மகாகவி பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாகவி பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 15 செப்டம்பர், 2014
புதன், 11 செப்டம்பர், 2013
பாரதி சிந்து
பாட்டாலே
வையத்தைப் பாலிக்க வந்ததோர்
தலைவன் – தங்கத் தலைவன் – தம்
ஏட்டாலே தீயவர்
கூட்டத்தை ஓட்டிய
புலவன் சிங்கப் புலவன் – அவன்
பதந்தொட்டு
பண்பான நெறிபட்டு என்றுமே
வாழ்வோம் – மண்ணில் வாழ்வோம் – மிக்க
இடர்பட்டு
நொந்தாலும் இன்னலால் வெந்தாலும்
வீழோம் – நாங்கள் வீழோம் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
நாட்டின்மேல்
பாசத்தை நன்றாக வைத்திடச்
செய்தான் – நம்மைச் செய்தான் – நம்ம
வீட்டிலும்
வெளியிலும் பெண்களைப் போற்றிடச்
செய்தான் – நன்மை செய்தான் – அவன்
பேச்சாலும்
மூச்சாலும் தமிழ்மொழி ஓங்கிடச்
செய்தான் – தவம் செய்தான் – அவன்
எழுத்தாலும்
கருத்தாலும் தீமைகள் நீங்கிடச்
செய்தான் – விதி செய்தான் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
தீரன் – கவிதை வீரன் – நல்ல
ஆக்கத்தில்
நம்மவர் சிந்தை செலுத்திய
ஆர்யன் – சுத்த வீர்யன் – கெட்ட
வேற்றுமை பேசியே
கெடுதிகள் செய்வோர்க்கு
காலன் – காக்கும் வேலன் – மக்கள்
ஒற்றுமை ஓங்கவே
தம்வாழ்வைத் தந்திட்ட
நேசன் – சக்தி தாசன் – அந்தத்
தலைவன்தான்
தங்கத் தலைவன்தான் சிங்கப்
புலவன்தான் – அவன் யாரு?
பாரதி பாரதி
பாரதி பாரதி
பேரு – அவன் பேரு.
- பத்மன்
வெள்ளி, 11 ஜனவரி, 2013
உண்மையான ஆண்கள் – சுவாமிஜியும், மகாகவியும்
(சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின
விழாவை முன்னிட்டு இந்தக் கட்டுரை.)
சமீபத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஹிந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையில் (Taking the Aggression
out of Masculinity by Sanjay Srivatsava, Anthropologist – Jan. 3) வெளியாகியுள்ள கருத்து, அபத்தத்தின்
உச்சகட்டம். சுவாமிஜியின் ஆண்மைமிகு தோற்றம், இந்திய ஆணாதிக்கக் கலாச்சாரத்தின்
அடையாளமாம். தேசியம் என்ற பெயரில் அது சகித்துக்கொள்ளப்பட்டதோடு, போற்றி வளர்க்கவும்பட்டதாம்.
கோணல் புத்தி என்பதற்கு நேர் எடுத்துக்காட்டு, இந்த வாதம்தான்.
ஆண்கள் தங்கள் சுயநலத்துக்காக வெளிவேஷத்தோடு காட்டும் பரிவு பெண்களுக்கு அவசியமில்லை
என்றும், மாதர்குலம் தம்மைத்தாமே பலவீனர்கள் என்று நினைப்பதை விட்டொழித்து மன
மற்றும் ஆன்ம பலத்தோடு உலக வாழ்க்கையை அணுகவேண்டும் என்றும் உண்மையான அக்கறையோடு
உபதேசித்தவர் சுவாமிஜி. ஆனால் அரிதாரம் பூசிய போலிப் பெண்ணியவாதிகள் ஆண்மை என்றால்
என்ன? பெண்மை என்றால் என்ன? என்பதன் உள்ளர்த்தத்தை
உணர்ந்துகொள்ளாமல் மனம்போன போக்கில் மண்வாரித் தூற்றுகிறார்கள்.
ஆண்மை என்பது ஆளும் திறன் - பிறரை மட்டுமல்ல, தன்னையும் அடக்கி ஆளும் திறன்.
அதேபோல் பெண்மை என்பது பேணும் கலை - தன்னை மட்டுமல்ல, பிறர் நலனையும் பேணும் கலை. ஆணுக்குள்
பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் புதைந்து கிடக்கிறது. இதுதான் அர்த்தநாரீஸ்வர
தத்துவம். நவீன விஞ்ஞான ஆய்வுக் கருத்துகளும், இந்தத் தத்துவத்தைத்தான் வேறு
வார்த்தைகளில் மொழிகின்றன.
“பெண்மை
வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும், “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம்
இந்த நாட்டிலே” என்றும் ஆனந்தக்
கூத்தாடியவர் மகாகவி பாரதி. அவரே, பாஞ்சாலி சபதத்தில், துரியோதனன் அவையில்
பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை அவையோர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கையாலாகாத்தனத்தை எடுத்துரைக்க “சீச்சீ பெட்டைப் புலம்பல்” என்று கூறியிருக்கிறார்.
இதனால் பாரதியை ஆணாதிக்கவாதி என்று கூறிவிட முடியுமா?
தற்காலத்து பெண்ணியவாதிகள் அப்படித்தான் கூறுவார்கள் போலும். பெண்மையைப்
போற்றிய பாரதி ஏன் ஆண்மையின் அடையாளமாக மிகப் பெரிய மீசை வைத்திருந்தார்? என்றுகூட
கேள்வி கேட்பார்கள், இந்தப் போலிப் பெண்ணுரிமைவாதிகள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக்கொண்டிருந்த
காலத்தில், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்
நடத்தவந்தோம்” என்று தன்னையே பெண்ணாக பாவித்துக்கொண்டு, உண்மையான பெண் சுதந்திரம்
போதித்தவர், மகாகவி பாரதி. அவர் இப்படிப்பட்ட பெண்கள் முன்னேற்றப் புரட்சிக்காரராக
உருவானதற்கு ஒருவகையில் சுவாமிஜிதான் காரணம்.
1905-ல் வாராணசியில் (காசியில்) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற மஹாகவி
பாரதி, டம்டம் நகரில், சுவாமிஜியின் சீடர் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அப்போது மனைவியை அழைத்துவரவில்லையா? என்று
சகோதரி நிவேதிதா கேட்க, பெண்பிள்ளைகளை இதுபோல் அழைத்து வரும் வழக்கம் இல்லை என்று
பதில் கூறியிருக்கிறார் பாரதி. அப்படியானால், நீங்கள் கேட்கும் தேச சுதந்திரம்
எப்படிப் பூர்த்தியாகும்? என்று கேட்டார் சகோதரி நிவேதிதா. அப்போதுதான் மகாகவியின்
ஞானக்கண் விழித்தது. சகோதரி நிவேதிதையை தனது ஆன்மீக குருவாக ஏற்றார் மகாகவி
பாரதியார். அவரது பேச்சிலும், மூச்சிலும் தேச சுதந்திரத்தோடு, பெண் சுதந்திரமும்
புகுந்து கொண்டது. அந்தவகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.
அப்பேர்பட்ட மகாகவி பாரதியார், “கற்பு நிலையெனச் சொல்லவந்தார் இருகட்சிக்கும்
இஃதைப் பொதுவில் வைப்போம்” என்று போதித்தார். இதன் உட்பொருள், பெண்களுக்கு
மட்டுமல்ல பிறன்மனை நோக்காப் பேராண்மை என்ற கற்பு ஆண்களுக்கும் அவசியம்
என்பதுதான். தற்காலத்து போலிப் பெண்ணியவாதிகள் மறைமுகமாகத் தூண்டிவிடுவதுபோல்,
ஆண்களில் சிலர் (பலர்?) பேணாத கற்பு, பெண்களுக்கு எதற்கு என்பதல்ல!
- - பத்மன்
செவ்வாய், 11 டிசம்பர், 2012
பாரதியைப் பாடுவோம்
(இன்று [11.12.2012] வானவில்
பண்பாட்டு மையம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி மஹாகவி பாரதியார் இல்லத்தில் பாரதி
திருவிழாவில், ஜதி பல்லக்கு உட்பட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. வழக்கம்போல்
வழக்கறிஞர் திரு. ரவி, திரு. சுப்பு ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முதுபெரும் கவிஞர் திரு. முருகசரணன், மஹாகவி பாரதிக்குப் போர்த்திய பொன்னாடை
மற்றும் பொற்கிழி பெறுகின்ற பாக்கியம் பெற்றார். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் என்
மானசீக குருநாதர் (நேரில் பார்க்கத்தான் வழியில்லையே) மஹாகவி பாரதிக்கு நான் அர்ப்பணித்த
பாட்டு அஞ்சலியை இங்கே சமர்ப்பிக்கிறேன். – பத்மன்)
பல்லவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்
ஆண்டுதோறும் கூடுவோம் அவன்புகழைப் பாடுவோம்
அனுபல்லவி
பாரதியை – நம்ம பாரதியை – மகாகவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்
சரணங்கள்
தாய்மொழிப் பற்றதனை ஊட்டியவன் பாரதி
தாய்நாட்டுப் பெருமையினைத் தீட்டியவன் பாரதி
நாய்போல நமைநினைத்தோர் நடுங்கவைத்தான் பாரதி
நானிலத்தில் ஈடுஇல்லா நற்கவிஞன் பாரதி
(பாரதியைப்
பாடுவோம்)
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்றுசொன்ன பாரதி
நன்றுமிகு புதுமைகளைப் படைத்தளித்த பாரதி
பாரதமே பாருக்கெல்லாம் திலகமென்ற பாரதி
பாங்குடனே பாரதத்தின் பெருமைசொன்ன பாரதி
(பாரதியைப்
பாடுவோம்)
வீறுடனே விடுதலைக்குப் பாட்டுரைத்த பாரதி
கூருடனே விடுதலையின் பொருளும்சொன்ன பாரதி
யாருடனும் அன்புகொண்ட அருள்சுரபி பாரதி
தார்வேந்தர் போலநம்மை நிமிரச்செய்த பாரதி
(பாரதியைப்
பாடுவோம்)
பெண்ணியத்தைப் போற்றினான் பேடிகளை மாற்றினான்
சாதிகளைத் தூற்றினான் சமத்துவத்தைச் சாற்றினான்
தேசீயத்தை நாட்டினான் தெய்வீகத்தைக் காட்டினான்
காவியங்கள் பாடினான் அமரகாவியமாய் ஆகினான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














