள்ள குற்றத்தை தைரியமாகச் சொல்லும் தமிழ்ப் புலவன் இவன் அல்லவா?  என்று எண்ணத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல.

தலைசிறந்த தமிழ்ச் சங்கப் புலவனாகவும், பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கிடந்தபோது,  கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி,  பெருந்தேவ பாணி,  திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளைப் புனைந்தவனாகவும் நக்கீரன் திகழ்ந்தபோதிலும், அப்புலவனின் தமிழில் முறையாக இலக்கணம் அறியாத சொற் குற்றம் இருப்பதை இறைவன் கண்ணுற்றார். தன்னிடமே பிழை கண்டவனாயிற்றே என்று நக்கீரனைத் தள்ளி வைக்காமல், அவரது தமிழில் இருந்த குறைகளை, நல்லதோர் ஆசானை அனுப்பி களையச் செய்து, செப்பனிட்டுத் தந்தவர் சிவபெருமான். இது, இறைவனின் 54-வது திருவிளையாடலாக, ‘கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் என்ற தலைப்பில் திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

                இலக்கணம் இவனுக் கின்னுந் தெளிகில இதனா லாய்ந்த
                நலத்தசொல் வழூஉச்சொ லென்ப தறிகிலன் அவைதீர் கேள்விப்
                புலத்தவர் யாரைக் கொண்டு போதித்தும் இவனுக் கென்னா
                மலைத்தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னு மெல்லை.       (2572)

இவனுக்கு (நக்கீரனுக்கு) இன்னும் இலக்கணம் நன்கு விளங்கவில்லை. அதன் காரணத்தால், நன்மையுடய சொல் இது, குற்றமுடைய சொல் இது என்று பிரித்தறியத் தெரியவில்லை. எனவே, குற்றமற்ற கேள்விப் புலமை வாய்ந்த யாரைக் கொண்டு நக்கீரனுக்கு இலக்கணம் போதிக்கலாம்?”  என்று மலையை வில்லாக வளைத்த முக்கண்ணனார் சிந்தித்தார் என்பது மேற்கண்ட செய்யுளின் பொருள்.



இவ்வாறு, சிவபெருமான் சிந்திக்கும் நேரத்தில், ‘முன்னர் ஒருமுறை பூமி பாரத்தைச் சமமாக்கும் பொருட்டு, அகத்திய முனிவனைத் தென்திசைக்கு தாங்கள் அனுப்பியபோது, அந்த முனிவருக்கு செந்தமிழின் முதல் நூலாம் இலக்கண நூலை தாங்களே கற்பித்தீர்களே? அப்படிப்பட்ட அகத்தியனைக் கொண்டு நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிக்கலாமே! என்று உமையம்மை எடுத்துக்கூறுகிறாள். அவ்விதமே அகத்தியனை மதுரைக்கு அனுப்பி நக்கீரனுக்கு நற்றமிழ் இலக்கணத்தை நவிலச் செய்தார் சிவபெருமான்.

அவ்வகையில், குறுமுனிவர் அகத்தியர், நக்கீரனின் குற்றத்தைக் களையும் வகையில், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம், உடன்படல் முதலிய ஏழுவகை மதங்கள் (நூல் கருத்துகள்); அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயன்கள்; குன்றக்கூறல் முதலிய பத்துவகைக் குற்றங்கள்; சுருங்கச் சொல்லல் முதலிய பத்து அழகுகள்; நுதலிப் புகுதல் முதலிய 32 உத்திகள் ஆகியவற்றையும் முதல் நூலின் தொகை, வகை, விரி என்னும் முறைகளால் எடுத்துக் கூறியதுடன், கருத்துரை, பதவுரை அடங்கிய காண்டிகை உரை, விருத்தியுரை ஆகியவற்றையும் முதல் நூலின் உட்பொருளையும் ஐயங்கள் நீங்குமாறு எடுத்துரைக்கிறார். அவ்வாறு அகத்தியர் கற்பித்த திறத்தைக் கண்டு வியந்து, அந்நூலின் பொருளாகவே முதல் ஆசிரியாராகிய சிவபெருமான் வீற்றிருந்தார்.   
      
                இருவ கைப்புற வுரைதழீஇ யெழுமத மொடுநூற்
                பொருளொடும் புணர்ந் தையிரு குற்றமும் போக்கி
                ஒருவி லையிரண் டழகொடும் உத்தியெண் ணான்கும்
                மருவு மாதிநூ லினைத்தொகை வகைவிரி முறையால்.        (2586)
               
                கருத்துக் கண்ணழிவு ஆதிய காண்டிகை யானும்
                விருத்தி யானும்நூற் கிடைப்பொருள் துளக்கற விளக்கித்
                தெரிந்து ரைத்தனன் உரைத்திடு திறங்கண்டு நூலின்
                அருத்த மேவடி வாகிய ஆதியா சிரியன்.                 (2587)

என்று இதனை திருவிளையாடல் புராணம் விவரிக்கிறது.
புலவர்கள், அதுவும் தமிழ்ப் புலவர்கள் என்றால் சண்டையும் சச்சரவும் சகஜமான விஷயமாயிற்றே! அதுபோல் ஒருமுறை சங்கப் புலவர்கள் இடையே யாருக்குப் புலமை அதிகம்? என்று சண்டை மூண்டபோது, அதனைக் களைந்து, சிறந்த புலவர்கள் யார்? என்பதை நிலைநாட்டி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திய திருவிளையாடலும் சுவையானதே.

 
சங்கப் புலவர்களிடையே சச்சரவு எழுந்தபோது, ஒரு புலவர் வடிவில் தோன்றிய சிவபெருமான், 'தனபதி-குணசாலினி  என்ற தம்பதியருக்கு முருகப் பெருமானே மகனாகப் பிறந்துள்ளான். ஊமையான அவனிடம் சென்று புலவர்கள் தங்கள் பாடல்களைக் கூறினால், சிறந்தவற்றை அவனே தேர்ந்தெடுத்துத் தருவான்' என்று கூறுகிறார். ஊமை எப்படி தீர்ப்பு வழங்குவான்? என்று புலவர்கள் கேட்க, ஊமையானாலும் கேள்வித் திறன் மிகுந்த அவன், முகக் குறியாலேயே யாருடைய பாடல் சிறந்தது என்பதைக் காட்டிடுவான் என்கிறார் இறைவன்.

அதன்படி, ஊமைப்பிள்ளையிடம் சென்று அனைத்துப் புலவர்களும் தங்கள் செய்யுட்களைக் கூறுகின்றனர். சிலரது பாடலில் உள்ள சொல்லாழத்தையும், வேறு சிலரது பாடல்களில் உள்ள பொருட்செறிவுகளையும், மற்றும் சிலரது சொல் மற்றும் பொருள் அழகையும் கேட்டு, தோள்களைக் குலுக்கி, கண்களில் நீர்வடிய அந்த இளைஞன் மகிழ்கிறான். பலரது பாடல்களைக் கேட்டதும் தலையைச் சாய்த்து இகழ்கிறான். இவ்வாறாக, நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவரது பாடல்களை மட்டுமே மிகச் சிறந்தது என அந்த இளைஞன் ஏற்கிறான். இதனை உணர்ந்ததும், புலவர்கள் கலகம் தீர்ந்து, மீண்டும் நட்பு பூண்டனர் என சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்   விளக்குகிறது.

இவற்றையெல்லாம்விட ஒரு தமிழ்ப் புலவனுக்காக பாண்டிய மன்னனிடம் கோபித்துக் கொண்டு, சிவபெருமான் மதுரையம்பதியை விட்டு அருகே உள்ள வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்த சுவையான திருவிளையாடலை, ‘இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் எடுத்துரைக்கிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னருள் குலேச பாண்டியன் என்பவன், சிறந்த தமிழ்ப் புலவன். ஆதலால், தமிழ்ச் சங்கத்தில் அவனும் ஒரு புலவனாக வீற்றிருக்கும் சிறப்பு படைத்திருந்தான்.


ஒருமுறை, புலவர் கபிலரின் நண்பரான இடைக்காடன் என்ற புலவர், சிறப்பான பனுவல் ஒன்றை இயற்றிக் கொண்டு, மன்னன் குலேச பாண்டியனைக் காணச் சென்றான். இடைக்காடன் பாடிய பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை மிகுந்திருந்த போதிலும், குலேச பாண்டியன் பொறாமை காரணமாக, மனத்தில் தோன்றிய மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமலும், யாதொரு சொல்லும் கூறாமலும் பேசாமலிருந்தான். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாத இடைக்காட்டுப் புலவன்,  நேராக மீனாட்சி-சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, இறைவனிடம் முறையிட்டான்.

தமிழறிந்த பெருமானே! திருவாலவாய் இறைவனே! தன்னைச் சரணடைந்தவர்களுக்கு நல்ல நிதி போன்ற கடவுளே! சிறந்த (வேப்பம்பூ) மாலையை அணிந்த பாண்டிய மன்னன் பொருட்செல்வத்தில் மட்டுமல்ல, கல்விச் செல்வத்திலும் மிகச் சிறந்தவன் என கற்றோர் கூறக் கேட்டு, சொற்சுவை மிகுந்த பாடலை அவன் முன்னே பாடி நின்றால், சிறிதுகூடத் தலையை அசைக்காமல் என்னை அவமதித்துவிட்டான்என்று புலம்பினான் புலவன்.     

சந்நிதியில் வீழ்ந்தெழுந்து தமிழிறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
                நன்னிதியே திருவால வாயுடைய நாயகனே நகுதார் வேம்பன்
                பொன்னிதிபோல் அளவிறந்த கல்வியுமிக் குளனென்று புகலக் கேட்டுச்
                சொன்னிறையுங் கவிதொடுத்தே னவமதித்தான் சிறிதுமுடி துளக்கா னாகி.
                                                                                                                                                                                (2618)

அதுமட்டுமின்றி, ‘என்னை ஓர் அஃறிணைப் பொருள்போல் பார்த்து அரசன் வாளாவிருந்துவிட்டானே!என்று அரற்றிய இடைக்காட்டுப் புலவன், ‘இது எனக்கு ஏற்பட்ட அவமானமா? இல்லையில்லை. சொல்லின் வடிவமாக உன் இடப்புறத்தே என்றும் விளங்கும் உமையம்மையையும், சொல்லின் பொருளாகத் திகழும் உன்னையும்தான் அப்பாண்டியன் அவமானப்படுத்திவிட்டான் என்று சொல்லி சினத்துடன் மதுரையின் வடபுறத்தே சென்றான். உடனே, சிவபெருமான், தனது லிங்கத் திருமேனியை மறைத்து, உமாதேவியாகிய மீனாட்சியுடன், திருக்கோவிலுக்கு வடக்கே, வைகை நதிக்குத் தெற்குப் புறத்தே ஒரு கோவிலை உண்டுபண்ணி அங்கே வீற்றிருந்தார். தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த தமிழ்ப் புலவர்களும் சிவபெருமானைப் பின்தொடர்ந்து அந்தக் கோவிலைச் சென்றடைந்தனர்.

மறுநாள் அதிகாலை, திருக்கோவில் சென்ற சிவனடியார்கள், சிவலிங்கத்தைக் காணாது அச்சமும் வியப்பும் மேலிட மன்னனிடம் விரைந்து சென்று முறையிட்டனர்.  இதைக் கேட்டதும் பாண்டியன் மூர்ச்சிந்து விழுந்தான். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து, இறைவா! நான் என்ன குற்றம் செய்தேன்? என்று அழுது புலம்பினான். அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடிவந்து, புதிய கோவிலிலே சிவபெருமான், உமையம்மையோடும், தமிழ்ப் புலவர்களோடும் வீற்றிருக்கும் அதிசயத்தைக் கூறினர். உடனடியாக அங்கு விரைந்தோடிய பாண்டிய மன்னன் சொக்கநாதர் திருமேனி முன்பு பல துதிகளை மனமுருகிப் பாடி நின்றான்.

அப்போது அசரீரியாக, ‘உனது துதியால் எனக்கு மகிழ்ச்சி. இங்கு யாம் உறைகின்ற லிங்கம், குபேரனால் பூசிக்கப்பட்ட சுயம்பு லிங்கம். ஊழிக்காலத்தும் மறையாத பெருமை வாய்ந்தது. இன்று முதல் இந்தத் திருத்தலம் வடதிருவாலவாய் என்று புகழ் பெறும். இடைக்காடன் செய்யுளை நீ அவமதித்ததன் காரணமாக, அவன் மேல் எழுந்த அன்பினால் யாம் இங்கு வந்தோம் என்று சிவபெருமான் கூறுகிறார். உடனே, தன் பிழைக்கு வருந்தி, பாண்டிய மன்னன் மன்னிப்புக் கோருகிறான். சிவபெருமானும் உமையம்மை மற்றும் சங்கப் புலவர்கள் புடைசூழ மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளினார். பாண்டிய மன்னனும் இடைக்காட்டுப் புலவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிறப்புகளை அளித்து கௌரவித்தான்.

 
இவ்வாறாக சொக்கநாதர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே தாமே ஒரு புலவராக வீற்றிருந்தது மட்டுமின்றி, சங்கப் புலவர்கள் இடையே ஏற்பட்ட பிணக்குகளையும் தீர்த்து வைத்து, புலவர்களுக்கு உரிய சிறப்புகளையும் வாதாடி பெற்றுத் தந்து, தமிழே உருவாய் வீற்றிருக்கிறார். சொக்கம் என்றால் மாசு மருவற்ற அழகு என்று பொருள். எனவேதான், சிறிதும் கலப்பற்ற 24 காரட் தங்கத்தை சொக்கத் தங்கம் என்கிறார்கள். சங்கத் தமிழ் என்றால் மாசு மருவற்ற சொக்கத் தமிழ் அல்லவா? அதனால்தான் சொக்கநாதரும் பெயருக்கேற்ப தானும் களங்கமற்ற அழகோடு திகழ்வதுடன், தன்னால் இலக்கணம் வகுக்கப்பட்ட தண்டமிழும் குறையின்றி நிறையோடு விளங்க மதுரையம்பதியிலே பல சுவையான திருவிளையாடல்களைப்  புரிந்திருக்கிறார். எந்நாட்டவர்க்கும் இறைவனான கயிலையம்பதி, தென்னாடுடடைய சிவனாகச் சிறப்பித்துக் கூறப்படுவதன் உட்பொருளும் இதுவேதான். ஓம் நமசிவாய!

-          பத்மன்