அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 அக்டோபர், 2013

காங்கிரஸ் : “கை”விடப்பட வேண்டிய கட்சி


காங்கிரஸ் – ஒரு காலத்தில் விடுதலைக்காகப் போராடிய கட்சி. தற்காலத்தில், மக்கள் அதனிடமிருந்தே விடுதலை பெறுவதற்காக அல்லது அதற்கு விடைகொடுத்து அனுப்புவதற்காகப் போராட வேண்டிய நிலையை அந்தக் கட்சியே உருவாக்கிவிட்டது. காரணம், காந்திஜியின் அறிவுரையை அந்தக் கட்சி கேளாமல்போனதே!
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பல்வேறு அரசியல் அபிலாஷைகள், சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்களையும் அவர்களது தொண்டர்களையும் மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைத்த அமைப்புதான் காங்கிரஸ். வெள்ளையர் அரசாங்கத்துக்கு கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக ஒருசில இந்தியத் தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகத்தான் காங்கிரஸ் பிறப்பெடுத்தது. இருப்பினும் பிற்காலத்தில், ‘சுயராஜ்ஜியம் எங்களது பிறப்புரிமை’ என்று முழக்கமிட்ட லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றோரின் பரிச்சயத்தால் பரிபூரண சுதந்திரப் போராட்டத்துக்கான கருவியாக காங்கிரஸ் உருவெடுத்தது. திலகரின் திடீர் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற மகாத்மா காந்தியின் தலைமையின்கீழும் இந்த லட்சியம் தொய்வுறாமல் போராடியது.


காங்கிரஸின் லட்சியமாக வளர்த்தெடுக்கப்பட்ட தேச சுதந்திரம் கிடைத்த உடன், காந்திஜி சொன்ன முதல் வார்த்தை: ‘காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும்’ என்பதே. ஆனால், அரசியல் லாபத்துக்காக, காந்திஜியின் பிம்பத்தைப் பிடித்துக்கொண்ட நேரு உள்ளிட்ட இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு, காந்திஜியின் இந்தக் கருத்து பிடிக்காமல் போய்விட்டது. சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லிச் சொல்லி எளிதில் வாக்கு திரட்டக் கிடைக்கும் வாய்ப்பைத் தவிர்த்துவிட அவர்கள் தயாரில்லை, இன்றளவிலும்கூட. ஆனால், சுதந்திரம் என்ன கடைச் சரக்கா, அவர்கள் வாங்கித் தருவதற்கு?
நாட்டின் சுதந்திரம், அதற்காகப் போராடிய ஒவ்வோர் இந்தியனின் ரத்தத்திலும், வியர்வையிலும், தியாகத்திலும் கிடைத்த விழுமிய வெற்றி. இதனை ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்? இதுபோன்ற அரசியல் அடாவடிகள் நடக்கும் என்று தெரிந்ததால்தான் காங்கிரஸை அன்றே கலைத்துவிடச் சொன்னார் காந்திஜி. ஆனால் காங்கிரஸைக் கலைக்காதது மட்டுமல்ல, தேர்தல் ஆதாயத்துக்காகப் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சியின் கொடியைக்கூட தேசியக் கொடியைப் போன்று அமைத்து வாக்காளர்களை வசீகரிக்கும் ஏமாற்று வித்தையை சுதந்திரம் கிடைத்த தருணத்திலேயே தொடங்கியது காங்கிரஸ் தலைமை. இன்றளவிலும் அதுபோன்ற ஏமாற்றுத் தந்திரங்கள் தொடர்கின்றன.
காந்திக்கும் கந்திக்கும் வித்தியாசம் தெரியவிடாமல் நேரு-இந்திரா பரம்பரையினர் தங்கள் பெயருக்குப் பின்னே போட்டுக்கொள்ளும் குடும்பப் பெயர் இதற்கோர் நல்ல உதாரணம். நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா பிரியதர்சினியின் காதல் கணவர் ஃபெரோஸ் கந்தி. அவர் ஒரு பார்ஸி. அந்தச் சமூகத்தினரின் வழக்கப்படி, ஃபெரோஸ் தனது பெயருக்குப் பின்னே கந்தி என்ற தமது குடும்பத்தாரின் தொழிலால் அணைந்த பெயரை, அதாவது ஊதுபத்தி விற்பனை செய்யும் நபர் (கந்தம் என்றால் நறுமணம் என்று பொருள்) என்பதைக் குறிக்கும் கந்தி என்ற பெயரை பின்னொட்டாக வைத்துக்கொண்டார்.
ஆனால், காந்திஜியின் செல்வாக்கு, பேரளவில் மட்டுமல்ல பெயர் அளவிலும் தமக்கே வர வேண்டும் என்ற நோக்கில் இந்திரா கந்தி, இந்திரா காந்தி என்றானார். அவரது வழித்தோன்றல்களும் காந்திகள் ஆனார்கள். ஆங்கிலத்தில் கந்திக்கும், காந்திக்கும் ஒரே மாதிரியான எழுத்துகள்தானே? ஆனால் உச்சரிப்பில்...உண்மையான காந்திக்கும் இந்தப் போலி காந்திகளுக்கும் எழுத்துகள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் குணாதிசயங்கள்? அந்தக் காந்தியின் வாரிசுகள் யாரும் அரசியலில் இல்லை. அவர்களது பெயர்கள்கூட பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால் இந்தப் போலி காந்திகளின் பிறவாத வாரிசுகள்கூட இந்தியாவின் அரியணைக்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள். இதில் ராகுலை இளவரசர் என்று மோடி விளித்தால், வருத்தம் வேறு.
அது இருக்கட்டும். நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 10 ஆண்டுகள் தவிர, ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த குத்தகையாய் மத்திய அரசை தம் வசம் வைத்திருக்கும் காங்கிரஸால் நாடு கண்ட பலன் என்ன?  மகத்தான வளங்களும், மனித ஆற்றலும் நிறைந்த இந்தியா, உலகில் சிறந்த நாடுகளின் வரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
சிறிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் மட்டுமல்ல, பெரிய நாடான சீனாவும்கூட நமக்கு எத்தனையோ படிகள் முன்னேறத்தில்தானே இருக்கின்றன? ஊழல் சாதனையில் வேண்டுமானால் இந்தியாவுக்கு முதல் வரிசை காத்திருக்கும். இதுதானே காங்கிரஸின் சாதனை!
பாட்டியும், தந்தையும் தீவிரவாதத்துக்கு இரையானதாக வேதனைப் பட்டிருக்கிறார் ராகுல். உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள்தான். ஆனால், அந்தத் தீவிரவாதம் வேர்விட யார் காரணம்? காலிஸ்தான் பிரிவினைவாதி பிந்திரன்வாலேயை வளர்த்தது யார்? பஞ்சாபில் அகாலிதளத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக அருமைப் பாட்டி இந்திரா தானே அந்தக் கொடுமையைச் செய்தார்? இலங்கைத் தமிழர் பிரச்சனையை சிக்கலாக்கியது யார்? அங்கே தீவிரவாதம் வளர பாட்டி காரணம் என்றால், திக்குத் தெரியாமல் அரசியல் செய்து நிலைமையை மேலும் மோசமாக்கியது ராகுலின் தந்தை ராஜீவ் அல்லவா? வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்க்க முடியுமா?
நாடு பிரிவினை ஆகாது என்று காந்திஜி கொடுத்த வாக்குப் பொய்த்துப்போனதற்கு யார் காரணம்? எனது பிணத்தின்மேல் தான் பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் என்று சொன்ன மகாத்மாவின் கண்ணெதிரிலேயே கண்ணீர் வழிய நாடு பிரிந்ததற்கு யார் காரணம்? நேருவின் சுயநல அரசியல்தானே?
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவதற்கு முகமது அலி ஜின்னாவுக்கு நேரு அன்றே நேராய் வழிவிட்டிருந்தால், அல்லது ஜின்னாவின்  ஆரோக்கியமான போட்டிக்கு வாய்ப்பளித்திருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காதே? ஹிந்துப் பெரும்பான்மை கொண்ட இந்தியாவுக்கு சிறுபான்மை முஸ்லிம் தலைவர் ஜின்னா பிரதமராகி உலகுக்கு ஒரு புதுமையைக் கொடுத்திருக்குமே!  
ஜின்னா தனி நாடு கேட்டது ஹிந்துக்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற காரணத்துக்காக அல்ல, அப்படியிருந்தால், பல பிரச்சனைகள் இருந்தாலும், இன்றைய இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வது எப்படி? உண்மையான காரணம், ஜின்னாவும் நேருவும் இணைந்துபோக முடியாது என்பதுதானே! அதற்காகத்தானே பிரிந்து கிடைக்கும் நிலத்துண்டத்திற்காவது, தான் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கில் ஜின்னா பாகப்பிரிவினை செய்து பாகிஸ்தானைப் பெற்றார்?
பிளவுபட்ட இந்தியாவிலாவது ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக இணைந்துவாழ காங்கிரஸார் விட்டார்களா? தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் அவர்களை தாஜா செய்யும் வாக்குவங்கி அரசியலை வளர்த்தது காங்கிரஸ் தலைவர்கள்தானே? ஹிந்துப் பெரும்பான்மையை காட்டி முஸ்லிம்களை அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சலுகைகளை வழங்குவதுபோல் போக்குக்காட்டி ஹிந்துக்கள் மத்தியில் எரிச்சலூட்டுவதும் காங்கிரஸ் கண்டுபிடித்த உத்தி அல்லவா?
அதுசரி, இன்று பாரதிய ஜனதாவுக்கு மதவாத முத்திரை குத்தி, அந்தக் கட்சிக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவளித்து விடக்கூடாது என்று மன்றாடும் காங்கிரஸின் அன்றைய நிலை என்ன? பிளவுபடாத இந்தியாவில் காங்கிரஸை முஸ்லிம் லீக்கினர் எப்படிக் கருதினர்? அழைத்தனர்? ‘ஹிந்துக்களின் கட்சி’ என்றுதானே! தங்களுக்கும் ஏற்புடைய கட்சி என்று காங்கிரஸை முஸ்லிம்கள் அனைவரும் மதித்திருந்தால் தனிநாடாய் பாகிஸ்தான் உருவாகி இருக்குமா?
பிரிட்டிஷ் அரசு, நாட்டைவிட்டுப் போகும்போது வெறும் பிரதேசங்களை மட்டும் காங்கிரஸிடம் விட்டுச் செல்வில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி, தங்கள் சுயநலத்துக்காக நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டுவது, மக்களுக்கு நன்மை செய்வதுபோல் பாசாங்கு காட்டி கொள்ளையடிப்பது, அரசியல் இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது, நியாயவாதிபோல் காட்டிக்கொண்டு அநியாயம் புரிவது, அரசியல் எதிரிகளை மிரட்டிப் பணியவைப்பது, மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலனுக்காகவே உழைப்பதுபோல் காட்டிக்கொள்வது ஆகிய பல்வேறு கல்யாண குணங்களையும் தானமாக அளித்துச் சென்றிருக்கிறது. அந்தக் குணங்கள் குறைவுபடாமல் மென்மேலும் வளர்த்து போஷித்து வருகிறது காங்கிரஸ்.
ராஜீவ் காலத்தில் சிலபல கோடிகள் லஞ்சம், ஊழல் என்று தகவல் அடிபட்டது. அதற்கே மக்கள் கொதித்துப் போனார்கள். ஆனால், ராஜீவின் மனைவியார் சோனியா ஆட்டிப்படைக்கும் மன்மோகன் சிங் பொம்மை அரசோ பல ஆயிரம் கோடிகளைக் கடந்து பல லட்சம் கோடிக்கணக்கில் ஊழலில் மகத்தான வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் மரத்துக் கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு ஊழலை, மனித வாழ்வின் சாதாரண அங்கமாக மாற்றிக் காட்டியிருக்கிறது இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
லாலு, கருணாநிதி, முலாயம், மாயாவதி ஆகியோருடனான காங்கிரஸின் ‘கூடிப் பிரியும் கூடாநட்பு’ கண்ணாமூச்சி ஆட்டம், ஊழல்களுக்குப் புதிய பரிமாணத்தையும்; சி.பி.ஐ., விசாரணைக் கமிஷன் போன்ற அமைப்புகளை பொம்மலாட்டம்போல் ஆடவைக்கும் புதிய இலக்கணத்தையும் அல்லவா படைத்துள்ளது? மேலும், ‘எதிர்த்துக்கொண்டே ஆதரிப்பது, ஆதரித்துக்கொண்டே எதிர்ப்பது’ என்ற அரும்பெரும் அரசியல் சூத்திரத்தையும் அல்லவா அருட்கொடையாக அளித்திருக்கிறது?
கர்மவீரர் காமராஜரை எதிர்த்து ‘இந்திரா காங்கிரஸ்’ என்று தன் பெயரிலேயே இந்திரா கந்தி, தனிக் கட்சி கண்டபோதே, கொஞ்சநஞ்சம் மீதமிருந்த உண்மையான காங்கிரஸும் முழுமையாக உயிரிழந்துவிட்டது. இப்போது இருப்பது சோனியா காங்கிரஸ். இந்த காங்கிரஸால் நாடு சோனியாவதை எத்தனை நாள்தான் தாங்குவது? வருகின்ற தேர்தல் அதற்கு முடிவுரை ஆகட்டும்.
தற்கால காங்கிரஸின் தேர்தல் சின்னம் ‘கை’. அம்மன் கை காட்டினால் ‘அபயம்’ என்று பொருள். ஆனால் இந்திரா, சோனியா அன்னையர்கள் காட்டும் கையோ ‘ஆ! பயம்’ என்று அலற வைக்கின்றன. கை காட்டுவதற்கு மற்றுமொரு பொருள் ‘போதும்’ என்பது. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு, ‘நீங்கள் இதுவரை ஆண்டது போதும்’ என்று சொல்லி வாக்காளர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் விடை கொடுக்க வேண்டும். இல்லையேல், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண முடியாது.
-    பத்மன்

வியாழன், 13 டிசம்பர், 2012

சில்லறை விஷயம் அல்ல




“கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று கேட்டார் மகாகவி பாரதியார். இனி சிரிக்க வழியின்றி அழுகைக்கு மட்டுமே உத்தரவாதமாய் இந்தக் கொடுமை அண்மையில் இந்தியத் திருநாட்டில் அரங்கேறியிருக்கிறது, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில். நாட்டின் இறையாண்மை, பொருளாதார சுயபலம் இரண்டையும் காவு கொடுத்துவிட்டு அன்னிய நாட்டு ராட்சத “வால்”மார்ட்டுகளை வரவழைத்திருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.


நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்”கெடுப்பில்” மத்திய அரசு நடந்துகொண்ட விதமே, இந்திய ஜனங்கள் இவர்களது பார்வையில்  விற்பனைப் பொருள்கள் என்பதற்கு கட்டியம் கூறிவிட்டது. ஜெயிக்க மாட்டோம் என்ற அச்சத்தில் இருந்தபோது ஒரு பதுங்கல், ஆட்களைச் சரிகட்டி ஜெயம் நிச்சயம் ஆனவுடனேயே ஒரு பாய்ச்சல் என அரசியலில் தான் ஒரு புலி என்பதை காங்கிரஸ் நிரூபித்துவிட்டது. மத்தியக் கூட்டணி அரசுக்கு முதலில் எதிர்ப்பு காட்டிவிட்டு, பிறகு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டிக்கொண்ட, தி.மு.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய அவியல் கட்சிகள், நரிகளா, விலாங்கு மீன்களா, பச்சோந்திகளா, என்ன வகை ஜீவராசிகள் என்பதுதான் தெரியவில்லை.

அது கிடக்கட்டும். இந்திய மக்களின் தலையில் மத்திய அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள மற்றொரு காலனி ஆதிக்கமான அன்னிய நேரடி முதலீட்டின் விளைவுகளை சற்று நினைத்துப் பார்ப்போம். உழைத்து உழைத்து ஓடாய்ப் போகும் விவசாயிகளுக்கு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லையே என்ற காரணத்துக்காகத்தான், அன்னிய ராட்சத நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அரசாங்கம் அனுமதிக்கிறதாம். “கேப்பையில் நெய் ஒழுகுகிறது” என்பார்களே அது, இதுதான்.


இதனோடு உபரியாக, மலிவு விலையில் மக்களுக்கு, தரமான பொருள் கிடைக்குமாம். ஆரோக்கியமான தொழில் போட்டி ஏற்படுமாம். புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இந்தியாவுக்குள் புகுந்துகொள்ளுமாம். வேலைவாய்ப்பு வெகு பிரகாசமாய் உருவெடுக்குமாம். பூவை அல்ல பூந்தோட்டத்தையே காதில் சுற்றுகிறார்கள்.

முதல் விஷயம், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும், இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை எடுத்துக்கொள்வோம். சில்லறை வணிகத்தில் இறங்கும் அயல்நாட்டு ராட்சத நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து அறுபது சதவீத விளைபொருட்களை வாங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதை இதற்கு வாகாக சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், இந்த விளைபொருட்களை காப்பாற்றி, சேமித்து வைக்க பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட கிடங்குகளை இந்த நிறுவனங்கள் அமைக்கும் என்றும் கூறுகிறார்கள்.


சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். இடைத்தரகர்களை ஒழித்துவிட்டாலும்கூட, விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்குத்தான் விளைபொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மலிவு விலையில் வாங்கி, அதிக அளவுக்கு விற்பதன் மூலம் மிகுந்த லாபம் ஈட்டுவதே இதுபோன்ற ராட்சத நிறுவனங்களின் வியாபார தாரக மந்திரம். நாடு முழுவதும் கிளைபரப்பி ஏகபோகம் செய்யும் இதுபோன்ற மகா மெகா நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளுக்கு மிகுந்த கூலி அல்லது கூடுதல் விலை கிடைக்க என்ன வழி?

விவசாயிக்கு கட்டுப்படியாகாத விலையை இந்நிறுவனங்கள் கொடுக்க முன்வந்தால் அரசு தலையிடுமா? உரிய விலை கிடைக்க என்ன உத்தரவாதம்? அரசு தலையிடுமென்றால் வியாபார சுதந்திரம் பறிபோனதென்று கூக்குரல் எழுமே? அமெரிக்காவிலிருந்து ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று கட்டளைக்குரல் வருமே? இதுபோன்று தலையிடலாமென்றால் இப்போதுள்ள நடைமுறையிலேயே இதனைச் செய்யலாமே?


அதுசரி, நவரத்தினங்கள், மகாரத்தினங்கள் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் உபரிப் பணம் வைத்திருக்கும் மத்திய அரசுக்கு சர்வதேசத் தரத்தில் குளிர்பதனக் கிடந்குகளைக் கட்டி, நிர்வகிக்கத் தெரியாதா? அதற்கெனவே நாடு தழுவிய பெரிய அரசு நிறுவனத்தை அமைக்க இயலாதா? ஹூம், ஏற்கெனவே இருக்கும் கிடங்குகளிலேயே எலிகள் ஏறி விளையாடுகின்றன, தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளில் கேட்பாரின்றி முளைவிட்டுச் செடிகள் முளைத்து தானியங்கள் மக்கி வீணாகின்றன. இந்த லட்சணத்தில் அரசே குளிர்பதனக் கிடங்கு நடத்துவதா? என்று வினவலாம். ஆயிரம் குறை இருந்தாலும் அதனைக் களைவதை விட்டுவிட்டு, அன்னியர் புகுவதற்கு அனுமதிப்பது என்ன நீதி?

இடைத்தரகர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டுமென்றால், சந்தைப்படுத்தும் முகமையை (மார்க்கெட்டிங் ஏஜென்சி) அரசே அமைக்கலாமே? விவசாய விளைபொருட்களை நல்ல விலைக்கு வாங்கி பாதுகாத்து விற்கின்ற நிறுவனத்தை அரசே பெரிய அளவில் நடத்தும்போது, இதற்கென ஓரளவு கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டாலும்கூட, சாமானிய மக்களுக்கு தரமான பொருட்கள், கொள்ளை லாபம் அடிக்கும் தரகுக் கூட்டம் இல்லாததால், மலிவு விலைக்குக் கிடைக்குமே? மறுபுறம், விவசாயியும் உரிய பலன் பெறுவாரே? புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகுமே?

மேலும், அரசியல் தலையீட்டாலும், கட்டாயக் கடன் தள்ளுபடி மேளாக்களாலும், ஊழல்களாலும் தள்ளாடிக் கிடக்கும் கூட்டுறவு அமைப்புகளை சீர்படுத்தி இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்தினால் எல்லாத் தரப்பினருக்கும் எவ்வளவு நன்மை? வெற்றிகரமான “அமுல்” வரலாறு ஏன் மற்ற துறைகளிலும் அமலாகவில்லை? குரியன்கள் ஏன் குறுகிப்போனார்கள்?


மத்திய அரசாங்கமும், அன்னிய (முதலீட்டு) ஆதரவாளர்களும் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், சில்லறை வணிகத்திற்குப் பதில், wholesale எனப்படும் மொத்தக் கொள்முதல் வியாபாரத்தில் அவர்களை இறக்கி விட்டிருந்தாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது, இந்தியப் பொருளாதாரத்திற்கு நேர் அடிதான் என்பதில் சந்தேகமில்லை.

பல்லாயிரக்கணக்கான உண்மையான சில்லறை வியாபாரக் கடைகள், இந்த அன்னிய பகாசுர சில்லறை நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்பட்டு கல்லறைக்குப் போய்விடும். இதற்கென ஒரு மேல்தட்டுக் கூட்டம்தான் போகும், நடுத்தர, சாமான்ய மக்கள் சிறிய கடைகளுக்குத்தான் செல்வார்கள் என்று சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. காரில் வந்து இறங்கும் வெறும் மேல்தட்டுக்கு மட்டுமே கடை விரிக்க, அன்னிய நிறுவனங்கள் என்ன மேல்மாடி காலியான நிறுவனங்களா? அய்யா, இந்தியா உலகின் மிகப் பெரிய வியாபார சந்தை அய்யா, அந்தக் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி. திரும்பத் திரும்ப வெளிநாட்டு வியாபாரிகளிடம் தானே ஏமாந்துபோகிறோம்? சரித்திரத்தைச் சரியாகப் படிக்காத தரித்திரங்கள் நாம்!


மலிவு விலை விற்பனைக்காக, இந்திய விவசாயியும் குறைவான விலை மட்டுமே கிடைத்து நலிவடைவான். மேலும், இருக்கவே இருக்கிறார் சின்ன அண்ணன் சீனா. என் கடன் ஏனென்று கேட்க நாதியில்லாமல் வேலை செய்துகொண்டே இருப்பதே என்று வாழும் வாயில்லா ஜீவன்களான அப்பாவி மனிதர்கள் நிரம்பி வழியும் சீனா, மலிவு விலைப் பொருட்களை, பெரிய அண்ணன் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் நிரப்பிவிடும். பின்னர் ஒவ்வொன்றாக இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கும் மூடுவிழா காணவேண்டியதுதான். அப்புறம் ஏதோ சொன்னார்களே, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, அது வெறும் பகல்கனவுதான். வெளிநாட்டு விற்பனை நிறுவனக் கடைகளின் சிப்பந்திகள் எண்ணிக்கை வேண்டுமானால் ஏதோ சற்று கூடலாம். ஆனால், அயல்நாட்டுப் பொருட்களின் தாராள வருகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல வேலைவாய்ப்புகள் பறிபோகும். அத்துடன், சுயதொழிலும் சுருங்கிப் போகும். சொந்தக் கடைக்கு  முதலாளிகளாக இருந்தவர்கள், இனி வந்த கடைக்கு ஊழியர்களாகப் போகவேண்டியதுதான்.

அடுத்தடுத்த அன்னியப் படையெடுப்புகளால் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக இருண்டுபோய்க் கிடந்த இந்தியா, இப்போதுதான் யாருடைய தயவும் இன்றி, பொருளாதார வளம் என்ற வெளிச்சத்தைப் பெற்றுவருகிறது. எதிர்கால பொருளாதார, அறிவுசார் வல்லரசு இந்தியாதான் என்பது இந்தியர்களுக்குத் தெரியுமோ இல்லையோ? தற்போது பொருளாதார மந்தநிலையால் தள்ளாடிவரும் மேல்நாட்டு வளர்ந்த நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் காலை ஊன்றுவதற்கு நமது குரல்வளையிலா இடம் கொடுப்பது?



சுவாமி விவேகானந்தர் வார்த்தையில் சொன்னால், ஆடு என்று நினைத்து கலங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவே, நீ சிங்கம் என்பதை உணர்ந்து சிலிர்த்து எழு. பொருளாதார வளத்திலும் சரி, சர்வதேச அரசியல் பலத்திலும் சரி, உனது கர்ஜனையை இனி உலகம் கேட்கட்டும்.

-      -   பத்மன்


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தவளை வாயா? தந்திர வலையா?




தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறிய கருத்தும் அந்த வகையைச் சேர்ந்ததாய் விமர்சிக்கப்படுகிறது. “வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது, மூன்றாவது கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமர் ஆவார்” என அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்ற அத்வானி, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று கூறியது மிகப் பெரிய சர்ச்சையையும், அத்வானிக்கு மிகப் பெரிய இழப்பையும் ஏற்படுத்தியது. எனினும் அத்வானி சொன்னது உண்மைதான். ஜின்னா அடிப்படையில், மத அடிப்படைவாதி அல்லர், சமயச் சார்பற்றவர்தான். ஆனால், சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேருதான் வருவார் என்பதை சரியாக கணித்த அவர், தான் பிரதமர் ஆவதற்காக முஸ்லிம்களை மத ரீதியில் ஒன்றுதிரட்டி பாகிஸ்தான் என்னும் தனிநாட்டை உருவாக்கினார்.


மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என்பது தவறு, ஜின்னாவை பாகிஸ்தானின் தந்தை என்பது பொருந்தும். ஏனெனில், பாரதம் எனப்படும் இந்தியா, பன்னெடுங்காலமாக உள்ள பழம்பெரும் நாடு. ஆனால், இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிளந்து பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பெற்றுத் தந்ததால், ஜின்னாவை பாகிஸ்தானின் தந்தை என்று அழைப்பதில் தவறில்லை.

முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை ஏற்படுத்தியபோதிலும் அதனை இந்தியாவைப்போல் மதச்சார்பற்ற நாடாக வைத்திருப்பதே ஜின்னாவின் கனவு. அது அவரது வாழ்நாளிலேயே சிதைந்தது. ஜின்னாவின் உண்மையான ஆசையைக் கூறி பாகிஸ்தானை மதவாதப் பிடியில் இருந்து வெளிக்கொண்டு வரும் நோக்கிலும், அதேநேரத்தில் தன்மீதான மதவாதி என்ற முத்திரையை நீக்கும் நோக்கிலும் ஜின்னா மதச்சார்பற்றவர் என்ற கருத்தை அத்வானி பாகிஸ்தானில் எடுத்துக் கூறினார். ஆனால் அது நேர்மாறான பலனைத் தந்தது.


நாட்டைப் பிளந்த ஜின்னாவை எப்படி மதச்சார்பற்றவர் என்று அத்வானி  கூறலாம் என்று காங்கிரஸ்காரர்கள் வானத்துக்கு எகிறிக் குதிக்க, சங்கப் பரிவார் அமைப்புகளோ பிரதமர் ஆகும் கனவில் இருந்த அத்வானியை கைகழுவிவிட்டன. பாகிஸ்தானோடும் நட்பு பூண்டு, மதச்சார்பற்ற பிம்பத்துடன் நாட்டின் பிரதமராகவும் ஆகலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று நினைத்த அத்வானி தலையில் பெரும் பாறாங்கல்லாய் அவரது கருத்து விழுந்தது.

இப்போது அத்வானி மீண்டும் திருவாய் மலர்ந்தருளியிருப்பது “நுணலும் தன்  வாயால் கெடும்” என்ற விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. “அத்வானிக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. பாரதிய ஜனதா மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடும் என்பதை அவரே ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது அவரது பேச்சு” என காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
நரேந்திர மோதி, பிரதமர் ஆகும் கனவில் இருக்கிறார், அவரை பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் இல்லை என அறிவிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அடம் பிடிக்கிறது. இந்நிலையில் மோதியின்  வளர்ச்சியைத் தடுக்கவும், அதற்காக நிதீஷ் குமார் போன்றோருக்கு பிரதமர்  பதவிக்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் அத்வானி இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது.


ஆக, இப்போதும் தவளை வாயர் என்ற விமர்சனத்துக்கு அத்வானி ஆளாகி இருக்கிறார். ஆனால், இதில்தான் அத்வானியின் ராஜதந்திரம் மறைந்திருக்கிறது. சென்ற முறை பாரதிய ஜனதா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த கூட்டணி பலமே காரணமாக அமைந்தது. இப்போதோ கூட்டணிக் கட்சிகள் காங்கிரசோடு முரண்டு பிடிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் கைக்கு கை கொடுத்த ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி ஆரம்பித்த கட்சி அசுர பலத்தைக் காட்டி, காங்கிரசை மிரட்டியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிராந்திய பலம் வாய்ந்த கட்சிகள் அதிக அளவில் வெளியே வர அத்வானியின் கருத்து ஒரு தூண்டுகோலாய் அமையும். காங்கிரசோடு முன்பே கூட்டணி வைத்து அது பகிரும் தொகுதிகளையும் பின்னர் ஜெயித்தால் அது தயவு காட்டும் பதவிகளையும் பெறுவதைவிட விலகி நின்று போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வென்றால், பிறகு காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவிடம் வலுவான பேரம் பேசலாமே என்று கூட்டணிக் கட்சிகள் கருதலாம்.



இதுபோல் மாநிலக் கட்சிகள் தனித்து நின்றால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது காங்கிரஸ் ஆகத்தான் இருக்கும். ஏனெனில், காங்கிரசுக்கு பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் உள்ள செல்வாக்கைவிட பாரதிய ஜனதாவுக்கு கூடுதலாகவே உள்ளது. காங்கிரசின் பெரிய அளவிலான கூட்டணியே, முக்கியமாக மாநிலப் பெரிய கட்சிகளுடனான கூட்டே அதன் பலத்துக்குக் காரணம். அதை உடைக்க அத்வானியின் பேச்சு பயன்படும்.


இதற்கு ஆதாரம்போல், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பண்டோபாத்யாய் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே தேதி குறித்து தனிக்குடித்தனம் போகக் காத்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியோ, பஹுஜன் சமாஜோ காங்கிரசுக்கு பெரிய பங்கு கொடுக்க எப்போதுமே தயாரில்லை.


தமிழகத்தில் வேண்டுமானால் கருணாநிதியின் தி.மு.க., காங்கிரஸ் நாமஸ்மரணத்தை தொடரலாம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தி.மு.க-வின் ஆதரவு காங்கிரசுக்கு பலமா, பலவீனமா என்பது ஒரு தொடரும் பட்டிமன்றம். ஆக கூட்டணிக் கட்சிகள் கழன்று கொண்டால் அதிகம் திண்டாடப்போவது காங்கிரஸ்தான். பல்வேறு ஊழல்களாலும், விலைவாசி ஏற்றத்தாலும் காங்கிரஸ் அரசு அதன் ஆயுளை எண்ணிக் கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் அது கரை சேர்வது மாபெரும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய சாத்தியமில்லை.


இந்நிலையில் மூழ்கும் கப்பலுக்கு மேலும் ஒரு அடி பலமாகக் கொடுக்கும் நோக்கிலேயே அத்வானி, மூன்றாவது கட்சியைச் சேர்ந்தவருக்கு பிரதமர் ஆக வாய்ப்பு என்ற அஸ்திரத்தை பிரயோகப்படுத்தியுள்ளார் என எண்ணத் தோன்றுகிறது.

-    பத்மன் 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மோதி விளையாடு





எதிரிகள் கூட ஏக்கப் பெருமூச்சுடன் பார்க்கும் இன்றைய பிரபல இந்திய அரசியல் தலைவர் நரேந்திர மோதி. அவரது அரசியலை விமர்சிக்கும்போது காரசாரமாகும் கூட்டத்தினர், அவரது ஆட்சித்திறனை விமர்சிக்கும்போது கப்சிப் ஆகிவிடுகிறார்கள். இல்லையேல் மென்று முழுங்குகிறார்கள். மோதியின் சாதனை உயரம் அப்படி. இந்தச் சாதனையும், பல சோதனைகளைக் கடந்து வந்ததுதான்.


இந்தச் சாதனைக்காகவே அவர் மீதான குற்றச்சாட்டுகள் மறுதலிக்கப்பட  வேண்டியவையா? அப்படிக் கூற முடியாது. அவை ஆழ்ந்து பகுத்தறியப்பட வேண்டியவை. மோதி மதவாதி என்பது பரவலான ஒரு குற்றச்சாட்டு. இதற்கு பலர் எடுத்துக்காட்டும் உதாரணம் குஜராத் கலவரம். ஆனால் அது நிகழக் காரணமான கோத்ரா ரயில் எரிப்பும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்துவரும் குண்டுவெடிப்புகளும் எதன் அடிப்படையிலானவை என்பதை இந்த மத எதிர்ப்புவாதிகள் விமர்சன வளையத்திற்குள் உட்படுத்துவதில்லை.

காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டினர் அகதிகளாக வெளியேறி மற்ற மாநிலங்களில் தஞ்சம் புக நேர்ந்ததற்கும், தற்போது வங்கதேசத்தில் இருந்து புகுந்தவர்களால் அசாமில் நிகழ்ந்த வன்கொடுமைகளுக்கும் மதவாதம்தான் அடிப்படை என்பதை நேர்பட விமர்சிக்கவோ அந்த பிரச்சனைகளுக்கு நேர்மையாகத் தீர்வு காணவோ யாருக்கும் துணிவு இல்லை.


இவையெல்லாம் மோதியின் மீதான மதவாத குற்றச்சாட்டுகளை துடைப்பதற்கான தற்காப்பு உத்தி என்று சிலர் கூறலாம். ஆயின் இங்கு இவற்றைச் சுட்டிக்காட்டியதற்குக் காரணம், அரசியல் ரீதியில் எழுப்பப்படும் மதவாதம் என்ற புகார், சத்தியத்தை சாரமாகக் கொள்ளாமல் சந்தர்ப்பவாதத்தை சார்ந்து இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே.
மேலும், குஜராத் கலவரத்தை மோதிதான் தூண்டிவிட்டார் என்று அரசியல் ரீதியில் எழுப்பப்படும் புகார், நீதிமன்றங்களில் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன், உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, கலவரத்தை மோதி தூண்டவில்லை, அடக்கத்தான் முயன்றார் என நற்சான்று தந்துள்ளது.

குஜராத்தில் நிகழ்ந்த அந்தக் கலவரத்துக்குப் பின் மதரீதியாக எந்த பெரும் பிரச்சனையும் அம்மாநிலத்தில் எழவில்லை. குஜராத் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில்தான் தற்போது சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார்கள் என மத்திய அரசின் புள்ளிவிவரங்களே பகர்கின்றன. இதனை துக்ளக் நிருபர் இதயா நேரடியாகப் பார்த்து பல வாரங்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.



ஆகையினால் மோதி மீதான மதவாத முத்திரை, நிரூபிக்கப்படாத ஒரு புகாரே அன்றி, நிரூபணமான உண்மையல்ல என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மோதியை பார்ப்பதே பாவம், அவரைப் பற்றிப் பேசுவதே தீது என்ற ரீதியில் செயல்படுவதுதான் ஒருசிலரின் அரசியலாக இருக்கிறது. இதற்கோர் உதாரணம் நயீ துனியா உருது நாளிதழுக்காக மோதியை பேட்டி எடுத்த அதன் ஆசிரியர் சாஹித் சித்திகி சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். எனவே மோதி மீதான மதவாதி என்ற குற்றச்சாட்டில், காரம் இருக்கும் அளவுக்கு சாரம் இல்லை.

அதேநேரத்தில், மோதி மீதான மற்றொரு குற்றச்சாட்டு, அவர் தனிமனித துதியை அரசியலில் வளர்க்கிறார் என்பது. தனிமனித துதி அரசியல், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும், காங்கிரஸ் கலாச்சாரத்துக்கும் புதியதல்ல. ஆனால் ஆரோக்கியமான அரசியலுக்கு அது ஏற்புடையதல்ல. அதிலும் தனி மனிதனைவிட கட்சி பெரிது என்றும், ஒற்றைத் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமை என்பதையும் வலியுறுத்தும் பாரதீய ஜனதா கட்சியில் தனிமனிதரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் முற்றிலும் புதிது.



இதனை நரேந்திர மோதி வளர்க்கிறாரா? ஆம் என்கிறார் குஜராத் முன்னாள் முதல்வரும் அண்மையில் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்த மூத்த தலைவருமான கேஷுபாய் படேல். குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் இந்த கேஷுபாய். மேலும் படேல் என்ற குஜராத்தின் சக்தி வாய்ந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நரேந்திர மோதியும் பிற்பட்ட வகுப்பினர் என்றாலும், அவரது மோதி வகுப்பு, வாக்குவங்கி அதிகம் இல்லாத அகர்வால் ஜாதியின் உட்கிளை. இந்த ஜாதிக் கணக்கை அரசியல்வாதிகள் பார்க்கிறார்களோ இல்லையோ, சில மாதங்களில் குஜராத் தேர்தல் வர இருப்பதால் அரசியல் விமர்சகர்கள், வாக்குக் கணிப்பாளர்கள் கட்டாயம் கவனிப்பார்கள்.

கேஷுபாய் படேல் பிரிந்ததால் படேல் ஜாதியின் வாக்குகளை மோதியும், பா.ஜ.க.வும் இழக்க நேரிடும் என்று அவர்கள் கூறலாம். அதைப்பற்றி விமர்சிப்பது நமது நோக்கமல்ல. ஆனால், கேஷுபாய் கூறிய குற்றச்சாட்டு உண்மையா? என்பதே நமது கேள்வி.



மூன்று முறை தொடர்ந்து குஜராத்தில் முதலமைச்சராக இருக்கும் மோதி, அதன் காரணமாகவே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். குஜராத் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த விளம்பரங்களில், மோதிக்கான விளம்பரமும் தூக்கலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க-வில் நிலவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோதியும் முந்திச் செல்கிறார். அதேநேரத்தில் குஜராத்தின் பலமான தலைவர் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. பிரச்சாரகராக பொது வாழ்வுப் பயணத்தைத் தொடங்கிய மோதி, வகேலாவுடன் கைகோர்த்து குஜராத்தில் பா.ஜ.க-வை வளர்த்தார். கேஷுபாய் படேல் முதல்வராக இருந்தபோது எழுந்த பிரச்னையை தீர்க்க சமரசப் பணியில் ஈடுபட்ட மோதி, பின்பு தானே முதல்வரானார். அவரை எதிர்த்து அரசியல் செய்த வகேலா காங்கிரசில் கரைந்துவிட்டார்.



கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது இப்போதுபோல் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக மோதிக்கு எதிராகச் செயல்பட்டார்  கேஷுபாய்.வி.ஹெச்.பி-யும் தன் பங்குக்கு இடைஞ்சல் செய்தது. இவற்றை மீறி மூன்றாம் முறையாக முதலமைச்சரானார் மோதி. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் அவருக்கு நான்காவது வாய்ப்பளிக்குமா? இதன்மூலம் அவரது தேசிய அபிலாசையில் (பிரதமர் பதவிக் கனவில்) அவர் முன்னே செல்வாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு பல பலவீனங்கள் இருந்தாலும் அதற்குக் கைகொடுப்பது நேரு-இந்திரா காந்தி குடும்பத்து இமேஜ்தான். அந்த இமேஜ் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி, தண்ணீரில் இருந்து எடுத்துப்போட்ட மீனாகிவிடும். ஓரளவு இமேஜ் இருந்ததால்தான் வாஜ்பாய், பா.ஜ.க. சார்பில் பிரதமராக முடிந்தது.


தனிமனித மயக்கம் மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றபோதிலும், தனிமனித செல்வாக்குதான் இந்திய அரசியலில் அந்தக் காலம் முதலே கோலோச்சி வருகிறது. மகாத்மா காந்தியின் காந்த சக்தி, நேருவின் வசீகரம் ஆகியவை எல்லாம் மக்கள் கூட்டத்தைச் சேர்க்கப் பயன்பட்டன. காந்தி தனது செல்வாக்கை தனது சுய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்தவர்கள் அரசியல் வளர்ச்சிக்கு, ஆட்சியைப் பிடிப்பதற்கு தனி மனித செல்வாக்கைப் பயன்படுத்தினார்கள், அதனை வளர்த்தார்கள்.

இந்திய அரசியலில் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் செல்வாக்கு இல்லாவிட்டால் செல்லாக் காசுதான். ஆகையால் தனிமனித செல்வாக்கு அரசியல் வெற்றிக்கு அவசியமாகிறது. அதனை மோதி பயன்படுத்தினால், அதனை குறை கூற முடியாது. ஆனால் அதுவே தனிமனித துதியாக மாறினால் தாங்க முடியாது. அதற்கோர் உதாரணம் இந்திரா காந்தியின் அரசியல்.


ஆகவே, வாக்குக்காக தனிமனித செல்வாக்கு என்ற தலைப்பாகையை மோதி அணிவதில் தவறில்லை. அதேநேரத்தில் அது தலையையே நசுக்கிவிடும் தலைச்சுமையாக மாறாமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

-     பத்மன்