ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2013

விடுதலை ஆற்றுப்படை



(ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் ஸ்லோகத்திற்கு எனது மொழிபெயர்ப்புக் கவிதை – பத்மன்)


மனம்புத்தி தன்னுணர்வு எண்ணம் நானல்ல
கேள்விசுவை முகர்வு பார்வையும் நானல்ல
விண்ணோ புவியோ தீயோவளி யோவல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

மூச்சுக் காற்றுமல்ல ஐந்து வளியுமல்ல
மூலம் ஏழுமல்ல ஐந்து படிவுமல்ல
பேச்சுறுப் பல்லகைகால் பிறப்புறுப் புமல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

விருப்புவெறுப் பில்லை பொறாமை மோகமில்லை
புகழ்பெருமை யில்லை பகையுணர் வுமில்லை
அறமில்லை பொருளில்லை காமமில்லை வீடுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

பாவமில்லை புண்யமில்லை இன்பமில்லை துன்பமில்லை
மந்த்ரமில்லை தீர்த்தமில்லை வேதமில்லை வேள்வியில்லை
உண்பதில்லை உணவுமில்லை உண்பவனும் நானில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 
சாவுமில்லை ஐயமில்லை எனக்கு சாதிபேதமில்லை
தாயுமில்லை தந்தையிலை நான்பிறப் பதில்லை
உறவுமில்லை நட்புமில்லை குருவுமில்லை சீடனில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

நான்மாறுபடு வதில்லை உருவமே துமில்லை
எங்கும்பரந் துள்ளநான் எதிலுமொட் டுவதில்லை
விடுதலை யென்பதில்லை விழைந்தறி வதுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நூல் வெளியீட்டு விழா அழைப்பு



அன்பார்ந்த நண்பர்களே! நேயர்களே!

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய நூறு ஸ்தோத்திரங்கள் கொண்ட சிவானந்த லஹரீ பக்தி இலக்கியத்தை சிவகளிப் பேரலை என்ற பெயரில் தமிழ்க் கவிதை நூலாக மொழிபெயர்த்து, விளக்கவுரையுடன் வடித்துள்ளேன். அதில் ஒரு கவிதை இதோ:


ஆயிரம் தெய்வமுண்டு அற்பமாம் வரம்தர
ஆழ்கனவிலும் நினையேன் அவர்தம் தொழுகை
அரிபதுமன் அருகிருந்தும் அறியவொண்ணா சாம்பனே
அரிதாம் நின்திருவடி தொழுதலை வேண்டுவனே!

அந்த நூலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கியுள்ளனர்.

அந்நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 29.09.2012 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.




அனைவரும் வருகை தந்து நூல் வெளியீட்டு விழாவின் வெற்றிக்கு உறுதுணை புரியுமாறு வேண்டுகிறேன்.

அனைவரும் வருக! சிவ ஆனந்தத்தைப் பருக!

அன்புடன் பத்மன் 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

தென்முகக் கடவுள் துதி





(ஸ்ரீஆதிசங்கரர் அருளிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் எனது மொழிபெயர்ப்புக் கவிதை – பத்மன்)


காப்புச் செய்யுள்கள்

ஆதியில் பதுமனைப் படைத்தவர் எவரோ
அவருக்கு மறைபொருள் உரைத்தவர் எவரோ
ஆத்ம ஒளியாய் என்னுள் உறைபவர் எவரோ
அவர் பாதம் பணிந்தேன் விடுதலை வேண்டி.

மௌனத்தின் விளக்கத்தால் பரம்பொருள்
தத்துவத்தைப் பறைசாற்றும் இளைஞன்
முதுபெரும் ஞானிகள் யோகிகள்
      சீடராய் சூழப்படும் முனிவன்
ஆசான்களின் தலைவன் அறிவொளி
      முத்திரையன் ஆனந்த வடிவோன்
ஆத்மாவின் ரசிகன் புன்சிரிப்பு
      வதனன் தென்முகத்தான் போற்றி.



ஸ்தோத்திரங்கள்

ஆடியில் நோக்கிடும் சூழல்போல் உள்ளே வெளியுறும் உலகம்
தன்னுள் கண்டிடும் கனவில் வெளியோ உலகோடு தோற்றம்
உண்மை ஒன்றுதான் பிரும்மம் ஆத்மா அதனுடை பிம்பம்
அன்புடேன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.

விதையுள் இருக்கும் மரம்போல் அவனுள் கிடந்த உலகம்
அவனது மாயா சக்தியால் எடுத்தது பலப்பலத் தோற்றம்
தன்னிச்சை யாலனைத்தும் படைத்த அவனோ மாபெரும் யோகி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.


அவனது ஒளியால் பொய்யுலகு கொடுக்கிறது
     உண்மைபோல் தோற்றம்
அவனே போதித்தான் உண்மையை நீயே 
    அதுவெனும் மறைபொருளை
அதனை உணர்ந்தால் மட்டுமே அறுந்திடும்
    பிறவிச் சுழற்சி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
    கடவுளே போற்றி.

பல்துளைப் பாண்டத்து உள்ளிட்ட விளக்கு பல்லொளி பெருக்கும்
அவனுடை ஒளியே அனைத்திலும் ஒளிர்ந்து பார்வை யுமாகும்
அறிவேன் என்ற விழிப்புங்கூட அவனது அறிவே கொடுக்கும்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



உடல்மூச்சு ஐம்புலன் செய்கைச்சினை மாறுபடு 
    புத்தியோடு வெறுமைநான்
பேதைபால ரந்தகர் மூடர்போல கலக்கமுடை 
    அறிவரிது மொழிவர்
மாயசக்தி காட்டிடும் மயக்கமிந்த அறியாமை
     அழிப்பது டனதனை
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
     கடவுளே போற்றி.

கிரகணம் பிடித்தாலும் சூரியசந்திரர் உண்மையில்
     ஒளியிழப் பதில்லை
உறக்கத்தில் உணர்வு மனதுதொடர் பறுந்தாலும் 
     அறிவாற்றல் மறைவதில்லை
உறக்கத்தை விழித்தவன் அறிவதுபோல முன்மாயை 
     அறிவான் ஆதமஞானி
அன்புடன் போதித்த குருவே தென்முகக் 
     கடவுளே போற்றி.



உடலுக்கு உண்டாம் குழந்தை முதலாம் பல்நிலை தனிலும்
மனதுக்கு உண்டாம் விழிப்பு முதலாம் பல்நிலை தனிலும்
ஒருபோல் எப்போதும் வீற்றிருந்து ஞானமுத்திரை காட்டிடும் இறையே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.

கனவு விழிப்பு இருநிலையில் காரண காரிய உறவுகளால்
தலைவன் தொண்டன் ஆசான் சீடன் தந்தை மகனாம்
உலகின் அனுபவம் பல்பேதம் அவனுடை மாயை ஆற்றலே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



புவிநீர் தீவளி ஆகாயம் சூரியன் சந்திரன் ஜீவாத்மா
அசையும் அசையா பிரபஞ்சத் தினெட்டும் அவனுடை வெளிப்பாடாம்
பிரும்மன் அவனே சத்தியம் அறிந்தால் ஒடுங்கும் ஆணவம்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி.



ஆத்மனின் பரந்த தன்மை இங்கே பகரப் பட்டது
இதனைக் கேட்போர் படித்தோர் உட்பொருள் இருத்துவோர் அடைவர்
எங்கும் வியாபிக்கும் பேற்றையும் எல்லாம் வல்ல இறைநிலையும்
எட்டின் சாரமும் அவராவர் முழுமதியும் மகிழ்வும் எட்டுவர்.

நிறைவுச் செய்யுள்கள்

ஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர்
அருங்கிழவோர் சீடராம் ஆசான் இளைஞராம்
மௌனமே ஆசான் மொழியாகும் சீடருக்கோ
முற்றிலும் தீர்ந்தது ஐயம்.



ஆலமரத்து அடிவீற்று தியானிப்பார் நம்மீது
அளித்தருள்வார் ஞானத்தை அண்டிடும் அடியோர்க்கு
மூவுலகின் குருவீசன் தென்முகத் தேவன்
மூள்பிறவித் துயரறுக்கும் கோவே போற்றி.


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஆறுமுக அரவம்




(இன்று (10.08.2012) ஆடிக் கிருத்திகையை   முன்னிட்டு, முருகப் பெருமான் மீது திருச்செந்தூரில் ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் ஸ்லோகத்தின் எனது தமிழ் மொழிபெயர்ப்பான ஆறுமுக அரவம் கவிதை மலரை இங்கே சமர்ப்பிக்கிறேன்  – பத்மன்)



பால முகத்தேனும் வினைமலை பொடிக்கும்
வேழ முகத்தேனும் சிங்கங்கள் துதிக்கும்
இந்திரன் முதலோர் போற்றும் கணநாதா
புந்தியில் வைத்தேன் மங்களம் அருள்வாய்.           ௧



ஓதலும் அறியேன் பொருளும் அறியேன்
பாடலும் அறியேன் உரைகளும் அறியேன்
அகத்தினில் ஓரொளி அறுமுகத்தே உதிக்க
வாக்கினில் சுரந்தது பாக்களின் அருவி.                ௨



மயிலேறும் மன்னன் மகாதத்வ வண்ணன்
மனம்நாடும் வடிவோன் மாதவத்தார் உயிரோன்
அந்தணர் அரும்புகழ் அருமறை திருப்பொருள்
ஆண்டவன் புதல்வ அகிலத்து முதல்வ.                ௩

என்னுடை சந்நிதி வந்தவர் எவரும்
தன்னுடை பவக்கடல் கடந்தவ ராவர்
என்றே உரைத்து செந்தூர் கரையில்
நன்றே நிற்கும் சக்தியின் மைந்த.                       ௪



அலைகள் விழுந்து அழிவது போலாம்
தலைகள் வணங்கின் பாவம் அழியும்
கடலைச் சுட்டும் குகையின் கனலென்
இதயத் தாமரை இருத்தி வாழிய.                        ௫

கந்தன் ஏறிய கந்தமா மலையில்
வந்து ஏறியே வணங்கும் பக்தன்
கைலாச மேறிய புண்ணியம் பெறுவான்
கனிவாய் கூறிய ஆறுமுகம் வாழிய.                    ௬



பெருங்கடல் கரையில் பெரும்பவம் அழிக்கும்
பெருமுனி நோற்கும் பெருமண மலையில்
குகையுள் வசிக்கும் தன்னொளி வசந்தன்
குறைகள் நசிக்கும் குகனே போற்றி.                     ௭

பொன்வீடு வசித்து முறையீடு தீர்த்து
மணம்வீசு மலர்நிறை மாணிக்க மஞ்சத்து
ஆயிரம் ஞாயிற்று அருளொளி வீசும்
அறுவர் வளர்த்த அமரேச போற்றி.                      ௮


அன்னம் சூழ்ந்து செந்நிறம் பூண்டு
அகத்தை அள்ளும் அடிமலர் அழக
வாழ்கடல் வாதனை என்மன வண்டு
சூழ்ந்துநின் மலரடி மொய்ப்பதில் மகிழ்க.              ௯

பொன்னால் புனைந்த ஆடைகள் தரித்து
கிங்கிங் கிணிகிணி சலங்கை இசைக்க
உண்மை வாய்ந்த ஞானியர் போற்றும்
திண்மை இடையோன் கந்தா வாழிய.                   ௰



வேடுவர் பெண்ணை சேர்த்து அணைத்து
மடுவில் பூசிய சாந்து சுமந்த
செம்மார் வேலா தாரகன் காலா
அன்பர் ஆசை தீர்க்கும் நேசா.                           ௧௧

துதிக்கா பிரும்மனை சிறையில் அடைத்தாய்
துதிக்கை விலங்கின் திமிரைத் துடைத்தாய்
மதிக்கா பதுமன் அரக்கர் புடைத்தாய்
மதித்தே துதித்தேன் பதினிரு புயத்தாய்.                ௧௨




கறைநறு திலகக் கதிரறு முகத்து
குறையொரு நிலவு ஒப்பில எண்ணில்
கறையறு முகத்து உவமை கூறிட
அறுமதி இலவே குறைமதி உளதே.                     ௧௩

நின்முக முறுவல் மலருறு அன்னம்
நின்கடைப் பார்வை மலர்மொய் வண்டு
நின்இதழ் உமிழ்நீர் மலர்பொழி அமுதம்
நின்அறு முகமும் தாமரை மலரே.                      ௧௪



விரிந்து அகன்று செவிவரை நீண்டு
சுரக்கும் கருணை பன்னிரு கண்ணா
அதனுள் ஒருகண் கடைநோக்குப் பார்வை
என்மீது படர குறையென நினக்கு?                     ௧௫

‘அங்கம் உதித்த அருமைப் புதல்வ’
பொங்கும் உவகையில் அரனார் அணைத்து
உலகின் முதல்வன் உச்சி முகர்ந்த
உன்னறு சென்னிக்கு என்னுடை வணக்கம்.           ௧௬



மார்பில் ரத்தின மாலை ஒளிரும்
காதணி அசைவால் கன்னமும் ஒளிரும்
மஞ்சள் உடுத்தி மயக்கும் வேலொடு
என்புறத்தில்  என்றும் சிவக்குமரன் தங்குக.            ௧௭

சக்தியின் மடியில் அமர்ந்திடு போதினில்
சங்கரர் அன்புடன் கரத்தை நீட்டிட
தாவியே பாய்ந்து தழுவியே மகிழும்
குழந்தைக் கடவுள் குமரா போற்றி.                     ௧௮



குமரா மைந்தா குகனே கந்தா
தலைவா வேலா மயில் வாகனனே
புலிந்தன் மருகா துயர்துடைப் போனே
தாரகன் காலா காப்பாய் என்னை.                      ௧௯

பொறிகள் தளர்ந்து உணர்வும் அகன்று
பீழை பொழிந்து பயத்தால் நடுங்கி
புறப்படு நிலையில் சடுதியில் தோன்றி
குகனே தயாளா காப்பாய் என்னை.                     ௨௦



காலன் தூதுவர் கடிந்தெனை அதட்டி
கட்டியும் வெட்டியும் துயர்தரு வேளையில்
கருணை மயிலில் விரைந்தே வந்து
கரத்தில் வேலொடு காப்பாய் என்னை.                ௨௧

உன்னடி கிடந்தது உன்னைத் துதித்து
உன்னால் மகிழும் அடியேன் நானும்
அந்திமக் காலை அசைவற்ற வேளை
அலட்சிய மின்றிக் காப்பாய் என்னை.                 ௨௨



அண்டம் ஆயிரம் ஆண்ட சூரனும்
தாரகன் வக்தரன் சிங்கனும் கொன்றாய்
வான்மன மேகமோகம் வதைப்பாய் இல்லை
செய்வதும் என்ன? செல்வதும் எங்கு?                 ௨௩

அடியேன் என்றும் துக்கச் சுமையோன்
அன்பர் காக்கும் உனையின்றி நாடேன்
துன்பம் கொடுக்கும் உன்னன்பு கெடுக்கும்
மனநோய் களைவாய் சக்தியின் மைந்தா.            ௨௪




குஷ்டம் க்ஷயமும் வலிப்பு ஜுரமும்
கடுப்பு பைத்யம் பலவித நோய்களும்
பைசாச கணங்களும் பயந்தோ டும்மே
பன்னீர் இலையில் உன்நீறு பார்த்திட.                 ௨௫

கந்தனைக் கண்டு கந்தனைக் கேட்டு
கந்தன் புகழை நாவால் ஓதி
கந்தன் திருவடி கரத்தால் துதித்து
எந்தன் அங்கம் உனக்காய் இருக்க.                    ௨௬




முனிவர்  தேவர் பக்தர் விருப்பமே
முடிக்கும் தெய்வம் எல்லா விடத்தும்
கடையனைக் கூடக்கடைத் தேற்றும் தெய்வம்
கந்தனை யன்றி அறியேன் அறியேன்.                  ௨௭

மனைவி மக்கள் சுற்றமும் நட்பும்
மற்ற ஆணும் பெண்ணும் அனைவரும்
உன்னைப் போற்றிட வணங்கிட துதித்திட
நினைப்பவர் ஆகிட அருள்வாய் குமரா.                ௨௮



கெடுசெய் மிருகம் புள்ளினம் மற்றும்
கொடுமை நோய்கள் புன்மைகள் வந்தால்
கைவேல் கொண்டு உடனே துரத்திடு
கிரௌஞ்சம் துளைத்த கூர்வடி வேலா.                ௨௯

தாயும் தந்தையும் தன்சேய் பொறுப்பர்
நீயும் அதுகொள் தேவசேனைத் தலைவா
நானொரு குழந்தை நீயுலகின் தகப்பன்
என்பிழை பொறுத்து அருள்வாய் ஈசா.                 ௩௦



மயிலும் போற்றி வேலும் போற்றி
கடாவும் போற்றி சேவலும் போற்றி
கடலும் போற்றி செந்தூர் போற்றி
மீண்டும் போற்றி கந்தப் பெருமானே.                   ௩௧

ஆனந்தன் வாழ்க அருளோன் வாழ்க
புகழோன் வாழ்க வடிவோன் வாழ்க
கடலோன் வாழ்க உறவோன் வாழ்க
முக்திதரு முதல்வன் மைந்தா வாழ்க.                  ௩௨



புஜங்கம் என்னும் தோத்திரம் இதனை
பக்தியால் படித்தோர் பயனாய் பெறுவர்
நற்றுணை மக்கள் பொருளும் வாழ்வும்
முருகன் அருளால் முக்தியும் முடிவில்.                ௩௩